ரஷ்ய தேச ஆட்சியின் கொள்கையை உலகம் முழுவதுமே வெருக் கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு பிரசாரம் செய்து வருவதாய் காணப்பட்டு வருகின்றது. எது போலவென்றால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பெரிதும் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் இருந்ததால் பார்ப்பனர்களின் செல்வாக்கால் அது ஒரு காலத்தில் எப்படி எல்லா மக்களாலும் வெறுக்கப்பட வேண்டுமென்று பிரசாரம் செய்வதாய் காணப்பட்டதோ அதுபோல்.

ரஷியா ஆட்சிக் கொள்கையானது சுருக்கமாகச் சொல்லப்பட வேண்டுமானால் அது உலக பணக்காரர்களுக்கு விஷம் போன்றதும் ஏழை மக்களுக்கு “சஞ்சீவி” போன்றதுமாகும். இன்றைய உலகம் பணக்காரர்கள் கையில் சிக்குண்டு, பணக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, பணக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் பணக்காரர்கள் 100க்கு 10- பெயர்களே யாயினும், அவர்களே உலக மக்களாகக் காணப்படுவதும், ஏழை மக்கள் 100க்கு 90-பேர்களாயினும் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாக உலகுக்கு ஞாபகத்துக்கே வரமுடியாமலும் இருந்து வருகின்றது.

ஆனால் ரஷ்யாவிலோ அப்படிக்கில்லாமல் பணக்கார ஆதிக்கம் ஒழிந்து ஏழைமக்கள் பணக்காரர்கள் கையினின்று விடுபட்டு சுதந்திரம் பெற்று ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி என்கின்ற வேற்றுமை இல்லாமல் எல்லோரும் ஒரே இனம் (அதாவது மனித இனம்) என்கின்ற தலைப்பில் எல்லோரும் ஓர் குடும்ப மக்களாய் வாழ்ந்து வருகிறார்கள்.

periyar add 280இந்த நிலை பணக்காரர்கள் புரோகிதர்கள் ஆதிக்கமுள்ள நாடுகளுக்கு எதிரான நிலையானதினால் பணக்கார உலகம் ரஷியாவை தூற்றவும், பழிக்கவும், வெறுக்கவும், விஷமப் பிரசாரம் செய்யவும் ஆன காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதில் அதிசயமொன்றுமில்லை. இந்த நான்கைந்து வருடகாலமாக ரஷியாவைப் பற்றி பலவாறு அதாவது ரஷிய மக்களுக்கு போதிய ஆகாரமில்லை யென்றும், கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி மடிகின்றார்கள் என்றும், கொடுங்கோன்மை முறையால் ஆளப்பட்டு வருகின்றதென்றும், அந்நாட்டு ஆட்சியில் நீதி என்பதே கிடையாது என்றும், மற்றும் பலவிதமாக அதைத் தூற்றிப் பழித்து, இழித்து பிரசாரங்கள் செய்யப்பட்டு வந்தன. அங்குள்ள நன்மைகள், மேன்மைகள் எதுவாயினும் அவற்றை பரிசுத்தமாய் வடிகட்டினாற்போல மறைத்தும் வந்தன. எப்படி இருந்தும், எவ்வளவு விஷமப் பிரசாரம் செய்தும், சூரிய வெளிச்சத்தை உள்ளங்கையால் மறைக்க முடியாதுபோல ரஷியா நிலைமை இப்போது உலக மக்களுக்கு வெளியாகின்றது. வரவர ரஷிய சேதிகளின் உண்மையை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஜனங்களுக்குள்ள பயம் நீங்கியும் வருகின்றது. அது மாத்திரமல்லாமல் இந்த 4, 5 மாத காலமாய் ரஷிய சேதிகளை வெளிப் படுத்துவது ஒரு நாகரீகமாயும், ரஷிய சேதிகளைப் பற்றிப் பேசுவது ஒரு சத்கால nக்ஷபமாகவும் ஏற்பட்டுவிட்டது. இதன் பயனாய் இப்போது ரஷிய சேதிகள் இல்லாத பத்திரிகைகளும், ரஷியா பிரஸ்தாபமில்லாத பிரசங்கங் களும் மிகமிக அருமையாகப் போய்விட்டது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே ரஷிய பூச்சாண்டி திரை நீங்கப்பட்டு வெட்ட வெளிச்சத்தில் வெள்ளைக் கண்ணாடி மூலம் பார்க்கக்கூடியதாக இருந்து வருகின்றது.

சமீப காலத்தில் ரஷியாவைப் பற்றி ஒரு பரபரப்பு இருந்து வந்தது நேயர்களுக்கு தெரிந்திருக்குமென்றே எண்ணுகின்றோம்.

அதாவது ரஷிய ஆட்சியானது சில பிரிட்டிஷ் பிரஜைகளின் மீது குற்றம் சாட்டி சிறை பிடித்து வைத்திருப்பதாயும், அதுபழிவாங்கும் எண்ணத்துடன் கற்பனையாய் செய்யப்பட்டிருப்பதாயும், ஆனதினால் ரஷ்யாவுடன் பிரிட்டிஷ் எவ்வித சம்பந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும், வியாபாரத் துறையில் ரஷிய வியாபாரத்தை நிறுத்தி அந்தச் சரக்கு பிரிட்டிஷுக்குள் வராமல் தடுத்துவிட வேண்டுமென்று பல புதிய சட்டங்களையும் செய்தும் அதன் மூலம் ரஷிய வியாபாரத்தை பகிஷ்கரிக்கவும் முயற்சித்து வந்தது யாவருமறிவார்கள்.

விஷயம் என்னவென்றால் ரஷியாவில் இயந்திரத் தொழில் முறை விருத்திக்கு அனுகூலமான மின்சார விசை நிலையங்கள் கொஞ்ச காலமாக ஒன்றன்பின் ஒன்றாய் பழுது ஆய்க்கொண்டு வந்ததுடன் அதனால் ரஷியத் தொழில் முறை கெட்டு பெரிய நஷ்டம் ஏற்பட்டும் வந்தது. ரஷ்ய ஆட்சி நிர்வாகிகள் இதைப் பற்றி சந்தேகப்பட்டு அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றதில் சில பிரிட்டிஷ் கம்பெனிக்காரர்களின் நன்மைக்காக ரஷ்யா விலுள்ள சில பிரிட்டிஷ் இஞ்சினீர்கள் சில ரஷ்யர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களைக் கைவசப்படுத்தி அதன்மூலம் அங்குள்ள மின்சார நிலையங்களுக்குக் கெடுதியை விளைவித்து வந்தார்கள் என்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு அந்த பிரிட்டிஷ் இஞ்சினீயர்களையும் அதற்கு உளவாயிருந்த ரஷ்ய சதிகாரர்களையும் கண்டுபிடித்துச் சிறை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விஷயத்தை பிரிட்டிஷ் முதலாளி வர்க்கம் அறிந்து இதனால் தங்களுக்குப் பெரிய உலகப் பழியும் அவமானமும் வந்து விட்டதே என்று கருதி இச்செய்கைகளை மறைக்க ஆசைப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் ரஷ்யரை மிரட்டிப் பார்த்த தல்லாமல் ரஷ்யாவின் மீது பழியும் சுமத்தினார்கள்.

ஆனால் ரஷ்யர்கள் இவை எதற்கும் பயப்படாமல் தைரியமாய் அது விஷயத்தில் தாங்கள் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து உலகத்தின் முன்பு தங்களுடைய திறனையும், தைரியத்தையும் நியாயம் வழங்கும் முறையையும் காட்டிக்கொண்டார்கள். எப்படி என்றால் இந்த சதிக் குற்றத்தில் சம்மந்தப்பட்ட 18-குற்றவாளிகளில் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6-பெயர்கள் (இவர்கள் ஆறு பேர்களும் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களாவார்கள். மீதி ரஷிய குற்றவாளிகள் 12 பேர்கள். இந்த பதினெட்டு பெயர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி வெளிப்படையாய் எதிரிகளுக்கு தகுந்த வக்கீல்களை வைத்து வாதாட சந்தர்ப்பம் கொடுத்து அந்த வக்கீல்களுக்கு யோசனை சொல்லவும் விசார ணையின் யோக்கியதையை கவனிக்கவும் தக்க வண்ணம் பிரிட்டிஷ் பிரதி நிதிகள் வந்து கோர்ட்டில் ஆஜராக சம்மதித்தும் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த விசாரணையால் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களான குற்றவாளிகள் சிலர் தங்கள் குற்றங்களை தங்கள் வாய் மூலமாக ஒப்புக்கொள்ளவும் நேர்ந்து விட்டதுடன் சாக்ஷிகள் மூலம் குற்றங்கள் தாராளமாய் ருஜுவும் ஆகி விட்டன.

இதன் மீது ரஷ்ய நீதிபதியானவர் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6 பேர்களில் ஒருவருக்கு விடுதலையும் இருவருக்கு முறையே 3 வருஷம் 2 வருஷம் வீதம் தண்டனையும், மூவருக்கு தேசப் பிரஷ்டமும் செய்துவிட்டு, ரஷ்யக் குற்றவாளிகள் பன்னிருவர்களில் ஒருவரை விடுதலை செய்து விட்டு பாக்கி பேர்களை 10 வருஷம் 8 வருஷம் 2 வருஷம் 3 வருஷம் வீதமும் இதில் ஒரு பெண்ணும் இருந்ததால் அவருக்கு 11/2 வருஷமும் தண்டனை விதித்தார்கள். அப்பீலுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள்.

இதிலிருந்து ரஷ்ய ஆட்சி நீதி வழங்கும் முறையை ஒருவாறு உணரலாம். இந்தக் குற்றங்களை சாதாரண குற்றம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. இதன் உள் எண்ணமும் இதனால் ஏற்படக்கூடிய நஷ்டமும் எவ்வளவு கடுமையானது என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட குற்றம் ரஷ்யர்கள் பிரிட்டிஷுக்குள் வந்து செய்திருந்தால் அது எப்படிப் பாவிக்கப்பட்டு எவ்வித தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவரவர்கள் சொந்த முறையில் யோசித்துப் பார்த்தால் தெரிய வரும். அப்படிப்பட்ட இந்த கடுமையான சதிக்குற்றத்திற்கு இருவருக்கு 2-வருஷம் 3-வருஷம் தண்டனையும் மற்ற மூவருக்கு தங்கள் நாட்டை விட்டு அவர்களது சொந்த நாட்டுக்குப் போய் விடும்படியும் தீர்ப்புச் செய்தி ருக்கிறார்கள் என்றால் இதற்கு மேலான காருண்யமும், அருளும் உள்ள நீதி இந்த உலகத்தில் எங்காவது கிடைக்கமுடியுமா? என்பதை யோசித்தால் ரஷ்ய நீதியின் பெருமை விளங்கும். இந்த நீதி “ராம“ ராஜ்யத்திலோ அல்லது சுயாட்சி தேசத்திலோ கூட எதிர்பார்க்க முடியுமா என்பதும் யோசிக்கத் தக்கதாகும்.

இது இப்படியிருக்க இதன் உண்மையையும் யோக்கியதையும் பார்த்து பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்கின்ற யோசனை சிறிதுமின்றி வேண்டுமென்றே அவசரப்பட்டு ரஷியர்கள் மீது உலக மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் படி தூற்றப் பழித்து சில பகிஷ்கார முறைகளை கையாடினதும் பிரிட்டிஷாரின் புத்திசாலித்தனத்தையோ, ராஜ தந்திர முறையையோ நல்ல எண்ணத்தையோ காட்டுவதாக இல்லாமல் போனது குறித்து யாரும் வருந்தாமல் இருக்க முடியாது.

எப்படியிருந்த போதிலும் இந்த தடபுடல் விஷமப் பிரசாரத்தின் பயனாய் ரஷியாவுக்கு நன்மையே ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எப்படியெனில் ரஷியாவின் நீதியை உலகம் அறிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது என்பதேயாகும்.

நிற்க ரஷியாவின் மீது எப்படியாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒரு சாக்கை வைத்து (“நீ இல்லாவிட்டாலும் உன் தந்தையாவது செய்திருப்பான்” என்கின்ற ஆட்டுக்குட்டி - ஓநாய்க் கதையைப் போல்) ஒரு குற்றம் சுமத்தி அதனிடம் வம்புச் சண்டைக்குப் போயாவது ரஷியாவில் இன்று நடைபெறும் பொதுவுடமை ஆட்சியை ஏழை மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் அனு கூலமான ஆட்சியை ஒழித்து மற்ற நாடுகளில் நடைபெறுவது போன்ற பணக் கார ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் இந்த உலகில் இன்று பிரிட்டிஷாருக்கு மாத்திரமல்லாமல் எல்லா தேசத்து ஆட்சிக்காரர்களிடமும் இருந்து வருகின்றது. அதற்கு ஆங்காங்குள்ள முதலாளிகளாலும், பாதிரி, புரோகிதர்களாலும் தண்ணீர்விட்டு பாதுகாத்தும் வரப்படுகின்றது. ஆனாலும் ஏழை மக்கள் சரீரத்தில் பாடுபட்டு தொழில் செய்து வாழும் மக்கள் கண்விழித்து சுயமரியாதை உணர்ச்சி பெற்று விட்டதால் முதலாளி ஆட்சியின் எண்ணங்கள் கருகி வாடி வருகின்றன.

அன்றியும் ரஷிய ஆட்சி “முதலாளித்துவ ஆட்சிகளின் தயவினாலோ அல்லது கருணையினாலோ நாம் வாழலாம்” என்கின்ற எண்ணத்தின்மீது ஒரு சிடுக்கை நேரம்கூட இல்லை. ஆனால் அதற்கு பதிலாக இந்த உலக முதலாளிகள் மாத்திரமல்லாமல் இன்னும் “செவ்வாய் மண்டல” முதலாளிகளின் எதிர்ப்பையும், அவர்களது சக்தியையும், சூழ்ச்சிகளையும், நன்றாய் அறிந்து எந்த நேரமும் எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது. அது எப்படிப்பட்ட யுத்தத்தையும் வரவேற்று ஒரு கை பார்த்து விட துணிந்து இருப்பதுடன் உலக முழுமைக்கும் தன்னுடைய ஆட்சிக் கொள்கையை உகந்தளித்து உதவி புரியக் காத்தும் இருக்கின்றது.

ஆனால் ஏழை மக்களுக்கும் கஷ்டப்பட்டு பாடுபடும் தொழிலாளி மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உண்மையான சுயமரியாதை உணர்ச்சி உண்டாக்க வேண்டியதுதான் இப்பொழுது பாக்கியிருக்கின்றது.

(குடி அரசு - தலையங்கம் - 23.04.1933)

Pin It