மகான் அரவிந்தர் இந்திய ஆன்மீக உலகில் ஓர் அபூர்வ விடிவெள்ளி. கற்றது மேற்கத்திய கல்வி என்றாலும் அவர் இந்தியத் தத்துவ ஞானத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய இந்திய மொழிகளில் வல்லவர். தொடக்கத்தில் ஆங்கிலப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் இருந்து கல்விப் பணியாற்றிவர். பொதுவாழ்வின் தொடக்கத்தில் இந்திய விடுதலைப் போரில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். பின்னர் புதுச்சேரிக்கு இடம்பெயர்ந்து முழுமை பெற்ற ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து யோகியாகவும் மகானாகவும் நிலைபெற்றவர்.

அரவிந்தர்; இலக்கியவாதி, எழுத்தாளர், பேராசிரியர், தத்துவ ஆய்வாளர், இதழாளர், விடுதலைப் போராட்ட வீரர், ஆன்மீக ஞானி எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். இவர் தாம் நடத்திவந்த கர்மயோகி எனும் வார இதழில் 1910ஆம் ஆண்டில் தேசியக் கல்வி அமைப்பு (A System of National Education) எனும் தலைப்பில் தொடர்ந்து இந்திய தேசத்திற்கான புதிய கல்விமுறை குறித்து மிகக் கறாரான அணுகுமுறைகளோடு எழுதி வந்தார். பின்னர் அரவிந்தரின் இக்கட்டுரைகள், எந்நாட்டுக் கல்வி அமைப்புக்கும் பொருந்தக்கூடிய இந்தப் பொதுக் கருத்துக்களை, இந்தியத் தேசியக் கல்விக்கான முகவுரையாகக் கொள்ளலாம் என்னும் குறிப்புரையுடன் 1924இல் நூல் வடிவில் வெளிவந்தன.

aurobindoஅரவிந்தர் இந்நூலில் இந்திய தேசியக் கல்வியைக் கட்டமைப்பதற்கான வழிமுறைகளை முன்மொழிவதோடு அன்றைய சூழலில் நடைமுறையிலிருந்த ஆங்கில மெக்காலே கல்விமுறைக்கு எதிரான எதிர்க்குரலையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விரிந்த இந்தியாவை இங்கிலாந்துப் பேரரசின் கீழ் நிர்வகிப்பதற்கான அணுகுமுறைகளை வடிவமைப்பதில் பெரும்பங்காற்றிய மெக்காலே (T.B.Macaulay) பின்வரும் கருத்துக்களை முன்வைத்துத் தம் கல்வித் திட்டத்தை முன்மொழிந்தார்.

“நிர்வாக முறைகளைச் சீர்செய்வதற்கு நமக்குத் திறமையான அடிமைகள் வேண்டும். அவர்கள் நாம் சொல்வதை அப்படியே செயல்படுத்தும் விசுவாசிகளாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களை நாமே உருவாக்க வேண்டும். நாம் கைக்கொள்ள வேண்டியது கல்வி முறையில் மாற்றம். ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்துவைத்து அந்தக் கல்வி கற்றவர்களை நாமே வேலைக்கும் எடுத்துக்கொண்டால், அவர்கள் நமது விசுவாசியாக இருப்பார்கள்.”

இனி, இந்தியர்களின் தாய்மொழியாக ஆங்கிலம் உருமாறிவிடும் என்ற பெருங்கனவோடு 1835 பிப்ரவரி 2-ம் தேதி மெக்காலே, தமது கல்விக் கொள்கையைச் சமர்ப்பித்தார்.

இந்தியர்களின் பாரம்பரியக் கல்விமுறையை ஒழித்துவிட்டு ஆங்கிலக் கல்வியைக் கொண்டு வருவதன் தேவை மற்றும் அவசியம் குறித்து மெக்காலே பதிவு செய்த கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியர்களின் கலை, இலக்கியம், அறிவியல் சிந்தனைகள் அர்த்தமற்றவை. ஆங்கில மொழியின் அறிவோடு ஒப்பிடுகையில் அவை மிகச் சொற்பமானவை, இருப்பதாகச் சொல்லப்படுபனவும் அபத்தம் மிக்கவை. மெக்காலேவின் கருத்துக்களின் ஒருபகுதி பின்வருமாறு,

கற்பனைசார் பிரதிகளிலிருந்து தகவல்களைப் பதிவு செய்யும் தத்துவங்களைக் கொண்ட பிரதிகளை நோக்கிச் செல்கிற பொழுது ஐரோப்பியர்களின் உயரிய நிலை அளவிடற்கரிய தென்பது புலனாகும். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிற எல்லாப் புத்தகங்களிலுமுள்ள வரலாற்றுத் தகவல்களை ஒருசேரத் தொகுத்தால் அது இங்கிலாந்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படுகிற மிக எளிமையான வரலாற்றுச் சுருக்கம் பெற்றிருக்கும் மதிப்பைவிடக் குறைந்த மதிப்புடையதாகவே இருக்கும் என்பதை நான் மிகைபடக் கூறவில்லை என்றே நம்புகிறேன்.

இப்பொழுது நமக்கு முன்னிருக்கிற கேள்வி இதுதான். இம் மொழியைக் கற்பிக்கும் அதிகாரம் நம்மிடையே இருக்கும்போது, நம்முடைய மொழியின் தகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது வேறெந்த மொழியிலும் எந்தப் பொருளிலும் புத்தகங்களே இல்லை என்பது அனைவராலும் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டதாக இருக்கிற பொழுது, ஏன் பிறமொழிகளைக் கற்பிக்க வேண்டும்? ஐரோப்பிய அறிவியலைக் கற்பிக்க வாய்ப்பு இருக்கும் போது, அதிலிருந்து மாறுபட்டு மோசமான நிலையில் உள்ள கருத்தமைவுகளை ஏன் கற்பிக்க வேண்டும்?

நமது இந்தியக் கல்விமுறை குறித்தான மெக்காலேவின் மதிப்பீடு வெறுமனே அறிக்கை அளவில் நில்லாமல் உடனே நடைமுறைக்கும் வந்தது. அதுவரை இயங்கி வந்த அரபு மற்றும் சமஸ்கிருதப் பள்ளிகள் மூடப்பட்டன. மதரஸாக்களுக்கும் சமஸ்கிருதக் கல்வி நிலையங்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் உடனே நிறுத்தப்பட்டன. மெக்காலேவின் பெருங்கனவு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஓரளவு நிறைவேறத் தொடங்கிவிட்ட நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரவிந்தர் முன்மொழிந்த இந்தியத் தேசியக் கல்வி அமைப்பு மெக்காலேவின் கல்வித் திட்டத்திற்கான எதிர்க்குரலாக ஆழ்ந்த தொனியுடன் அழுத்தமாக வெளிப்பட்டது.

தேசிய கல்விமுறையை வகுப்பதில் அவரின் முதல் கவனம் புத்தகப் படிப்பு மற்றும் மனப்பாடம் செய்தல் போன்ற மனத்தோடு தொடர்பற்ற கற்றல் அணுகுமுறைகளின் பக்கம் சென்றது. அரவிந்தர் கூறுகிறார்,

“ஐரோப்பியக் கல்வி முறையிலுள்ளதைப் போன்ற விரிவான கல்வியை அதைவிடவும் முழுமையாக அளிக்கும் அதே சமயத்தில், மிகுதியான புத்தகப் படிப்பினால் விளையும் இறுக்கநிலை, பாடங்களை மனப்பாடம் செய்தல் போன்ற தீமைகளைத் தவிர்ப்பதே தேசியக் கல்விமுறையை வகுப்பதில் உள்ள முதல் பிரச்சனையாகும்.”

மனிதனின் அறிவுச் சாதனங்களை ஆராய்ந்து இயற்கையான எளிதான, நற்பயன் அளிக்கக் கூயெதொரு கல்விமுறையைக் கண்டுபிடிப்பதன் வாயிலாகவே இப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் தசைகளுக்குப் பயிற்சி அளிப்பதைப் போலவே மனத்திற்கும் எளிமையான அதேசமயம் முழுமையான பயிற்சியளிக்க வேண்டும். கல்வியின் கருவியாகிய மனத்தைப் புறக்கனித்து புத்தகப் படிப்பிற்கு மட்டுமே உதவும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த எந்தக் கல்விமுறையுமே, சிறப்பான ஆற்றல்களைக் கொண்ட முழுமையான மனத்தை உருவாக்குதற்கு மாறாக அறிவு வளர்ச்சியைத் தடைசெய்து சீர்குலைக்கவே செய்யும் என்று அவர் நம்பினார்.  

அரவிந்தரின் எதிர்க்குரல் மெக்காலேவின் ஆங்கிலக் கல்வித் திட்டத்திற்கு எதிராக மட்டும் அமையாமல் கல்வி, கற்றல், கற்பித்தல் தொடர்பாக இதுவரை மேற்குலகம் நம்பிவந்த அணுகுமுறைகளின் மீதும் தனது விவாதத்தை முன்வைத்தது.

அரவிந்தரின் எதிர்க்குரலும் முன்மொழிந்த விவாதங்களும்.

  1. கல்வியின் முதலாவது அடிப்படை உண்மை எதையும் கற்பிக்க முடியாது என்பதே. ஆசிரியர் கற்றலுக்குத் துணைபுரிவதுதான் சாத்தியம். ஆசிரியர் மாணவனுக்கு அறிவைக் கொடுப்பதில்லை. அவனது அறிவை அவனுக்கு இனங்காட்டுகிறார்.
  2. கற்றல் தேர்வு கற்பவனைச் சார்ந்தது. ஆசிரியர், பெற்றோர் அல்லது பிறர் யாருடைய விருப்பம் சார்ந்ததன்று கல்வி. அது மாணவனின் மனம் சார்ந்தது.
  3. கல்வி கற்பனின் நிலம், மரபு, சூழல் சார்ந்து தொடங்கி, பின்னர் விரிவடைந்து கொண்டே செல்ல வேண்டும். கல்வி அவனது வேரிலிருந்து தொடங்கிக் கிளைபரப்ப வேண்டும். கற்பவனின் அனுபவத்திற்கு வெளியே இருந்து கல்வி தொடங்குதல் கூடாது.
  4. இன்றைய கற்பித்தலில் உள்ள பெருங்குறை ஒன்றை முழுமையாகக் கற்பிக்காமல் பகுதி பகுதிகளாகப் பிரித்துப் பலவற்றோடு கலந்து கற்பிக்கும் முறை. முழுமையான அறிவைப்பெற இவ்வணுகுமுறை பயன்படாது.
  5. குழந்தைக்கு ஏழு அல்லது எட்டு வயதாகுமுன் முறைசார்ந்த எவ்விதக் கல்விமுறைக்கும் அக்குழந்தை உட்படுத்தப்படலாகாது. இப்பொழுதிருக்கும் செயற்கையான கல்விமுறைக்கு மாற்றாக, குழந்தை இயற்கையாகத் தானே கற்கும் முறையை வகுத்தல் வேண்டும்
  6. கல்வி அவரவரது தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுதல் வேண்டும். ஒருவன் தனது சொந்த மொழியில் தேர்ச்சி பெற்றபிறகே பிற மொழிகளில் நல்ல தேர்ச்சி பெறுவது சாத்தியம்.

சொல்லப்பட்ட ஆறு கருத்துக்களும் மெக்காலேவின் புதிய கல்விமுறைக்கும் அவரது மதிப்பீட்டுக்கும் எதிரான உரத்த குரலாக ஒலிப்பதனை நாம் உணரமுடியும். அரவிந்தரின் எதிர்க்குரலின் மையப் பொருள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். கற்றல் தேர்வு, தாய்மொழிக் கல்வி, மண்சார்ந்த கல்வி, முழுமையாகக் கற்பித்தல் முதலானவை.

மொழியப்பட்ட எதிர்க்குரலில் விவாதங்கள் மட்டுமன்றிக் கற்பித்தலுக்கான புதிய அணுகுமுறைகள் பலவற்றையும் அரவிந்தர் அறிமுகம் செய்கின்றார். புதிய அணுகுமுறை நமது பாரம்பரியமான கல்விமுறை மற்றும் மேற்குலகக் கல்விமுறை இரண்டின் நன்மைகளை உள்ளடக்கியும் தீமைகளை விலக்கியும் அமைய வேண்டும். என்ற கருத்தை அவர் பின்வருமாறு, விளக்குகின்றார்.

“வருங்காலக் கல்விமுறையில் பண்டைய கல்வி முறையிலோ இன்றைய கல்வி முறையிலோ நாம் தளையுற்றிருக்க வேண்டியதில்லை. சிறந்த அறிவுத் தேர்ச்சியை விரைவில் அளிக்கக் கூடிய முழுமையான முறையினையே நாம் தேர்ந்தெடுப்போம்.”

மேலும் கற்றல் கற்பித்தலின் நோக்கம் மற்றும் இலக்கு குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் அரவிந்தர் தமது தேசியக் கல்வி அமைப்பில் விரிவாகப் பேசுகின்றார். ஒழுக்கக் கல்வி, அறக்கல்வி, சமயக் கல்வி முதலான கல்விகளைப் பரிந்துரைக்கும் அவர், எந்த ஒரு கல்வியும் போதிக்கப்படும் பொழுது அது பயனற்றுப் போகிறது என்கிறார். போதிப்பது, பரிந்துரைப்பது, ஆணையிடுவது, வலியுறுத்துவது, சுமத்துவது முதலான பழைய முறைகளைத் தவிர்த்து வழிகாட்டுவது, துணைபுரிவது, முன்மாதிரியாய் இருப்பது போன்ற புதிய அணுகுமுறைகளோடு கற்றல் கற்பித்தல் அமைதல் நலம் பயக்கும் என்கிறார்.

நிறைவாக, கல்வியின் இலக்கு பற்றிக் குறிப்பிடும்போது சமயத்தின் சாராம்சமே கல்வியின் குறிக்கோளாக அமைதல் வேண்டும் என்கிறார். சமயத்தின் சாரம் என்பது சமயக் கல்வி அன்று, சமயக் கல்வி என்பது சமயக் கோட்பாடுகளைக் கற்பிப்பது அன்று. சமயக் கோட்பாடுகளைக் கற்பிப்பதால் குழந்தைகள் பக்தியும் அறவொழுக்கமும் மிக்கவர்களாக வளர்வர் என்று நினைப்பது அறியாமை. இது ஐரோப்பிய அணுகுமுறை. இதனால் ஒரு மதவெறியனோ, சமயவாதியோ, போலி பக்தனோ உருவாகும் ஆபத்துள்ளது. சமயம் வாழ்வதற்குரியதாகும் அது வெறுமனே கற்பிப்பதற்குரிய ஒன்றன்று என்று சமயக் கல்வியை மதிப்பிடும் அரவிந்தர் சமயத்தின் சாரமாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.

சமயத்தின் சாரமாவது, இறைவனுக்கெனவும், மனித குலத்திற்கெனவும், நாட்டிற்கெனவும் வாழ்தல் இறைவனிலும், மனித குலத்திலும், நாட்டிலும் உறைகின்ற பிறருக்கெனவும் தனக்கெனவும் வாழ்தல். ஆக, கல்வியின் நோக்கம் மனித குலம் முழுமைக்கும் பயன்படும் வாழ்க்கைக்கு நம்மை ஆயத்தப் படுத்துவதே ஆகும்.

மகான் அரவிந்தர், கல்வியின் முதலாவது அடிப்படை உண்மை எதையும் கற்பிக்க முடியாது என்பதே என்று அதிரடியாகத் தொடங்கி நடைமுறைக் கல்விக்கு எதிரான பல்வேறு எதிர்க்குரலைப் பதிவு செய்து, முழுமையான கல்வி, கற்றல், கற்பித்தல் குறித்த புதிய அணுகுமுறைகளையும் முன்மொழிகிறார்.

முனைவர் நா.இளங்கோ, தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி-8

Pin It