ஒருவன் என்ன வகையான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்று அவனின் எதிரியே தீர்மானிக்கின்றான் என்பார் மாவோ. எதிரி நம்மை கொல்வதற்குத் துப்பாக்கியோடு நிற்கும் போது நாம் அவன்முன்னால் அகிம்சையைப் பேசிக் கொண்டு இருக்க முடியாது. நம்முடைய நோக்கம் எதிரியைத் துன்புறுத்துவதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் எதிரியால் நாம் வீழ்த்தப்பட்டு விடுவோம் என்று நினைத்தால் அவனுக்கு முன்னால் நாம் அவனை வீழ்த்த நினைப்பதுதான் விலங்குகளின் இயல்பு. ஆனால் நாகரிக மனித சமூகம் அப்படி செய்வதை அனுமதிக்குமா என்றால் நிச்சயம் அனுமதிக்காது. இங்கே ஒரு தனிமனிதன் இன்னொரு தனிமனிதனைப் பழிவாங்குவதற்கு அனுமதி கிடையாது. அதை அரசு என்ற அமைப்பு தன்னுடைய உறுப்புகளைக் கொண்டு செய்யும். அதையும் மீறி தன்னிச்சையாக யாரேனும் பழிவாங்கினால் அவர்களை அரசு தனது ஒடுக்குமுறை கருவிகளைப் பயன்படுத்தி தண்டிக்கும். இதுதான் ஜனநாயக, சமுக ஜனநாயக, சர்வாதிகார நாடுகளில் இருக்கும் நடைமுறை.
சரி, அப்படி என்றால் அரசு என்ற அமைப்பு அனைவருக்கும் பொதுவானது தானே! அதை எதிர்த்து நாம் ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி நமக்குள் இயல்பாக எழும். இங்குதான் கம்யூனிஸ்ட்களும், முதலாளித்துவவாதிகளும் வேறுபடுகின்றார்கள். முதலாளித்துவவாதிகள் அரசு என்பது அனைவருக்கும் பொதுவானது, அது முதலாளி, தொழிலாளி என்ற பாரபட்சம் இன்றி அனைவரையும் சமமாக நடத்துகின்றது என்று சொல்கின்றார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் அரசு என்பதை ஓர் ஒடுக்குமுறைக்கருவி என்று சொல்கின்றார்கள். இரு வேறு வர்க்கங்கள் இணக்கம் காணமுடியாததன் விளைவே அரசு என்று சொல்கின்றார்கள்.
அப்படி என்றால் இதில் யார் சொல்வது உண்மை என உங்களுக்கு குழப்பம் வரலாம். அதை நீங்களே உங்களுடைய நடைமுறை அறிவைக் கொண்டு பரிசீலித்து அறிந்து கொள்ளலாம். இதற்காக நாம் இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். இங்கே அரசு என்ற அமைப்பு உள்ளது. அது ராணுவம், நீதிமன்றம், காவல் நிலையம், சிறைச்சாலை போன்றவற்றைக் கொண்டு செயல்படுகின்றது. சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்கின்றது. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளதா? முதலில் சட்டம் அனைவருக்கும் எப்படி சமமாக இருக்க முடியும்? வர்க்க ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு சமூகத்தில் விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சிறுபான்மை பணக்காரக் கும்பலால் பெரும்பான்மை மக்கள் சுரண்டப்படும் போது அதை சட்டமும் அங்கீகரிக்கும் போது, சட்டம் யாருக்கானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்படையாக தெரிகின்றது. இதைத்தான் மார்க்ஸ் சொன்னார் ‘அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கருவி’ என்று.
இங்கே லட்சக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களை உபரியாக வைத்துக் கொண்டு அம்பானியும், அதானியும், டாடாவும், மிட்டலும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அவர்களின் வளங்களையும் கொள்ளையிடலாம். அதற்கு சட்ட அங்கீகாரம் உண்டு. ஆனால் அதை எதிர்த்து பாதிக்கப்படும் மக்கள் போராட மட்டும் அனுமதி இல்லை. அப்படி போராடினால் அரசு தனது வர்க்க விசுவாசத்தை உடனடியாகக் காட்டும். ஒடிசாவின் கலிங்கநகரும், மேற்குவங்கத்தின் சிங்கூரும், நந்திகிராமமும், தமிழ்நாட்டின் கூடங்குளமும் நம் சமகாலத்தில் நம் கண்முன்னால் நடந்த அரசு பயங்கரவாதங்கள். அரசு இந்தப் பயங்கர வாதங்களை யாருக்காக நடத்தியது? லட்சக்கணக்கான பழங்குடி இன மக்களை அவர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்துவந்த காடுகளில் இருந்து அடித்து விரட்டிவிட்டு, அரசு அங்கே யாருக்கான நலத்திட்டத்தைச் செயல்படுத்தியது? நிச்சயமாக அது பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சில அறிவுஜீவிகள் அது மக்களுக்கானது என்று சொல்கின்றார்கள். அவர்கள் அதற்கு வளர்ச்சி என்று பெயர் வைத்திருக்கின்றார்கள். அரசின் அனைத்து வன்முறைகளையும் அவர்கள் அந்த பெயரைச் சொல்லியே அழைக்கின்றார்கள்.
அந்த அறிவுஜீவிகளைப் பொருத்தவரை மக்கள் போராட்டங்கள் தேவையற்றவை. வளர்ச்சி வேண்டும் என்றால் நாம் சிலவற்றை விட்டுக்கொடுத்துதான் ஆகவேண்டும் என்று அவர்கள் சொல்கின்றார்கள். அது நிலமாக இருக்கலாம், உங்களது வேலையாக இருக்கலாம், உங்களது உயிராக இருக்கலாம், ஏன் உங்கள் வீட்டுப் பெண்களின் உடலாகக்கூட இருக்கலாம். வளர்ச்சி வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயம் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் ஒன்று நீங்கள் அதைக் கேள்வி கேட்காமல் செய்யவேண்டும். ஏன் நான் மட்டும் என் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும், ஏன் நான் மட்டும் எனது வேலையை விட்டுக் கொடுக்க வேண்டும், ஏன் நான் மட்டும் எனது வாழ்வாதாரத்தை யாருக்காகவோ தியாகம் செய்ய வேண்டும் என்று யாரும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அப்படி கேள்வி கேட்டால் உடனே அரசும் அரசை நம்பி வயிறு வளர்க்கும் அறிவு ஜீவிகளும் உங்களை தேச துரோகிகளாக சித்தரிப்பார்கள். இதுதான் இங்குள்ள நிலை.
நீங்கள் உங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக அமைதியான வழியில் உண்ணாவிரதம், ஊர்வலம், பேரணி, மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, கொடும்பாவி கொளுத்துதல், உள்ளிருப்புப் போராட்டம், முற்றுகைப் போராட்டம், கருப்புக்கொடி காட்டுதல் போன்ற எந்தப் போராட்டமாக இருந்தாலும் நீங்கள் காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் விதிக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஏற்க வேண்டும். ஆள்நடமாட்டமே இல்லாத ஊரின் ஒதுக்குப்புறப் பகுதியில் போய் உண்ணாவிரதம் இருக்கச் சொன்னாலும் நாம் இருந்துதான் ஆகவேண்டும். மீறினால் குண்டாந்தடிகள் பேச ஆரம்பிக்கும். அரசால் உங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்துப் போராடக்கூட நீங்கள் அரசிடம் தான் அனுமதி வாங்க வேண்டும் அதற்குப் பெயர் தான் ஜனநாயகம். அரசு விதித்து இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் நீங்கள் போராட வேண்டும். ஆளும் கட்சிக்கு எதிராகவோ, பெரும்முதலாளிகளுக்கு எதிராகவோ நீங்கள் போராடினால் அரசு தனது பசுந்தோலை கழற்றி வைத்துவிட்டு உங்கள் மீது புலியாக பாயும்.
ஆனால் பிரச்சினை என்னவென்றால் சாமானிய மக்களின் போராட்டத்தை இந்தச் சமூகமும் அந்தச் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை உற்பத்தி செய்யும் அறிவு ஜீவிகளும் எப்படி அணுகுகின்றார்கள் என்பதே. சாமானிய மக்கள் தங்களுடைய ஊரில் சாலை வசதி செய்து தர வேண்டும், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று சாலை மறியலோ அல்லது சாலை ஓரத்தில் ஒரு கண்டன ஆர்பாட்டமோ செய்யும் போது அதை இந்த நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தில் வாழும் மேட்டுக்குடி வர்க்க மக்களும், அறிவுஜீவிகளும் எப்படிப் பார்க்கின்றார்கள்? அவர்கள் உண்மையில் போராடும் மக்களை ஒரு புழு பூச்சியைப் பார்ப்பதுபோல அற்பமாகவே பார்க்கின்றார்கள். போராடும் மக்களால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக கண்ணீர் விடுகின்றார்கள்.. அந்த மேட்டுக்கூடி வர்க்க அறிவுஜீவிகள் போராடும் மக்களை ரவுடிகள் போல சித்தரிக்கின்றனர். தெருவில் இறங்கி போராடுவதே அரசுக்கு எதிரான பெரும் சதிச்செயலாக அவர்களால் பார்க்கப்படுகின்றது.
பொதுவாகவே இந்த அறிவுஜீவுகள் என்பவர்கள் பெரும்பாலும் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாகவே இருப்பார்கள். முதலில் அவர்களின் வேலை, அவர்களின் குடும்பம், அவர்களது பாதுகாப்பு அதற்கு அப்பறம் தான் மத்தது எல்லாம். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் தனது வேலை போய்விடுமா, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் தனது குடும்பத்துக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று நன்றாக தெரிந்துகொண்டே ஒரு நடுத்தர வர்க்க அறிவுஜீவி அதில் கலந்து கொள்கின்றான். ஆனால் நடைமுறை உண்மை என்னவென்றால் பெரும்பாலான அறிவுஜீவிகள் எந்த ஒரு போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்பதே. அவர்கள் எப்போதோ தங்களை முழுவதுமாக பிழைப்புவாதிகளாக மாற்றிக் கொண்டு விட்டார்கள் என்பதே உண்மை.
அகிம்சை வழியில் அரசு அனுமதியுடன் நடக்கும் போராட்டங்களுக்கே இந்த கதி என்றால் அரசின் அனுமதி வாங்காமல் தன்னெழுச்சியாக நடைபெறும் போராட்டங்களுக்கு ஏற்படும் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மதுவுக்கு எதிராக போராடிய மாணவர்களையும் , பொதுமக்களையும் இந்த அரசு எப்படி நடத்தியது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். இது தான் ஜனநாயகத்தின் உண்மை முகம். அனைத்து மக்களுக்கான ஜனநாயகம் என்ற ஒன்று எங்கேயும் கிடையாது. ஒன்று அது முதலாளிகளுக்கானதாக இருக்க வேண்டும் அல்லது பாட்டாளி வர்க்க மக்களுக்கானதாக இருக்க வேண்டும். மற்றபடி பொதுவான ஜனநாயகம் என்று பேசுவதெல்லாம் ஊரை ஏமாற்றும் செயலாகும்.
ஒருவன் எதற்காக, எப்பொழுது, எங்கே, எப்படி போராட வேண்டும் என்று யார் முடிவு செய்வது? அதை ஒரு அரசோ, சில தனிப்பட்ட நபர்களின் அதிகாரமோ தீர்மானிக்க முடியாது. அதைப் போராடக்கூடிய நபர்தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவர் அடைந்த பாதிப்புக்கு ஏற்ப அவரின் போராட்ட வடிவங்கள் மாறுபடக்கூடும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை ஒட்டி போராட, மக்களை ஒரு அமைப்பாக ஒன்றுதிரட்டி ஒரு அரசியல் கட்சி தலைமையேற்று, திட்டமிட்டு நடத்தும் போராட்டமே சில சமயங்களில் பெரும் வன்முறைகளில் முடிவதுண்டு. ஆனால் எந்த வித சித்தாந்த, அரசியல் பின்புலமும் இல்லாமல், தனக்கோ தான் சார்ந்த மக்கள் சமூகத்திற்கோ இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தனிநபராக போராடுபவர்களிடம் நாம் அகிம்சையை எதிர்பார்த்தோமானால் அதில் எந்தவித நியாயமும் இல்லை.
நாம் முதலில் பிரச்சினையின் சாராம்சத்தை ஆராய வேண்டுமே ஒழிய நடந்தது வன்முறையா, அகிம்சையா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு தன்னுடைய குடும்பத்தில் ஒருவரை கொலை செய்தவனை பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்ட கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம் நாம் உடனே நீ செய்தது வன்முறை, நீ எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும். அதை ஒரு பிற்போக்குவாதியோ, முதலாளித்துவ அறிவுஜீவிகளோ சொன்னால் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் தன்னைக் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நபர் அதை வன்மையாகக் கண்டித்தார் என்றால் அவரை யாராவது உண்மையான கம்யூனிஸ்ட் என்று சொல்வார்களா? இல்லை போலி கம்யூனிஸ்ட் என்று சொல்வார்களா? குடும்பத்தில் ஒருவனைக் கொன்றவனை அடித்தாலே அதை கண்டிக்க அவசியமில்லை என்று சொல்லும் நாம் ஒரு இனத்தை அழித்தவனை சும்மா நாலு சாத்து செருப்பால் சாத்தியதை வன்மையாக கண்டிப்பவரை என்னவென்று சொல்வது? அதுவும் சொன்னவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றால் அவரை போலி கம்யூனிஸ்ட் என்று சொல்லக்கூட நாக்கு கூசுகின்றது.
தி ஹிந்து நாளிதழின் ஆய்வு அமைப்பான அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்துமையம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள ‘இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் சென்னை மியூசிக் அக்காடெமியில் கருத்தரங்கை ஒன்றை சமீபத்தில் நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் எம்.கே. நாரயணன் போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற நபர் எம்.கே.நாராயணனை செமத்தையாக செருப்பால் அடித்தாகக் கூறப்படுகின்றது. இதிலே நாம் கோபப்படுவதற்கு என்ன இருக்கின்றது!.
லங்காரத்னா என்.ராமும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு முக்கிய பங்காற்றிய அரச கைக்கூலி எம்.கே. நாராயணனும் சேர்ந்து ‘இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் தமிழக அரசின் அனுமதியுடன் தமிழ்நாட்டிலேயே கருத்தரங்கை நடத்துகின்றார்கள் என்றால் அவர்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் இருக்கும்? இலங்கை அகதிகளைப் பற்றி பேச இந்தத் துரோகிகளுக்கு என்ன தகுதி இருக்கின்றது? பிரபாகரன் எம்.கே. நாராயணனை மட்டும் செருப்பால் அடித்ததற்காக நாம் வருத்தப்படுகின்றோம்; கூட இருந்த என். ராமை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டாரே என்று. ஆனால் CPM-ன் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.. அனைவருக்கும் முன்னால் முந்திக்கொண்டு வந்து அறிக்கை விடுகின்றார். “இலங்கைப் பிரச்சினையில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் அவற்றை ஜனநாயக முறையில் வெளிப்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது” என்று.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் நமக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் ஒரு தரப்பினரின் கருத்து ஒரு இனத்தை அழித்ததென்றால் அதையும் கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டுமா?. அப்படி என்றால் இந்தியாவில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இந்திய தரகு முதலாளிகளுக்கு எதிராகவும், மத வெறியர்களுக்கு எதிராகவும், சாதி வெறியர்களுக்கு எதிராகவும் கருத்தியல் தளத்தில் மட்டுமே CPM போராடும் என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஆளும்வர்க்கத்தின் ஒரு கைக்கூலி மீது விழுந்த ஒரு செருப்படிக்கே CPM கலக்கமடைகின்றது என்றால் இந்தியாவில் புரட்சி பற்றி அவரிடம் கேட்டால் நிச்சயமாக அவர் கோவிலில் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்துவிடுவார், எங்கள் CPM பரம்பரையில் அப்படியொரு துரோகத்தை இந்திய அரசுக்கு எதிராக யாரும் செய்ய மாட்டார்கள் என்று.
நல்லவன் என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் ஒரு கெட்டவனால் நீண்ட நாளுக்குத் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடியாது. அவனது ஏதாவது ஒரு செயல்பாடு அவனை கெட்டவன் என்று அம்பலப்படுத்திவிடும். அப்படித்தான் ஜி.ராமகிருஷ்ணனின் இந்த அறிக்கை அவரையும், அவரது கட்சியையும் ஒரு சேர அம்பலப்படுத்தி உள்ளது. CPM கட்சி இந்திய அரசின் வாழ்நாள் கைக்கூலி என்பதையும் தாங்கள் இந்திய ஆளும்வர்க்கத்தின் நிரந்தர அடிமைகள் என்பதையும் நிரூபித்து உள்ளது. ஆளும் வர்க்க அறிவுஜீவிகள் என்பவர்கள் யாரைப்போல இருப்பார்கள் என்றால் நம்ம ‘தோழர்’ ஜி.ராமகிருஷ்ணனைப் போலத்தான் இருப்பார்கள். சாமானிய மக்களுக்காக கட்சி நடத்துகின்றோம் என்று சொல்லும் அவர்களாலேயே இதை சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால் மற்றவர்களை சொல்லவே தேவையில்லை.
பிரபாகரனின் செயலால் இந்திய அரசின் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்துவிடப் போவதில்லை என்றாலும் இந்திய மேலாதிக்க வெறிபிடித்த அரசின் மீது விழுந்த செருப்படியாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். நம்மால் குறைந்த பட்சம் அதையாவது செய்ய முடிந்ததை எண்ணி மகிழ்ச்சி அடையலாம். அந்த செருப்படி எம்.கே நாராயணன் மீது மட்டும் விழுந்த செருப்படி அல்ல, அது இந்திய ஆளும்வர்க்கத்தின் மீதும் அதன் மேலாதிக்க வெறிக்கு வக்காலத்து வாங்கும் அறிவு ஜீவிகளின் மீதும் விழுந்த செருப்படி. எனவே அந்தச் செருப்படியை நாம் கொண்டாடுவோம். ஏனென்றால் மானமற்ற மனிதர்களுக்குச் செருப்படியே சர்வலோக நிவாரணி.
- செ.கார்கி