தலித் மக்களுக்காக கடந்த 30.9.1892 ஆம் ஆண்டு நிலம் வழங்க லண்டன் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு நிலம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் பள்ளர், பறையர், சக்கிலியர் என அரசால் வரையறுக்கப்பட்ட( பஞ்சமர்) மக்களுக்கு 12லட்சம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட நிலங்கள் தற்போது அந்த மக்களிடமோ, அவர்களின் வாரிசுகளிடமோ இல்லை. பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் தமிழகத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 13.6 ஏக்கர் நிலம்தான் உள்ளதாக தமிழக நில நிர்வாகத்துறை ஆணையர் 2006 ஆம் ஆண்டு கூறியிருந்தார். ஆனால், அப்படி அவர் இருப்பதாகக் கூறிய நிலங்கள் கூட தற்போது தலித் மக்களிடம் இல்லை என்பதை மேலூர் தாலுகா ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளன.

2,522.37 ஏக்கர் நிலங்கள்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் இயங்கும் 175 குவாரிகளில் அரசுவிதிமுறைகளை மீறி 94 கிரானைட் குவாரிகள் பொதுச்சொத்துக்கள அபகரித்து கனிம வளங்களைச் சுரண்டி ரூபாய் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் பல்வேறு ஆய்வுகளில் இந்த பஞ்சமி நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடகாவின் சுரங்க ஊழலுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல என்பது போல தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேட்டில் தலித் மக்களுக்குச் சொந்தமான டி.சி. நிலங்கள் (Depressed Castes Lands) சுமார் 2,522.37 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது உண்மை அறியும் குழு ஒன்று நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ச.கருப்பையா, வே.அலெக்ஸ், எட்வின், வீரம்மாள், பி.இராஜேந்திரன் ஆகியோர் இந்த ஆய்வை நடத்தி அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

ஆதாரங்கள்

தலித் மக்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட டி.சி நிலங்கள் என்று அழைக்கப்படும் பஞ்சமி நிலங்கள், ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்காக வழங்கப்பட்ட நிலங்கள், இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட தோட்டி மானியம் என்று சொல்லப்படும் மானிய நிலங்கள் என 2,522.37 ஏக்கர் நிலங்களில் 4.5 சதவீத நிலங்கள் அரசின் ஆக்கிரமிப்பிலும், 40 சதவீத நிலங்கள் சாதி இந்துக்கள் ஆக்கிரமிப்பிலும், 15 சதவீத நிலங்கள் தலித் மக்களின் பெயர்களில் பினாமிகள் அபரிகரித்துள்ளர்.

திருவாதவூர் பகுதியில் மூர்க்கம்பட்டியில் 30.35 ஏக்கர்(சர்வே எண்:66.2), திருவாதவூரில் 240.80 ஏக்கர்(சர்வே எண்: 182/1அ, கோவில்பட்டியில் 181.50 ஏக்கர்(சர்வே எண் 3/1) ஆகியவை அபகரிக்கப்பட்டுள்ளன. இதே போன்று மேலூர் பகுதியில் 190.24 ஏக்கர் நிலம்(சர்வே எண்:1), துவரங்குளத்தில் 13.64 ஏக்கர் நிலம்(சர்வே எண்; 97/1), கீழவளவில் 35.22 ஏக்கர்(502/2,565), கீழையூரில் 9.42 ஏக்கர் நிலம்(சர்வே எண்: 157/12) ஆகியவை அபகரிக்கப்பட்டுள்ளன.

சேண்டலைப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த 37 தலித் குடும்பங்களின் 150 ஏக்கர் நிலங்கள் 1998 ஆம் ஆண்டு குறைந்த விலையில் வாங்கப்பட்டு கிரானைட் குவாரிகளாக மாற்றப்பட்டுள்ளன. இக்கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்குச் சொந்தமான சமுதாயக் களம் மற்றும் புறம்போக்கு இடங்கள் என சுமார் 12 ஏக்கர் நிலங்களும், அம்மக்கள் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட வந்த முனியாண்டி கோவிலுக்குச் சொந்தமான சுமார் 11 சென்ட் பரப்பளவு இடமும் கிரானைட் உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு, சின்னக்குளம் கண்மாய், பெருச்சாளி கண்மாய் பகுதியில் ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுள்ளன.

பிஆர்பி கிரானைட் குவாரி உரிமையாளர்களால் செம்மணிபட்டியைச் சேர்ந்த சுமதிபுரம் பகுதியில் வசிக்கும் தலித் மக்களுக்கு குடியுரிமை இடமான புறக்கூண்டு மலைப்பகுதியில் வழங்கப்பட்ட இடங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வழக்குத்தொடரப்பட்டு வழக்கும் நிலுவையில் உள்ளது.

தோட்டி மானிய நிலமும் அபகரிப்பு

மதுரை தெற்குத்தெருவைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் குடும்பத்தினர், பெருமாள் மலையில் உள்ள பெருமாள் கோவில் பூசாரியாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் தோட்டிமானியமாக மருதூர் கண்மாய் பாசனம் மற்றும் அய்யன்பந்தி கண்மாய் பாசனங்களுக்கு உட்பட்ட சுமார் 74 ஏக்கர் நிலம் தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் வழங்கப்பபட்டுள்ளது. இந்த நிலங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டுள்ளன. இங்கு தான் பிஆர்பியின் கிரானைட் பாலிஸ் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருவாதவூர் அருகேயுள்ள கீரனூர் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் கல்பாலிஸ் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கீழவளவு எல்கைக்குட்பட்ட ரெங்கசாமிபுரத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களில் சிந்து கிரானைட் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தகுவாரி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சின்னையன் என்பவர் பெயரில் உரிமம் பெறப்பட்டுள்ளது.

இப்படி வாரி சுருட்டப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் முழுவதும் மீட்கப்படுவதுடன், அந்த நிலங்கள் நிலமில்லாத தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். பஞ்சமி நிலங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவைகளை உடனடியாக நிலமில்லாத தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிலங்களை இழந்த தலித் மக்களுக்கு இன்றைய வெளிச்சந்தை நிலவரப்படி இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும். சிபிஐ இவ்வழக்கை நடத்தக்கூடாது என வேக வேகமாக மறுத்து வரும் தமிழக அரசு, தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

- ப.கவிதா குமார்

Pin It