இந்து மதம் என்பது ஒரு இனத்தின் நலனைக் காத்து மற்ற இனங்களை அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்க உருவாக்கப்பட்டதாகும். இன்னும் சொல்ல வேண்டுமானால், பிறப்பால் ஒருவன் உயர்ந்தவன் மற்றொருவன் தாழ்ந்தவன் என மனிதர்களைக் கூறுபோட உருவாக்கப்பட்ட ஒரே மதம் இந்து மதமே.

ambedkar_305இந்திய நாட்டில் "மநு' என்கிற ஆரியப் பார்ப்பனனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதே இந்து மதம். “இந்து மதம்' என்பது ஒரு மதமே அல்ல. அது ஒரு சட்டவிதிகளே, சட்டத்திற்கு மதம் என்று தவறாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது'' என்றார் அம்பேத்கர்.

மதம் என்ன செய்தது? மதம் மூடநம்பிக்கைகளை வளர்த்தது. மதம் மனிதர்களிடையே சாதியை நிலைநாட்டியது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு நான்கு வர்ணங்களைத் தோற்றுவித்து இன்று நாலாயிரம் சாதிகளாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு சாதியும் தனக்குக் கீழ் ஒரு சாதி இருப்பதாகக் கருதித் தன்னை உயர்ந்த சாதி பெருமிதம் கொண்டு பெரும்பான்மையாக உள்ள ஒரு சாதி, சிறுபான்மையாக உள்ள ஒரு சாதியை அவமதித்துத் துன்புறுத்தி அடித்து நொறுருக்கி வேடிக்கை பார்க்கிறது.

படித்துப் பட்டம் பெற்று, பணியில் சேர்ந்து உழைத்துப் பொருள் ஈட்டத் தகுதி இல்லாமல், தமக்குத் தெரிந்த தாய் மொழியான சமஸ்கிருத மொழியில் கடவுள்களோடு கதைப்பதாகக் கதைக்கட்டிக் காசு பறிக்கும் கயவர்கள் முன் "சாமி' என வெட்கங்கெட்டுக் குரல் கொடுத்து கைகட்டி வாய்மூடி, தலை குனிந்து, தட்சணை கொடுத்து, காலங்காலமாய்த் தன்னைச் சூத்திரன் (தேவடியாள் மகன்) என்று அழைப்பவனிடம் மண்டியிடவைத்து வேடிக்கைப் பார்ப்பதும் இந்து மதமே.

ஒரு குலத்திற்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மமே, ஆரியர் அல்லாத மக்களைப் பல துன்பங்களுக்குள்ளாக்கியது எதிர்த்தவர்களைக் கொன்று குவித்தது அரசர்கள் ஆரியர்கள் சொல்வதே வேதவாக்கு என அவர்களைத் தலைமேல் தூக்கி வைத்து ஆடினர். பார்ப்பனியம் தலைவிரித்தாடியது, மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கினர். அரசர்களோ புரோகிதர்களின் பொய்யுரையில் மதிமயங்கிக் கிடந்தனர்.

இந்நிலையில் கி.மு. 563 ஆம் ஆண்டில் புத்தர் தோன்றினார். நாட்டையும், மக்களையும் புரோகிதக் கூட்டத்திலிருந்து விடுவித்தார். பார்ப்பனியம் தன் வாலைச் சுருட்டிக்கொண்டது. அரசர்கள் பவுத்தத்தைப் பின்பற்றினர். மக்கள் சமத்துவத்தைக் கண்டனர். மாமன்னர் அசோகர் ஆட்சியில் புத்தமதம் புத்துயிர் பெற்றது. இந்தியா முழுவதும் பவுத்தம் பின்பற்றப்பட்டது. உலகெங்கும் பரவியது.

மௌரியப் பேரரசின் படைத் தளபதியாக இருந்த பார்ப்பனனாகிய புஷ்யமித்திர சுங்கன் என்பவன் மன்னன் பிரகதத்தனைக் கொலை செய்து ஆட்சியைக் (கி.மு.185) கைப்பற்றி 35 ஆண்டுகள் ஆட்சி செய்தான். பார்ப்பனியத்திற்குப் புத்துயிர் கொடுத்தான். மநுதர்ம சாஸ்திரத்தைச் சட்டமாக்கினான். பவுத்தத்தை அழித்தான். எதிர்ப்பவர்களைக் கொன்று குவித்தான்.

இந்தியாவில் அன்று முதல் இன்றுவரை பல அரசர்கள் தோன்றி மறைந்தாலும்,இன்றுவரை பார்ப்பனியமே ஆட்சி செய்கிறது.

இந்நிலையில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் இன்று இருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தில் "மகர்' எனும் தீண்டப்படாத சாதியில் ராம்ஜி சக்பால் – பீமாபாய் தம்பதியினருக்கு ஒரு மகன் பிறந்தான். அம்மகனுக்குப் பீம் என பெயரிட்டனர்.

பீம் குழந்தையாய்ப் படிக்கத் தொடங்கியபோது தொடங்கிய சாதியின் கொடுமை அவர் இறக்கும் வரை தனது கொடிய நாவால் தீண்டிக் கொண்டே இருந்தது.

பள்ளியல் மற்ற சாதி மாணவர்களோடு சரிசமமாக மரப்பலகையில் உட்கார்ந்து படிக்க உரிமை இல்லை. வகுப்பு அறையின் ஓரத்தில் சாக்குகளை விரித்துத் தரையில் அமர்ந்து படிக்கத் நிர்பந்தித்த கொடுமை.

படிக்கும்போது தாகம் ஏற்பட்டால் வகுப்பில் உள்ள தண்ணீரை எடுத்து குடிக்கத் தடை. பெயர்ப் பலகை அருகில் சென்றால் சக மாணவர்கள் தாங்கள் அங்கு வைத்திருக்கும் உணவு தீட்டாகிவிடும் என அவருக்கு எதிராகக் குரல் கொடுத்து அவமதிக்கும் கொடுமை.

தெருவில் நடந்து செல்லத் தடை, சக மாணவர்களோடு உரையாட உறவாட தடை, மழை பெய்யும் போது வீட்டோரத்தில் ஒதுங்குவதற்குத் தடை.

கேட்ட பணத்தைக் கொடுத்து மாட்டு வண்டியில் பயணம் செய்யும் போது தீண்டப்படாதவன் பயணம் செய்த மாட்டு வண்டி தீட்டாகிவிட்டது என மாட்டை அவிழ்த்து, வண்டியைக் குடை சாய்த்துத் தூக்கிஎறியப்படும் கொடுமை.

படித்துப் பட்டம் பெற்று பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் விருப்பத்தின் பேரில் அரண்மனையில் ராணுவச் செயலாளராகப் பதவி ஏற்றும், தங்குவதற்கு வீடு தர முடியாது என அவமதித்த கொடுமை

பார்சி விடுதியில் பணம் கொடுத்துத் தங்கிய போதும், தங்கியவன் பார்சி அல்ல "மகர்' வகுப்பைச் சார்ந்தவன் என்பதையறிந்து ஆயுதங்களைக் காட்டி விரட்டிய கொடுமை பரோடா மன்னரிடம் பணியாற்றினாலும், தீண்டத்தகாதவனுக்குத் தங்குவதற்கு இடம் இல்லை என்ற நிலையில் வேலையை விட்டு மீண்டும் பம்பாய் திரும்ப வேண்டிய கொடுமை. மன்னரிடம் அதிகாரியாக வேலை பார்ப்பவருக்கே இந்தக் கொடுமை என்றால் அங்கு வாழ்ந்த தீண்டத்தகாத மக்கள் என்ன பாடு பட்டிருப்பர் ஆதிக்க சாதியினரிடம்.

சொந்த நாட்டில் ஒரு வகுப்பு மக்களை இந்து மதத்தின் பெயரால், நாயினும் கேவலமாய் நடத்துவதை எதிர்த்துப் போராட எவரும் முன்வராத நேரத்தில், தானே முன்வந்து நின்றுபோராட முடிவெடுத்தார் அம்பேத்கர்.

அயல்நாடு சென்று கல்வித் தகுதியை உயர்த்திட 1913 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்து எம்.ஏ., பட்டமும், தத்துவயியலில் டாக்டர் பட்டமும் பெற்றார்.

1920 ஆம்ஆண்டு இங்கிலாந்து சென்று அரசியல் விஞ்ஞானக் கல்லூரியில் எம்.எஸ்.சி. பட்டமும், கிரேஸ் இன் சட்டக் கல்லூரியில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

1923 ஆம் ஆண்டு நாடு திரும்பி பம்பாயில் பாரிஸ்டராக வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கிய போதும் ஆதிக்கச் சாதியினர் பல தடைகளை ஏற்படுத்தினர். அவைகளை உடைத்தெறிந்து தனது திறமையை நிலைநாட்டினார்.

ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும், தாங்களே பிரதிநிதி என ஆங்கிலேயே அரசிடம் தன்னை நிலைநாட்ட முயற்சித்த காங்கிரசுக் கட்சி, இஸ்லாமியத் தலைவர்களைத் திருப்தி செய்ய கவலைப்பட்டது போல் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றிக் கவலைப்படாததையும், காங்கிரசுக் கட்சியையும் காந்தியையும் நம்பினால் தாழ்த்தப்பட்ட சமூகம் ஆங்கியேர் ஆட்சியில் படும் துன்பங்களைவிடப் பல மடங்கு துன்பங்களைப் பார்ப்பன ஆட்சியில் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் நன்கு உணர்ந்து அதற்கான திட்டங்களைத் தீட்டினார் அம்பேத்கர்.

1918 ஆம்ஆண்டு காங்கிரசுக் கட்சியின் தலைவர் பாலகங்காதரத் திலகர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசியபோது

“வாணிபர்களும், சலவைத் தொழிலாளர்களும் மற்ற தொழில் செய்பவர்களும், குலத் தொழிலை விட்டுச் சட்ட சபைக்கு வர நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் (சூத்திரர்கள்) சட்டத்திற்குக் கட்டுபடவேண்டியவர்களே தவிர, சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல. அதற்கு அவர்கள் ஆசைப்படக்கூடாது'' என்றார்.

அதேபோல பஞ்சாயத்து சட்டத் திருத்த மசோதாவில் சூத்திரர்கள் “அரிஜன் அல்லது கடவுளின் பிள்ளைகள்'' என இனிமையாகப் பெயர் சூட்டி ஏமாற்றுவதைப் பார்த்த அம்பேத்கர், காந்தியும் காங்கிரஸ் கட்சியும் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை உயர்த்த பாடுபடாது என்பதை நன்குணர்ந்து, “ஹிதகாரணி சபா'' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடத் தொடங்கினார்.

1927 ஆம் ஆண்டு பம்பாய் அருகில் கோலா என்ற ஊரில் அமைந்துள்ள சௌதார் ஏரியைத் தாழ்த்தப்பட்டோருக்கும் உரிமை பெற்றிட மாபெரும் பேரணி ஒன்றைத் தலைமை ஏற்று நடத்தினார்.

பேரணி இறுதியில் இந்துமதச் சட்டமாகிய மநுஸ்மிருதியைத் தீயிட்டுக் கொளுத்தினார். பார்ப்பனர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

1929 ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி தயாரித்த அரசியல் சட்ட வரைவில் தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு குறித்து எதுவும் குறிப்பிடாததால் அப்போது ஆங்கில அரசு நியமித்த “சைமன் ஆணையத்திற்கு' ஒத்துழைப்புத் தருவேன் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு காங்கிரசுக் கட்சிக்குப் பேரிடியாக விழுந்தது. அதோடு காங்கிரசுக் கட்சி தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானது என்பதை மக்கள் அறியும் வாய்ப்பும் ஏற்பட்டது.

1930 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் வட்ட மேஜை மாநாடு உட்பட மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர் சார்பாக கலந்து கொண்டார் என்பது வரலாறு. முதல் மாநாட்டில் காங்கிரசுக் கட்சி கலந்து கொள்ளவில்லை. இரண்டாவது மாநாட்டில் காங்கிரசுக் கட்சியின் சார்பில் காந்தி கலந்து கொண்டார். மாநாட்டில் தீண்டப்படாத வகுப்பினருக்குத் தனி வாக்காளர் தொகுதி கோரி அம்பேத்கர் வாதாடினார். காந்தி அதனை எதிர்த்தார். இருப்பினும் அம்பேத்கரின் கோரிக்கை வெற்றி பெற்றது?

வட்டமேஜை மாநாடு முடிந்து பம்பாய் திரும்பிய காந்திக்கு த் தாழ்த்தப்பட்டோர் சார்பில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சிலகாலம் கழித்துப் பம்பாய் திரும்பிய அம்பேத்கருக்கு மக்கள் அன்பான வரவேற்புத் தந்தனர்.

1932 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 20 ஆம் நாள் தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதி என்பது இந்து மதத்தை இரண்டாகக் கூறு போடுவதற்குச் சமம் எனக் கூறி அதனை எதிர்த்து காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். இதன்மூலம் ஒட்டுமொத்த இந்து மதத்தினரையும் அம்பேத்கருக்கு எதிராகக் காந்தி திருப்பிவிட்டார். அம்பேத்கர் தனது அறிவாற்றலால், வட்டமேஜை மாநாட்டில் போராடி பெற்றதைக் காந்தி தன் சூழ்ச்சி மூலம் தட்டிப் பறித்தார்.

இதன் தொடர்பாக காந்திக்கும் அம்பேத்கருக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. இதன்மூலம் சில தொகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டு "இயலோ' மாநாட்டில் தீண்டாமை எனும் கறையுடன் நான் பிறந்துவிட்டேன். அது என் தவறன்று ஆனால், நான் இந்துவாக இறக்கமாட்டேன். இந்து மதத்தைவிட்டு வெளியேறுவேன் என்று அம்பேத்கர் அறிவித்தார்.

ambedkar_deeksha_boomi

"தீண்டாமை அதனுடைய கடைசி காலக்கட்டத்தில் இருக்கும்போது அம்பேத்கர் மதமாற்றம் பற்றி அறிவித்திருப்பது துரதிஷ்டமான நிகழ்ச்சியாகும் எனக் காந்தி குறிப்பிட்டார். அதோடு “இந்து மதத்தில் பிரிக்க முடியாத கூறு வருணாசிரமம் என்று நம்புகிறவன் நான். எனவே வர்ணா சிரமத்தை எதிர்த்துப் போரிட விரும்பும் அம்பேத்கர் அணியில் நான் இருக்க முடியாது'' என்று காந்தி மேலும் தெரிவித்தார். அப்படி என்றால் காந்திக்குத் தாழ்த்ப்பட்டவர்களின் நலனைக் காப்பதைவிட இந்து மதத்தையும் அதனினும் சாதியையும் காப்பதே காந்தியின் முக்கிய அரசியல்பணியாக இருந்துள்ளது. அப்படிப்பட்ட காந்தியை, தாழ்த்தப்பட்டோரில் சிலர் இன்றும் தூக்கிவைத்து ஆடுவது வேடிக்கையாக உள்ளது.

1942 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசின் அமைச்சர் பட்டியலில் அம்பேத்கரின் பெயரும் இடம்பெற்று இருந்தது. அம்பேத்கர் தொழிலாளர் அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆங்கிலேயர் ஆட்சியில் அம்பேத்கரை அமைச்சராக நியமித்ததைக் காந்தியும், காங்கிரசுக் கட்சியும் விரும்பவில்லை. இருப்பினும் அதனை அவர்கள் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.

1946 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போர் முடிவுற்றது. இந்தியா உட்பட பல நாடுகளுக்கு விடுதலை தந்திட ஆங்கிலே அரசு முடிவு செய்து அறிவித்தது. அம்பேத்கர் உட்பட அனைத்துஅமைச்சர்களும் பதவியிலிருந்து விலகி வைசிராயிடமிருந்து விடை பெற்றனர்.

1947 ஆம் ஆண்டு, சூலை 15 ஆம் நாள் இங்கிலாந்து பாராளுமன்றம் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. ஆகஸ்டு திங்கள் 3ஆம் நாள் இந்திய அரசின் அமைச்சர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. காங்கிரசுக் கட்சியைச் சாராத, காங்கிரசுக் கட்சியை எதிர்த்து அரசியல்நடத்திய அம்பேத்கரின் பெயரும் அதில் இடம் பெற்று இருந்தது. அம்பேத்கர் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. ஆகஸ்டு 29 ஆம் நாள் அம்பேத்கரைத் தலைவராகக் கொண்ட அரசியல் சட்ட வரைவுக்குழு அமைக்கப்பட்டது.

சொந்த நாட்டில் தீண்டத்தகாதவனாக, படிக்கும் உரிமை இல்லாதவனாக தாகத்துக்குத் தண்ணீர் குடிக்க உரிமை இல்லாதவனாக, பொது இடங்கள், கோயில்கள், ஏரி, குளம், கிணறு முதலியவற்றைப் பயன்படுத்த தகுதி இல்லாதவனாக, கேட்ட பணத்தைக் கொடுத்தும் மாட்டு வண்டியில் பயணம் செய்யத் தகுதி இல்லாதவனாக, மன்னரின் அரண்மனையில் அதிகாரியாகப் பணியாற்றியும் வாடகை வீட்டில் தங்கத் தகுதியில்லாதவனாக, வாடகை செலுத்தியும் விடுதியில் தங்க உரிமை இல்லாதவனாக, ஏன் நாயினும் கேவலமாகக் கருதிய "மகர்' வகுப்பு தீண்டத்தகாதவனிடம், இன்னும்சொல்ல வேண்டுமானால் இந்துக்களின் வாழ்வியல் கேட்பாட்டு நூலான "மனுநீதியை'ச் சில ஆண்டுகளுக்கு முன் எரித்த ஒருவரிடம் எதிர்கால இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியை ஒப்படைத்தது காலத்தின் கட்டாயம்.

எந்த பாலகங்காதரத் திலகர் தீண்டத்தகாதவர்கள் தமது குலத் தொழிலை விட்டு சட்டம் இயற்ற ஆசைப்படக்கூடாது என்று கூறினாரோ, அதே பாலகங்காதர திலகரின் சமூகத்திற்கும் சேர்த்தே சட்டம் இயற்றும் பணியைத் தனக்கு வழங்கும் நிலையை உருவாக்கி அவர்கள் முகத்தில் கறியைப் பூசினார் அம்பேத்கர்.

ஆனால் அம்பேத்கர் தான் நினைத்தப்படி அரசியல் சட்டத்தை உருவாக்கினாரா? என்றால்இல்லை என்றே சொல்லலாம். மதத்திற்கு எதிரானதை நீக்கினார். மத்ததிற்குஆதரவானதைச் சேர்த்தனர். இன்னும் சொல்ல வேண்டுமானால் அம்பேத்கரின் கையில் இருந்த பேனாவை நகர்த்தியவர்கள் உயர் சாதியினரே. 

ஒரு நாள் பாராளுமன்றத்தில் பிரதமர் நேரு அமர்ந்திருந்தபோது அம்பேத்கர் கூறினார். என்னுடைய தோழர்கள் சிலர் இந்த அரசியல் சட்டம் எழுதிய பெருமை எனக்கு என்று கூறினார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்வேன், இந்த அரசியல் சட்டம் எங்களுக்கானது அல்ல. இந்த அரசியல் சட்டத்தை கொளுத்துகிற நாள் ஒன்று வந்தால், அதைக் கொளுத்துகிற முதல் ஆளாக நான் இருப்பேன்'' என்றார்.

அம்பேத்கரின் இரண்டாவது முயற்சி இந்துச் சட்ட திருத்த மசோதாவைப் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றுவிடவேண்டும் என்பதாகும். சீர்த்திருத்த மசோதாவில் இந்து கூட்டுக் குடும்பம், பெண்கள் சொத்துரிமை போன்ற சீர்த்திருத்தங்கள் இடம் பெற்று இருந்தன. பிரதமர் நேருவும், வீர சாவர்க்கரும் ஆதரவு தந்தாலும் சர்தார் பட்டேலும், டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும் கடுமையாக எதிர்த்தனர். எனவே இம்மசோதா நிறைவேற முடியாத நிலை ஏற்பட்டதால் அம்பேத்கர் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

1956 அக்டோபர் 14 ஆம் நாள் நாகபுரியில் அம்பேத்கர் தனது மூன்று லட்சம் தொண்டர்களுடன் பவுத்த சமயத்தைத் தழுவினார். அவர் உரையாற்றும்போது “நான் இந்துவாகப் பிறந்த போதிலும் இந்துவாக இறக்க மாட்டேன் என்று 1935 ஆம் ஆண்டு நான் உரைத்தசூளுரையை நான் இப்போது நிறைவேற்றி விட்டேன். இறுதியிலேனும் இந்து மதம் என்னும் நரகத்திலிருந்து வெளிவந்துவிட்டதற்காக ஆத்ம திருப்தி அடைகிறேன்'' என்று கூறினார்.

“தீண்டப்படாதவன்'' என்ற சாதி இழிவை இந்து மதத்தில் இருக்கின்றவரை சுமந்தõக வேண்டும். அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி மதமாற்றமே எனத் தம்மக்களுக்கு வழிகாட்டி பவுத்த மதத்தில் சேர்ந்து 54 ஆவது நாளில் 6.12.1956இல் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார், அறிஞர் அம்பேத்கர்.

அம்பேத்கர் மறைந்து 56 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று இந்திய நாட்டின் மக்கள் தொகை 121.01 கோடி. அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் எண்ணிக்கை 29.52 கோடி. இதில் பவுத்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் 97.00 லட்சம் மட்டுமே. அப்படியென்றால் மீதியுள்ள 28.55 கோடி மக்கள் இன்றும் இந்து மதத்தில் தானே உள்ளனர்.

தன் வாழ்நாள் முழுவதையும் தன் சமூக மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாபெரும் தலைவனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் இதுதானா?

Pin It