அனைவரும் திரும்பத் திரும்ப கேட்டார்கள்-... திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள்... தி.மு.க. அதனைச் செய்தது... காவிரி பிரச்சினை தொடர்பாக, கடந்த 25ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது...ஓர் அரசு செய்யவேண்டியதை, பொறுப்பான எதிர்க்கட்சி என்ற வகையில், விவசாயிகளின் நலன் கருதி திமுக அதைச் செய்துள்ளது..,

திமுக பொருளாளரும், தமிழகச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அனைத்து விவசாய அமைப்புகளும், பல அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டன. கூட்டத்தின் தொடக்கத்தில் வரவேற்புரையாற்றிய மு.க-.ஸ்டாலின், “இதைச் செய்ய யாரும் முன்வராத காரணத்தால், வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பை, அதன் மூலமாகக் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திட வேண்டிய கட்டாயத்தை & கடமையாகக் கருதி நாங்களே மேற்கொண்டிருக்கிறோம்” என்று விளக்கினார். அரண்மனையில் மன்னர் இல்லை, மந்திரிகளும் இருந்தும் இல்லாத நிலை என்றால், மக்களைக்யும் நாட்டையும் காக்க தளபதிதானே களமிறங்க வேண்டும்...களமிறங்கி கட்சிகளைப் பக்குவமாய் ஓருங்கிணைத்து, தமிழகத்தின், தமிழக மக்களின் உரிமைகளைக் காக்கப் போராடி வருகிறார்...தளபதி மு.க.ஸ்டாலின்..

முறைப்படி அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. அக்கூட்டத்தில், தமிழ்மாநிலக் காங்கிரஸ் கட்சி சார்பாக, அதன் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டது உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும்... தி.மு.க.வோடு காங்கிரஸ் இருக்கிறதே என்பதற்காகப் புறக்கணிக்காமல், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கான, தமிழகத்தின் பொதுப்பிரச்சினைக்கான முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு பங்கேற்றுள்ளார்... ஏறத்தாழ இதே நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இருந்திருக்கிறது என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.

காவிரிக்காகக் கூட்டப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தங்களுடைய கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தனித்தனியாகச் சந்தித்து விளக்கினார். இதை அரசியலோடு முடிச்சுப் போட வேண்டியதில்லை என்று எடுத்துச் சொன்னபோதும், அதையே காரணம் காட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அவர்களும் புறக்கணித்து, விடுதலைச் சிறுத்தைகளும் தவிர்க்கும்படிச் செய்துவிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன், ஈழ ஆதரவு கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கலாம் என்றொரு கோரிக்கையை வி-.சி.க.,தலைவர் திருமாவளவன் முன்வைத்தார். அதற்காக ம.தி.மு.க., சி.பி-.ஐ., சி.பி.எம்., தலைவர்களிடம் எவ்வளவோ எடுத்துரைத்தார். அப்போதும் அவருடைய நியாயமான நிலைப்பாட்டை அவர்கள் புறக்கணித்தனர். அவர்களைப் பொறுத்தவரை, ஈழப்பிரச்சினையானாலும், காவிரிப்பிரச்சினையானாலும் ‘திமுக & கலைஞர்’ எதிர்ப்பு அரசியல் மட்டுமே முக்கியம். இதை உணர்ந்து கொண்டதால், வி.சி.க., தி.மு.க & வுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது. இப்போதும் அரசியலைக் கடந்து, மாநில உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கட்சி திமுக என்ற அடிப்படையைப் புரிந்து கொண்டுள்ள வி.சி.க., தலைவர் திருமாவளவன், அனைத்துக்கட்சிக் கூட்டத்தை வரவேற்றும், கலந்து கொள்ள இயலாத நிலையை விளக்கியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினார். பின்னர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்பதாகத் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தார். அதற்-கு நன்றி தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க-.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில், “தங்களின் உள்ள நிலை & உண்மை நிலையைப் புரிந்து கொண்டேன். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவதை வரவேற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆலை வாய்ப்பட்ட கரும்பின் நிலையில் உள்ளதை விளக்கியும், தங்களுடைய உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடந்து கொண்ட விதம் நெஞ்சாரப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழர்களின் வாழ்வாதாரச் சிக்கலை, ஓட்டு அரசியலோடு ஒட்டுப்போடக்கூடாது என்கிற புரிதலோடு, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், வி.சி.க., தலைவரும் செயல்பட்டுள்ளனர்-.ஆனால் அவர்களுக்கு முன்னதாகவே அரசியலில் குதித்ததாக முன்னுரிமை கோருபவர்களோ, அதற்குரிய பக்குவத்தையோ, அரசியல் பண்பாட்டையோ இதுவரை பெற்றதாகவும் கற்றதாகவும் தெரியவில்லை. இனிவரும் காலங்களிலும் நம்புவதற்கில்லை.

“சொல்றதுக்கு ஒன்னுமே இல்லைன்னா, உங்க ஆத்தா ஓட்டு வீட்டுலதான புள்ள பெத்தானு சொல்லுவான்” என்று கிராமங்களில் ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோல, திமுக எதைச் செய்தாலும், விமர்சிக்க வேண்டும், குறை சொல்ல வேண்டும் என்பதைச் சில கட்சிகளும், பல ஊடகங்களும் தங்களின் அடிப்படைத் தர்மமாகக் கொண்டுள்ளன. இப்போதும் அவ்வண்ணமே கோரும் (ஆளும் அதிமுக கோரும்) கடமையை அவைகள் செவ்வனே ஆற்றி முடித்தன.

காவிரிச்சிக்கலில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் ஸ்டாலின் என்றார், காவிரியை அரசியலாக மட்டுமே கையாண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டு, கர்நாடகத்தில் தேர்தல் வரப்போகிறது என்றவுடன், அந்தர் பல்டி அடித்துவிட்டார் கதையைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார் போலும் தமிழிசை. ஒருபோதும் தேர்தல் மூலம் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற நூற்றாண்டு உண்மையை உணர்ந்து கொண்டதால்தான் இப்படிப்பட்ட பேச்சுகள் என்பதை எல்லோரும் அறிவர்.

அனைவரும் கொடுத்த அழுத்தத்தினால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரின் துறைகளை கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவரைச் செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பைக் கையிலெடுத்து, நல்லதொரு எதிர்க்கட்சியின் இலக்கணத்தோடு அழுத்தத்திற்கு மேல் அழுத்தமாகக் கொடுத்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மான நகலை பொறுப்பு முதல்வரான பன்னீர்ச்செல்வத்தின் அலுவலகத்தில் கொடுத்த கையோடு, சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு சட்டமன்றத் தலைவர் தனபாலுக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார். மறுத்தால், சட்டமன்றத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில், காவிரிச்சிக்கலில் திமுக துரோகம் செய்து விட்டது என்ற வழக்கமான கூக்குரல்கள் வேறு. திமுக தலைவர் கலைஞர் சொல்லியிருப்பதைப் போல, காவிரிச் சிக்கலுக்காக மட்டுமில்லை. தமிழகத்தின் உரிமை சார்ந்த எந்தச் சிக்கலிலும், ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடாதவர்கள் போடும் வெற்றுக்கூச்சல்தான் என்றாலும், ஊதிப்பெருக்கி ஊடகங்கள் காட்டும் இதுபோன்ற உண்மைக்கு மாறான செய்திகளை நம்பும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உண்மை வரலாற்றை நினைவூட்டுவதற்காகத் தி.மு.க. தலைவர் கலைஞர் ஓர் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.

காவிரி ஒப்பந்தம் பிறந்த ஆண்டு பிறந்தவன் தான் என்பதைச் சொல்லி, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட திமுக எடுத்துக் கொண்ட முயற்சிகளைக் கால வரிசையில் பட்டியலிட்டுக் கூறியுள்ளார். இன்றைக்கு காவிரியை முன்வைத்து, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதும், அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டபோதும் அதிமுக தலைமையிலான தமிழக அரசு சிறு எதிர்ப்பைக் கூடக் காட்டவில்லை. காவிரி டெல்டாவைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களிலும் பயிர்கள் கருகிக் கொண்டிருப்பதையும், விவசாயிகள் வாழ்வா சாவா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு போராடியும், தனக்கேயுரிய ஆணவப்போக்கினால், கடைசி வரை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அதிமுக தலைமை முன்வரவில்லை. மத்திய அரசு கூட்டியுள்ள காவிரிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பதைக்கூட, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்த அரசு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு என்பதை தலைவர் கலைஞர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

1968இல் ஒப்பந்தத்தை மீறி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளைக் கர்நாடகம் கட்டியபோது, அன்றைய தமிழக முதல்வர் அண்ணா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததில் தொடங்கி, 1970இல் கலைஞர் முதல்வராகப் பேச்சுவார்தையில் கலந்து கொண்டது, 1971, ஜூலை 8இல் நடுவர் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியது, அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது என, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட திமுக எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளையும் கலைஞர் விளக்கியுள்ளார். 72இல் வழக்கைத் தற்காலிகமாக திரும்பப் பெற்றது ஏன் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார். அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆளும் ஒரு மாநில அரசு. அண்டை மாநிலங்களோடு சுமுகமான உறவைப் பேணுவதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டோ அவற்றை முன்னெடுப்பது என்பது, ஜனநாயக ஆட்சிக்கான இலக்கணத்தின் ஒரு பகுதி. அந்த அடிப்படையில்தான். பல மாதங்கள் போராடிய பிறகு, வேறு வழியே இல்லை என்ற நிலையில் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது.

ஆனால், தமிழகத்தின், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார சிக்கலான காவிரிச் சிக்கலில் இறுக்கமாக வாயை மூடிக்கொண்டுவிட்ட, அதிமுக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் கேள்வி கேட்கவோ, விமர்சிக்கவோ துணிச்சல் இல்லாத அரசியல் புலிகளும், தமிழ்த்தேசியப் போராளிகளும், அறிவாலயத்தை நோக்கிக் கணைகளைத் தொடுக்கின்றனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தவர்கள், தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக கர்நாடகத்திற்குத் துணைபோகிறார்கள். திராவிட எதிர்ப்பு இறுதியில் பார்ப்பனிய ஆதரவில் முடிவதைப்போல!

Pin It