கண்டுபிடிக்கப்பட்ட

ஆயுதங்கள் அனைத்தும்

பூமியின் மீதே

போர்த்தொடுக்கலாயின

தீட்டின மரத்திலேயே

கூர் பார்ப்பது போல

ஊட்டின தாய்க்கே

உலை வைத்தது அறிவியல்

எதன்மீது நின்று

இந்த உலகம் வளர்ந்ததோ

அதன் மீதே கொட்டுகிறது

அத்தனை நச்சுகளையும்

இப்போது

உழுதவலி பொறுத்துக்கொண்டு

அமுதளித்த அன்னை வயிற்றில்

அரங்கேறுகின்றன

அணுகுண்டுச் சோதனைகள்

அழிவாயுதங்களைச் சேமிக்கும்

கிடங்காகிவிட்டது

அன்னையின் கருப்பை

மலைகளையும் காடுகளையும்

நதிகளையும் சிதைத்து

'நாகரிகம்' வளர்க்கிறார்கள்

பிள்ளைகள்

நட்டு வளர்த்து

அறுத்துத் தின்னவன்

இன்று

மீண்டும் மீண்டும் அதை

விற்றுத் தின்கிறான்

கண்டங்களாய் நிலத்தைக்

கடல் பிரித்தது என்றாலும்

கண்டதுண்டமாய்ப் பிரித்துவிட்டோம்

நாம்

வாழ்வதற்கு அனுமதித்த பூமியை

வணிகக் கடையாய் ஆக்கியதே

நம் புரட்சி

நச்சாறுகள் வந்துகலக்கும்

வாழ்க்கைக்  கடலில்

செத்து மிதக்கின்றன

உறவு மீன்கள்

கடவுளை நோக்கிய

பயணந்தான் எனினும்...

கார்ப்பரேட் மயானங்களிலேயே

சென்று முடிகிறது

எல்லார் வாழ்க்கையையும்

விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்றன

வாக்குச் சாவடிகள்

கண்டுபிடிக்கப்பட்டவைகளிலேயே

அணு ஆயுதங்களைவிட

மிகப் பயங்கரமானது

'வாக்குப் பெட்டி'

செய்த கேடுகளின் பலாபலனை

அறுவடை செய்யப்போகிறார்கள்

'செல்போனில்'

தலைகவிழ்ந்து கொண்டிருக்கும்

நம் தலைமுறைகள்.

Pin It