குத்தூசி குருசாமி
 குடும்பத்தின் மேல்பற்று
பத்தாயி ரம்பொன்னும்
 பார்வைக்கு வந்தாலும்
 பணியா வீரர்!
சொத்தாக அவர் ஏதும்
 சுருட்டாமல் சுரண்டாமல்
 தொண்டு செய்தார்!
முத்தான பெரியாரின்
 முடிவுகளை அவர் ஏற்று
 முழக்கம் இட்டார்!
இருளான அறியாமை
 இனிவாராப் பகுத்தறிவால்
திருநாடு செழிக்கின்ற
 சீர்திருத்த வேந்தரெனச்
 சிறந்து வாழ்ந்தார்
தெருவோடு போவோரும்
 சிந்தித்தார்! தெளிவுபெற்றார்!
 சீர்மை கொண்டார்!
ஒருகோடிப் பாடல் நான்
 ஒருநாளில் புனைந்தாலும்
 ஒப்பா காதே!
தன்மானம் மிகவுடையார்!
 தடைமூட நம்பிக்கை
 தகர்த்து வந்தார்!
பெண்மானம் காத்திட்டார்
 பேசாத கடவுளரைப்
 பேசி வந்தார்!
கண்காது பெற்றவர்க்குக்
 கண்திறந்தும் செவிதிறந்தும்
 கடமை செய்தார்!
மண்வானம் வாழ்த்துகிற
 மாசற்றார் மாப்புகழே
 வாழ்க! வாழ்க!

– ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

Pin It