தமிழினத்தைக் கருவறுக்கும் பார்ப்பனியச் சூழ்ச்சி வலை

‘தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்து கொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்து விட்டோம்.’

‘தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் ’இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்’ என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.’

tarun vijay and vairamuthu‘வட மாநிலங்களில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக்கித் தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தமிழ் மொழி படிக்க ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் ’இரண்டாவது தேசிய மொழிÕயாகத் தமிழை அறிவிக்க வேண்டும்.’

‘திருவள்ளுவர் தினத்தை இந்தியா முழுமையும் கொண்டாட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். ஏனெனில் குசராத்திலும் இராசத்தானத்திலும் அப்பிராந்திய மொழிகளே வழக்காடு மொழிகளாக உள்ளன. வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது.”

இந்த முத்துக்களை உதிர்த்திருப்பவர் யார் தெரியுமா? தருண் விசய்! உத்தராகண்டைச் சேர்ந்த பாரதிய சனதா கட்சி மாநிலங்களவை உறுப்பினர். அதிலும் அச்சு அசல் ஆர்.எஸ்.எஸ்.காரர்! அவரின் தமிழ் ஆராதனையைக் கேட்டு மாநிலங்களவையே பிரமித்துத்தான் போயிற்று. நாடே மூக்கில் விரல் வைத்து நின்றது. தமிழ்நாட்டின் மஞ்சள் கறுப்புகளுக்கும் ஊசிபாசிகளுக்கும் தலைசுற்றி விட்டது. புகழ்மாலைகள் குவிந்தன. பாராட்டு விழாவே நடத்தி விட்டார்கள் நம் விருதுப் பிரியர்கள்.

தருண் விசயையும் அவரது ஆர்.எஸ்.எஸ். கொள்கையையும் அறிந்தவர்கள் இந்த உத்தரகாண்டியரின் தமிழ்ப் புகழ்ச்சியில் மயங்கி விட மாட்டார்கள். இந்த வாய்ச்சொல்லின் அகம்புறம் என்ன? என்று நாமும் கொஞ்சம் பார்க்கலாம்.  

இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரசுக் கட்சி தன் மக்கள் விரோதச் செயல்களாலும் ஊழல் தாண்டவத்தாலும் நரேந்திர மோதி தலைமையில் பாரதிய சனதாக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்து விட்டது. தமிழ்நாட்டில் மாநில ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என பாசக துடியாய்த் துடிக்கிறது. அதற்கான சூழலை உருவாக்கத் தனது மூளையைக் கசக்கிக் கசக்கித் திட்டம் போடுகிறது.

தமிழ்நாட்டில் நுழைந்த நாள் தொட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாசகவும் தலைதூக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. பட்டுப்போகாத தமிழ் உணர்வினாலும் பெரியார் ஆழ உழுது நீதிப் பயிர் வளர்த்த மண் என்பதாலும் தமிழ்நாட்டில் இந்துத்துவத்தால் வேர்பிடிக்க முடியவில்லை.

ஆனாலும், தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு என்று தமிழ்ப் பெருங்கூட்டம் எழுச்சி கொண்டு விடக் கூடாது என்பதில் பார்ப்பன சங் பரிவாரக் கும்பல் குறியாக உள்ளது. பகையாக நின்று சாதிக்க முடியாமற்போனதை ‘நண்பேன்டா’ நடிப்பு நடித்து அரவணைத்துக் கழுத்தறுக்க ஆர்எஸ்எஸ் கைத்தடி ஒன்றைக் களம் இறக்கியுள்ளது. அந்தக் கைத்தடியின் பெயர்தான் தருண் விஜய்.

வளர்ச்சி என்றால் மோதி, மோதி என்றால் வளர்ச்சி என்று இந்துத்துவ ஆற்றல்களும் பெருமுதலாளிய ஊடகங்களும் பதவிக்கு ஏங்கிய கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பரப்புரை செய்தன. அதானிக் குழுமம் மட்டுமே மோதியை ஊடகங்கள் மூலம் இந்தியக் கதாநாயகனாய்த் தூக்கிநிறுத்த முப்பதாயிரம் கோடி செலவு செய்தது. இதோ, மோதி தலைமையிலான பாசக நம்மை ஆண்டு கொண்டுள்ளது.

‘வளர்ச்சி என்று அதிகார வர்க்கம் கூறுவது பூர்விக மக்களின் நிலத்தை, பண்பை விற்பனை செய்வது" என்பார் மெக்சிகோ புரட்சியாளர் தோழர் மார்கோஸ். இது எத்துணைப் பெரிய உண்மை என்பதற்கு செப்படி வித்தைக்காரர், ஆப்கோ (பட) நிறுவன நடிகர், முன்னாள் குசராத் முதல்வர் மோதியின் சொற்களும் செயல்களும் அப்பட்டமான சான்றுகள். மோதியின் அயராத அயல்நாட்டுப் பயணங்களே இந்தியாவைப் பன்னாட்டுப் பெருங்குழுமங்களிடம் கூவிக் கூவி ஏலம் விடுவதற்காகத்தான்.

இந்த வளர்ச்சி மாய்மாலத்திற்குத் தூபமிடத்தான் இந்தியத் தேசிய உணர்ச்சி! இதுதான் முன்பு காங்கிரசும் இப்போது பாசகவும் இந்தி மொழிக்குத் தரும் முக்கியத்துவத்துக்குப் பின்னணி. இந்தியத்துவத்துக்கு இந்தி! அதற்கு முட்டுக்கொடுக்கும் இந்துத்துவத்துக்கு சமற்கிருதம்! இந்த நஞ்சை மறைக்கத்தான் தமிழ்ப் பஞ்சு மிட்டாய் கொடுக்க முனைகிறார் தருண் விஜய்!

மைய அரசு நிறுவனங்களில், சமூக வலைத்தளங்களில் இந்தியைப் பயன்படுத்த வேண்டும்; சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும்; இனி ஆசிரியர் தினம் என்பது குரு உத்சவ்; பல்கலைக்கழக உணவு விடுதிகளில் உணவு அட்டவணை இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்; உலக மொழிகளின் தாய் சமற்கிருதம் என்பதால் கேந்திரிய வித்யாலயாவில் ஜெர்மனுக்குப் பதிலாக சமற்கிருதம் படிக்க வேண்டும்; நாடெங்கிலும் இந்தி மையங்கள் அமைத்து இந்தி கற்பிக்க வேண்டும். இந்தத் திட்டங்களில் ஒன்றே ஒன்றையாவது தருண் விசய் எதிர்க்கின்றார? அப்படி எதிர்த்தால் தருண் விசயின் தமிழ்த் துதியை நாமும் கொஞ்சம் மெச்சலாம்.

இந்த இந்தித் திணிப்பும் சமற்கிருதத் துடிப்பும் ஏன்? இந்துத்துவ இந்தியாவைக் கட்டியமைப்பதற்காக! இந்தி என்பது திருத்தப்பட்ட கரிபோலி. அதாவது கரிபோலியில் உள்ள அரபு, பார்சி, உருது மொழிகளைக் களைந்து சமற்கிருதமயமான இந்தியை இந்தியமயமாக்கி இந்துஇந்திஇந்தியாவைக் கட்டியமைப்பதே மோடி அரசின் வேலைத் திட்டம்! அவருக்கு ஆர்.எஸ்.எஸ். இட்ட பணி!

மோதி அரசு இந்தியைப் பரப்புகிறது, தருண் விசய் தமிழைப் புகழ்கிறார் என்றால் என்ன பொருள்? இந்துத்துவ இந்தித் தூண்டிலில் நம்மைச் சிக்கவைக்கவே தமிழ்ப் புழுவை பயன்படுத்துகிறது பார்ப்பனிய மூளை என்று பொருள். இதன் மூலம் தமிழ்நாட்டை பாசக கோட்டையாக்கி விடலாம் என்பது அவர்களின் கனவு!

யாருக்காவது இது குறித்து ஐயம் எழுமானால் இந்தத் தருண் விசய் குறித்துச் சில உண்மைகளை நாம் தெரிந்து கொள்வது நலம்.

தருண் விசய் இருபது ஆண்டுகளுக்கு மேல் பஞ்ச ஜன்யா என்னும் ஆர்.எஸ்.எஸ். ஏட்டின் ஆசிரியர். ஆர்.எஸ்.எஸ். மதவெறிப் பேச்சுகளை நிதானமான, நயத்தக்க நாகரிக நடையில் எழுதும் வித்தைக்குச் சொந்தக்காரர். பார்ப்பனப் பாசிசக் கூடாரமான சியாமா பிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின் இயக்குநர்.

தமிழுக்காக மாநிலங்களவையில் பேசிய தருண் விஜய் சென்ற காங்கிரசு ஆட்சிக் காலத்தில் ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையின் வரிகளைப் படித்தறிவோம்:

‘சமற்கிருத மொழியை நீக்கி விட்டால் இந்தியத் தேசிய உணர்வே அழிந்து போய் விடும். பிறப்பு முதல் இறப்பு வரை, குழந்தைக்குப் பெயர் சூட்டுவது, திருமணம் ஆகியன முதல் மரணத்துக்குப் பிறகான சொர்க்கத்துக்கு நுழைவுச் சீட்டு பெறும் வரை ஒவ்வொன்றுக்கும் சமற்கிருதம் இன்றியமையாதது. சமற்கிருதம்தான் இந்தியா. இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தியும் அதுதான். உயர் பதவிகளும் சமூகத்தில் உயர் தகுநிலையும் பெறுவதற்கு சமற்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. அந்தக் காலத்தை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும்.’ (டைம்ஸ் ஆப் இந்தியா, 2013 ஆகஸ்டு 23.)

தருண் விசய் ‘தமிழ் போற்றி’ பாடும் இப்போதும் கூட தன் வலைப் பக்கங்களில் மேற்சொன்ன வடமொழிவெறிக் கருத்துகளைத்தான் பதிவிட்டு வருகிறார் என்பதைக் கவனம் கொள்வோம்.

தமிழகத்தில் தருண்விசய்க்குப் பாராட்டு விழா நடத்துகிறவர்கள் அவரிடம் சில கேள்விகளுக்குப் பதில் வாங்கித் தரட்டும். தமிழ் இரண்டாவது தேசிய மொழி என்றால் இந்தி எப்போது முதல் தேசிய மொழி ஆயிற்று? இந்திய அரசமைப்பில் தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது என்பதைப் பேசத் தயங்குவது ஏன்? இது ஒருபுறமிருக்க இரண்டாவது என இந்திக்கு அடுத்த நிலையைத் தமிழுக்குத் தருவது எப்படி மொழிச் சமத்துவம் ஆகும்? இந்தி, தமிழை மட்டும் தேசிய மொழிகள் என ஏற்கச் சொல்வது மற்ற மக்கள் மொழிகளின் மீது இவ்விரு மொழிகளையும் திணிப்பதாகாதா?

தருண் விசய் தாம் சொல்லும் தமிழ் சார்ந்த கருத்துகளுக்கான சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடங்க இதுவரை கோராமல் இருக்கக் காரணம் என்ன? இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி எனச் சொல்லும் அரசமைப்பின் 17ஆம் உறுப்பு குறித்து அவர் கருத்தென்ன? அதில் அவர் சொல்வதற்கேற்ற திருத்தங்களை மாநிலங்களவையில் முன்மொழியத் தயாரா? இந்தி மேம்பாட்டுக்காக மட்டும் அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து ஏன் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை? இந்திய அரசின் இந்தி, சமற்கிருத ஊக்குவிப்பு அறிவிப்புகளை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா? ஆதரிக்கிறார் என்றால் தமிழ் மொழிக்காக இதுபோன்ற எதையும் அரசு அறிவிக்காதது குறித்து ஏன் இன்னும் கேள்வி எழுப்பவில்லை? இந்தக் கேள்விகளுக்கு மௌனம்தான் விடை என்றால் இந்தப் பேர்வழி தமிழ் குறித்துப் பேசுவதில் என்ன பொருள் இருக்கிறது? ஒரு மொழிக்கு உறுதியான செயலும் ஒரு மொழிக்கு வெறும் வாய்ச் சொல்லும்தான் கருத்தும் என்றால் அது ஏமாற்று இல்லையா? அரசு ஊழியர்கள் இந்தி படிக்க ஊக்கத் தொகை தருகிறது மோடி அரசு. அதேபோல் வடநாட்டில் தமிழ் படிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை தர வேண்டும் என்று கேட்பாரா தருண்? காசிபனாரஸ் இந்துப் பல்கலைக் கழகங்களில் 1945ஆம் ஆண்டு தமிழ்த் துறை தொடங்கப்பட்டு இரண்டு தமிழ்ப் பேராசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். ஆனால், இன்று அந்த இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அங்கு மட்டுமா... ஆக்ரா, மீரத், கான்பூர், அலகாபாத், பாட்டியாலா, சண்டிகர், கௌகாத்தி, இலக்னோ, அலிகார், கொல்கத்தா ஆகிய ஊர்களில் உள்ள பல்கலைகழகங்களிலும் தமிழ்ப் பேராசிரியர்கள் இல்லை. காசி சம்பூர்ணானந்தா சமற்கிருதப் பல்கலைக்கழகம், காசி வித்யா பீடம் ஆகிய இடங்களிலும் தமிழ்த் துறைக்கான பேராசிரியர்கள் நியமிக்கப்படவே இல்லை. இவை குறித்து தருண் விசயின் சொல்லும் செயலும் என்ன?

சமற்கிருதம் போல் அல்லாமல், தமிழ் மொழி மக்களிடையே உயிர்ப்போடு நின்றிலங்கும் பெருமைக்குரிய தனித்துவமிக்க மொழி. பார்ப்பன பாசிஸ்டுகள் கொன்று புதைக்கத் திட்டமிட்டுச் செய்த சதிகளைத் தாண்டித் தீயுண்ட தங்கமாய் சீரிளமைத் திறம் குன்றா மொழி. அதை கண்டுதானே கால்டுவெல்லே தமிழைத் திராவிட மொழிகளின் தாய் என வியந்தார். இந்தப் பார்ப்பனியச் சதியின் ஆணிவேரில் வெந்நீர் ஊற்றிய கால்டுவெல்லைத் தூற்றியவர்களுக்கு திடீர்த் தமிழ்க் காதல்!

உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன். அவன் பிறந்தகம் குமரிக் கண்டம் என வரலாற்றியல் ஆய்வுகள் சொல்கின்றன. இந்துத்துவவாதிகளுக்கு இப்போதுதான் தமிழின், தமிழ் நாட்டின் தனித்துவ வரலாறு தெரிய வருகிறதா? இங்குதான் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி குடுமி போட்டிருக்கிறது. மோதி அரசின் இந்தி, சமற்கிருத வன்திணிப்பை எதிர்க்கும் சனநாயக உரிமையின் கூர்முனையை மழுங்கடித்துச் சிதைத்து அழிப்பதோடு தமிழையும் தமிழ் மரபையும் பார்ப்பனியக் கருதுகோளுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தும் சூழ்ச்சியே இவர்கள் பேசும் தமிழ்ப் பெருமையின் பின்புலம்!

1938ஆம் ஆண்டு கல்வியில் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழினம் போர்க் கோலம் பூண்டெ ழுந்தது. 1965ஆம் ஆண்டு இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்துத் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்கும் போராட்டங்கள் வெடித்தன. இளைஞர்கள் பலர் தங்கள் தேக்குமரத் தேகத்தைத் தீக்கிரையாக்கிக் கொண்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து இன்னுயிர் ஈந்தனர். அவர்களை நெஞ்சில் ஏந்தி அவர்களின் ‘தமிழ் வாழ்க’ எனும் பதாகையை அழுந்தப் பிடித்துத் தொடர்ந்து போராட வேண்டிய தேவையை மோதி அரசு அன்றாடம் நமக்கு உணர்த்திக் கொண்டுள்ளது.

இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி எனும் அநீதியைத் தமிழர்களாகிய நாம் ஒரு போதும் ஏற்பதற்கில்லை. இந்தியா முழுமையும் மக்கள் பேசும் அனைத்து மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்பதே இயல்பான சனநாயகக் கோரிக்கை. இந்தியக் கட்டமைப்பில் அதற்கு இடமில்லை என்றால் அதற்கேற்ற கட்டமைப்பு எதுவோ அதை உருவாக்கப் போராட வேண்டும். இந்துஇந்திஇந்துஸ்தானத்தை உருவாக்கத் துடிக்கும் மோதிக் கும்பலுக்கு எதிராகத் தமிழ்தமிழினம்தமிழ்நாடு எனும் இயற்கை நீதி சார்ந்து சமூக அறிவியலுக்கு ஏற்ப தமிழ்த் தேசியச் சமூகநீதியைக் கட்டியெழுப்புவோம். இந்துத்துவத்துக்கு தமிழ்த் தேசியமே சரியான எதிர் விடை. தமிழே தமிழ் நாட்டின் ஆட்சி மொழி, கல்வி மொழி, வழக்காடு மொழி, வழிபாட்டு மொழி என்ற சமூகநீதிக் கொள்கை வெல்லப் பாடாற்றுவோம்.

முன்னாள் பாசக பிரதமர் வாசுபேயி அவர்களைக் கவி சாம்ராட் என அழைத்த கருணாநிதியின் அன்புத் தம்பி கவிஞர் வைரமுத்து தலைமையில் தருண் விசய்க்குப் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. கருணாநிதி, இராமதாசு, வைகோ ஆகியோர் தருண் விசய்க்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கின்றனர். பாசகவின் சூழ்ச்சியால் நமது உரிமைகள் களவாடப்படுவது குறித்தோ, இந்துத்துவக் கருத்தியல் திணிப்புக் குறித்தோ கண்டும் காணாது இருந்து கொண்டு, இதற்குப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பது அறிவு நாணயமற்ற கயமை. இதனால் நம்மினத்திற்குப் பேரிழப்பே ஏற்படும் என எச்சரிக்கிறோம்.

பார்ப்பனியத்தை எதிர்த்த புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்பர்... அண்ணல் அம்பேத்கரை இந்திய அரசமைப்பின் சிற்பி என்று மட்டும் தூக்கிப் பிடித்து அவரையும் இந்துக்களின் தலைவர் என அடையாளப்படுத்தத் தொடந்து முயல்கின்றனர். அதைப் போலவே திருவள்ளுவரையும் முனிசிரேஸ்டராக்க முயற்சி மேற்கொள்கின்றனர். பார்ப்பனியத்தை எதிர்க்கும் இனங்களையோ மொழிகளையோ எதிர்த்து அழிப்பது இயலாமல் போனால் அரவணைத்து அழிப்பதைப் பார்ப்பனர்கள் வரலாறு எங்கும் பின்பற்றி வந்துள்ளனர். இந்தச் செயல்முறைக்குக் கிடைத்த பொருத்தமான துருப்புச் சீட்டுதான் கவிஞர் வைரமுத்து. தருண் விசயின் தமிழ் பேச்செனும் கபட வலைவீச்சில் வைரமுத்து சிக்குண்டு விட்டாரா? அல்லது நாளை தனக்கென்று உயரிய விருதுகள் மோதி அரசிடமிருந்து தேடி வரும் என்ற கணக்கா? தொலைநோக்குப் பார்வை இல்லாதவரா கவிப்பேரரசர்?

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டையும் பாரதிய சனதாவின் வசமாக்கிக் கருவறுக்கும் திட்டத்தின் கைக்கருவி தருண் விசய். தமிழைக் கொண்டு உள்நுழைந்து தமிழ்நாட்டை இந்துத்துவத் தளமாக்கும் முயற்சியை முறியடிப்போம். இந்த முயற்சியை மேற்கொள்ளும் பார்ப்பனிய பாசிஸ்ட்டுகளுக்கு எவர் கவரி வீசினாலும் எதிர்த்து நிற்போம்..

  கெஞ்சுவதில்லை பிறர்பால் எவர்செய்

  கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை

  மொழியையும் நாட்டையும் ஆளாமல்

  துஞ்சுவதில்லை எனவே

  தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை

  உலகில் எவரும் எதிர்நின்றே!

 

-              பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Pin It