“பூச்சாண்டி வந்து பிடித்துக்கொள்வான்” என்றுகூறி அறியாத தாய்மார் குழந்தைகளைப் பயமுறுத்துவதுண்டு. அரசியல்திருத்தமென்னும் பூச்சாண்டி வரப்போவதாக நம்மையும் தற்போது அச்சுறுத்தி வருகிறார்கள். தாஸ் - பர்க்கென்ஹெட் சமிக்ஞைகளின் கருத்து இஃதேயென்று சிலர் ஊகிக்கின்றனர். அரைகுறைச் சீர்திருத்தத்தை அங்கீகரிக்க வேண்டாமென்று அன்னிபெசன்ட் அம்மையார் எச்சரிக்கை செய்கிறார். அரசியல் திருத்தம் அதிகமாக அளிக்கப் பட்டேயாகவேண்டுமென்றும், ஆனால் ஆங்கிலோ இந்தியரின் உரிமைகளைப் புறக்கணித்து விடக்கூடாதென்றும் கர்னல் கிட்னி கழறுகிறார். மன்னர் பெருமானே இவ்வாண்டினிறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து விசேஷ உரிமைகள் வழங்கப்போகிறாரென்பது மற்றும் சிலரின் நம்பிக்கை. எம்மைப் பொறுத்தவரையில், இவர்களின் ஊகம் மெய்யாகி அரசியல் திருத்தம் வழங்கப்பட்டால் நாம் ஒரு சிறிதும் வியப்புறோம். வேற்றுமையும், தளர்ச்சியும் நாட்டில் நிலவி நிற்கும் இவ்வேளையில் சொற்ப சீர்திருத்தங்கள் வழங்கி நம்மைச் சரிப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷார் கருதுவது இயல்பே. ஆனால், அவைகளை ஏற்றுக்கொண்டு பாரத மக்கள் மீண்டுமொரு முறை ஏமாந்துபோவார்களா?

குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1925

Pin It