1956 ஆம் ஆண்டு பிற்பகல் 12.30 மணிக்கு இந்திய வானொலி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் டெல்லியில் காலமானார் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தியை அறிவித்தது.

இந்தச் செய்தி இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமல்ல, உலகமெங்கும் பரவிக் கிடக்கும் தாழ்த்தப்பட்ட மக்களும்,அறிவார்ந்த முற்போக்குச் சிந்தனையாளர்களும் தங்களுக்கு ஏற்பட்ட பேரிடிச் செய்தி எனக் கண்கலங்கினர். செய்வதறியாது திகைத்து நின்றனர். பழைய பம்பாய் நகரம் துயரக் கவலைகளால் கண்ணீர் வெள்ளத்தை வீதியெங்கும் சிந்தியது. தாழ்த்தப்பட்ட மக்கள், குறிப்பாகத் தாய்மார்கள் கதறி அழுத காட்சி இன்னும் என் மனக்கண்முன் நிற்கிறது.

ambedkar_last_journey

பிற்பகல் 3 மணிக்கு அந்தப் பேரறிஞரின் உடல் பம்பாய்க்குக் கொண்டுவரப்போவதாக அறிவிப்பு வந்ததுமே சாந்தாகுரூஸ் பழைய விமான நிலையத்திலிருந்து டாக்டரின் இந்துக் காலனி இல்லமானக் ராஜ்கிரக இல்லம் வரை மக்கள் வெள்ளம், குழந்தை குட்டிகளோடு வரிசையாக நின்று தங்கள் ஒப்பற்ற தலைவரின் கடைசி பயணத்தை அவருடைய வருகையைக் காணகாத்துக் கிடந்தனர்.

தாராவியிலுள்ள தமிழ் மக்கள் சயான் ரயில்வே நிலையத்திற்கு எதிரே பல்லாயிரக்கணக்கில் கூடி நின்று அறிவு மேதையின் உடலைப் பார்க்க வழிமேல் விழி வைத்து விரைந்து நின்றனர். பிற்பகல் 3 மணியானது, 6 மணியானது, 8 மணியானது, 10 மணியானது, கடைசியாக இரவு 11 மணிக்கு ஒரு அறிவிப்பு வெளிவந்தது. இரவு 2 மணிக்கு வருவதாக! குடும்பம் குடும்பமாக டிசம்பர் மாதக் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது காத்துக் கிடந்தார்கள்.

நடுச் சாமத்தில் பம்பாய் வந்து சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் உடல் கவனமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மறுநாள் இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் காணிக்கையோடு அடுக்கி வைக்கப்பட்ட சந்தனக் கட்டையில் அந்த உலகச் சிந்தனையாளரின் உடல் எரிக்கப்பட்டது. அவருடைய மறைவு, இந்தியாவின் மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பௌத்தச் சிந்தனை இயக்கத்திற்கும், அரசியல் உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று உலக நாடுகளின் ஏடுகள் எல்லாம் எழுதின.

1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தீண்டப்படாத வகுப்பில் பிறந்து, வெறிபிடித்த சனாதன வருணாச்சரமக் கொடுமைகளால் இளமையிலிருந்தே அலைக்கழிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட அந்த மாமேதை தன் சொந்த முயற்சியினால் அவைகளை எதிர்த்து, புரட்சி செய்து புறங்கண்டு படித்து முன்னேறிய பேரறிவாளர் ஆனார். இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர். எனினும் இந்திய அரசியல் சட்டத்தின் முழுமைக்கும் பொறுப்பேற்று விளங்கியவர் டாக்டர் அம்பேத்கர் தான் என்றால் மிகையாகாது. எனினும் பின்னர் அதே அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும், எரித்துச் சாம்பலாக்க வேண்டும் என்றும் போர் முழக்கம் செய்தவரும் அவரே. டாக்டர் அம்பேத்கர் முற்போக்குச் சிந்தனையாளர்.

“கீதை முட்டாள்களின் உளறல்'' என்று துணிச்சலோடு சொன்னார். அது மட்டுமல்ல இராமாயணம், மனுதர்மம், பகவத்கீதை ஆகிய நூல்களைத் தாழ்த்தப்பட்ட மக்களை மனித சமுதாயத்திலிருந்து பிரித்து வைக்க ஆதாரமாக இருக்கும். இந்தக் கேடுகெட்ட நூல்களைக் கொளுத்த வேண்டும் என முழக்கமிட்டார். இதன் தொடர்ச்சியாக மனுதர்ம நீதியைக் கொளுத்தவும் செய்தார். மக்கள் சமுதாயம், இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற இந்து மதம் ஒழிய வேண்டும் என்றார்.

நான் இந்துவாகப் பிறந்தாலும், இந்துவாக இறக்கமாட்டேன் என்ற இலட்சியம் நிறைவேறத் தான் மறைவதற்கு முன்பு 5 லட்சம் மக்களோடு நாக்பூரில் இந்து என்ற இழிவைத் துடைத்துக் கொண்டு புத்த நெறியைத் தழுவினார். டாக்டர் அம்பேத்கர் முதலில் தாம் விரும்புகிற தன் சமுதாய மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கொள்கைகளை எதிர்பார்த்து முதலில் அவர் எச்சரிக்கையாக ஒரு அறிவிப்பைச் செய்வார்.அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசோ அல்லது நீதி மன்றமோ ஏற்று அறிவிப்புச் செய்யவில்லை என்றால் மாறுதல்களுக்குண்டான நடவடிக்கையை மேற்கொள்வார் என்பது அவருடைய வாழ்க்கையில் நாம் கண்ட உண்மை.

இன்றைக்கு மாநிலங்களைக் கலைத்து விடுவதற்கு டாக்டர் எழுதிய சட்டத்தைத் துணைக்கு அழைத்துப் பேசப்படுவதை நாம் அறிவோம். அண்மையில் "சோ' எழுதிய ஒரு கட்டுரையில் கூட டாக்டர் அம்பேத்கர் சொன்ன விளக்கவுரையை எடுத்துக் காட்டியுள்ளார்.

The world ook encyclopedia என்ற ஆங்கில அகராதி டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் மிகப்பெரிய சமூகச் சீர்திருத்தவாதி என்றே குறிப்பிட்டு எழுதியுள்ளது. மேலும் அந்நூலில் அம்பேத்கர் எத்தனையோ தடைகளை மீறிப் படித்து நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமும், இலண்டன் பல்கலைக் கழகத்தில் சிறந்த வழக்கறிஞராகவும் தேறினார்.

1923 இல் அவர் இந்தியா திரும்பியதும் தன் சமூக மக்களின் எழுச்சிக்காகப் பல கட்டுரைகளும், நூல்களும் எழுதினார். இந்து மதம் தம் மக்களுக்கு விளைவித்த அநீதிகளை எதிர்த்தும், அரசியல் ரீதியாகத் தமக்கு அல்லது தம் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட பேதங்களை எதிர்த்துக் காங்கிரசும் காந்தியும் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்தது என்ன? என்ற நூலை எழுதினார். இந்த நூல் சமூக அரசியல் வாழ்க்கையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய, காந்தி அடிகளுக்கும் அம்பேத்கர் அவர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இந்த நூல் வெளிவந்த பின்னர்தான்.

சமநீதி என்பது வேற்றுமை பாராட்டாது முறை செய்தல் அதாவது நீதி வழங்குதல் ஆகும்.வேறு வகையில் சொன்னால் சமமான சூழ்நிலையில் சமமானவர்களைச் சமமாக நடத்துவது என்பதே சமநீதி ஆகும். இந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் எல்லா நிலைகளிலும் சம வாய்ப்பு அளிப்பது சம நீதியின் பால் பட்டதாகும். பல்வேறுபட்ட பிரிவுகளையும், வேறுபாடுகளையும் கொண்ட இந்திய சமூகத்தில் சமவாய்ப்பு இன்றுவரை கிடைக்காமல் போனது டாக்டர் அம்பேத்கர் கொள்கைகள் பெரிதும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

உலகத்திலேயே மிகச் சிறந்த சான்றோர் வரிசையில் ஏசுநாதர், முகமது நபி, கௌதம புத்தர், சாக்ரடீஸ், பிளாட்டோ, இந்தியாவைப் பொருத்தளவில் காந்தியடிகள், பெரியார் இயக்கங்களுக்கெல்லாம் இன்று வரை இவர்களுடைய லட்சியங்களைப் பின்பற்றக் கூடிய மக்கள் தொண்டர்கள் வெவ்வேறு எண்ணிக்கையில் உலக நாடுகளில் இருக்கிறார்கள்.

அது போல டாக்டர் அம்பேத்கர் என்ற சிந்தனையாளருக்கும் கோடிக் கணக்கில் மக்கள் தொண்டர்கள் இருந்தும் அவருடைய கொள்கைகள் வெற்றி பெறாமல் இருப்பது மன வேதனை தருவதாகும். இதற்குக் காரணம் அவர் மதத்தை எதிர்த்தார், புத்த மதக் கொள்கையை ஏற்றுக் கொண்டார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.

ஒருமுறை பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தின் போது உங்கள் ஆன்மா மகிழ்ச்சியடையட்டும் என்ற ஒர்உறுப்பினரின் பேச்சுக்கு எனக்கு ஆன்மா மீது நம்பிக்கை இல்லை என்று பணிவாகப் பதில் சொன்னார். இன்று அவரைப் பின்பற்றுகின்ற அவருடைய சமூக மக்கள் மதத்தின் பாதுகாவலர்களாகவும், மராட்டியத்தில் கணபதி விழா எடுக்கும் தலைவர்களாகவும், பேதங்களை வளர்த்துக் கொள்ளும் அமைப்புகளுக்கு வழிகாட்டியாகவும் இருப்பதினால் தான் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டு நடமாடுகின்றனர். எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் பேதங்கள் மனிதனைத் தாழ்த்த நினைக்கும் போது அவைகளை உடைத்தெறிய முன்வர வேண்டாமா?

Pin It