கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

 

பேச்சுரிமை, கருத்துரிமை, சுதந்திரமாகக் கூடும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உள்ளதென 1950 ஜனவரி 26இல் அறிவித்த குடியரசுப் பிரகடனம் முடிந்து 62வது குடியரசு தின விழாவை நாடு கொண்டாடி முடித்திருக்கிறது.

ஒரு நாள் விடுமுறை தினமும், ஒரு கொடியேற்று நிகழ்ச்சியும், சில சாக்லேட்டுகளும் என பட்டாசு சப்தத்தில் முடிந்து போன நாளில் தெருவெல்லாம் மண்டிக் கிடந்தன.

டாஸ்மாக் கடைகளில் முதல் நாளே நெருக்கியடித்துக்கொண்டிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை மிக பக்குவமாய் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. டாஸ்மாக், ஆட்சியாளர்களின் தொழிலாகிப் போனதால், கள்ளச்சாரயம் ஆளும் கட்சியினரின் தொழிலாக மாறிவிட்டன. கள்ளச்சாராயத்தை எதிர்த்துப்போராடிய வீரர் நாவலனை ரவுடிகள் வெட்டிக்கொல்கிறார்கள். ஆபத்து என பல நாட்களுக்கு முன்னரே புகார் கொடுத்தப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பலியிடப்படுகிறது ஒரு போராளியின் உயிர். ஆனால், குடிகாரர்கள் வீதிகளில் செல்லும் போது தேடிப்பிடித்து கையூட்டும், அபராதமும் வசூலிக்கும் காவல்துறை கொலைகளை தடுக்கவோ, கொலைகாரர்களை தேடவோ ஏன் முயற்சிப்பதில்லை. உயிருக்கு பாதுகாப்பு கேட்டு கொடுக்கப்பட்ட புகார்களில் இதுவரை ஒரு சமூகப் போராளியின் உயிர்கூட காப்பாற்றப்பட்டதில்லை.

சமூகத்தில் பாலியல் குற்றங்கள் பல மடங்கு பெருகிவிட்டது. குற்றங்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. குழந்தை கடத்தலும், கொள்ளைச் சம்பவங்களும் இங்கு தினசரி செய்திகளே என சமூக அமைதி சீர்குலைந்து வருகிறது. குண்டுவெடிப்பு மரணங்கள் இரயில்களில் மட்டுமல்ல கோயில்களிலும், மசூதிகளிலும் கூக்குரல்களாய் கேட்கின்றன. காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?

காவல்துறை நவீனமயமாகிக் கொண்டிருக்கிறது என ஆட்சியாளர்கள் நிதிநிலை அறிக்கையில் சொல்கையில் யாருக்கான நவீனமயம் என நாம் சிந்தித்தாலும் புலப்படுவதில்லை. காவலர்கள் எண்ணிக்கை கூடுகிறது, தகவல் சாதனங்கள் அதிகரிக்குது, வாகனங்களின் அதிக எண்ணிக்கையால் காவல் துறையும் ஜொலிக்குது. ஆனாலும், குற்றங்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகரிக்கிறது. காவல்துறையினர் என்ன செய்கிறார்கள்?

காவல்துறையின் பெரும் நிதியும், நவீனமயமும், காவல்துறையின் எண்ணிக்கையும் ஆட்சியாளர் களின் ஆட்சியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, ஜனநாயக ரீதியிலாள மக்கள் போராட்டங்களை ஒடுக்கு வது என ஏவல்துறையாகவே மாறிப்போயுள்ளதை பார்க்கையில் சமூக அமைதி எப்போது சாத்தியம் என்றே கேட்கத் தோன்றுகிறது. திருட்டு பயமென புகார் கொடுக்கச்சென்றால் தாயத்து கட்டிக்கொள்ளச்சொல்லும் காவல்துறையினர், சமூக விரோதிகளுடன் அமைத்துக்கொள்ளும் கூட்டணி புதிய மோசடிகளை அதிகரிக்கச் செய்திருக்கின்றன.

பெட்ரோல் விலையை மத்திய அரசின் முடிவின்படி சுய அதிகாரத்துடன் உயர்த்திக் கொண்ட இந்திய ஆயில் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்திட சென்ற வாலிபர்களையும், காவல்துறை அனுமதியுடன் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற வாலிபர்களையும் கழுத்தைப் பிடித்து, கையை முறுக்கி, லத்திக் கம்பால் தாக்கி, விரட்டியடித்து கைது செய்த காவல்துறை 147, 188, 285, 353, 448, 341 என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்கிறது. நியாயமான கோரிக்கைகளுக்காக சுதந்திரமாகக் கூடி போராடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்படும் நாட்டில் ஜனநாயகம் என்பதும், சுதந்திரம் என்பதும் யாருக்காக?

விலைவாசியை குறைக்க மாநில முதல்வர்களைக் கொண்டு குழு அமைக்கிறார்கள். பணவீக்கம் உயருது என பகல் பொழுது முழுவதும் பேசுகிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறையென ரூ. 5.92 உயர்த்தியபின்பும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை இளைஞர்களுக்கு இல்லையெனில் குடியரசு நாடு என கொடியேற்றி பெருமை பேசுவதால் யாருக்கு பயன்?

இந்தியா ஒரு சுயாட்சி உரிமையுள்ள சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு நாடென்ற அறிவிப்பில் இன்றுவரை மாற்றமில்லை. ஆனால், அரசின் திட்டங்களில் ஆட்சியாளர்களின் செயல்களில் சோசலிசமும் இல்லை, ஜனநாயகமும் இல்லை. மக்களின் வாழ்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஜனநாயத்திற்கு மதிப்பில்லாத தேசத்தில் மாற்றம் ஜனங்களுக்காக அமைந்திடப்போவதில்லை. பணநாயகத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டோர் ஊழலை உரமாய் இட்டுத்தான் தங்கள் ஆட்சியை வளர்த்துக்கொள்கிறார்கள்.

பணமே வாக்குகளை தீர்மானிக்கும் என்றால் ஊழல் தானே நாட்டை ஆளமுடியும். இதுதான் இன்றைய அரசியல் சூழலாகும்.

ஆனாலும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட இரண்டாவது சுதந்திரப் போராட்ட இளைஞர்கள் சோசலிச கொள்கையுள்ள புதிய இந்தியாவை உருவாக்காமல் இளைப்பாறப்போவதில்லை.