எனது நண்பரின் மகன் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுற்றிருக்கிறான். அவர் வீட்டுக்கு தற்செயலாகச் சென்ற நேரம் பரீட்சை முடிவுகள் வந்திருக்க, நான் தர்ம சங்கடத்தில் நெளிந்தேன். என்னை வைத்துக் கொண்டே தகப்பனும் மகனும் வாதத்தில் ஈடுபட்டதே நான் நெளிந்ததன் காரணம். ஒரு கட்டத்தில் தகப்பன் சொன்னார் "பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுறாமல் நீ என்ன செய்து பிழைப்பாய்..?"

அதற்கு சோகமற்ற தீர்க்கமான குரலில் அந்த மகமாணவன் சொன்னான் "என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் சாமியாரா போறேன்" சொன்னவன் நிற்காமல் சென்று விட்டான்.

அவன் சென்ற பிறகு நண்பர் மெல்ல இயல்பாகி வேறு விஷயங்கள் பேசத்துவங்க, ஒரு மணி நேரம் பேசிமுடித்த பின் மெல்ல சொன்னேன் "உங்கள் மகன் வந்தால் இனித் திட்டாதீர்கள்.. மெல்ல பேசி அறிவுரை சொல்லித் திருத்த முயலுங்கள் என்றேன்.

அந்த மாணவன் சொன்னதன் அர்த்தம் சமீப நாட்களாய் தான் எனக்குப் புரிகிறது. சாமியாராய்ப் போகிறேன் என்பது ஒன்றும் தவறான செயல் என்று நான் கருதவில்லை. ஆனால் அரசியல், சினிமா போன்ற வெகுஜனப் புகழ் துறைகளுக்கெல்லாம் அயராத முயற்சியும் தோல்வி கண்டு அஞ்சாத துணிவும் அதிக பட்ச உழைப்பும் தேவைப்படுகின்றன. ஆனால் சாமியார் ஆவதற்கு ஒரு கூட்டமும், கூட்டத்தைக் கூட்டுகிற தனிமனித ஆளுமையும் போதும் என்பதாலேயே என் நண்பரின் மகன் அதை ஒரு சிறந்த தொழிலாகத் தேர்வு செய்திருக்கிறான் என்பதும் இப்பொழுது தான் புரிகிறது.

மிகச்சமீப ராம்தேவ் பாபா வரை இந்தியா என்னும் ஒற்றை தேசத்தைக் கற்பழிக்க எத்தனை எத்தனை சாமியார்கள். நினைத்துப் பார்த்தாலே அதீத பயமொன்று முதுகுத் தண்டை சில்லிடச் செய்கிறது. இன்னமும் நூறு சதவிகிதக் கல்வியறிவை எம் மக்கள் எட்டிவிடுவதற்கான எல்லை எது எனக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நம்பிக்கையற்ற நிலையில் மெத்தப் படித்த அறிவுஜீவிகளும் அதிகாரவர்க்கமும் அரசபதவியாளர்களும் மண்டியிட்டு வாய்பொத்தி குருவே சரணம் என்று காவிகளின் காலடியில் கிடப்பதையும் அவற்றை ஊடகங்களும் (சில)வால் பிடித்து சாமியார்களின் கடவுள்தன்மையை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பதையும் இன்னும் எத்தனை எத்தனை காலங்களுக்குத் தான் எம் நாடு அனுமதித்துக் கொண்டிருக்கப் போகிறது..?

இந்தியத் துணைக்கண்டம் மதச்சார்பற்ற பெருநிலம். இங்கு தோன்றியதாகச் சொல்லப்படும் இந்து சமயம் தவிர பௌத்தம் சமணம் சீக்கியம் போன்ற மதத்தினர் காலங்காலமாக வாழ்ந்து வந்த சமஸ்தானங்களும், கிறித்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை மற்றும் மார்க்கங்களை பின்பற்றுவோரும் காலம் காலமாக ஒன்றுபட்டே வாழ்ந்து வந்தது வரலாறு. இன்றைக்கு மதங்கள் போதிக்கின்ற எம்மதமும் சம்மதம் என்கிற தாத்பரியம் காற்றில் பறக்கவிடப்பட்டது. இறைவன் அல்லது கடவுள் இருக்கிறானா அல்லது இல்லையா என்னும் வாதத்திற்குள் செல்வதற்கில்லை இக்கட்டுரை. அதற்கு அடுத்தபடியாக மதங்கள் என்னும் கட்டுமானத்திற்குள் மனிதர்களின் ஆளுமை பற்றி உரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

மதத்தை செயல்படுத்துவதை அன்றி வேறெந்த பணியும் கொண்ட ஒருவர் உயர்த்தி பிடிக்கப்பட வாய்ப்பே இல்லை. ஆனால் இன்றைக்கு வாழும் கலை, யோகா, மூலிகைகள், மருத்துவம் என வேறொரு பாதையில் மதத்தை ஒத்துக் கொள்ளும் அப்பாவிகளை மனம் மயக்கி, அவர்களது எண்ணங்களை வசப்படுத்திக் கழுவி, உள்ளீடு செய்யப்பட்ட விஷயங்களுக்கேற்ப தாளமின்றி ஆடும் குரங்குப்பொம்மைகளாக மனிதர்களை மாற்றி, அவர்களது கல்வி, வாழ்நிலை என எந்த ஒரு உயர்ந்த விஷயத்தையும் மறக்கடித்து சாமியார்கள் ஆட்டுவிக்கின்றனர் என்பதற்குச் சமீப காலமாய் கணிப்பொறித் துறை உள்ளிட்ட பணம் கொழிக்கும் துறைகளில் பணிபுரிவோர் நிறையப்பேர் சாமியார்கள் நடத்தும் அமைப்புகளில் உறுப்பினராவதும் அதன் பின்னர் தான் தாம் ஈடுபட்டிருக்கும்  இயந்திரமயமான வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறிக்கொள்வதுமே சாட்சி.

மக்களுக்காக அரசியல் அமைப்பு உள்ளது. சட்டமன்றங்களும், பாராளுமன்றமும், உள்ளாட்சி முதல் உலக நீதிமன்றம் வரை உள்ளன. சட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறை, நீதித்துறை போன்றனவெல்லாம் உள்ளன. ஒரு முதல்வர் தூக்கி எறியப்பட்டு இன்னொரு முதல்வர் பதவியேற்கிறார். வரிசையில் நின்று ஓட்டுப்போடுவதில் நம்பிக்கை உள்ள மக்கள் ஜனநாயகத்தை மௌனமாகத் தேர்வு செய்கிறார்கள். உள்ளூர் பிரச்சினை தொடங்கி உலகப் பிரச்சினை வரை ஊடகங்கள் உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சர்வபலம் மிக்க ஒரு நாடு இந்தியா. இதன் அமைப்பு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது..? இதில் ஒருவன் கிளம்பியிருக்கிறார் உண்ணாவிரதச் சக்கரவர்த்தி. காவல்துறை தேடி வந்தால் தனி விமானத்தில்  ஏறி ஓடிவிடுகிறான். யார் இவர்.? எதற்காக நாடகமாடுகிறார்.? எல்லாவற்றையும் துறந்தால் தானே துறவி எனப்பொருள்.. புகழ்தேடி இம்மாதிரி சில தனி மனிதர்களின் விளையாட்டுக்கு எம் மக்கள் பலியாவதா..? தடுத்து நிறுத்த வேண்டாமா..?

பொதுவாகப் பேசிக்கொண்டே போவதில் அர்த்தமில்லை.

சில விஷயங்கள்:

1.கடவுளுக்குச் சமமாக மற்ற மதங்களில் எந்த ஒரு மனிதப் பிறப்பையும் சமப்படுத்துவதை அம்மதங்கள் தடை செய்கின்றன. இந்து மதத்தில் தொட்டதற்கெல்லாம் சாமியார்கள் நேற்று மழைபெய்தால் உடனே உற்பத்தி ஆகின்றனர். அவர்களுக்கென்று ஒரு குடை. அவர்களுக்கென்று ஒரு கூட்டம். அவர்களுக்கென்று ஒரு முழக்கம். அவ்வளவு தான். உடனே அவர் கிருஷ்ணாவதாரம் அவர் ராமாவதாரம் என அவரே கடவுளாக பணி உயர்வு பெற்றுக்கொள்வதும் மந்தை போன்ற மனம் கழுவப்பட்ட அவரது சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்றுக்கொண்டு அதுவரையிலான இந்துக் கடவுள்களின் மீதான வழிபாடுகளைக் கைவிடுவதும் தொடர்கிறது. அவரை எதிர்த்து யார் பேசினாலும் அவர்களை விரோதிகளாகவே பார்ப்பதும் நடக்கிறது.

2. கடந்த இருபது வருடங்களில் பணமோசடி, நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்முறை, சிறுவர் மீதான பாலியல் வன்முறை, கொலை என இந்தியா முழுவதும் எத்தனை எத்தனை வழக்குகள்..? எங்கிருந்து வந்தார்கள் இந்தச் சாமியார்கள்..? எப்படிச் சேர்ந்தது இத்தனை பணம்..? இன்றைக்கு ஊழலை ஒழிக்கப் புறப்படுகிறாரே இந்த ராம்தேவ்... இவரது ஆரம்பம் என்ன..? ஏது இவர்க்கு இத்தனை கூட்டம்..? எப்படி வந்தது இத்தனை கோடி...?இவர்கள் பின்னால் திரளுவதை விட இவர்களை எதிர்ப்பதற்கும்,கண்டுபிடித்துக் கொடுப்பதற்கும் இளைஞர் படை திரண்டிருக்க வேண்டாமா..?

3.அரசியல் ஒரு சாக்கடை என்கிறோம். பரவலான கருத்து. சிந்திக்கத் தானே ஒழிய சிரிக்க அல்ல. எந்த அரசியல்வாதியும் முளைத்து வருவதில்லை. அவன் படிப்படியாக கட்சிப்பணி களப்பணி என வியர்வை சிந்தித் தான் மேலே வருகிறான். ஒளிவட்டமொன்றை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு வலம் வரும் சாமியார்களை வளர்த்து விட்டதும் வளர்த்துக் கொண்டிருப்பதும் அரசியல்வாதிகள் தானே..? இதைத் தடுக்க முதலில் ஒரு சட்டம் வேண்டாமா..?

4.நாத்திகம் என்பது வரையறைக்குட்பட்டது. ஆத்திகம் என்பது விசாரணைக்குட்பட்டதே. அவ்வாறு இருக்க, வாயில் இருந்து லிங்கம் எடுத்தவனும், வெறும் கையை சுழற்றி சாக்லேட் கொடுத்தவனும் நடிகையோடு சல்லாபித்தவனும், இனான்ய மொழி பேசியவனும், நிலமோசடியில் ஈடுபட்டவனும், தண்ணீரில் நடக்கிறேன் எனக் கிளம்பிச்சென்றவனும் பிடிபட்ட பிறகு பேசிச்சிரித்தோமே... நம்மில் யாருக்கும் இவர்களை பிடித்துக் கொடுப்பதில் அக்கறை இருந்ததா..?

5.குறைந்த பட்சம் சாமியார்களின் பின்னால் செல்லாதவனுக்கு தான் வேலை கொடுப்பேன் வீடு கொடுப்பேன் கடன் கொடுப்பேன் பெண் கொடுப்பேன் என நம்மில் உள்ள நல்லவர்கள் சுயமரியாதைக்காரர்கள் முன்வந்தால் மெல்லப் பூக்காதா மாற்றம்...? வெட்கித்தலை குனிய வேண்டியவர்களெல்லாரும் பெரும்பான்மை என்கிற பெயரால் நிகழ்த்திக் கொண்டிருக்கிற காட்டுமிராண்டித்தனங்களை நிகழ்ந்த பின் கண்டிக்கிறதை விடவும், நிகழாமல் தடுக்க முனைவதே சாலச்சிறந்ததாக இருக்க முடியும்.

6.பகுத்தறிவு ஒரு புறமும் நாத்திகம் மறுபுறமும் இருக்கட்டும்.. இந்த விஷவிதைகள் முதலில் களையப் படவேண்டும். அது தான் முக்கியம். ஆகவே கடவுள் மறுப்பை விடக் கையிலெடுத்து உடனடியாகக் கவனமுடன் வென்றெடுக்க வேண்டியது ஒன்று உண்டெனில் அது  சாமியார் மறுப்பாகத் தான் இருக்க முடியும்.

7.எல்லாவற்றுக்கும் மேலாக, இணை வைப்பதை தடை செய்கிறது இஸ்லாம். ஆகவே அந்த மார்க்கத்தில் சாமியார்கள் போன்ற எந்தத் தனி மனித செல்வாக்குக்கும் இடமே இல்லை. கிறித்துவத்தில் பங்குத் தந்தைகளும் மதகுருமார்களும் போப்பாண்டவர் முதலானவர்களும் கூட உண்டென்றாலும் அம்மதத்தில்கூட இறைவனுக்கு இணையாக ஒருவர் எந்த இடத்திலும் வரச்சாத்தியமே இல்லை. இறந்த பிறகு சிலர் புனிதர் பட்டம் பெறலாம் என்றாலும் கூட தனி மனிதத் துதி அங்கே குறைவே.

8.இந்தியாவில் பெரும்பான்மையாக வசிக்கிற மக்கள் இந்துக்கள். இந்த மக்கள்தான் சாமியார்களிடம் ஏமாந்து தவிக்கிறார்கள். நானும் இறைவன் என்று கூறிக் கொள்ளும் சாமியார்களை கண்காணிப்புக்குள்ளாக வேண்டும். அவர்களது தந்திர நடவடிக்கைகளை, கோடி கோடியாக பணம் குவிப்பதை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.. அல்லாது போனால் மக்கள் நிம்மதி தேடி அகதிகளாகக் கிளம்பும் நிலை வந்துவிடும்.

9.அடக்கடவுளே.. முதலில் சாமியார்களிடமிருந்து நீ உன்னைக் காப்பாற்றிக் கொள். மனிதர்கள் எங்களை நாங்கள் காப்பாற்றிக் கொள்ளுகிறோம்.

Pin It