தென்னிந்தியாவில் புனித ஆறு காவிரி என்பதைக் கருத்தில்கொண்டு கவிஞர்களும், புலவர்களும் இவ்வாற்றைக் குறிப்பிட்டுப் பாடி மகிழ்கின்றனர். இக்காலப் படைப்பு களில் மேன்மை கொண்ட காவிரி முக்கிய பாடுபொருளாக இடம்பெற்றுள்ளது. பண்டைய தமிழ் இலக்கியங்களைப் போலவே பிற்காலத் தமிழ் இலக்கியங்களைப் படைத்துச் சென்ற இரு நூற்றாண்டுகளிலும் தோன்றித் தமிழ் வளர்த்த பிற்காலக் கவிஞர்களும் பொன்னியாற்றின் புகழ்பற்றிப் போற்றிப் பாடத் தவறவில்லை. மக்கள் காவிரி ஆற்றைப் பெண்ணாகவும் தீர்த்தமாகவும் போற்றி வந்ததும் காவிரிக்கு உயர்ந்த மதிப்பளிப்பதும் மரபாக இருந்து வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் காவிரியின் வளம், செழிப்பு, சிறப்பு பற்றிப் புலவர்கள் பலரும் பல பாடல்கள் பாடி யுள்ளனர். சங்க இலக்கியத்தில் ஒன்றான பட்டினப் பாலையில், வான் மழை பொழியாமல் பொய்த்து விட்டாலும் காவிரி பொன் கொழிக்கும் அளவிற்கு வளம் செய்யும் என்பதினை,

“வான் பொய்ப்பினும் தான் பொய்யா

மலைத் தலைய கடற்காவிரி

புனல் பரந்து பொன்கொழிக்கும்”

(பட்டினப் - 17)

என்று இப்பாடல், செழிப்பினை விளக்குவதாக அமைந் துள்ளது.

எட்டுத்தொகை நூல்களான அகநானூற்றிலும் புற நானூற்றிலும் பெரும்பாலான பாடல்கள் காவிரியின் செழிப்பு வளம் இவற்றை எடுத்துக் கூறுவதாக அமைந் துள்ளன.

“கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று

நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுருள் போல

நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்

ஆகம் அடைதந்தோளே”

(அகம். 62: 9-12)

நீர்ப்பெருக்கு அதிகம் கொண்ட காவிரி பல சுழிகளைக் கொண்டுள்ளது என்று வெள்ளப்பெருக்கைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை

மெலிக்கும் காவிரிப் பேரியாற்று

(அகம் : 126.4-5)

மலையில் பிறந்து கடலின் கரையினைக் கரைத்திடும் அளவிற்குக் காவிரி விரைந்து செல்லும் நீர்ப்பெருக்கைக் கொண்டது என அதன் வளமையைப் பறைசாற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சங்ககாலத்தில் காவிரி வளமாக இருந்ததை விளக்குகிறது இப்புறநானூற்றுப் பாடல்,

“புனிறு தீர் குழவிக்கு இலிந்து முலை போலச்

சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்

மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்”

(புறம் : 68-8-10)

குழந்தை பிறந்து பல திங்கள் கடந்த பின்னும் பால் சுரக்கும் தாயைச் சான்றாக்கிக் காவிரி தாயாகவும் அதனால் உலக உயிர்கள் காக்கப்படுவதாகவும் இப்பாடல் கூறுவது சிறப்பானதாகும்.

காப்பிய இலக்கியமான சிலப்பதிகாரத்தில் காவிரி பற்றி உயர்வாகப் பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன.

“பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து

குயில்கள் இசைபாடக்

காமர் மாலை அருகு அசைய நடந்தாய்!

வாழி காவேரி”

(சிலம்பு 7-8)

பூக்கள் மலிந்த சோலையில் மயில்கள் ஆடும்; குயில்கள் விரும்பி இனிதாக இசை பாடும்: விருப்பம் விளைவிக்கும் மாலைகள் அருகிலே அசையும்; இவற்றி னூடே காவிரியும் நடந்ததாகவும், காவிரி நெடுநாள் வாழ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் காவிரி பாயும் பகுதி செழிப்பாக இருந்துள்ளதை விளக்குகிறது.

“பாடல் சால் சிறப்பின் பரதத் தோங்கிய

கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை”

(மணிமேகலை: 5.25)

காவிரி சோழர்களின் குலக்கொடி என்றும், கோள்கள் தம்முடைய நிலையிலிருந்து தவறினாலும் காவிரியானது தன்நிலை மாறாது வளம் செய்யும் என்று சிறப்பாகச் செழிப்பினை மையப்படுத்திக் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல். புதுக்கவிதைகளில் காவிரி இடம்பெறும் நிலையினைக் கீழ்க் காணும் செய்திகளின் வாயிலாக அறியலாம்.

“தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்” என்னும் நூலில் விமலானந்தம் புதுக்கவிதைக்கு விளக்கம் தரும் வகையில்

“யாப்புடைத்த கவிதை

அணையுடைத்த காவிரி

முகிலுடைத்த மாமழை

முரட்டுத் தோலுரித்த பலாச்சுளை

புதுக்கவிதை”1

என்று குறிப்பிட்டுள்ளார். இதில் அணையுடைத்த காவிரி கட்டில்லாமல் பாய்ந்து அனைவருக்கும் பலன் தரும். அது போன்றது புதுக்கவிதை என்று விளக்கமளித்துள்ளார்.

காவிரியின் வளம்:-

தென்னிந்தியாவில் ஓடும் ஆறுகளில் காவிரி தலைசிறந்ததாகும். அது தன் இடையறாத நீர்ப்பெருக்கால் ‘ஜீவநதி’ எனப் போற்றப்படுகின்றது. பாரதியார் தம் கவிதைகளில் காவிரியினை முதன்மைப்படுத்திப் பாடி யுள்ளார். காவிரிப் பெருமைகளை நன்கு உணர்ந்திருந்த அவர்,

“காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

கண்டதோர் வையை பொருநை நதி என

மேவிய ஆறு பல வோடத் திரு

மேனி செழித்த தமிழ்நாடு.”

(பாரதி.கவி. பா.3)

(2. தமிழ்நாடு) (ப.154)

என்று சுவைபடப் பாடியுள்ளார். மேலும்,

“கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்.”

(பாரதி.கவி.பா.6)

என்றும் வளத்தினை எடுத்தியம்புவதாகப் பாடியுள்ளார். இப்பாடலில் தாம்பூலத்தில் மங்கலப் பொருளாக வைக்கும் வெற்றிலை காவிரிச் சமவெளியில் விளைந்து பயன் தருவதை உணர்த்தியுள்ளார்.

பாரதியார் வழி வந்த பாரதிதாசன் என்னும் கனக சுப்புரத்தினம் தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று புரட்சி முழக்கமிட்டு மொழி வழித் தேசியத்தின் இலக்கியச் சின்னமாகத் திகழ்ந்தவர். காவேரியையும் வைகையையும் பெண்ணாகக் கண்ட பாவேந்தர்

“வண்ணம் பாடியே நடக்கும்

வைகை காவிரிப் பெண்ணே!

தண்ணறுந் தென்றல் பூஞ்சோலை

சாகாத இன்பம் தழைக்கின்ற நாடு”

(பாரதிதாசன் தேனருவி ப.14)

என்று காவிரியும் வைகையும் நீங்காது நிலைபெற்று தமிழகத்திற்கு நிறைந்த வளம் கொடுப்பதாகக் கூறியுள்ளார். மேலும், உலகில் செங்கதிர், காவிரி ஆறு, திருக்குறள் இவையே சிறந்தன என்று வானுயர உயர்த்திப் பாடுகிறார்.

“வானுக்கு செங்கதிர் ஒன்று - புனல்

வண்மைக்குக் காவிரி ஒன்று - நல்ல

மானத்தைக் காத்து வாழ எண்ணும் - இந்த

வையத்துக் கொன்று திருக்குறள்”

(பாரதிதாசன் ப.14)

என்று சிறப்பாகப் பாடுகின்றார்.

பிற்காலக் கவிஞர் வரிசையில் பெருமை மிக்கதோர் இடத்தைப் பெற்றவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. இவர் இயற்கையை ஆராதிக்கும் கவிஞர். காவிரியைப் பற்றி இவர் கூறுகையில்,

ஆனை கட்டி அரசாண்டாலும் பல

ஆயிரம் வித்தைகள் கற்றாலும்

சேனை கட்டிப் பகை வென்றாலும் அவர்

தின்னக் கொடுப்பவள் காவேரி”2

என்று பொது வாழ்வின் சிறப்பெல்லாம் பொன்னிக்குள் அடக்கம் என்று அதன் வளம் கருதிக் கூறாமல் கூறுகிறார்.

காவிரி ஆற்றினை இளமை மாறாக் கன்னியாக நினைத்து, பிறந்து, பாய்ந்து வளம் சேர்ப்பதைக் கண்டு இன்புற்று,

“வளம் சேர்க்கும் வேணியே

இளமை மாறாப் பொன்னியே

பொன்னிப் பெண்ணே வாழ்க!

கன்னி காவிரியே வாழ்க!3

என்று தமிழ்த்தென்றல் அவர்கள் காவிரியினை வாழ்த்தி அருமையாகப் பாடியுள்ளார். மேலும் இளமைக் குன்றாத் தமிழ்நாட்டில் காவிரியும், வைகையும் பாய்ந்து வளம் பெருகியதால் உண்மை நிலைத்தோங்குவதாகக் கருதிய கவிஞன்

“கன்னித் தமிழ்நாட்டில் காவிரி பாய்ந்தோடும்

பொன்னித் திருநாட்டில் வைகை இழைந்தோடும்

தண்தமிழ் நாட்டில் வளமை பெருகியே

உண்மை நிலைத்தோங்கும் நன்கு.”4

என்று நம்பிக்கையோடு பாடியுள்ளார். இவர் காவிரி நதியின் மீது உயர்ந்த மதிப்பு கொண்டிருப்பதை இதன் மூலம் அறியலாம்.

காவிரி ஆற்றிற்குச் சிறந்த விளக்கத்தைக் கவிஞர் பூங்குன்றன் புதுக்கவிதையில் கொடுத்துள்ளார்.

பூக்களிலே உயர்ந்தது மல்லிகைப் பூதான்

புனல் நீரில் உயர்ந்தது பொன்னித் தண்ணீர்” 5

என்று பொன்னி ஆற்றை அதன் வளம் கருதி மிகவும் உயர்த்திப் பெருமைப்படுத்திக் கூறியுள்ளதைக் காண முடிகிறது.

பாரதியின் எழுத்தின் சக்தியைச் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஆற்றின் நிலையோடு ஒப்பிட்டுக் கூறுகையில்,

“நீ தொட்டு எழுதினாலும்

அதில் தொடர்ந்த ஊற்றுக்கள்

கங்கையாகப் புரண்டு

காவிரியாகப் பொங்கிக்

கொள்ளிடமாக் குமுறி

வெள்ளையரை விழுக்காட்டின”6

என்று உணர்ச்சி ததும்ப ‘பாரதி நமது நிதி’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி வளமாக மக்களைக் காத்ததனால் அதனைக் காவிரித்தாய் என்று இன்னாசி தன் கவிதையினில் கூறுகையில்,

“கரிகால் பெருவளத்தான்

கரைகண்ட காவிரித்தாய்

கரையிருக்கும் பெருவிருப்பான்

கரை காணாக் கவிப்பெருக்கான்”7

என்று வரலாற்றுக் குறிப்பினைக் கூறியதுடன் காவிரி யினைத் தாயாக எண்ணிய நிலையும் இதில் புலப்படுகிறது.

காவிரிப் பிரச்சினை:-

காவிரிப் பிரச்சினையானது இன்று நேற்று அல்ல. பல நூற்றாண்டு காலமாகத் தீராமல் இருந்துவரும் பிரச்சினை. காவிரி இரு மாநிலங்களுக்கிடையே போர் நிகழவும் காரணமாகியுள்ளது.

கி.பி. 1141 முதல் 1173 வரை மைசூரை ஆண்ட போசள மன்னன் முதலாம் நரசிம்மன் மைசூருக்கு அருகே காவிரியில் அணைகட்டி சோழ மண்டலப் பாசனத்தைத் தடுக்க முயன்றிருக்கிறான். சோழ நாட்டை அப்போது ஆண்ட இரண்டாம் குலோத்துங்கனின் மகனான இரண்டாம் இராசராசன் ஓலை அனுப்பி அணையைக் கட்டும் முயற்சியைக் கைவிடும்படி கேட்டுப் பார்த்தும் மைசூரை ஆண்ட முதலாம் நரசிம்மன் அதற்கு இணங்க மறுக்கவே இராசராசன் படையெடுத்துச் சென்று அணையை உடைத்துக் காவிரியை விடுவித்திருக்கிறான்.

மீண்டும்....

கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட சிக்கதேவராயர் என்ற மன்னன் காவிரியின் குறுக்கே செயற்கை மலை ஒன்றை உருவாக்கிச் சோழ நாட்டிற்குத் தண்ணீர் வரமுடியாமல் தடுக்க முயன்றிருக்கிறான். அப்போது தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் சாகசி என்பவன் ராணி மங்கம்மாள் படையின் துணையோடு காவிரியில் உருவாக்கப்பட்ட செயற்கை மலையை அகற்றப் படையெடுத்துச் சென்றிருக்கிறான். இப்படை அங்குச் செல்லும் முன்பே மைசூர் மாநிலத்தில் பெய்த பெரும் மழை சிக்கதேவராயன் உருவாக்கிய செயற்கை மலையை அடித்துச் சென்று விட்டது. ஆனால் தற்போது மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே 5 அணைகளைக் கட்டி முடித்துத் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டுச் சாகுபடி

யாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையை மையப்படுத்தி, கவிஞர் தம் கவிதையில் கூறுகையில்,

“காவேரிப் பிரச்சினை

விக்கல் முடிச்சுகளில்

சிக்தித் தவித்தது!

நதியைக் கட்டவிழ்த்து விடச் சொன்னோம்;

நாய்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.”8

என்று ஈரோடு தமிழன்பன் தன் கவிதையில் குறிப்பிடுகிறார். மேலும் கன்னடர்களின் வெறிச்செயலைக் கூறும் விதமாக

“கர்நாடகத்தின் கண்களில்

நூறுநூறு விரியன் பாம்புகள்!

வாளும் கையுமாய் கல்லும் கையுமாய்

கடப்பாரையும் கையுமாய் வெறியெடுத்த

கர்நாடக வெள்ளம்!

திடுக்கிட்ட தீவுகளாய்த் தமிழர்கள்!”9

என்று தமிழர்களின் அவல நிலையையும் சுட்டிக் காட்டியுள்ளார். காவிரி கர்நாடகத்தை விட்டு வெளியேறித் தமிழகத்திற்கு வந்து மக்களை வாழ்விக்கச் செய்யவேண்டும் என்றெண்ணிய கவிஞர் மு. மேத்தா கூறுகையில்,

“கருநாடகத்தில் உடையட்டும் உன் கால்விலங்கு

காவிரியாய் நீ நடந்து காதுகளில் தேன் வழங்கு”10

என்று எதிர்பார்ப்புடனும் ஏக்கத்துடனும் கூறியுள்ளார். மேலும் கன்னடர்களின் கொடூரச் செயலைக் கூறுகையில்,

“பக்கத்து மாநிலங்களுக்கும் பால் கொடுக்காமல்

நதி நங்கைகளின் மார்புகளிலேயே

முடிச்சுப் போடும் மாநில வெறியர்களைப் போல”11

என்று தன் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழகம் காவிரி நீர் பெறுவதற்கான நியாயங் களையும் முறைப்படி தெரிவித்தும் - கருநாடக அரசு செவிசாய்க்க மறுத்தே வந்தது; அந்த நிலையிலேதான் மத்திய அரசால், காவிரி நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலே 1990-ஆம் ஆண்டு காவிரி நதிநீர்ப் பங்கீடு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரச்சினை இன்னும் ஒரு முடிவிற்கு வராத நிலையில்தான் உள்ளது.

வறட்சி:-

உயிரின் தோற்றத்திற்கும் உலகின் எல்லா வளங்களுக்கும் மூலம் தண்ணீர். தண்ணீர் இல்லையேல் உணவு உற்பத்தி இல்லை. உயிரில்லை. மண்ணும் காற்றும் கூடத் தண்ணீரின்றேல் வறண்டு போய்விடும். எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் தண்ணீர். ஆனால் இன்று ஆறுகள் செத்துக் கொண்டிருக் கின்றன. ஆற்றின் பாதையைச் சுருக்கிச் சுருக்கிச் சுரண்டிய, கட்டடங்கள், கட்டுமானங்கள் உயர்ந்துகொண்டே செல்கின்றன.

ஆறுகளில் மணல்கொள்ளை போய்க் கொண்டிருக் கிறது. சிமெண்ட் கலவையாக அது அரைபட்டு அரைபட்டுக் கட்டடங்களாக நின்றுகொண்டிருக்கிறது. ஆறுகளில் தண்ணீர் இல்லாத வறட்சி நிலையினைக் கவிஞர்கள் பலரும் தம் கவிதைகளில் கூறியுள்ளனர்.

‘கிளிக்கூண்டு’ என்னும் தலைப்பில் காவிரி வற்றியதால் மக்களின் நிலையை எடுத்துக் கூறும் விதமாக இக்கவிதையை ந. பிச்சமூர்த்தி படைத்துள்ளார்.

“காவிரி நாணல்கள் காற்றில் மயங்கின

காலன் செய் ஹோமத்தில் உடல் நெய்யாகும் காட்சி

காவிரி மணலில் குழந்தைகள் கும்மாளம்.”12

என்று ஆற்றில் நீர் இல்லா நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.

மு.மேத்தா வறட்சியால் வாடும் தஞ்சை மக்களைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

“ஊருக்கெல்லாம் சோறு போட்டவனுக்கு

இப்போது ஊர் கூடிச் சோறு போடுகிறதாம்

அரிசி வேகவில்லை மூட்டிய நெருப்பில்

உயிரிழந்த உழவர்கள்!

காவிரியில் தண்ணீர் வரவில்லை

மயானத்தில் பொங்கல் வந்துவிட்டது.”13

என்று விவசாயிகளின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி யுள்ளார்.

காவிரியின் வறட்சி நிலையினை வெளிச்சம் போட்டுக் காட்டுவது போல் கவிஞர் ச. பழனிவேல் கவிதை அமைந்துள்ளது.

“அனல் பறக்கும் மணல் பரப்பு

காவிரியைக் கடந்திட தேவை இன்று ஓடமல்ல

ஒட்டகம் பரிசல் அல்ல பாலைவனக் கப்பல்.”14

என்று கூறியுள்ளார்.

ஈழத்துத் தமிழர்களுக்காகத் தன் இன்னுயிரையும் துறந்தவர் முத்துக்குமார். அவர் தஞ்சை விவசாயிகளின் துயர நிலையைக் கூறுகையில்,

“உனக்கும் எனக்கும் வேண்டுமானால்

தாஜ்மகால் எட்டாவது அதிசயமாக

இருக்கலாம். ஆனால் தஞ்சை விவசாயிக்குத்

தண்ணீர்தான் எட்டாவது அதிசயம்”. 15

என்று காவிரியின் வறட்சியின் உண்மை நிகழ்வினை எடுத்துக் கூறியுள்ளார்.

வளமான வாழ்க்கை மக்கள் சீரழிந்துகொண்டே போகின்ற நிலையினைக் கவிஞர் யுகபாரதி கூறுகையில்,

“காவிரிப் பாசனம் கரை புரண்டோட

வருஷம் முழுக்க வற்றாத வாழ்க்கை

.................................................

இஷ்டத்துக்கு இறைத்த கேணி ஊற்றுக்கண் அடைபட

சோறுடைத்த சோழ வளநாடு சோத்துக்கில்லாமல்

பக்கத்தூர் பனியன் கம்பெனிகளில்...”16

என்று துயரநிலையை எடுத்துக் கூறியுள்ளார்.

பொய்யாது ஓடி வந்து வளம் கொடுத்து வந்த காவிரி ஆங்காங்கே விலங்கு போட்ட பிறகு அதன் பொலிவும் பலனும் குறைந்துகொண்டே வருகிறது. தருணத்தில் தண்ணீர் இன்றி அணை திறக்காததால் காவிரி வறண்டு காணப்படுகிறது. இதனால் மக்கள் அடையும் துயரம் சொல்ல முடியாத அளவுக்கு வந்துவிட்டது. கவிஞர்கள் காவிரியின் வளம் மற்றும் வறட்சி இவற்றை மையப் படுத்திக் கவிதைகள் பல இயற்றிய நிலையினை மேற்கூறப் பட்ட செய்தியின் வாயிலாக அறியலாம்.

Pin It