[இந்தியாவுக்குள் ஆரியர் வருகை என்ற ஒன்று நிகழ்ந்ததா? இல்லையா? இது நெடுநாளைய கருத்துப் போராட்டத்துக்கு உரிய ஒன்றாக இருந்து வருகிறது. இதற்கு அறிவியல் ஆராய்ச்சியின் ஊடாக விடை காணும் ஒரு முயற்சிதான் ஆய்வாளர் டோனி ஜோசஃப் எழுதியுள்ள How genetics is settling the Aryan migration debate என்ற கட்டுரை. இது இந்து ஆங்கில நாளேடு 2017 ஜூன் 16 இதழில் வெளிவந்தது. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி தோழர் நலங்கிள்ளி இதனைத் தமிழாக்கம் செய்துள்ளார். கட்டுரையின் முதல் பகுதி இந்த இதழில் வெளியிடப்படுகிறது. -– ஆசிரியர்.] 

(இந்திய வரலாற்றில் பெரும் சண்டை சச்சரவுக்குள்ளான வினாவுக்கு விடை தருகிறது புதிய டிஎன்ஏ சான்று. நீங்கள் இந்த விடை இவ்வளவு ஆணித்தரமானதா என வியந்து போவீர்கள் என எழுதுகிறார் டோனி ஜோசஃப்.)

tony josephஇந்திய வரலாற்றிலேயே வலியும் சச்சரவும் மிக்க வினாவுக்கு மெதுவாகவே என்றாலும், மிக உறுதியாக விடை கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வினா இதுதான்: தம்மைத் தாம் ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியோர் சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வந்த கிமு 2000 – கிமு 1500 கால வாக்கில் சமஸ்கிருதத்தையும் தனித்துவமான பண்பாட்டு வழக்கங்களையும் சுமந்து கொண்டு இந்தியாவுக்குள் நுழைந்தார்களா? வெள்ளமெனப் பெருகி வரும் டிஎன்ஏ சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட மரபணு ஆராய்ச்சி உலகெங்கும் உள்ள அறிவியலர்களை ஐயத்திற்கிடமற்ற ஒரே விடையில் வந்து குவியச் செய்கிறது: ஆம், நுழைந்தார்கள்.

இது பலருக்கு வியப்பும், சிலருக்கு அதிர்ச்சியும் அளிக்கக் கூடும். ஏனென்றால் அண்மைய ஆண்டுகளில் மரபணுவியல் ஆராய்ச்சி ஆரியப் புலப்பெயர்வுக் கோட்பாட்டை முழுக்கப் பொய்ப்பித்து விட்டதாக ஒரு வலுவான கதையாடல் நடந்து வருகிறது. இந்தக் கோட்பாடு சற்றே நீட்டி முழக்கிய பொருள்விளக்கம் என்றே நுண்மையான ஆய்வேடுகளை மூல வடிவில் படிக்கும் எவரும் கருதினர். ஆனால் இந்தப் பொருள்விளக்கம் இப்போது தூள் தூளாகி ஒய்-குரோமோசோம்கள் (அதாவது ஆண் பெற்றோர் வழியில் தந்தையிடமிருந்து மகனுக்குக் கடத்தப்படும் குரோமோசோம்கள்) பற்றிய புதுத் தரவுகளின் வெள்ளத்தில் மூழ்கிச் சிதைந்து விட்டது.

மரபுசார் வழிகள்

அண்மைக் காலம் வரை மைட்டோகாண்ட்ரிய - டிஎன்ஏ (தாயிடமிருந்து மட்டுமே கடத்தப்படும் தாய்வழி டிஎன்ஏ) பற்றிய தரவுகள் மட்டுமே கிடைத்து வந்தன, அவை கடந்த சுமார் 12, 500 ஆண்டுகளில் இந்திய மரபணுத் தொகுப்புக்குள் புற நுழைவு பெரிய அளவில் இல்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்தன. இந்த முடிவைப் புதிய ஒய்-டிஎன்ஏ தரவுகள் அப்படியே புரட்டிப் போட்டன. ஏனென்றால் இந்தத் தரவுகள் ஆய்வுக்குரிய அந்தக் காலக் கட்டத்தில் இந்திய ஆண் மரபுவழிக்குள் மரபணுப் புறநுழைவு நடைபெற்றதற்கு வலுவான சான்றளித்தன.

மைட்டோகாண்ட்ரியா-டிஎன்ஏ, ஒய்-குரோமோசோம்-டிஎன்ஏ தரவுகளில் புலப்படும் வேறுபாட்டுக்கான காரணம் பின்னோக்கிப் பார்த்தால் மிகத் தெளிவானது: வெண்கல ஊழிப் புலப்பெயர்வுகளில் வலுவான பாலினச் சார்பு இருந்தது. வேறு வகையில் சொன்னால், அன்று புலம்பெயர்ந்தோர் பெருமளவுக்கு ஆண்கள் என்பதால், அவர்களின் மரபணுப் பரவல்கள் மைட்டோக்காண்ட்ரிய-டிஎன்ஏ தரவுகளில் உள்ளபடியே தெரிவதில்லை. மறுபுறம், அவை ஒய்-குரோமோசோம்-டிஎன்ஏவில் தெரியவே செய்கின்றன: குறிப்பாக, இந்திய ஆண் மரபுவழியில் சுமார் 17.5 விழுக்காட்டினர் ஒற்றைக்குழு R1a வகையில் அடங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒற்றை மரபுசார் வழியைக் குறிக்கும் இந்த ஒற்றைக் குழுக்கள் இன்று மத்திய ஆசியா, ஐரோப்பா, தெற்காசியா முழுதும் பரவியுள்ளன. R1a ஆனது பான்டிக்-காஸ்பியன் ஸ்டெப்பி புல்வெளி என்னும் இந்த வட்டாரத்திலிருந்துதான் மேற்கு, கிழக்கு திசைகளில் பரவி, வெவ்வேறு உட்கிளைகளாகப் பிரிந்து சென்றதாகக் கருதப்படுகிறது.

அண்மையக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்து இந்தியாவுக்கு வந்த புலப்பெயர்வுகளில் இறுக்கமான, ஒத்திசைந்த வரலாறாகத் தொகுத்தளித்த ஆய்வேடு சமகால வல்லுநர்களின் பார்வைக்குரிய பிஎம்சி எவல்யூஷனரி பயாலஜி (பிஎம்சி பரிணாம உயிரியல்) ஆய்விதழில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் வெளியானது. "இந்தியத் துணைக்கண்டத்துக்கான மரபியல் காலவரிசை வலுவான பாலினச் சார்புப் பெயர்வுகளைக் குறிக்கிறது" எனத் தலைப்பிட்ட அந்த ஆய்வுத்தாளில் இங்கிலாந்து ஹட்டர்ஸ்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 அறிவியலர்கள் ஒரு முடிவை வந்தடைந்தனர்: "வெண்கல ஊழியில் மத்திய ஆசியாவிலிருந்து நடைபெற்ற மரபணுப் பாய்வு வலுவாக ஆண்கள் நடத்தியதாக இருந்தது. இது மேய்ப்பர்களாகக் கருதப்படும் தொடக்கக்கால இந்தோ-ஐரோப்பியச் சமுதாயத்துக்கு உரித்தாக்கப்படுகிற ஆண்வழிப்பட்ட, கணவன்வழிப்பட்ட, தந்தைவழிப்பட்ட சமுதாய அமைப்பை ஒத்ததாக இருந்தது." இந்த உள்நுழைவு பான்டிக்-காஸ்பியன் வட்டாரத்தை மூலத் தோற்றுவாயாகக் கொண்டு, இந்தோ-ஐரோப்பிய விரிவாக்கம் என்னும் மிகப் பரந்த செயல்வழியில் ஒரு பகுதியாக இருந்தது. இது அணுக்கத் தொடர்பு கொண்ட ஒய்-க்ரோமோசோம் மரபுவழிகளை 5, 000 முதல் 3, 500 ஆண்டுகளுக்கு முன்பு யுரேசியப் பெரும்பரப்பில் ஏந்திச் சென்றது.

பேராசிரியர் ரிச்சர்ட்ஸ் மின்மஅஞ்சல் பரிமாற்றம் ஒன்றில் கூறியது என்னவென்றால், இந்தியாவில் R1a பரவலாக இருப்பதே இந்தியாவுக்குள் மத்திய ஆசியாவிலிருந்து நடைபெற்ற, மிக அநேகமாக இந்தியாவுக்குள் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்களைக் கொண்டுவந்து சேர்த்த வெண்கல ஊழிப் புலப்பெயர்வுக்கு மிகுந்த ஆணித்தரமான சான்று ஆகும். பேராசிரியர் ரிச்சர்ட்சும் அவரது அணியும் வந்தடைந்த வலுவான முடிவுகளுக்கு ஆதாரமாக அவர்களே நடத்திய தனித்துவமான ஆராய்ச்சியும், உலகெங்கும் உள்ள மரபணு அறிவியலர்களின் ஆய்வுப் பணிகள் வாயிலாக அண்மைய ஆண்டுகளில் கிடைத்துள்ள பேரளவிலான புதுத் தரவுகளும் கண்டெடுப்புகளும் திகழ்கின்றன.

ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மரபணுவியலரும் பேராசிரியருமாகிய டேவிட் ரைக் கூறுகிறார்: "கடந்த சில ஆண்டுகளில் மிக விரைவாகவும் விறுவிறுப்பாகவும் வலுவாகவும் நடைபெற்றிருப்பது என்ன என்றால், புதுமக்கால, பழங்கால டிஎன்ஏவின் அடிப்படையில் மாந்தக் குல வரலாறு பற்றி நடத்தப் பெற்ற முழு டிஎன்ஏ ஆய்வுகள் பேரெழுச்சியாக நடந்துள்ளன. இதனைச் செய்து முடிப்பதற்கு மரபணுத் தொழில்நுட்பவியலும், டிஎன்ஏ தொழில்நுட்பவியலும் உதவின "

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மரபணுவியல் துறையில் அறிவியலராக இருக்கும் பீட்டர் அன்டர்ஹில் இந்தச் செயலின் நடுநாயகமாகத் திகழ்ந்தவர்களில் ஒருவர். அவர் தலைமையேற்ற 32 அறிவியலர்கள் குழு 3 ஆண்டு முன்பு R1a பரவலையும் அதன் கிளைகளையும் வரைபடமாக்கும் மாபெரும் ஆய்வு ஒன்றை வெளியிட்டனர். அது யுரேசியா முழுவதிலும் 126 மக்கள் தொகுதிகளிலிருந்து 16,244 ஆண் ஆய்பொருள்களின் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்தியது. முனைவர் அன்டர்ஹில் செய்த ஆராய்ச்சி R1a ஒற்றைக்குழுக்களில் இரு உட்குழுக்கள் இருப்பதைக் கண்டறிந்தது. இவற்றில் ஒன்று முதன்மையாக ஐரோப்பாவிலும், மற்றொன்று மத்திய, தென் ஆசியப் பகுதிகளுக்கு உட்பட்டும் இருந்தன. ஐரோப்பாவில் R1a மரபுவழிகளில் 96 விழுக்காடு Z282 என்னும் உட்குழுவைச் சேர்ந்ததாக இருந்தது. அதேபோது மத்திய, தென் ஆசிய R1a மரபுவழிகளில் 98.4 விழுக்காடு Z93 என்னும் உட்குழுவைச் சேர்ந்ததாக இருந்தது. இவ்விரு குழுக்களும் ஒன்றை விட்டொன்று 5,800 ஆண்டுக்கு முன்புதான் பிரிந்தன. முனைவர் அன்டர்ஹில்லின் ஆய்வு காட்டுவதன்படி, இந்தியாவில் மிகுந்திருக்கும் Z93 உட்குழுவுக்குள்ளேயே மேற்கொண்டு பிரிவு ஏற்பட்டு பல கிளைகள் தோன்றின. விண்மீன் போன்ற இந்தக் கிளைப்பு துரித வளர்ச்சியையும் இடப்பெயர்வையும் குறித்ததாக அந்த ஆய்வு காட்டியது. இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுபவர்கள் இந்தியாவெங்கும் வந்து துரிதமாகப் பரவிய தோராயக் காலக் கட்டம் தெரிய வேண்டுமானால், Z93 அதன் வழிப்பட்ட பல பல உட்குழுக்களாகவோ மரபுவழிகளாகவோ பிரிந்து சென்ற காலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதைப் பிறகு பார்ப்போம்.

எனவே சுருங்கச் சொல்லின், R1a ஆனது ஐரோப்பா, மத்திய ஆசியா, தென் ஆசியா எங்கும் பரவியுள்ளது. அதன் உட்குழுவாகிய Z282 ஆனது ஐரோப்பாவில் மட்டும் பரவியுள்ளது. மற்றோர் உட்குழுவாகிய Z93 ஆனது மத்திய ஆசிய, தென் ஆசியப் பகுதிகளில் மட்டும் பரவியுள்ளது. இந்த Z93 என்ற ஒற்றைக்குழுவின் முப்பெரும் உட்குழுக்களும் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இமய மலை ஆகிய பகுதிகளில் மட்டும் பரவியுள்ளன. R1a பரவல் பற்றிய இந்தத் தெளிவான சித்திரம் இறுதியாக முந்தைய கருதுகோளுக்கு, அதாவது இந்த ஒற்றைக்குழு அனேகமாக இந்தியாவில் தோன்றிப் பின்னர் பரவியிருக்கக் கூடுமென்ற கருதுகோளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இந்தியாவில் உள்ள R1a மரபுவழிகள் மற்றப் பகுதிகளை விட அதிக மாறுபாடுகள் கொண்ட காரணத்தால் அது இந்தியாவில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்ற பிழையான அனுமானத்தை அந்தக் கருதுகோள் அடிப்படையாகக் கொண்டிருந்தது. பேராசிரியர் ரிச்சர்ட்ஸ் சொல்வது போல், குழப்பமான நுண்மரபணு வரிசைமுறைத் தரவுகளைப் பெருமளவுக்குச் சார்ந்து இந்தியாவில் R1a மிகவும் வேறுபட்டுள்ளதாகச் சொல்லப்படும் கருத்தைப் பெரும் எண்ணிக்கையிலான மரபணுவியல் சார்ந்த ஒய்-குரோமோசோம் தரவுகள் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டன. 

புலப் பெயர்வுக் காலங்களை மரபணுக் காலங்கணித்தல்

உள்ளபடியே, வெண்கல ஊழியில் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மரபணுப் பாய்வு இருந்தது நமக்கு இப்போது தெரியும் என்பதால், நாம் அந்தக் காலத்தை, குறிப்பாக Z93 ஆனது அதற்குரிய மரபுவழிகளாகப் பிரிவுற்ற காலத்தை இன்னும் துல்லியமாககக் கணிக்க முடியுமா? முடியும், நம்மால் முடியும். இந்த வினாவுக்கு விடையளிக்கும் ஆய்வுத் தாள் சென்ற ஆண்டுதான் 2016 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன் தலைப்பு: "உலகளாவிய ஒய்-குரோமோசோம்களின் 1, 244 வரிசைத் தொடர்களின் உதவியுடன் மாந்த ஆண்தொகையினரிடத்தில் உய்த்தறிந்த இடையிடை எழுச்சிகள்" (Punctuated bursts in human male demography inferred from 1, 244 worldwide Y-chromosome sequences). ஐந்து கண்டத்து மக்கள்தொகைக்குள் நடைபெற்ற ஒய்-டிஎன்ஏ ஒற்றைக்குழுக்களின் பேரளவுப் பரவல்கள் குறித்து ஆய்வு செய்த இந்தத் தாளின் முதன்மை ஆசிரியர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டேவிட் போஸ்னிக் ஆவார். இதன் 42 துணை ஆசிரியர்களில் ஒருவர் முனைவர் அன்டர்ஹில் ஆவார். "Z93 தொடர்பாகச் சுமார் 4, 000 முதல் 4, 500 ஆண்டு முன்பு நடைபெற்ற அதிரடிப் பரவல்களை" இந்த ஆய்வு கண்டறிந்தது. இது குறிப்பிடத்தகுந்தது. ஏனென்றால் சுமார் 4, 000 ஆண்டு முன்புதான் சிந்துச் சமவெளி நாகரிகம் அழியத் தொடங்கியிருந்தது. (இந்த அழிவுக்கு Z93 பரவலைக் காரணமாகக் காட்டும் தொல்லியல் சான்றேதும் அல்லது வேறெந்த வகைச் சான்றும் இது வரை கிடைக்கவில்லை. இரண்டுமே வாய்ப்பாக ஒரேநேரத்தில் நடைபெற்ற இரு நிகழ்வுகளாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.)

வெளியிலிருந்து இந்தியாவுக்குள் குறிப்பிடந்தகுந்த அளவுக்கு நடைபெற்றதாகக் கூறப்பட்ட வெண்கல ஊழிப் புலப்பெயர்வுகள் குறித்து ஐயுற்ற அல்லது நடுநிலை வகித்த பல அறிவியலர்களுங்கூட பெருவெள்ளமெனத் திரண்டு வந்த புதிய தரவுகளின் விளைவாகத் தங்கள் கருத்துகளை மாற்றிக் கொண்டனர். அவர்களில் முனைவர் அன்டர்ஹில்லும் ஒருவர். காட்டாக, கடந்த ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகளில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிக்குள் குறிப்பிடத்தகுந்த அளவுக்குத் தந்தைவழி மரபணுப் பாய்வு இருந்ததற்கு மாறான சான்று உள்ளது என்று 2010 ஆய்வுத்தாளில் சொல்கிறார். இன்று 2010இல் கிடைத்த தரவுகளையும் இப்போது கிடைக்கும் தரவுகளையும் ஒப்பிடவே முடியாது என்கிறார். அவர் கூறுகிறார்: "இருட்டு அறை ஒன்றைச் சாவித் திறப்பு வழியாகச் சிறு கை விளக்கை வைத்துக் கொண்டு பார்ப்பது போன்றதொரு நிலைமையே அப்போது இருந்தது. சில மூலைமுடுக்குகளைப் பார்க்க முடிந்ததே தவிர, முழுப் பகுதியை, முழுச் சித்திரத்தைப் பார்க்க முடியவில்லை. முழு மரபணுத் தொடர்வரிசை நம் கைவசம் இருக்கும் நிலையில், நம்மால் இப்போது முழு அறையையும் இன்னும் தெளிவான வெளிச்சத்தில் காண முடிகிறது."

வெளியிலிருந்து இந்தியாவுக்குள் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோர் வாயிலாக நடைபெற்றதாகக் கருதப்படும் வெண்கல ஊழிப் புலப்பெயர்வுகளுக்கு எதிரான வாதுரைகளுக்கு முட்டுக்கொடுக்கப் பயன்பட்ட பழைய ஆய்வினை முன்வைத்தோர் பட்டியலில் முனைவர் அன்டர்ஹில் மட்டும் தனித்திருககவில்லை. இவ்வகையில் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் மரபணுவியல் துறையில் மரபணுவியல் அறிவியலராகவும் பேராசிரியராகவும் இருந்த டேவிட் ரைக் அவர்களும் ஒருவர். இத்தனைக்கும் அவர் தமது பழைய ஆய்வேடுகளில் மிகவும் எச்சரிக்கையாகவே எழுதியிருந்தார். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ரைக் 2009இல் இயற்கை (Nature) இதழில் வெளியிட்ட ஆய்வு ஆகும். அதன் தலைப்பு: இந்திய மக்களின வரலாற்றை மீள்கட்டமைத்தல் (Reconstructing Indian Population History). இந்த ஆய்வானது "வட இந்திய மூதாதையர்", "தென்னிந்திய மூதாதையர்" என்ற கோட்பாட்டுக் கட்டமைப்பைப் பயன்படுத்தி இந்திய மக்களினத்தின் மரபணு அடிக்கட்டமைப்பைக் கண்டுபிடித்தது. இந்த ஆய்வு மெய்ப்பித்தது என்னவென்றால், வட இந்திய மூதாதையர் மரபணு வகையில் மத்திய கிழக்கினருக்கும் மத்திய ஆசியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் நெருக்கமாக உள்ளனர், அதேபோது தென்னிந்திய மூதாதையர் இந்தியாவுக்கு மட்டுமே உரியவர்களாக உள்ளனர். இந்த ஆய்வு மேலும் மெய்ப்பித்தது என்னவென்றால், இன்றைய இந்தியாவில் பெரும்பாலான குழுக்களை இவ்விரு மக்கள் தொகையினரின் கலவையாகத் தோராயப்படுத்தலாம். இவர்களில் வட இந்திய மரபுவழித் தன்மையானது பரம்பரை உயர் சாதியினரிடமும் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரிடமும் மிகுந்து காணப்படுகிறது. அதனளவில் இந்த ஆய்வு இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் வருகையைப் பொய்ப்பிக்கவில்லை. பார்க்கப் போனால், வட இந்திய மூதாதையர்களுக்கு மத்திய ஆசியர்களுடன் உள்ள மரபணுப் பிணைப்பைச் சுட்டியதன் மூலம் இந்த ஆய்வு மாறான குறிப்பையே தந்தது.

எப்படியோ, இந்தக் கோட்பாட்டுக் கட்டமைப்பை அபத்தமாக இழுத்து நீட்டி விரும்பியபடி வாதிடுவதற்குப் பயன்படுத்திக் கொண்டனர். அந்த வாதப்படி, இவ்விரு குழுக்களும் பல பத்தாயிரம் ஆண்டு முன்பே இந்தியாவுக்குள் வந்து விட்டார்களாம். அதாவது இந்த வருகையானது வெறும் 4, 000 முதல் 3, 500 ஆண்டு முன்பு நடைபெற்றதாகக் கருதப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் புலப்பெயர்வுக்கு வெகுமுன்பே நடந்து விட்டதாம். ஆனால் உண்மை என்னவென்றால், இதற்கு நேரெதிரானதை உணர்த்தும் கடும் எச்சரிக்கைச் செய்தி இந்த ஆய்விலேயே அடங்கியிருந்தது: "மக்களின மரபணுவியலில் அடங்கிய ''மாதிரியமைப்புகள்" என்பவற்றைக் கவனத்துடன் அணுக வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கிறோம். அவை வரலாற்றுவழிப்பட்ட கருதுகோளைச் சோதித்துப் பார்ப்பதற்கு ஒரு முக்கியச் சட்டகத்தை வழங்கிய போதிலும், மிகையாக எளிமைப்படுத்தப்பட்டவையாக உள்ளன. காட்டாக, உண்மையான மூதாதை மக்களினத்தவர் நாங்கள் எங்கள் மாதிரியமைப்பில் அனுமானித்துக் கொண்டது போல் அநேகமாக ஒருபடித்தானவராக இல்லாது இருக்கலாம். ஆனால் இதற்குப் பதிலாக அவர்கள் வெவ்வேறு காலங்களில் கலந்துபோன சார்புக் குழுக்களின் தொகுப்புகளிலிருந்து உருவாகியிருக்கலாம்." வேறுவகையில் சொன்னால், வட இந்திய மூதாதையர் பற்பல புலப்பெயர்வுகளால் உருவாகியிருக்கலாம். அவற்றில் அநேகமாக இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுவோரின் புலப்பெயர்வும் அடங்கியிருக்கக் கூடும்.

                                                      (தொடரும்)

இக்கட்டுரைக்கான கலைச்சொல் விளக்கம்:

செல் என்றால் என்ன?

செல் என்பது உலகத்தின் அனைத்து உயிரினங்களின் அடிப்படை அலகு. ஒரு செல் உயிரினங்களில் இருந்து பல செல் உயிரினங்கள் வரை உலகத்தில் உண்டு. நாம் பல செல் உயிரினம். தாயின் கருவில் உருவெடுக்கும் ஒரே ஒரு செல்தான் ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, நான்கு எட்டாக முழுப் பகுப்பு (மைட்டாசிஸ்) அடிப்படையில் பல்கிப் பெருகி முழு மனிதராக உருவெடுக்கிறது. ஒரு செல்லில் ஓர் உயிரினம் இயங்குவதற்கான அனைத்துக் கூறுகளும் அடங்கியுள்ளன. இவற்றில் நாம் இந்தக் கட்டுரையில் இரு பொருள்கள் பற்றிப் பேசினோம். ஒன்று, மைட்டோகாண்ட்ரியா, மற்றொன்று உட்கரு. நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

முழுப்பகுப்பு என்றால் என்ன?

ஆங்கிலத்தில் மைட்டாசிஸ் என்று அழைக்கப்படும் இந்த முழுப் பகுப்பே ஒற்றைக் கரு பெருகி குழந்தையாகப் பிறப்பதற்கும், பிறகு அந்தக் குழந்தை வளர்ந்து முழு மனிதராவதற்கும் காரணமாக இருக்கிறது. இந்த செல் பகுப்பை நாம் ஏன் முழுப் பகுப்பு என்கிறோம்? மனித உடம்பு செல்கள் ஒன்று இரண்டாக, இரண்டு நான்காகப் பெருகிச் செல்லும் போது, அந்த செல்களுக்குள் எந்த மாறுபாடும் ஏற்படாது. மூல செல் போன்றே அதிலிருந்து பகுபடும் செல்லும் இருக்கும். அதனால்தான் இந்த செல்பகுப்பு முழுப் பகுப்பு எனப்படுகிறது.

மைட்டோகாண்ட்ரியா என்றால் என்ன?

ஒவ்வொரு செல்லிலும் சைட்டோபிளாசம் என்னும் திரவம் உள்ளது. இந்த திரவத்தில்தான் நாம் இயங்குவதற்கான அனைத்து பொருள்களும் மிதந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த மைட்டோகாண்ட்ரியா. இதுவே மனிதர்களுக்குத் தேவையான ஆற்றலை ஆக்கித் தருகிறது. எனவே இதனை ஆற்றல் தொழிற்சாலை என்று அழைக்கிறார்கள்.

உட்கரு என்றால் என்ன?

ஆங்கிலத்தில் நியூக்ளியஸ் என அறியப்படும் உட்கரு செல்லின் நடுவில் உள்ளது. இந்த உட்கருவுக்குள் 23 குரோமோசோம் ஜோடிகள் உள்ளன.

குரோமோசோம் என்றால் என்ன?

மனித செல்லின் உட்கருவுக்குள் உள்ள 23 குரோமோசோம் ஜோடிகளில் 22 ஜோடி பாலியல்சாரா குரோமோசோம்கள் (ஆட்டோசோம்கள்) என்றும், மீதி ஒற்றை ஜோடி பாலியல்சார் குரோமோசோம் (செக்ஸ் குரோமோசோம்) என்றும் அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குரோமோசோமுக்குள்ளும் இரட்டைச் சுருள் வடிவ டிஎன்ஏ உள்ளது.

பாலியல்சாரா குரோமோசோம்கள் என்றால் என்ன?

ஆட்டோசோம்கள் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த 22 ஜோடி குரோமோசோம்கள் தன்னைத்தான் அச்சு பிசகாது மறுஉற்பத்தி செய்து கொள்ளும் எனக் கண்டோம். இந்த குரோமோசோம்களின் பகுப்பே மனிதனின் உடல் வளர்ச்சிக்குக் காரணமாகிறது.

பாலியல்சார் குரோமோசோம் என்றால் என்ன?

இது செல்லின் உட்கருவில் அடங்கியுள்ள 23ஆவது ஜோடி குரோமோசோம் ஆகும். செக்ஸ் குரோமோசோம் என ஆங்கிலத்தில் அறியப்படும் இந்தப் பாலியல்சார் குரோமோசோம் மனிதர்களின் பாலியல் வகையைத் தீர்மானிக்கிறது. இந்த குரோமோசோம்கள் X, Y என இரு வகைப்படும். 23ஆவது ஜோடி XX என்றால் மனிதிகளாகவும், XY என்றால் மனிதன்களாகவும் வளர்கின்றனர். மைட்டோகாண்ட்ரியாவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஏந்திச் செல்லும் வாகனமாக இந்த X வகை குரோமோசோம்களே திகழ்கின்றன.

டிஎன்ஏ என்றால் என்ன?

ஆங்கிலத்தில் ஜீன்கள் எனப்படும் மரபணுக்களை ஏந்தி நிற்பதே இந்த டிஎன்ஏக்கள். இந்த டிஏன்ஏக்கள் இரட்டைச் சுருள் வடிவ ஏணி போல் உள்ளது. இந்தப் படிக்கட்டுகளில் மரபணுக்கள் அடங்கியுள்ளன. இது குரோமோசோம்களில் மட்டுமல்லாது, உட்கருவைத் தாண்டி சைட்டோபிளாச திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் மைட்டோகாண்ட்ரியாவிலும் உள்ளது. இதனை மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏ (mtDNA) என்று அழைப்பர்.

மரபணுக்கள் என்றால் என்ன?

ஓர் உயிரினத்தின் பண்புகள் அனைத்தையும் தீர்மானிப்பது இந்த மரபணுக்களே. உன் தலை எழுத்து அப்படி என்பார்கள். ஆனால் உன் மரபணு எழுத்து அப்படி எனச் சொல்வதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு இந்த மரபணுக்கள் நம் உடலின் உயரம், குள்ளம், தலைமுடி, கை நீளம், பாத அகலம், வழுக்கைத் தலை என ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது. மீன் விழியாள் என ஒருத்தியின் கண்ணில் எழுதி வைப்பது இந்த மரபணுக்களே. கோபம், அமைதி போன்ற மனிதக் குணங்களையும் நீரிழிவு, புற்று போன்ற தொற்றா நோய்களைத் தீர்மானிப்பதும், மனிதர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தீர்மானிப்பதும் இந்த மரபணுக்களே. ஆக, பாலியல்சாரா குரோமோசோம்களின் டிஎன்ஏக்களின் படிக்கட்டில் அடங்கியுள்ள மரபணுக்கள் உடல் பற்றியும், குணங்கள் பற்றியும், பாலியல்சார் குரோமோசோம்களின் டிஎன்ஏக்கள் படிக்கட்டில் அடங்கியுள்ள மரபணுக்கள் ஆணா பெண்ணா என்றும் தீர்மானிக்கின்றன.

மைட்டோக்காண்ட்ரிய டிஎன்ஏ என்றால் என்ன?

விலங்கின செல்லின் உட்கருவுக்கு வெளியே டி.என்.ஏவைக் கொண்டுள்ள செல்லின் ஒரே உள்ளுறுப்பாக மைட்டோக்காண்டிரியா உள்ளது. தாவர செல்லில் பச்சையம், மைட்டோக்காண்டிரியா, ஆகிய இரண்டு செல் உள்ளுறுப்புகளிலுமே டி.என்.ஏ உள்ளது.

 கருவுறுதலின் போது தாயின் அண்ட செல்லிலிருந்தே மைட்டோகாண்ட்ரிய டிஎன்ஏ கருவிலிருக்கும் குழந்தைக்கு வந்து சேருகிறது. நாம் அனைவரும் தாய்வழியிலே பெருமளவில் மைட்டோகாண்டிரிய டி.என்.ஏவைப் பெறுகிறோம்.

குன்றல் பகுப்பு என்றால் என்ன?

செல்களின் முழுப் பகுப்பு பற்றி நாம் ஏற்கெனவே கண்டோம். மனிதர்களின் வளர்ந்து பருவ வயதை அடையும் போது பாலியல் உறுப்புகளில் குன்றல் பகுப்பு நடைபெறத் தொடங்குகிறது. இந்தப் பகுப்பில் முழுப் பகுப்பு போலல்லாமல், ஒன்று இரண்டாகாது, ஒன்று நான்காகும். அது மட்டுமல்ல, 23 ஜோடி குரோமோசோம்களும் தனித் தனியாகப் பிரிந்து விடும். எனவே ஒவ்வொரு செல்லிலும் தனித்து விடப்பட்ட ஒற்றை ஜோடி குரோமோசோம் மட்டுமே எஞ்சியிருக்கும். இப்படிப் பகுபடும் செல்களில் குரோமோசோம் எண்ணிக்கை குறைவதால்தான் இதனைக் குன்றல் பகுப்பு என்கிறோம். கலவியின் போது, பெண்ணின் ஒரு முட்டையும், ஆணின் ஒரு விந்தும் சேரும் போது, அது ஒற்றைக் கருவாகிறது. இதுவே முழு செல். அதாவது இங்கு பிரிந்து போன 23 தன்னந்தனி குரோமோசோம்கள் மீண்டும் ஜோடி சேர்கின்றன. இந்த செல் பழைய படி முழுப் பகுப்பில் ஈடுபட்டு முழு மனிதனாகிறது. இந்தச் சுழற்சி மீண்டும் மீண்டும் நடைபெற்று மனித இனம் அடுத்தடுத்த தலைமுறைக்குச் செல்கிற்து. குன்றல் பகுப்பு நடைபெறுவதாலேயே எத்தனை தலைமுறை ஆனாலும் குரோமோசோம்கள் எண்ணிக்கை மாறுவதில்லை.

இப்போது நாம் 23ஆவது ஜோடி பாலியல்சார் குரோமோசோமை மட்டும் எடுத்துக் கொள்வோம். கலவியின் போது பெண்ணிடமிருந்து எக்ஸ் மட்டுமே வர முடியும், ஆணிடமிருந்து எக்சும் வரலாம், ஒய்யும் வரலாம். எக்சும் எக்சும் சேர்ந்தால் அது பெண், எக்சும் ஒய்யும் சேர்ந்தால் அது ஆண். இந்த உண்மைகளை நாம் ஏற்கெனவே கண்டோம். ஆனால் குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மைட்டோகாண்டிரிய டி.என்.ஏவைத் தாயிடமிருந்தே பெறுகிறது. ஆணின் விந்தணுவில் மைட்டோக்காண்ட்ரியாக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதுடன் அவை கருவுறுதலின் போது அழிந்தும் போகும். ஆனால் தாய் வழியில் அடுத்தடுத்த தலைமுறைக்கு மைட்டோக்காண்ட்ரியா சென்று கொண்டே இருக்கும். எனவே பெண்ணை ஆற்றலின் வடிவம் எனச் சொன்னாலும் மிகையாகாது. ஆற்றல் தொழிற்சாலை அல்லவா மைட்டோகாண்ட்ரியா.

எனவேதான் இந்த மைட்டோகாண்ட்ரியாவை அடிப்படையாகக் கொண்டு பின்னோக்கிய பெண் தலைமுறைகளுக்குச் சென்று உயிரியலர்கள் ஒரு பெண்ணின் மரபணு கடந்து வந்த வழியை ஆய்கின்றனர்.

ஒய் குரோசோமை ஆய்வு செய்து பின்னோக்கிய பின்னோக்கிய ஆண்தலைமுறைகள் நோக்கி ஆய்வு நடத்தினோமானால், ஓர் ஆணின் மரபணு கடந்து வந்த வழியை ஆய்வு செய்ய முடியும்.

Pin It