தமிழில் ஒரு சொல்லானது காலந்தோறும் வெவ்வேறு பொருளில் வழங்கி வந்துள்ளது. ‘மட்டம்’ என்ற சொல் இன்றும் மக்கள் வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது, ‘மட்டமான’ என்ற ‘ஆன’ உருபுடன் சேர்ந்து ‘மட்டமான ஆளு, மட்டமான மனுஷன், மட்டமான ஆம்பள, மட்டமான பொம்பள, மட்டமான சரக்கு, மட்டமான பொருள்’ இப்படி எண்ணற்ற சொற்களுடன் பயன்பாட்டில் உள்ளது. எந்தவொரு சொல்லும் காலத்திற்குத் தகுந்தாற் போன்று வழங்கப்படுகிறது.
‘மட்டமான’ என்ற இச்சொல் தரக்குறைவான, சரியில்லாத, ஒழுக்கமில்லாத என்பன போன்று பொருளில் இன்றைய நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. என்றாலும் சங்க இலக்கியத்தில், மட்டம் என்ற சொல், கள்/மது என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. அதாவது, மட்டம் என்பது ‘கள்’ என்ற போதைப் பொருளை உணர்த்துகிறது. சங்க கால மனிதர்கள் நீல நிறம் உடைய கள்ளை மட்டம் என்றே அழைத்தனர். இச்சொல்லானது இன்றும் மக்கள் வழக்கில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இன்று மது அருந்துவோருக்கு இடையே, தரமற்ற / விலைக் குறைவான மதுவை குறிப்பதற்கு ‘மட்டமான சரக்கு’ என்று அழைக்கின்றனர். அதேபோல், கள் மட்டுமின்றி ‘தேன்’, ‘கள் இருக்கும் குடம்’ போன்ற பொருள்களிலும் சங்க இலக்கியப் பாடல்களில் இச்சொல் கையாளப்பட்டுள்ளது.
மட்டம்
சங்க இலக்கியத்தில் மட்டம் என்ற சொல் நேரடியாக இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று குறுந்தொகை – 193ஆவது பாடல், இரண்டாவது பதிற்றுப்பத்து – 42 ஆவது பாடலாகும். மற்ற சிலவிடங்களில் மட்டம் என்பதன் அடிச்சொல்லான ‘மட்டு’, என்பதே ஆளப்பட்டுள்ளது. மட்டு என்பது ‘அம்’ என்ற சாரியைப் பெற்று மட்டம் என்றே புணர்கிறது.
“மட்டம் பெய்த மணிகலத்து தன்ன
இட்டுவாய் சுனைய பகுவாய்த் தேரை” (குறுந்.193)
மேற்கண்ட குறுந்தொகைப் பாடலில், “கள்ளைப் பெய்த நீலமணியைப் போன்ற நிறமுடைய கலத்தைப் போல” (ப. 445) என்று உரையாசிரியர்கள் பொருளுரைக்கின்றனர். மணிக்கலம் என்பதற்கு “நீல நிறமுடைய கள்ளைக் கொண்டிருக்கும் கலம்” (ப. 446) என்பர். சுனையின் சிறிய வாய்ப்பகுதியானது கள் ஊற்றி வைக்கப்பட்ட கலத்திற்கு ஒப்புமையாகக் கூறப்படுகிறது. இப்பாடலில், மட்டம் என்பதற்கு ‘கள்’ என்றே பொருள் தருகின்றனர்.
பதிற்றுப்பத்து என்ற சங்க நூலில், மட்டம் என்ற சொல் கள் என்று வழங்கப்படுகிறது. அதோடு, கள் இருக்கும் பாத்திரம் / கலம் எப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதனை அழகுற விளக்குகிறது. அப்பாடல் பின்வருமாறு;
“இஞ்சி வீ விராய பைந்தார் பூட்டி
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை
தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து” (பதி. 42)
“இஞ்சினையும் பூவினையும் கலந்து தொடுத்த வாடாத மாலையைப் பூட்டி, சந்தனத்தை வெளிப்புறத்தே பூசிய கட்குடங்கள் அலைகின்ற இருப்பிடங்களில் உள்ள இனிய சுவை முதிர்ந்த நீலமணியின் நிறத்தையுடைய கள்ளைத் தனக்கென்று எதனையும் பாதுகாவாத ஈகையால் நீ வளவிய மகிழ்ச்சியை வீரர்களுக்கு அளிக்கின்றாய்.” (ப.133) இப்படியாக, அன்றைய தமிழ்ச் சமூகத்தில் கள் குடத்தை அலங்கரித்துள்ளனர் என்றால் அதற்குரிய முக்கியத்துவத்தை உணரலாம்.
இஞ்சியும் பூக்களும் அழகியலோடு மட்டும் நில்லாது, கள்ளுக்கான சுவையோடு மூக்கின் நுகர்வுக்கான ஒரு பொருளாகவும் பயன்பட்டிருக்கலாம். இது இன்றும் மது அருந்துவோர் சிலர் சில பொருட்கள் நுகர்ந்த பின்பே மது அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளதை ஒப்பிட்டு நோக்கலாம். கள் குடம் வைக்கப்படும் இடத்தினை, ‘தசும்பு துளங்கு இருக்கை’ என்ற பெயரில் அழைத்துள்ளனர். அரசனின் ஈகைப் பண்பில், வீரர்களுக்கும் தன்னை நாடி வந்தோர்க்கும் கள் வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளான் என்பதை அறிய முடிகிறது.
“நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்” (புறம். 120)
“நிலத்தில் புதைக்கப்பட்டு முற்றிய கள்” என்று பொருள். கள் என்பது நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட பிறகு அருந்தி உள்ளனர் என்பதனை அறியலாம். அதோடு, அவை சுவை மிகுந்தும் அதிகமான போதையையும் தந்துள்ளது. இன்றும் மதுவினை (சாராயத்தை) ‘ஊறல்’ என்ற பெயரில் வழங்குகின்றனர். அதாவது இயற்கையாக கிடைக்கக் கூடிய பழங்கள், காய்கள், இலைகள், தழைகள், பட்டைகள் கொண்டு இந்த தேறல் என்பது தயாரிக்கப்படுகின்றது. சங்க இலக்கியத்தில், ‘தேறல்’ என்பது இன்றைய ஊறலாக இருக்க வேண்டும்.
மலையில் வாழ்பவர்களுக்குப் பனை, ஈச்சம், தென்னை மரங்கள் அதிகளவில் இருந்திருக்கவில்லை. ஆனால், இயற்கைப் பொருட்களான காய்கள், இலைகள், தழைகள், பட்டைகள் கிடைப்பது எளிது. அப்படியாயின், அவர்கள் இந்தத் தேறல் வகை மதுவினையே பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம்.
“துணை புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கி துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்” (பட்டி. 106-108)
“கள் உண்டலைக் கைவிட்டு இனிய காம பானத்தை விரும்பி உண்பர்” (ப. 333) பட்டினப்பாலை பாடலில் கள் என்கிற பொருளிலேயே மட்டு என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. அதாவது, மதுவினைத் துறந்து, காம இன்பத்தைத் தேடினர் என்று பொருளுரைக்கின்றனர். ஆண்கள், பெண்கள் இருவரும் மது அருந்தினர். அந்தப் போதையின் மகிழ்வில் இருவரும் கூடி களித்திருந்து இரவின் முடிவுப் பொழுதில் உறங்கச் சென்றனர் என்பதையும் இப்பாடல் புலப்படுத்துகிறது.
“கட்டுவட கழலினர் மட்டு மாலையர்” (பரி. 12)
“கட்டுவடத்தோடு கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும்” (ப.371) மேற்குறிப்பிட்ட பரிபாடலில் தேன் சொறிந்துள்ள பூக்களைச் சூடிய பெண்கள் என்ற பொருளில் மட்டு என்பது ஆளப்பட்டுள்ளது. இப்படி வழக்கமான கள் என்ற பொருளில்லாமல் தேன் என்ற வேறொரு பொருளைக் குறிக்க மட்டு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
“மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்” (புறம். 113)
இப்பாடலில் மட்டு என்பது கள் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. கள் இருந்த சாடியின் வாய்ப்பகுதி திறந்து கள்ளைப் பருகியும் கறிச்சோறினையும் உண்டும் மகிழ்ந்திருந்தனர் என்பதனை இப்பாடல் உணர்த்துகிறது.
அதாவது, கள் நீல நிறமுடையாதாக இருந்ததா? அல்லது கள் இருக்கும் கலம் (பாத்திரம்) நீல நிறமுடையதாக இருந்ததா? என்ற வினா எழுகிறது. ஒருவேளை நீல நிறமுடைய பாத்திரத்தில் இருக்கும் கள் பார்ப்பதற்கு நீல வண்ணமாக காட்சியளித்திருக்கலாம். பனம் கள், ஈச்சம் கள், தென்னம் கள் போன்ற எதுவாயினும் இன்றுவரை வெண்மை நிறமுடையதாகவே இருக்கிறது. அப்படியிருக்கையில் கள் நீல நிறமுடைய பாத்திரத்தில் இருந்திருக்கலாம் என்றாலும் ஒரு பாட்டில் இஞ்சியும் பூவும் சூட்டியிருந்து வெளிப்புறத்தில் சந்தனம் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்தது என்ற குறிப்பால் அது நீல நிறமுடைய பாத்திரம் இல்லை என்பது புலனாகிறது. அதே சமயத்தில், மண்பானை பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பின் கள் நீல நிறம் கொண்டதாகவே இருக்க வேண்டும். அது நீண்ட நெடிய நாட்கள் பாதுகாக்கப்பட்டிருந்த கள் நீலம் நிறம் கொண்டதாக மாறியிருக்கலாம். வெண்மையான கள் நீலம் நிறமாக மாறிய பின், அதிகளவு போதையை அளிக்கக் கூடியதாக இருந்திருக்கலாம்.
இன்றும் மக்கள் வழக்கில், ‘மட்டி’ என்ற சொல் வழங்கப்படுகிறது. இச்சொல் மட்டம் என்ற சொல்லுக்கு அடிச்சொல்லாக அமைகிறது. மட்டி என்றால் கள் என்று பொருளாகிறது. அதுவும் எஞ்சிய / மீந்துபோன, பாத்திரத்தில் அடிநிலையில் இருக்கும் கள்ளை, ‘மட்டி’ என்று அழைக்கின்றனர். அடிநிலையில் தங்கியிருக்கும் பொருட்களையும் மட்டி என்றழைக்கின்றனர். அது, மட்டி குழம்பு, மட்டி சாம்பர், மட்டி சோறு என்பதாகும். அடிநிலையில் சுண்டிப் போன, மீந்துப் போன உணவுகளே அவ்வாறு அழைக்கப்படுகிறது.
தமிழகக் கட்டிடத் தொழிலில் மட்டம் என்ற சொல் அதிகப் பயன்பாடு உடையது. தற்பொழுது, இச்சொல் சமம் என்ற பொருளில் வழங்குகிறது. ‘மட்டமாக இருக்கிறதா’; ‘மட்டமாக போடு’, ‘மட்டம் பாரு’, என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அவர்களின் பயன்பாட்டுப் பொருளில் ஒன்று, ‘மட்டக்கோல்’. இது செங்கல் ஒழுங்குபடுத்துவதற்குக் கையாளப்படுகிறது. சங்க இலக்கியம் தொட்டு இன்றுவரை மட்டம் என்ற சொல் மருவி வெவ்வேறு பொருளில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகப் பார்ப்பனர்களுடைய பேச்சு வழக்கில், மண்டு என்ற சொல் அறிவில்லாதார், அடிநிலைச் சிந்தனையுடையவர், என்ற பொருளில் வழங்குகிறது. இச்சொல்லின் தொடர்ச்சியாக, மட்டு, மட்டி, என்பதே மருவி, ‘மக்கு’ என்றாயிருக்கலாம். இன்றைய நிலையில் ‘மண்டி’ என்ற சொல்லும் பொருட்களைத் தேக்கி வைக்கும் (குடோன்) இடத்திற்கு வழங்கப்படுகிறது சான்றாக பழ மண்டி, நெல் மண்டி. மேற்குறிப்பிட்டுள்ள இச்சொற்கள் எல்லாம் ஒரு வேரடிக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இது விரிவான ஆய்வுக்குரியது.
ஆக, மட்டு, மட்டம் போன்ற சொற்கள் சங்க காலத்தில் கள் என்பதனை நேரடியாக குறித்தது என்பதனையும் இன்றைய சமகாலச் சூழலில் அது தரமற்ற, எஞ்சிய, மீதமான என்ற பொருளைக் குறிக்கின்றது. அதாவது, உயர்பொருட்பேறு என்ற நிலையில் வழங்கி, அச்சொல் இன்று இழிபொருட்பேறாக வழங்கப்படுகிறது. காலம் மாறி வந்தாலும் சொற்கள் இன்றும் மக்களின் பயன்பாட்டில் இருப்பது அச்சொல்லுக்கான உயிர்ப்பைக் காட்டுகிறது. சங்கப் பனுவல்களில் பரிபாடல் தவிர்த்து மற்ற நூல்கள் அனைத்தும் மட்டம், மட்டு போன்ற சொற்களுக்குக் கள் என்ற போதைப் பொருளையே உரைக்கிறது. பரிபாடல் மட்டும் தேன் என்ற பொருளைக் குறிக்கிறது. இன்னும் ஆழ்ந்து நோக்கினால், பல்வேறு பொருட்களுக்கும் பண்பாட்டுக் குறிப்புகள் புலப்படும் என்பது நிதர்சனம்.
பயன்பட்ட நூல்கள்
- முனைவர் வீ. நாகராசன் (உ.ஆ.), குறுந்தொகை (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, 2014.
- முனைவர் அ. ஆலிஸ் (உ.ஆ.), பதிற்றுப்பத்து, (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, 2014.
- முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், உட்பட (உ.ஆ.), புறநானூறு, (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, 2014.
- முனைவர் பெ. சுப்பிரமணியன் உட்பட (உ.ஆ.), பரிபாடல், (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, 2014.
- முனைவர் வி. நாகராசன் (உ.ஆ.), பத்துப்பட்டு – 2; பட்டினப்பாலை, (மூலமும் உரையும்), நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை, 2014.
- முனைவர் ஜெ.மதிவேந்தன், கெளரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி, செய்யாறு – 604 407. திருவண்ணாமலை மாவட்டம்