இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்றும், அவர்கள் சிந்துவெளி நாகரிக மக்கள் மீது தங்கள் பண்பாட்டைத் திணித்தார்கள் என்பது கட்டுக்கதைகள் என்றும் பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் இதுவரை எழுதியும் பேசியும் வந்தனர். இதையே உறுதிப்படுத்தி மரபணு சோதனை முறையில் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் வந்த பிறகு, பார்ப்பன சக்திகள் மிகத் தீவிரமாக ‘மண்ணின் மைந்தர்கள் நாங்களே’ என்று மார்தட்ட ஆரம்பித்தனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கொள்கைகளை உருவாக்கிய கோல்வாக்கர், “ஆரியர்களே பூர்வக் குடிகள்; உலகம் தோன்றிய காலத்திலிருந்தே ஆரியர்களும் இருந்து வருகிறார்கள். ஆரியர்களைத் தவிர, ஏனையோர் மிலேச்சர்கள்; இரு கால் பிராணிகள்” என்ற கருத்தை முன் வைத்தார்.

இப்போது அந்த கருத்துகளின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கும் நவீன மரபணு ஆய்வு வெளி வந்துவிட்டது. ஹார்வார்டு மருத்துவக் கல்லூரியின் மரபணு ஆய்வாளர் பேராசிரியர் மார்டின் பி. ரிச்சர்ட் தலைமையிலான 16 விஞ்ஞானிகள், 16,224 மரபணுக்களை சேகரித்து ஆய்வு நடத்தி “க்ஷஆஊ நுஎடிடரவiடியேசல க்ஷiடிடடிபல” என்ற ஆய்வு இதழில் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பி. ரிச்சர்ட் இதேபோல் ஏற்கெனவே நடத்திய ஆய்வு - இந்தோ அய்ரோப்பிய மரபினத்தைச் சார்ந்த ஆரியர்கள் இந்தியாவில் ‘வந்தேறிகள்’ என்பதை உறுதியாக நிலைநாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரே, தாம் ஏற்கெனவே நடத்திய ஆய்வு முடிவுகள் சரியானவை அல்ல என்று கூறியிருக்கிறார். இப்போது சிந்து சமவெளி நாகரிகம் அழியத் தொடங்கும் இறுதிக் காலகட்டத்தில் ஆரியர்கள் சமஸ்கிருதக் கலாச்சாரத்துடன் ஊடுருவினார்கள். ஆரியர்கள் இங்கே வாழ்ந்த பூர்வீகக் குடிகள் மீது சமஸ்கிருதப் பண்பாட்டைத் திணித்தார்கள் என்பதை ஆய்வு உறுதிப்படுத்தியிருக்கிறது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் விரிவாக எழுதியுள்ள (ஜூன் 17, 2017) டோனி ஜோசப் என்ற ஆய்வாளர், “those who came later with a language called sanskirit and its associated beliefs and practices and reshaped our society in fundamental ways” (பிற்காலத்தில் - சமஸ்கிருதம் மற்றும் அதனோடு தொடர்புடைய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் தங்களுடன் கொண்டு வந்தவர்கள். நமது சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புகளையே மறு உருவாக்கம் செய்தார்கள்” என்று எழுதியுள்ளார் (ஆய்வின் சுருக்கமான கருத்துகளை இதழின் வேறு பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்).

ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

திராவிடர் இன அடிப்படையில் ‘இனத் தூய்மை’ பேசுவது நமது நோக்கமல்ல; அதில் நமக்கு உடன்பாடு கிடையாது; இனத் தூய்மை அடிப்படையில் கட்டமைக்கப்படும் வாதங்கள் இன வெறியாக எளிதில் மாற்றம் பெற்று அது இட்லரின் வழிக்கு கொண்டுபோய்விடும். அதனால்தான் பெரியார், ‘நான் ஹிட்லர், முசோலினியைப் போல் இனவாதம் பேசவில்லை’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இது குறித்து பெரியாரின் மிக முக்கியமான கருத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

“ஆரியன் - திராவிடன் என்பது கலந்துபோய் விட்டது; பிரிக்க முடியாது இரத்தப் பரிசோதனையும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். ஆரிய திராவிட இரத்தம் கலந்திருக்கலாமே தவிர, ஆரிய திராவிட அனுஷ்டானங்கள் (பண்பாடு - பழக்கவழக்கம் - சடங்குகள்) கலந்துவிட்டனவா?

சட்டைக்காரர் (ஆங்கிலோ இந்தியர்) என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அது வெள்ளை ஆரிய - கருப்பு, திராவிட இரத்தக் கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது?” (‘குடிஅரசு’ 14.7.1945) - என்று பெரியார் கேட்கிறார்.

பார்ப்பனர்கள் தங்களை சமூகத்தின் உயர் பிறப்பாளர்கள் என்று ‘குருதி’ அடிப்படையில் தங்களை தனிமைப்படுத்துவது நியாயம் தானா? நான் ‘பிராமணன்’ என்பதாலே காயத்ரி ஓதி, பூணூல் அணியும் உரிமை பெற்றவன்; எனக்கு ‘பூணூல்’ அணியும் உரிமை மூலம் மற்றொரு பிறப்பெடுத்து ‘பிராமணன்’ஆக உயர்ந்து விட்டேன். இதனால் உங்களை ‘சூத்திரர்’களாகவே நான் கருதுவேன்! அதுவே பிறப்பு வழியில் எனக்கான தர்மம் - உரிமை” என்று இனத் திமிர் பேசுவது நியாயமா?

“நீ எத்தனை ஆகமம் படித்தாலும் தேவாரம் - திருவாசகம் படித்தாலும் கர்ப்ப கிரகத்தில் அர்ச்சகர் ஆக முடியாது. ஆண்டவனை நெருங்கும் உரிமை ‘பிராமணன்’ என்ற குல வழியிலும் ஆரியன் என்ற இன வழியிலும் எங்களுக்குக் கிடைத்த உரிமை என்று மார்தட்டுவது முறை தானா?

‘ஒரு சிற்பி வடிக்கும் கல்லை - எனது மந்திர சக்தியே கடவுளாக மாற்றும்’ என்று சமஸ்கிருதத் திமிரை இப்போதும் நியாயப்படுத்தி, அவற்றிற்கு அரசு அங்கீகாரத்தையும் சட்டப் பாதுகாப்பையும் பெற்று வைத்திருப்பது பச்சை இனவெறியல்லவா?

இந்த “இன வழி ஆதிக்க குலத் திமிரை”த்தான் பெரியாரியம் கேள்விக்கு உட்படுத்தி அனைத்து மக்களும் சமத்துவமானவர்கள் என்று சுயமரியாதை முழக்கத்தை முன் வைக்கிறது.

அந்த சுயமரியாதை முழக்கத்துக்கு வலிமை சேர்த்து ஆரிய மேலாண்மையை அடித்து நொறுக்கிப் போட்டிருக்கிறது இந்த மரபணு ஆய்வு.

பார்ப்பனர் தனித்த இனமல்ல; அவர்களும் இனக் கலப்புக்கு உள்ளானவர்களே என்று அறிவியல் வழியில் உறுதியாக்கப்பட் டிருக்கிறது.

இந்த அறிவியலை மக்கள் மன்றத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டியது சமூக மாற்றத்தை விரும்புவோரின் கடமை; பொறுப்பு!

Pin It