policeஜெயராஜையும் அவரது மகன் பென்னிக்சையும் காவல் நிலையத்தில் வைத்து கடும் சித்தரவதை செய்ததோடு, பாலியல் ரீதியாகவும் துன்புறுத்திக் கொன்ற சாத்தான்குளம் காவலர்களின் கொடூரச் செயலுக்கு, தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காவலர்களை எல்லாம் ஏதோ இலட்சிய மனிதர்கள் என்று மனதில் கற்பனை செய்து வாழ்ந்து வந்தவர்களை எல்லாம் இன்று அந்தக் கற்பனையில்  இருந்து காவல் துறையே மீட்டெடுத்திருக்கின்றது. அரசு பயங்கரவாதம் என்ற சொல்லை இடதுசாரிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தாலும், பெரும்பாலான மக்களுக்கு அதன் பொருள் இப்போதுதான் உண்மையில் தெரிய வந்திருக்கின்றது.

சாமானிய உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி கொழுக்கும் விரல்விட்டு எண்ணத்தக்க கார்ப்ரேட்டுகளும், அவர்களை அண்டிப் பிழைக்கும் அரசியல் வேடதாரிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உருவாக்கிக் கொண்ட கூலிப்படைதான் இந்தக் காவல் துறை உள்ளிட்ட அதிகார மையங்கள் அனைத்தும். அவை ஒருபோதும் சாமானிய மக்களுக்கானதாக செயல்படவே முடியாது என்பதும், அதன் வேலையே ஒடுக்குமுறை மூலம் சுரண்டலைக் காப்பாற்றுவதுதான் எனும் போது, அதை சாமானிய மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பாக சீர்திருத்துவது என்பது இயக்கவியல் விதிகளுக்கே முரணானது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த அமைப்பு இப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், இந்தச் சமூகத்தின் இயக்க விதிகளை அறியாமல் உறைந்த நிலையில் சிந்திப்பவர்களும்தான் இன்று காவல் துறையை சீர்திருத்த வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளார்கள்.

காவல் துறையினருக்கு மக்களோடு எப்படி சுமூகமாகப் பழகுவது, சிரித்துப் பேசுவது, பண்புடன் நடந்து கொள்வது என்றெல்லாம் கற்றுத் தர வேண்டுமாம். இப்படி சொல்வதன் மூலம் காவல் துறையினர் எல்லாம் ஏதோ மனித உயிர்களுக்கு அப்பாற்பட்டவர்கள் போன்றும், பூமியில் வாழும் நரமனிதர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை அறியாத தெய்வப் பிறவிகள் போன்றும் சித்தரிக்க முயற்சிக்கின்றார்கள். நேற்று வரை சாமானிய மக்களோடு மக்களாக வாழ்ந்த எளிய மனிதர்கள்தான் அவர்கள் என்பதையும், அதிகார வர்க்கத்தின் அடியாளாக மாறிய பின் அது கொடுக்கும் அதிகார போதையும், ஆணவப் போக்கும், அரசியல்வாதிகளின், சமூக விரோதிகளின் தொடர்பும் மிக எளிமையாக முறைகேடான வழிகளில் சொத்து சேர்க்க உதவுவதால்தான் எந்த வர்க்கத்தில் இருந்து வந்தார்களோ, அந்த வர்க்கத்துடனான தனது உறவை அவர்கள் துண்டித்துக் கொள்வதோடு, ஆளும் வர்க்கத்தின் கூலிப்படை என்ற வகையில் அந்த  எளிய மனிதர்களை ஒடுக்கவும் துணிகின்றார்கள்.

சமூகத்தில் வர்க்க ஏற்றத்தாழ்வு நிலவும் வரையில் அந்தச் சமூக அமைப்பை கட்டிக் காப்பாற்றும் அரசால் நடத்தப்படும் காவல் துறை என்பது ஒருபோதும் எளிய மக்களுக்காக சேவையாற்றவே முடியாது. தற்போது இந்த வழக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது கூட, அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் போராட்டங்களுக்கும், ஊடகங்களின் அழுத்தத்திற்கும் அஞ்சித்தானே தவிர, கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அல்ல.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ், காவலர் மகாராஜன் போன்றோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், காவலர் மகாராஜன் என்பவர் இந்த வழக்கை உயர்நீதி மன்ற உத்திரவுப் படி விசாரிக்கச் சென்ற நீதித் துறை நடுவர் எம்.எஸ்.பாரதிதாசனை மிரட்டி உள்ளார். ‘உன்னால் ஒன்னும் புடுங்க முடியாது’ என்று கூறியுள்ளார்.

சிசிடிவி பதிவுகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப் பட்டிருக்கின்றன. காவல் துறையினர் எவ்வளவு கிரிமினல்மயமானவர்கள் என்பதைத்தான் அவர்களே நெற்றிப் பொட்டில் அடித்தது போல நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். சாத்தான்குளம் காவல் நிலையம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக காவல் துறையும் அப்படித்தான் இருக்கின்றது. அதுதான் உண்மை நிலையாகும்.

ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் படு தோல்வியைச் சந்தித்து மக்கள் மத்தியில் அம்பலமாகி நிற்கும் நிலையில், மக்களின் மனங்களில் இந்தக் கட்டமைப்பு அவர்களுக்கானது என்ற போலி பிம்பத்தைத் தக்க வைக்க வேண்டிய நெருக்கடியில் ஆளும் வர்க்கம் சிக்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக நீதித் துறை மீது சாமானிய மக்களுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் சுத்தமாகக் கரைந்து, நீதித் துறை என்பது அரசியல்வாதிகளின், பெருமுதலாளிகளின் ஏவல் துறை என்பது அப்பட்டமாக நிறுவப்பட்டிருக்கின்றது.

இந்த சாத்தான்குளம் சம்பவத்தில் கூட காவல் துறை தனியாக தன்னுடைய அராஜகத்தை நிகழ்த்தவில்லை. கடுமையான காயங்கள் இருந்தும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை சிறையில் அடைப்பதற்கு உடல்தகுதி சான்றிதழ் கொடுத்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் வெண்ணிலா, அனுமதி கொடுத்த நீதிபதி, உடலில் காயங்கள் இருந்தது என்று தெரிந்தும் சிறையில் அடைத்த சிறைத் துறை அதிகாரிகள், பிரண்ஸ் ஆப் போலீஸ் என்ற போர்வையில் காவல் துறையில் ஊடுருவி உள்ள இந்துத்துவ குண்டர்கள் என பல பேரின் கூட்டுச் சதியின் மூலமே அது நிகழ்த்தப் பட்டிருக்கின்றது.

இந்த அரசுக் கட்டமைப்பு முழுவதுமே மக்களுக்கு எதிரானது என்பதற்கும், அது அழுகி புரையோடிப் போய் இருக்கின்றது என்பதற்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? தற்போது இந்த வழக்கில் தலைமைக் காவலர் ரேவதி நீதித்துறை நடுவர் முன்பு, அன்று இரவு ஜெயராஜும், பென்னிக்சும் விடிய விடிய தாக்கப்பட்டதாக உண்மையைச் சொல்லி இருக்கின்றார். அதற்காக நாம் அவரைப் பாராட்டலாம். ஆனால் இதை வைத்துக் கொண்டு காவல் துறையில் ஒரு சிலர் அயோக்கியத்தனமாக நடந்து கொள்வதால் அனைவருக்கும் கெட்டப் பெயர் ஏற்படுகின்றது, உண்மையில் பெரும்பாலான காவலர்கள் உத்தம சீலர்கள்தான் என்று துதிபாட ஆரம்பித்து விடக்கூடாது. ரேவதி போன்றவர்கள் தலைக்குமேல் வெள்ளம் போன பின்னால் தப்பிக்க இயலாது என்ற நிலை வந்த போதுதான் இதைச் சொல்லியிருக்கின்றார்கள். அரசு மக்களுக்குப் பயந்து அவர்களை ஆற்றுப்படுத்த ஒரு சிலரை பலி கொடுக்கத் தயாராகி விட்ட சூழ்நிலையின் வெளிப்பாடுதான் ரேவதி போன்றவர்களின் வாக்குமூலங்கள்.

மக்களுக்கு எந்த வகையிலும் பதில் சொல்லக் கடமைப்பட்டிராத, வன்முறை அமைப்பான காவல் துறையில் யோக்கியவான்களைத் தேடுவது என்பது மலத்தில் அரிசி பொறுக்கும் செயலுக்கு இணையானது.

நாட்டில் நடக்கும் அனைத்துக் குற்றச்செயல்களும் சமூக விரோத செயல்களும் காவல் துறையின் ஆசியுடன்தான் நடக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டால் காவல்துறையின் யோக்கியதையை நாம் தெரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இரவு அனைத்து கடைகளும் மூடப் பெற்ற பிறகும் திறந்திருக்கும் கடைகளில், மருந்துக்கடைகளுக்கு அடுத்து அதிமுக குண்டர்களால் நடத்தப்படும் சந்துக் கடைகள்தான் அதிகமாக உள்ளது. காய்கறிக் கடைகளையும், மளிகைக் கடைகளையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் மூடச் சொல்லி மிரட்டும் போலீசாரில் ஒருவர் கூட விடிய விடிய திறந்திருக்கும் சந்துக் கடைகளை மூடச் சொல்லி பார்த்திருக்கின்றீர்களா? நிச்சயம் பார்த்திருக்க முடியாது. சந்துக் கடைகளை நடத்தும் குண்டர்களிடம் சென்று கேட்டுப் பாருங்கள், காவல் நிலையத்துக்கு எவ்வளவு கப்பம் கட்டுகின்றோம், மதுவிலக்கு ஆயத்துறைக்கு எவ்வளவு கப்பம் கட்டுகின்றோம் என்று விலாவரியாக சொல்வார்கள்.

 இதுதான் போலீசின் உண்மையான யோக்கியதை. பொறுக்கித் தின்பதற்காக அரசியல்வாதிகளோடு கரம்கோர்த்து செயல்படும் இந்தக் குற்றக் கும்பல்களால் எப்படி நாட்டில் குற்றம் நடக்காமல் தடுக்க முடியும்? ரேவதி போன்ற யோக்கியர்கள் கூட மக்களின் தாலியறுக்கும் சந்துக் கடைகளை நடத்த அனுமதிப்பவர்களாகவும், இல்லை என்றால் அதை எதிர்த்துப் பேச இயலாதவர்களாகவுமே காவல் துறையில் பணியாற்ற முடியும். அரசியல்வாதிகள் செய்யும் அனைத்து சமூக விரோத செயல்களின் கூட்டாளிகளாக காவல் துறையினர் இருந்தேதான் தீர வேண்டும். அதற்காகத்தான் அவர்கள் பணி அமர்த்தப்படுகின்றார்கள். அதனால்தான் ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்து வயிறு வளர்க்கும் இந்தத் துறையே களைக்கப்பட வேண்டும் என்கின்றோம்.

மக்கள் கமிட்டிகளை அமைப்பதன் மூலம் தங்களின் பாதுகாப்புக்கான காவலர்களை அவர்களே தேர்ந்தெடுக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும். அவர்கள் அரசுக்கு அல்ல, மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இருக்க வேண்டும். மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டால் உடனடியாக வேலையை விட்டு நீக்கவும், தண்டிக்கப்படவும் வேண்டும். காவல் துறையை சீர்திருத்த வேண்டும் என்று சொல்லும் நபர்கள் யாரும் காவல் துறையை மக்களின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட துறையாக மாற்ற வேண்டும் என்று சொல்லத் துணியாததற்குக் காரணம் அவர்கள் முதலாளித்துவ அமைப்பின் அடிமைகளாக இருப்பதால்தான். நாம் அதிகாரத்தை மக்களுக்குக் கொடு என்கின்றோம்.

திருப்பி அழைப்பதற்கான அதிகாரம் இல்லாத காரணத்தால்தான் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளும், அதன் அடியாள் படையான அரசு உறுப்புகளைச் சார்ந்தவர்கள் எல்லாம் நான்காம் தரப் பொறுக்கிகள் போன்று நடந்து கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. தேர்ந்தெடுக்கும் உரிமை இருப்பது போலவே திருப்பி அழைக்கும் உரிமையும் வேண்டும். அதற்கு அதிகாரத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களாட்சி என்ற சொல் அதன் முழுமையான பொருளில் ஜனநாயகத் தன்மையோடு பிரதிபலிக்கும்.

 அது இல்லாத வரை அந்தக் காவலர் சொன்னது போல நம்மால் இது போன்ற அயோக்கியர்களையும், கேடுகெட்டவர்களையும் ஒன்றும் புடுங்க முடியாது என்பதுதான் உண்மை. நமது போராட்டம் இனி காவலர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதோடு நிற்காமல், காவல் துறையை மக்களுக்குக் கட்டுப்பட்ட, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துறையாக மாற்ற வேண்டும் என்றும், அரசு உறுப்புகளில் பணியாற்றும் அனைவருமே மக்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான சட்டத் திருத்தத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்றும் போராட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்களும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் இணைந்து இதற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் பொதுக் கருத்தாக இதை மாற்ற வேண்டும். அனைத்து அரச ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான நிரந்தரத் தீர்வாகவும், ஜனநாயகத்தை நோக்கிய முதல் அடி எடுத்து வைப்பதாகவும் இது இருக்கும். இதைச் செய்யாமல் மற்ற எதைச் செய்தாலும் அது புண்ணுக்கு புனுகு பூசுவதைப் போன்று பயனற்றதாகும்.

- செ.கார்கி

Pin It