‘மாப்பிள்ளை இவருதான்; ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையதல்ல” என்று நடிகர் செந்திலை, ரஜினிகாந்த் கலாய்ப்பார். அந்தக் கதை இப்போது நீதிமன்றத் தீர்ப்புகளாகவே வரத் தொடங்கி விட்டன.

கரசேவகர்களாக அத்வானி, ஜோஷி என்று 32 பேர் கொண்ட ஒரு கும்பலே அயோத்தியில் கூடியிருந்திருக்கலாம். ஆனால், இவர்கள் இராமன் ‘சத்தியமாக’ மசூதியை இடித்தவர்கள் அல்ல - லக்னோ சிறப்பு நீதிமன்றமே கூறிவிட்டது.

இது என்ன புதுக் கதை? அப்படின்னா, மசூதியை இடிச்சது யாரு பாஸ்? அதுவா, அவர்களுக்கு லக்னோ நீதிமன்றம் ஒரு கவுரவப் பட்டத்தையே வழங்கி யிருக்கிறது. ‘சமூக விரோதிகள்’ என்ற நாட்டின் மிக உயர்ந்த பட்டம்!

இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக் கணக்கில் இரயில் ஏறி அயோத்திக்கு கடப்பாறை, இரும்புத் தடிகளோடு வந்து சேர்ந்த இராம பக்தர்கள் - சமூக விரோதிகளா?   இராம பக்தர்களை இப்படியா புண்படுத்துவது? என்று ராம பக்தர்கள் கொந்தளிக்க மாட்டார்கள் என்று நாம் நிச்சயம் நம்பலாம். நீதிமன்ற அவமதிப்பு வந்து விடுமே!

அப்படீன்னா வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று அத்வானியும், ‘சங்கி’களும் உருண்டு புரண்டு பாராட்டுகிறார்களே, இது நியாயமா? அந்த இராமபிரானுக்கே அது அடுக்குமா? என்று சமூக விரோதிகள் எதிர் கேள்வி கேட்கவும் கூடாது. அத்வானிகள் விடுதலையாக வேண்டும் என்றால், ‘இராம பக்தர்கள்’ சமூக விரோதிகள் என்ற நீதிமன்றம் தரும் பட்டத்தைப் பெருமையோடு ஏற்கத் தான் வேண்டும்.

அது சரி; ‘சமூக விரோதிகள்’ என்ற இராம பக்தர்கள், மசூதியை இடித்தது குற்றம் தானே! அங்கே இராமன் கோயிலைக் கட்டுவது இந்து தர்மமா?

ஏன் கட்டக் கூடாது? இராமன் -  மசூதி இருந்த இடத்தில் தானே பிறந்தான்- பிறகு எங்கே போய் கோயில் கட்டுவது? இந்துக்கள் பூமியில் எங்கள் இராமனுக்கு கோயில் கட்டக் கூடாதா?

ஓ தாராளமாகக் கட்டுங்கள் ஜி! இராமனுக்கு கோயில் கட்டினால் கொரானா ஓடி விடும்! வேலை இல்லாத் திண்டாட்டம் ஒழிந்து விடும்; ஜி.எஸ்.டி. வரி பாக்கி மாநிலங்களுக்குக் கிடைத்து விடும்; பொருளாதார நெருக்கடி ஒழிந்து ‘கடாட்சம்’ பெருகும்! ‘இராமபிரான்’ நல்லதையே செய்வார் என்று சாதனைப் பட்டியலைப் போடுகிறார், ‘சமூக விரோதி’ பட்டம் பெற்றுள்ள இராம பக்தர்!

அது சரி; கோயில் கட்டினால்தான் ‘இராமன்’ கண் திறந்து, இந்த அவலங்களையெல்லாம் பார்ப்பானா?

வீணாகப் பேசாதீங்க சார்; உச்சநீதிமன்றமே கோயில் கட்ட அனுமதி கொடுத்து விட்டது. இதோ பாருங்க தீர்ப்பு எங்கள் கையில் இருக்குது!

சரிதான்; கிணறு வெட்டுனதற்கு இதோ இரசீது எங்கிட்ட இருக்கு; சும்மா விட மாட்டேன் என்ற வடிவேலு காமெடி நினைவுக்கு வருதா?

வரும்; ரஜினி காமெடியும் வடிவேலு காமெடியும் அயோத்தி காமெடிகளோடு எப்படி பொருந்திப் போகிறது, பார்த்தீர்களா?

இந்தக் காமெடிகள் எல்லாம் எங்கள் புராண காலத்திலேயே இருந்தது என்று இதற்கும் புராணப் பெருமை பேசாதீர்கள் ஜீ!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It