மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி என்றார் ஆப்ரகாம் லிங்கன். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் வன்முறைகளும், அதைச் சார்ந்து நடக்கும் அரச படுகொலைகளும் மக்களாட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை உடைத்திருக்கிறது.
மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தன் மக்களின் மீது காவல்துறை மூலமாக வன்முறையை ஏவி இதுவரை 13 பேரை கொலை செய்துள்ளது. தன் குடிமக்களுக்கு தூய்மையான காற்றையும், நல்ல உணவையும் தங்குவதற்கான இடத்தையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்கிறது அரசியல் அமைப்புச் சட்டம்.
ஸ்டெர்லைட் ஆலையால் எங்கள் மண்ணும், நீரும், காற்றும் மாசடைந்து எங்கள் சந்ததிகள் கடுமையான நோயால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஆலையை மூட வேண்டுமென கடந்த 99 நாட்களாக அமைதி முறையில் ஜனநாயக வழியில் மக்கள் போராடி வந்தனர். அரசு இவர்களின் ஜனநாயகப் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. எனவே போராட்டத்தின் 100வது நாளில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வெளிப்படையாக அறிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து மக்களின் உணர்வுகளைத் தடுக்க நினைத்தது. மக்கள், தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து அசாதாரண சூழல் ஏற்பட்டது. போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி முதல்நாளில் 11 பேரைக் கொலை செய்தது.
ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்களின் போராட்டங்களும், உணர்வுகளுமே நியாயமானதாக அரசால் பார்க்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள், சிறு குழுக்கள், சிறு அமைப்புகள் முன்னெடுக்கும் போராட்டங்களும், அவர்களின் உணர்வுகளும் வன்முறையாகவும், அரசுக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகிறது. சிறுபான்மை மக்களின் உரிமை, பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமே ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். இதைச் செய்வதில் ஆளும் அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் சமபங்கு இருக்கிறது.
சிறு குழு அல்லது மக்கள் திரளுக்கான ஜனநாயக உரிமையை பெற்றுத் தருவதில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விட முனைப்பாகவும், விழிப்பாகவும் எப்போதும் இருக்க வேண்டும். தூத்துக்குடியில் இரண்டு நாட்களாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் மூலமாக ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது.
ஆளும் அரசு மக்களை சுட்டுக் கொலை செய்கிறது என்றால் எதிர்க்கட்சி எந்தவித உணர்வும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களோடு களத்தில் நிற்க வேண்டிய எதிர்க்கட்சிகள் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தலைமைச் செயலாளரை சந்தித்துவிட்டு வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் “ஏன் இதுவரை போராட்டத்தை ஒடுக்கவில்லை?” என்கிறார். எதிர்க்கட்சியின் வேலை பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதா? இல்லை ஆளும் அரசோடு சேர்ந்து கொண்டு சிதைப்பதா?
மக்களை கொலை செய்துவிட்டு 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கிறது ஆளும் அரசு. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு 10000 பணம் கொடுக்கிறார். அதில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரின் உறவினர் கேட்கிறார் “நாங்கள் பணத்திற்காக போராடவில்லை. எம் மக்களுக்காக போரடினோம். போலிஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்குப் பதில் என்ன?” என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் சீறுகிறார். அவரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்..
ஒரு எதிர்க்கட்சித் தலைவராக எம்மக்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டை தடுப்பதற்கு என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரோ போராட்டம் நடத்த நல்ல நேரம் குறித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் தான் இப்படி என்றால் கம்யூனிஸ்டுகளைத் தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் சம்பிரதாய சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு கிளம்பி விட்டார்கள். மக்கள் எதிர்க்கட்சிகளிடம் தங்களுக்கான ஆறுதல்களைத் தாண்டி அவர்களோடு களத்தில் நிற்க வேண்டுமென விரும்புகிறார்கள்.
ஆனால் எதிர்க்கட்சிகளோ அறிக்கை விடுவதும் டுவிட் செய்வதோடும் தங்களின் மிகப்பெரிய ஜனநாயகக் கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். அரசியல் கட்சிகளின் இந்தச் செயல் மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது.
மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்குமான இடைவெளி ஜனநாயகத்திற்கு பேராபத்தாதாகும். ஒரு தேசத்தில் எதிர்க்கட்சி உயிர்ப்போடு இல்லாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களத்தில் நிற்காதபோது அந்த தேசத்தின் மக்களும், மக்களாட்சியும் கொன்று வீழ்த்தப்படுமென்பதை தூத்துக்குடி நிகழ்வுகள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
- மணிகண்டன் ராஜேந்திரன்