கிறித்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் சாக்கிய வம்சத்தில் ஒரு குறுநில மன்னர் மரபில் பிறந்த இளவரசரான புத்தரின் போதனைகள் இந்திய நாட்டில் அற்புதமான ஒரு தேசியப் புத்தெழுச்சியை உருவாக்கியது.

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த புத்தரின் போதனைகள் 1500 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியக் கண்டம் முழுவதிலும் தழைத்தோங்கியது.

புத்தர் மறைந்து மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதி வைக்கவில்லை. புத்தரின் மறைவுக்குப்பின்னர் தான் பாதுகாத்து வைக்கும் பணி தொடங்கியது. புத்தருக்கு முன் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றால் அப்போது முறையான நகரங்கள் எதுவுமில்லை. அரசுகளும் இல்லை, புத்தர் காலத்தில் தான் நகரங்களும், அரசுகளும் இருந்தன.

புத்தரின் மறைவுக்குப்பின் வட இந்தியா மௌரிய பேரரசின் களமாக இருந்தது. இந்திய துணைக் கண்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி வரையிலும் அதுவே மிகப்பெரிய அரசாகும். மௌரிய பேரரசில் தான் பௌத்தம் செழித்தோங்கியது.

இந்திய மக்களுக்கெல்லாம் பொதுவான ஒரு தேசிய பண்பாட்டையும், அமைப்பையும் அளித்து இந்தியாவை ஒருமைப்பட்ட ஒரே நாடாக மாற்றியது பௌத்தமே. புத்தரின் போதனைகளை அன்று மக்கள் பெரிதும் வரவேற்றனர். புத்தர் கூறினார் “ஒருவரின் பேச்சு உண்மை, அன்பு, மென்மையுடன் இருத்தல் வேண்டும். அவனின் செயல் : கெடுதலற்றதும், சுயநலமற்றதும், பயனுடையதும் மற்றும் கபடமற்றதாக இருத்தல் வேண்டும். அவனின் வாழ்க்கை : தூய்மையானதாகவும், நன்மை செய்வதாகவும், ஆசைகளையும், வெறுப்புகளையும், சபலங்களையும், வெற்றி கொண்டு, மனக்கட்டுப்பாடுகளானதாகவும் இருத்தல் வேண்டும் என்றார்.

இதைவிட அழகான ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை கற்பனை செய்ய வேறு எந்தக் கவிஞனாலும், சிந்தனையாளனாலும் சாத்தியப்படாது. புத்தர் சாதி வேற்றுமையைப் பலமாக எதிர்த்தார். புத்த மதம் பரவிய இடங்களிலெல்லாம் மக்களின் சிந்தனையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. செயற்கையான சாதிச் சிந்தனைகளில் இருந்த விடுதலை பெற்ற மக்கள் ஒருவருக்கொருவர் உதவியும் அன்பு செலுத்தியும் ஒரு புதிய உயிரொளியை பெற்று மகிழ்ந்தனர். புத்தமதத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மகதநாடு இந்தியாவின் இதயப் பகுதியாக இருந்தது. அன்பு மற்றும் மரியாதைகளைப் போற்றும் புண்ணிய பூமியாகத் திகழ்ந்த மகதத்தை ஆரியர்கள் தங்களுடைய பரம எதிரியாகக் கருதினர்.

மாமன்னன் அசோகனும், மன்னன் கனிஷ்கனும், தீவிரமாகப் பவுதத்தை பரப்பினர். இதனைப் பார்ப்பனியம் நேரம் கிடைத்த போதெல்லாம் எதிர்த்து வந்தது. சமயம் பார்த்து மன்னர் கனிஷ்கரை வஞ்சகமாகக் கொலையும் செய்தது. தென்னிந்தியாவில் புத்த மத ஆதரவாளர்களாக இருந்த மன்னர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலான பிராமண ஆதரவாளர்களைப் பார்ப்பனர்கள் நியமித்தனர். புத்த மதத்தை ஒழித்துக் கட்டவும், மக்களைத் திருப்திபடுத்தவும் கோயில் வழிபாட்டை உருவாக்கினர். மக்களை வலிமை இழக்கச் செய்து அவர்களைச் சுரண்டுவதுதான் பிராமணர்களின் குறிக்கோளாக இருந்தது. மன்னர்கள் அவர்களுக்குத் துணையாக இருந்தனர். மக்களின் மீது கொடுங்கோண்மையைத் திணிக்க மனித மூளையால் படைக்கப்பட்ட மிகக் கொடூரமான ஒரு தந்திரம் தான். “சாதி'' பிராமணர்கள் மற்றும் மன்னர்களின் ஆதாயத்திற்காக மக்கள் சுரண்டப்பயன்படும் மற்றொரு வல்லமை மிக்க கருவிதான் “கோவில்கள்''.

பௌத்தம் நம்நாட்டிலிருந்து மறைந்தது. இஸ்லாம் நம் நாட்டில் மேலாதிக்கம் பெற்றதும், தேசிய இயக்கத்திற்குச் சாவு மணி அடிக்கப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்கு அது வெற்றி முரசமாக அமைந்தது. இஸ்லõமியர்கள் அனைத்து எதிர்ப்புகளையும் வென்று அமைதியாக ஆட்சி நடத்தத் துவங்கியபோது மக்களை நேரடியாகக் கவனிக்கத் தலைவர்களை நியமித்தனர். அதில் பெரும்பாலும் பிராமணர்களே இந்திய மக்களின் சகல பிரிவுகளுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் அல்லாத அனைத்து மக்களையும் முஸ்லிம் அரசு இந்துக்கள் என்றழைக்கத் தொடங்கியது. இந்தச் சிறு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வை வளர்க்க உதவிய போதிலும், கோடிக்கணக்காக உழைக்கும் மக்கள் காலாகாலத்திற்கும் புரோகித வர்க்கத்திடம் அடிøமப்படவும் துன்புறவும் அது காரணமாகியது.

இந்தியர்களெல்லாம் "இந்துக்கள்' எனவும் அவர்களுடைய மதம் "இந்து மதம்' என்றும் அழைக்கலாயினர். அவர்களுடைய எஜமானர்கள் "பிராமணர்கள்' என்ற நிலைமையும் உருவாயிற்று. "இந்து' என்ற சொல்லே ஒரு வெளிநாட்டு மொழிச் சொல்தான். இஸ்லாமியர்கள் நம் நாட்டிற்கு வருவதற்கு முன்பு வரை எந்தச்சமஸ்கிருத நூலிலும் "இந்து' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

பிராமண மதம், இந்து மதமாக மாறிய பிறகு முஸ்லிம்கள் அல்லாத எல்லோருடைய மதமுமாக மாறியது. பவுத்தர்கள் இந்துக்கள் என்றழைக்கப்பட்டனர். பிராமணர்கள் அதிக அதிகாரங்களைப் பெற்று மதத்தலைவர்களாக்கப்பட்டனர். அதன் பிறகு தங்களுடைய கொடுங்கோன்மையை நாலா திசைகளிலும் ஆழமாக ஊன்ற ஆரம்பித்தனர்.

மக்களின் மதம் எதுவாக இருக்க வேண்டும். அவர்களுடைய சமூக வாழ்க்கையின் நியதிகள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் தங்களுக்குத்தான் என்று பிராமணர்கள் உரிமை வாதத்தை எதிர்க்கத் துணிந்த மன்னர்கள் இல்லாதாயினர்.

சாதி அமைப்பில் கோயில் என்பது பிராமணனுக்கு உயர்நீதி மன்றம் போன்றதாகும். அது ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. வேறு பல காரியங்களும் அங்கு மேற்கொள்ளப்பட்டன. கிராமத்து ஆட்சி மய்யமே கிராமத்துக் கோயில்தான். சாதிச் சட்டங்களின் உயர் நீதிமன்றமாகவும் கோயில்கள் திகழ்ந்தன.

இந்தக்கோயில் இயக்கத்தை மன்னர்கள் தீவிரமாக ஆதரிப்பதற்கு அவர்களுக்குச் சில தனிப்பட்ட காரணங்கள் இருந்தன. பல்வேறு வகைகளில் பாமர மக்களை மயக்கியும், ஏமாற்றியும், கோயில்களில் குவிந்த கொண்டிருந்த செல்வத்தில் ஒரு கணிசமான பகுதி மன்னர்களுக்குக் கிடைத்தது. இன்னொரு பகுதி பிராமணர்களுக்கு வழங்கப்பட்டது.

விக்கிரக பூஜையால் எந்தக் காலத்திலும் எந்த மக்களுக்கும் எத்தகைய நன்மையும், அருளும் கிடைத்ததில்லை. அதன் இயல்பான மூடத்தனம் எனும் கெடுதலைத் தவிர உருவ வழிபாட்டால் வேறு சில தீமைகளும் வந்து சேர்ந்தன.

தெய்வ வழிபாடு வீடுகளிலிருந்து கோயில்களுக்கு மாற்றப்பட்ட பிறகு அதன் அதிகாரிகளாகிவிட்ட புரோகிதர்களுக்கு மக்களின் கழுத்தில் மேலும் ஒரு சுருக்கு முடிச்சுப் போட்டு அவர்களை அடிமைப்படுத்தவும், தங்களுடைய கொடுங்கோன்மையை அவர்களின் மீது திணிக்கவும் கூடுதல் வாய்ப்பு கிடைத்தது.

இந்து மதத்தில் இன்றைய மக்கள் தொகைக் கணக்கின்படி 3000 சாதிகளும் அதைவிட அதிகமாக உட்சாதிகளும் இருக்கின்றன. இந்து மதத்தில் நாம் கண்ட பயன் இதுவே. இந்திய நாட்டில் பௌத்தத்தின் வீழ்ச்சி, ஆரியர்கள் தன்னை வளர்த்துக் கொள்வதற்கும், திராவிடர்களை மூட நம்பிக்கையில் மூழ்கடிப்பதற்கும், மக்களைப் பல சாதிகளாய்ப் பிரிப்பதற்கும் பயன்பட்டது. திராவிடர்கள் குறிப்பாக, இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட தமிழர்கள் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் நிலையை நாம் இங்கு பார்க்கிறோம்.

இன்று, உலகில் சைனா, ஜப்பான், பர்மா, இலங்கை, தாய்லாந்து, கொரியா, சிங்கப்பூர், தைவான், வியட்நாம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பௌத்த நாடுகளாக திகழ்கின்றன. அந்நாட்டு மக்கள் பௌத்தத்தைத் தங்கள் வாழ்க்கையின் நெறியாக ஏற்று சாதி வேற்றுமைகளின்றி ஒற்றுமையாய் வாழ்கின்றனர். பௌத்தத்தை ஏற்றுக் கொண்ட மக்கள், உலகம் முழுவதும் சுமார் 3.65 கோடி வாழ்கின்றனர். பௌத்தம் தோன்றிய இந்தியாவில் 79.00 லட்சம் மக்களே அதில் 5339 பேர் மட்டுமே தமிழகத்தில் வாழ்கின்றனர்.

மனிதன் அறிவு வளர்ச்சி பெறாமல் காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தன் உடலுக்கு நோய் ஏற்பட்ட போது அவைகளைச் சிகிச்சையின் மூலம் நீக்கிக் கொள்ள வழி தெரியாமல் இருந்தான். அப்பொழுது அவன் எவைகளைத் தெய்வம் என்று நம்பிக்கொண்டிருந்தானோ அவைகளிடம் தனது நோயையும் நீக்கும்படி வேண்டிக் கொண்டான். இவ்வாறு தமக்கு நேர்ந்த துன்பங்களை நீக்குமாறு வேண்டிக் கொண்டிருந்த மனிதன், அப்பழக்கத்தையே இன்றும் கொண்டிருப்பது மூடநம்பிக்கைதானே.

19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடக்கே தமிழர்கள் அல்லாதவர்களை பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களும், தெற்கே தமிழர்களை அயோத்திதாசர் பண்டிதர் அவர்களும் பௌத்தத்தை ஏற்கக் கோரி பாடுபட்டனர். மக்களோ செவி சாய்க்க மறுத்தனர்.

மனித வாழ்க்கைக்கு அன்றும், இன்றும், என்றும் அறிவுச் சிந்தனையைத் தூண்டி மனிதர்களை முறைப்படுத்தும் உரிய மார்க்கம் பௌத்தமே! உயரிய வழிகாட்டி புத்தரே.

Pin It