சொல்வேறு செயல்வேறு அறியார் – எம்
தூயவர் குத்தூசி குருசாமிப் பெரியார்
கல்போலும் உறுதியில் மலையார்–துயர்
கடல்போலும் வந்தாலும் தன்மானம் குலையார்

ஈரோட்டுக் கிழவரின் வாள்தான்–கண்முன்
எதிர்ப்படும் எதிரிகள் எவருமே தூள்தான்
கூர்ஈட்டி இவர் எழுது கோல்தான்–சிக்கிக்
கொள்ளுமே பார்ப்பனக் குரங்குகள் வால்தான்

குத்தூசி என்கின்ற ஏடு–மேற்
கொண்டிட்ட பணிகட்கு ஏதுஒப் பீடு
முத்திரை எழுத்துக்கள் கொண்டு–அது
மூடத் தனம்வீழச் செய்தது தொண்டு

சாதி யொழியப்பொரு பாதி–பின்னர்ச்
சமதர்மப் பாதை சமைப்பது மீதி
ஈதெம(து) உயிர்எனத் தாங்கி–அந்த
ஏடு இம்மண்ணில் செழித்தது ஓங்கி

குஞ்சிதம் குருசாமி போலே – வேறு
கொள்கைத் துணைவர்கள் யார்புவி மேலே
நெஞ்சிலும் செயலிலும் தூய்மை – இவர்
நேரிய வாழ்வில் கைக் கொண்டதோ வாய்மை

பாவேந்தர் பாட்டுக்கள் தம்மை – நூலாய்ப்
பதிப்பித்த முதற்பெரும் பண்பினர் இவரே
சாவேந்தும் காலத்தின் மட்டும் – கொண்ட
தன்மானம் குலையாமல் வாழ்ந்தவர் எவரே?

வாழ்ந்திடின் இவர்போல வாழ்வோம் – இவர்
வாழ்வு நெறிதந்த இன்பத்தில் ஆழ்வோம்
சூழ்ந்திங்கு வையகம் வாழ்க – இந்தத்
துணைவர்கள் பெயர் மண்ணில் பல்லாண்டு வாழ்க!

- கவிஞர். தமிழேந்தி

Pin It