ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என உயிர் இரக்கக் கோட்பாட்டினை சீவகாருண்ய ஒழுக்கம் என்று காட்டிய வள்ளலார் இராமலிங்கர் 5.10.1823 ஞாயிற்றுக்கிழமை அன்று பழுத்த இராகு காலத்தில் பிறந்தார். அவரது 51 ஆண்டு கால வாழ்க்கையில் 35 ஆண்டுகள் சென்னையிலும், 16 ஆண்டுகள் பார்வதிபுரம் என்னும் வடலூரிலும் கழிந்தன. வடலூரில் வாழ்ந்த காலம் அவரிடம் சன்மார்க்கம் என்னும் பொதுநெறி முகிழ்ந்த காலம்.

கடவுள் ஒருவரே, அவருக்கு உருவமில்லை, அவர் ஒளிவடிவினர். அவரை அடைய உயிர் இரக்கம் ஒன்றேவழி என்பதனை, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று விளக்கினார். இக்கொள்கையை விளக்கச் சங்கம் (1865), சாலை (1867), சபை (1872) ஆகிய மூன்றையும் உருவாக்கினார்.

சன்மார்க்கக் கொள்கைக்குத் தடையாக இருப்பவை சாதி, மதம், சமயம் சமயச் சடங்குகள் என்று அவற்றை விட்டுவிடச் சொன்னார். அன்றியும் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் ஆகியவை கடவுள் நெறியைக் காட்டாதவை. அவற்றைக் கற்பதில் காலத்தை வீணாக்க வேண்டாம் என்றார். கொலை, புலை தவிர்த்துப் பசி போக்குதலையே முக்கியமாக வலியுறுத்தினர். அடிகளாரின் சன்மார்க்க நெறி வேகமாகப் பரவியது.

மறைமலை அடிகளார், திரு.வி.க., தந்தை பெரியார், கோவை அய்யாமுத்து, குத்தூசி குருசாமி, சாமி சிதம்பரனார், பாவேந்தர் தந்தை கனகசபை முதலிய பெரியோர்கள் சன்மாக்கப் புதுநெறியைப் பின்பற்றியவர்களே! தந்தை பெரியார் தம் குடியரசு இதழில் திருவருட்பா பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டார். சாமி சிதம்பரனாரைக் கொண்டு தெரிந்தெடுத்த நூறு பாடல்களைத் தனி நூலாக அச்சிட்டு மலிவு விøயில் மக்களிடம் கொண்டு சேர்த்தார் பெரியார்.

எந்தவொரு சீர்திருத்த இயக்கத்திலும் பார்ப்பனர்கள் நுழைந்து அதனை வீழ்த்திவிடுவர். அந்தச் சூழ்ச்சிக்கு வள்ளலார் இராமலிங்கரும் விலக்கல்ல. சிதம்பரத்துக்கு அடுத்த ஒரு குக்கிராமத்தில் அய்யனார் கோயிலில் பூசாரியாக இருந்த ஆடூர் சபாபதி குருக்கள் வள்ளலாரை அடைந்து தன் ஆசா பாசங்களை விடுத்து, ஆசாரங்களை விட்டுப் பூணுலையும் அறுத்து வந்துவிட்டதாகக் கூறினார். அடிகளார் இவருக்குச் சித்தி வளாகத்தில் (மேட்டுக்கும்பத்தில்) சில பொறுப்புகளை வழங்கினார். சில நாட்களிலேயே தம் கொள்கைக்கு எதிராகச் செயல்பட்ட சபாபதியைக் கண்டித்து, "நூல் எனிலோ கோல் சாயும்' என்று கூறினார். அன்றியும் இனி இவர் அங்கிருக்கக் கூடாது என விரட்டிவிட்டார். சில நாட்களில் அடிகளார் சித்திவளாகத்து இல்லத்தில் உட்சென்று தாழிட்டுக் கொண்டார். இதன்பின்னர் இவர் மூன்றாம் நாள் திரும்பி வந்து தான்தான் அடிகளாருடன் இருந்ததாகப் பொய்கூறினார்.

வள்ளலார் ஞானசபையைப் பூட்டித் திறவுகோலை வைத்திருந்தார். சுமார் 4 ஆண்டுகள் பூட்டப்பட்டிருந்தது. சன்மார்க்க அன்பர்கள் முயற்சியால் அடிகளார் மறைந்த பின் திறக்கப்பட்டது. வழிபாட்டுக் குழுவில் சபாபதி குருக்களும் ஒருவர். பின்னர் முறைப்படி அடிகளாரின் தெய்வநிலையங்கள் வேட்டவலம் ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார் பெயருக்குப் பட்டா மாற்றப்பட்டது. அவர் 5.3.1883 இல் இறந்தார். பின்னர் அவரது தம்பி சர்க்கரய்யா பண்டாரியாருக்கு மாற்றப்பட்டது.

6 ஆண்டுகளுக்குப்பின் எவருக்கும் தெரியாமல் 19.8.1889 இல் அவர் சபாபதி குருக்களுக்கு டிரஸ்டி உரிமையை வழங்கினார். இது சன்மார்க்க அன்பர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இது குறித்து அன்பர்கள் ஜமீன்தாரிடம் கேட்டபொழுது.

"என்னை மயக்கி'க் கையெழுத்து வாங்கிக் கொண்டு போய் விட்டார். மயக்கும் தன்மையில் ஆயிரம் தாசியானாலும் அவருக்கு ஒப்பாக மாட்டார்கள்' – என்றார்.

அதிகாரம் சபாபதி குருக்கள், பின்னர் மருமகன் பஞ்சாபகேசன், பின்னர் மகன் நடேசவாச்சாரி, பின்னர் பெயரன் சுப்பிரமணியன், பின்னர் கொள்ளுப் பெயரன் சித்தபேசன் என்று வழிவழி தனிச் சொத்தாக மாறியது. அண்மைக்காலத்தில் இதனை மீட்க மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. எல்லாம் ஒரு நூலை அனுமதித்ததால் ஏற்பட்ட வினை. அடிகளார் கண்டு, உணர்ந்து சொன்னது தான் இந்த "நூல் எனிலோ கோல்சாயும்' என்ற தொடர்.

இன்றும் தமிழ்ச்சங்கங்கள் சில விளம்பர வேட்கை காரணமாக தினமணி வைத்திய நாத அய்யரை நம்பிப் பின் செல்கின்றனர். சில தமிழ்த்தேசிய அமைப்புகள் பார்ப்பனரின் பதுங்குகுழிகளாகப் பயன்படுகின்றன.

வள்ளலாரின் இக்கூற்று சன்மார்க்க சங்கங்களுக்கு மட்டுமல்ல. தமிழர்கள் அனைவருக்கும் எக்காலத்துக்கும் ஒரு நல்ல பாடமாக அமையவேண்டும்.

Pin It