கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

kumbh mela• ‘அக்காதா பரிஷத்’ ஆலோசனைப்படி ஜோதிடத்தை நம்பி கும்பமேளாவை ஓராண்டு முன் கூட்டியே நடத்தியது மத்திய, மாநில ஆட்சிகள்.

• மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தும் பொருட்படுத்தவில்லை நடுவண் ஆட்சி.

• பெரும் தொற்றுகளின் உற்பத்திக் கூடமாக வரலாறு நெடுக ‘கும்ப மேளா’ இருந்திருக்கிறது.

• இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் குண்டுவீசக்கூடும் என்று அன்றைய மத்திய அரசு கும்பமேளாவுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தது.

பொது சுகாதாரத்தை விட ஜோதிடர்களை திருப்திப்படுத்த மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் முடிவெடுத்ததால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிற கும்பமேளா ஹரித்வாரில் இம்முறை 11 ஆண்டுகள் முடிந்ததுமே நடத்தப்பட்டது.

கும்பமேளாக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. ஹரித்வார் கும்பமேளா கடைசியாக நடந்தது 2010ஆம் ஆண்டில். எனவே, ‘தற்போதைய’ இந்தக் கும்பமேளாவை நடத்த வேண்டிய ஆண்டு 2021 அல்ல, 2022.

ஆனால், இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப் பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்? அதுவும், பெருந்தொற்று குறித்த ஆய்வுகள், எப்போதுமே முதலாம் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலைத் தொற்றுகள் மோசமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டிய பிறகும் ஏன் நடத்தப்பட்டது?

ஜோதிடக் கணிப்புகளின்படி, ‘சூரியன் மேஷ ராசிக்கும்’, ‘குரு (வியாழன்) கும்பராசிக்கும்’ இந்த ஆண்டில் இந்தக் காலகட்டத்தில் இடம் பெயர்கிறார்களாம். நாட்காட்டிக்கும், சோதிட கணிப்புக்கும் இருக்கும் இடைவெளியை சரிக் கட்ட ஓராண்டு முன்கூட்டியே நடத்தப்பட்டதாம்.

83 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழுமாம். இந்தக் கணக்கின் சூட்சமங்களை விளக்கும் திறன் எனக்கில்லை. உங்களுக்கு தலைவலி வர வேண்டாம் என்றால், அந்த வேலையில் நீங்களும் இறங்காதீர்கள்.

எனவே, இந்திய அரசாங்கமும், உத்தரகண்ட் மாநில அரசாங்கமும் கும்பமேளாவை நடத்தா மல் இருந்திருக்கலாம். பல கோடி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கோவிட் சூப்பர் தொற்று நிகழ்ச்சியை மிகச் சாதாரணமாகத் தவிர்த்திருக்க முடியும். இது 11 ஆவது ஆண்டுதான்.

ஹரித்வாரில் கும்பமேளா நடந்து இன்னும் 12 ஆண்டுகள் முடியவில்லை எனச் சொல்லி, மிகச் சாதாரணமாக இந்த ஆண்டில் நடப்பதைத் தடுத்து இருக்கலாம். வாய்ப்பிருந்தால் 2022 ஆம் ஆண்டில், இப்படிப் பட்ட ஒரு நிகழ்வை நடத்தும் புறச்சூழ்நிலையை உருவாக்குவதற்காக, இந்த முழு ஆண்டையும் கூட பயன்படுத்தி இருக்கலாம்.

ஆனால், அந்த இரண்டு அரசாங்கங்களும் அப்படிச் செய்யாமல், இன்னும் கொடூரமான காரியங்களைச் செய்தன. அகில பாரதிய அக்காதா பரிஷத்திடம் ஆலோசனை நடத்தி, 2022 ஆம் ஆண்டு நடக்க வேண்டிய நிகழ்வை ஓராண்டு முன்கூட்டியே நகர்த்தி 2021ஆம் ஆண்டில் நடத்தின.

பெருந்தொற்று பரவல் நடக்கும் இடம் என வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வு கும்பமேளா.

சின்மை தும்பே எழுதிய சமீபத்திய நூல், “பெருந் தொற்றுகளின் காலம்: அவை எப்படி இந்தியாவையும் உலகத்தையும் வடிவமைத்தன (The Age of Pandemics: How They Shaped India and the World)”, பெருந்தொற்றுகளையும், ‘கும்ப மேளா’க்களையும் பற்றிய குறிப்பிட்ட விவாதத்தை உள்ளடக்கி இருக்கிறது.

1986ஆம் ஆண்டில் டேவிட் ஆர்னால்டின் எழுதி வெளிவந்த, ‘காலராவும், பிரிட்டிஷ் இந்தியாவில் காலனியமும்’ என்ற கட்டுரையும், காமா மெக்லீனின்’ எழுதிய ‘புனிதயாத்திரைகளும் அதிகாரமும்’: அலகாபாத்தில் கும்பமேளா, 1765-1954’ என்ற 2008இல் வெளியான நூலும் ஏராளமான தகவல்களைத் தருகின்றன.

கும்ப மேளா மற்றும் தொற்றுகள் குறித்த வரலாறு பல ஆண்டுகளாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்திடம் உள்ள காலரா குறித்த வரலாற்றுப் பதிவுகளில் கும்ப மேளாவைப் பற்றிய தனி அத்தியாயமே இருக்கிறது.

1895ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கெஸட்டில், ஹரித்வார் காலரா தொற்றுகள் குறித்த இயற்கை வரலாறு என்ற கட்டுரையும், ‘கும்பமேளா பற்றிய விரிவான ஆய்வாகும். தொற்று நோய் பரவலுக்கான ஆபத்துகளைக் கண்டறிவது - 2015’ என்ற சமீபத்திய ஆய்வு அறிக்கையும் வெளி வந்திருக்கிறது.

2020 ஜூலையில் உத்தரகாண்ட் அப் போதைய முதல்வர்,திரிவேந்திர சிங் ராவத் (பாஜக), அகில பாரதிய அக்காதா பரிஷத்திடம் வழக்கம்போல கும்பமேளா நடைபெறும் என்று வாக்குறுதி அளித்தார்.

செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் திரிவேந்திர சிங் ராவத் கூட்டத்தின் எண்ணிக்கையில் கட்டுப் பாடுகள் இருக்கும் என்றார். டிசம்பர் 2020ஆம் ஆண்டில், அக்காதா பரிஷத்தின் ‘துறவிகள்’, அரசாங்கம் மேற்கொள்ளும் கும்பமேளா ஏற்பாடுகள் தங்களுக்கு ‘அதிருப்தி’ தருவதாகச் சாடினார்கள். கொரனாவைக் காட்டி நிறுத்தினார்கள். எங்கள் வழியில் நாங்கள் நடத்துவோம் என அக்காதா பரிஷத் மிரட்டியது.

2021 மார்ச் 9இல், பா.ஜ.க. முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்தார். அடுத்ததாகப் பதவிக்கு வந்த தீரத் சிங் ராவத், அதெல்லாம் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடை யாது, புனிதயாத்திரை மேற்கொள்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாடும் இருக்காது, கங்கை அன்னை அருளால், இந்தத்தொற்று நோயை வென்று விடுவோம் என்றார்.

திரிவேந்திர சிங் ராவத் பதவியைவிட்டு விலகிய பிறகு, கும்பமேளாவிற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டது தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டிருந்தார். பா.ஜ.க. முதல்வராக இருந்தும் திரிவேந்திர சிங் ராவத் மாநிலத்தில் 53 கோயில்களை பார்ப்பனர் பிடியிலிருந்து மீட்டு சட்டம் இயற்றினார். கும்பமேளாவுக்கு கட்டுப் பாடுகள் விதித்தார். அதனாலே ஆரம்பத்திலேயே பதவி பறிக்கப்பட்டது.

ஏப்ரலில் இந்த நிகழ்வு தொடங்கியபோது, மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம், ஏப்ரல் 6ஆம் தேதி, கொரானா வால் வேகமாகப் பரப்பும் நிகழ்வின் கும்பமேளா இருக்கும் என்று கவலை தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அரசு ஆதரவு செய்தி நிறுவனமான ஏ.என்.அய். கூட இதை வெளியிட்டது.

கும்பமேளா இருப்பது குறித்து, மூத்த அரசு அதிகாரிகள் கவலை தெரிவிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சிறிய மாற்றங்களைச் செய்து, பல்வேறு செய்தித் தளங்களும், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களும் செய்தி வெளியிட்டன.

இச்செய்திகள் போலியானது என்றுமறுநாளே மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்டது.

உதாரணமாக பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் மிகப் பெரும் தேர்தல் கூட்டங்களுக்கு மக்களை வரவழைத்துக் கொண்டே, மிச்ச முள்ள கும்பமேளாவின் பூஜைகளை அடையாள நிகழ்வாக கூட்டம் கூட்டாமல் நடத்திக் கொள்கிறீர்களா என்று கேட்டார். அதுவும் மிகத் தாமதமாகவே கேட்டார்.

இதற்கு முன்னர் கும்பமேளா ஓராண்டிற்கு முன்னதாக நடத்தப்பட்டிருக்கிறதா? ஆமாம். 1938, 1855 ஆம் ஆண்டில், இதேபோல ‘ஜோதிட இடப் பெயர்வுகள்’ நடந்தபோது இப்படி செய்யப்பட்டிருக்கிறது.நாம் என்ன 1938-லும், 1855-லுமா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?

காற்றால் பரவும் பெருந்தொற்றை நாம் 1938 ஆம் ஆண்டில் எதிர்கொண்டோமா? 1855ஆம் ஆண்டில் கும்பமேளா வந்தபோது காலரா பெருந்தொற்று இருந்தது. அந்தக் கும்பமேளா நிகழ்வு காலராவின் தாக்கத்தைப் பெருமளவில் அதிகப்படுத்தவும் செய்தது.

பெருந்தொற்று தொடர்பான அறிவு குறைவாக இருந்த அந்தக் காலத்தில்கூட, இதைப் பற்றிப் பேசப்பட் டிருக்கிறது. 1866ஆம் ஆண்டில் இஸ்தான் புல்லில் நடைபெற்ற உலகத் தூய்மைப்பணி சிறப்பு மாநாடு (International Sanitary Convention) குறிப்பாக கும்பமேளாவிலிருந்து தொடங்கிய நோய்த் தொற்றைக் குறித்த அறிக்கைகள் மீது கவனம் செலுத்தியது.

1866 ஆம் ஆண்டில் உருவான சர்வதேச ஒருமித்தக் கருத்தின்படி, ‘கங்கை ஆற்றை ஒட்டிய இந்தியப் புனிதயாத்தி ரைத் தளங்கள் காலரா தொற்றை உருவாக்கிய இடங்களாக இருந்தன என்றும், அதன் பிறகு அங்கிருந்து முதலில் மெக்காவுக்கும், பிறகு எகிப்துக்கும் சென்று, பிறகு ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதி துறைமுகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் புகுந்து, முக்கிய ஐரோப்பிய நகரங்களைத் தாக்கியது’ என, 1866 ஆம் ஆண்டில், அன்றைய ஆட்டோமான் துருக்கிய அரசின் தலைநகராக இருந்த இஸ்தான் புல்லில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற சர்வதேச தூய்மைப்பணி சிறப்பு மாநாட்டின் உரைத் தொகுப்புகளில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுகள் பற்றி 1938 அல்லது 1855ல் பெற்றிருந்த அறிவைக் காட்டிலும் கூடுதல் அறிவை நாம் 2021 ஆம் ஆண்டில் பெற்றிருக்கும் நிலையில், பகுத்தறிவு பெற்ற, அறிவார்ந்த அரசாங்கம், ‘புனிதர்கள்’ என்று தங்களைத் தாமே நியமித்துக் கொண்ட ஒரு சிறிய குழுவினரை, தன்னுடைய அனைத்து வகையான சக்திகளையும் பயன்படுத்தி சம்மதிக்க வைத்திருக்க முடியும்.

இந்த ஒரே முறை மட்டும் ஜோதிடத்தை சற்றுத் தள்ளிவைத்துவிட்டு, எளிமையாக நாட்காட்டிப்படி 12 ஆண்டு களுக்கு ஒரு முறை நடத்தும் முறையையே பின்பற்றி இருக்கலாம்.

‘இப்படி ஒரு பேரிடர் ஏன், எப்படி நிகழ்ந்தது’ என்று எந்தவொரு விளக்கத்தையும் ஜோதிடப்படி எந்த ஒரு ஜோதிடராவது இதுவரை விளக்கியிருக் கிறார்களா? இல்லை.

1942: கும்பமேளாவைத் தடை செய்த போர்

அலகாபாத்தில் 1942ஆம் ஆண்டில் நடைபெற்ற, கும்பமேளாவும், மகாமேளாவும் இணைந்த நிகழ்விற்காக, இந்திய அரசாங்கம் எந்த ஏற்பாடுகளையும் செய்து தரவில்லை. அந்தக் கும்பமேளா நடைபெற்ற காலம் முழு வதும் அலகாபாத்துக்கு ரயில் டிக்கெட்டுகள் ஏதும் விற்பனை செய்யப்படவில்லை.

இதன் வாயிலாக, கும்பமேளாவுக்குப் போகும் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போர் நடந்த அக்காலத்தில் ஜப்பானிய விமானப் படை குண்டு வீசக்கூடும் என்ற காரணம் காட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ‘சங்கிகள்’, ‘சாதுக்களி’டமிருந்து இந்தத் தடைக்கு எதிர்ப்புகளும் வரவில்லை.

இம்முறையோ, ரயில்களை ரத்து செய்வ தற்குப் பதிலாக, இந்திய ரயில்வே டேராடூனுக் கும், ரிஷிகேஷுக்கும் இடையில் சிறப்பு ரயில்களை இயக்கியது. மேலும், அரசாங்கம் பெரும் எண்ணிக்கையில் கூடுவதைத் தூண்டும் வகையில் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தது.

சுத்தபிரதா சென்குப்தா கட்டுரையிலிருந்து சில பகுதிகள்