எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்கள் தமிழ்ச் சூழலில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து இயங்கி வரும் சமூக செயல்பாட்டாளர். குறிப்பாக அருந்ததிய மக்களின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பங்களித்து வருகிறார்.
கருஞ்சட்டைத் தமிழர் இதழின் பொறுப்பாசிரியரான இவர், ‘பெளத்தம் ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்’, ‘அருந்ததியர் வரலாறு’, ‘ஒண்டிவீரன் பகடை’ போன்ற நூல்களின் ஆசிரியர் ஆவார்.
சனாதனம் அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் அதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எதிர்த்த பௌத்த மரபைப் பற்றியும், சாதி அமைப்பை வேரறுக்க அம்பேத்கர் ஏன் பௌத்தம் தழுவினார் என்பதைப் பற்றியும் அறிய பெளத்த நெறியைப் பின்பற்றும் திரு எழில் இளங்கோவன் அவர்களிடம் தோழர் இக்லாஸ் உசேன் எடுத்த நேர்காணல் இதோ..
இக்லாஸ் உசேன்: இந்தியத் தத்துவ மரபு என்றால் என்ன?
எழில் இளங்கோவன்: தத்துவம் என்பது மெய்ப்பொருள் காண்பது. 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்கிறார் வள்ளுவர். இக்குறளில் வரும் 'மெய்ப்பொருள்' என்பது தத்துவத்தைக் குறிக்கும்.
இந்தியாவில் ஆரியர்களின் ஊடுருவல் வந்த பிறகு குறிப்பாக அவர்களின் வேதங்கள், உபநிடதங்கள் தோன்றின. அவைகளில் தத்துவக் கூறுகள் எதுவும் இல்லை. ஆனால் வேத நூலின் நான்காம் பகுதியான உபநிடதத்தில் ' பிரம்மம்' என்ற பெயரில் இருந்து வேத தத்துவம் எழுவதைப் பார்க்கலாம்.
தத்துவத்தை இரண்டு நிலைகளில் பார்க்க வேண்டும். ஒன்று கருத்து முதல் வாதம். இது கற்பனையில் உருவாக்கப்பட்டது, உண்மையைப் போலத் தோற்றம் தரும். மற்றொன்று பொருள் முதல்வாதம். இது ஐம்புலன்களின் உணர்வில் இருந்து பேசப்படுகிறது. கடவுள் இருக்கிறார் என்பது கற்பனை.
ஆனால் உண்மையைப் போல் தோற்றம் தருகிறது. இது கருத்து முதல் வாதம். ஐம்புலன்களால் அறிய முடியாத, உணர முடியாத கடவுள் இல்லை என்பது பொருள் முதல்வாதம். இந்திய தத்துவ தளம் வேதங்களைச் சார்ந்து வேத மரபாகவும் அதற்கு எதிராக வேத மறுப்பாகவும் இருக்கிறது. இவைகளில் இருந்துதான் இந்திய தத்துவத்தைப் பார்க்க முடியும்.
2) இக்லாஸ்: தாங்கள் ' பவுத்தம் ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்’ என்ற நூலை எழுதி இருக்கிறீர்கள். இந்தியாவில் அப்படி ஒரு போர் உண்மையில் நிகழ்ந்ததா?
எழில்: இதற்கான சான்றுகள் ரிக் வேதத்தில் உள்ளன. ரஷ்யாவின் இன்றைய சைபீரிய நிலப்பகுதியில் இருந்து வால்கா நதி பள்ளத்தாக்கு, ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாகக் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு, இந்தியாவிற்குள் சிறு சிறு குழுக்களாக சிந்து நதியோரப் பஞ்சாபிற்குள் ஆரியர்கள் நுழைந்தார்கள்.
அவர்களை அன்று, அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினர் எதிர்த்தார்கள். இப்பழங்குடியினரை அசுரர் என்கிறது ரிக் வேதம். அசுரர்கள் நாகர்கள், திராவிடர்கள் என்கிறார் அம்பேத்கர்.
அத் திராவிடப் பழங்குடியினருக்கும், ஆரியர்களுக்கும் இடையே நடந்தது ஆயுதப் போர் என்கிறது ரிக் வேதம். இதைத் தொடர்ந்து கருத்தியல் அடிப்படையிலான ஆரிய - திராவிடப் போரைப் புத்தர் முதன்முதலாக கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கினார்.
அன்று ஆரியர்க்கு வேதங்கள் தலைமை தாங்கின. திராவிடர்க்குப் பவுத்தம் தலைமை தாங்கியது. இன்று அவர் களுக்கு இராமன்கள், நமக்குப் பெரியாரும், அம்பேத்கரும்.
3) இக்லாஸ்: அம்பேத்கர் எதற்காக பௌத்த தத்துவத்தை முன்னெடுத்தார்?
பதில்: பௌத்த தத்துவம் ஒன்றைத் தவிர வேறு எந்த தத்துவமும் மக்களையும், மக்களின் வாழ்வியலையும் பேசவில்லை. வேத மரபுத் தத்துவம் கடவுளைப் பற்றித்தான் பேசியது.
வேத மரபு 'பிரம்மம்' என்ற ஒன்று இருப்பதாகச் சொல்கிறது. பிரம்மத்துள் பிரபஞ்சம், உலகம், உலகின் பவுதீகப் பருப்பொருள்கள் அனைத்தும் அடக்கம். பிரம்மமே அனைத்திற்கும் மேலானது, ஆன்மா புனிதமானதாக பிரம்மத்துடன் இணைந்து இருப்பதாக வேதம் கூறுகிறது. இதற்கும் மக்கள் வாழ்வியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? எதுவும் இல்லை.
சாங்கியம், மீமாம்சம், நியாய -வைசேடிகம், ஆசீவகம் போன்றவை வேத மரபுக்கு எதிராகப் பேசிய தத்துவங்கள். மக்களின் வாழ்வியலை இவை பேசவில்லை.
ஆனால் பௌத்தத்தை முன்வைக்கும் புத்தர் கடவுளை மறுத்தார், மக்களைப் பேசினார். கடவுளின் இருப்பை, ஆன்மாவை, புனிதத்தை, கடவுள் சார்ந்த அனைத்தையும் மறுத்தார். அவை மக்களுக்குப் பயன்படாதவை என்று ஒதுக்கினார். ஆரியத்தின் கருத்தியலால் அடிமைப்பட்ட மக்கள் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.
மக்களின் வாழ்க்கையோடு இணைந்து இருக்கும் இத்துன்பத்தில் இருந்து அவர்களின் சமூக விடுதலைக்காக, சமூக நீதிக்காக புத்தரால் அமைக்கப்பட்ட களம்தான் பவுத்தமும், அதன் தத்துவமும்.
ஆகவே மக்கள் போராளியாக விளங்கிய டாக்டர் அம்பேத்கர், புத்தரைத் தலைவராகவும், பவுத்தத்தை வாழ்வியல் வழிகாட்டும் நெறியாகவும் ஏற்றுக் கொண்டார், அதை முன்னெடுத்தார்.
4) இக்லாஸ்: அம்பேத்கரின் பௌத்தம் எவ்வாறாக பார்க்கப்பட வேண்டும்? மதமாகவா அல்லது பகுத்தறிவுக் கொள்கையாகவா?
எழில்: பௌத்தம் இருபெரும் பிரிவாக இருக்கிறது. ஒன்று புத்தரால் சொல்லப்பட்டது - தேரவாதம், அது திராவிட பௌத்தம். மற்றொன்று புத்தரின் பெயரால் சொல்லப்பட்டது, மகாயானம்.
இது பார்ப்பனிய பௌத்தம். இதை உருவாக்கிய நாகார்ஜுனர் எனும் பார்ப்பனர், பௌத்தத்தை சிதைக்க வேண்டும் என்ற பார்ப்பனிய நோக்கத்தோடு சிதைத்து விட்டார். புத்தர் பேசியது தம்மம். அதற்காக அமைந்தது சங்கம். இவை இரண்டும் இணைந்து பின்னாளில் பௌத்தம் ஆகியது. இது மதமல்ல, பகுத்தறிவால் கட்டப்பட்ட சித்தாந்தம். அம்பேத்கர் முன்னிறுத்தியது இதைத்தான்.
ஆனால் பார்ப்பனிய வேத மரபுக் கருத்து முதல் வாதத்தை முதன்மைப்படுத்தி, பவுத்தத்தைப் பேசுவது போல அதை பின்தள்ளும் மகாயானம், ஒரு மதமாகும்.
5) இக்லாஸ்: அம்பேத்கர் பௌத்தத்தை தழுவியபோது அதை பெரியார் எப்படிப் பார்த்தார்?
எழில்: அம்பேத்கரும், தந்தை பெரியாரும் ஒருவரை ஒருவர் எப்போதும் பிரித்துப் பார்த்துக் கொண்டவர்கள் இல்லை. கருத்தால், கொள்கையால் இருவரும் இணைந்தே இருந்தார்கள் இறுதி வரை .
பௌத்த மதத்திற்கு மாற வேண்டும் என்று அம்பேத்கர் முடிவெடுத்தபோது அவர் பெரியாரையும் உடன் அழைத்தார். அதற்குப் பெரியார், “நீங்கள் பௌத்தத்தில் சேருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். நான் பவுத்தத்திற்கு மாறினால், இந்துமத சாஸ்திரங்களை விமர்சிக்க முடியாது.
ஆகையால் நீங்கள் பவுத்தத்திற்கு மாறுங்கள்” என்று அவரை அனுப்பி வைத்தார். பெரியார் புத்தரின் தேரவாத பவுத்த நெறியை ஏற்றுக் கொண்டார். மகாயான பார்ப்பனிய புத்த மதத்தை எதிர்த்தார்.
6) இக்லாஸ்: இன்றைய சூழ்நிலையில் பௌத்தம் ஏன் தேவைப்படுகிறது?
எழில்: இன்றைய சமூகம் சாதியச் சமூகமாக இருக்கிறது. இன்று பௌத்தம் பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே. ஏனென்றால் புத்தரின் குரல்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக இருக்கிறது.
புத்தர் 'பதித்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். பதித் என்றால் 'விழுந்து கிடக்கும் அடிமைகள்' என்று பொருள். பதித்துகள் மீண்டெழ வேண்டுமென்றால், அவர்கள் ஏன் வீழ்ந்துள்ளனர்? என்று அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும்.
புத்தர் தனது பௌத்தத்தைத் 'துன்பம்' என்கிற சொல்லின் மூலம் கட்டி எழுப்புகிறார். இங்கு துன்பம் என்றால் பார்ப்பனியத்தால் ஏற்படும் துன்பம். சாதி, மதம், கடவுள், விதி போன்றவற்றைக் கொண்டு மக்களை பயமுறுத்தி பொருளாதாரத்தைச் சுரண்டி அடிமைப்படுத்தியதால் ஏற்பட்ட துன்பம் என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
பேதமையிலிருந்து தான் மக்களுக்கு தொடர்ந்து துன்பம் வந்து கொண்டிருக்கிறது, அதிலிருந்து மக்களை விழிப்படையச் செய்வது தான் புத்தரின் நோக்கம். புத்தரின் இம்முயற்சியை இன்றைய சமூக - அரசியல் சூழலில் டாக்டர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சரியாக முன்னெடுத்தார்கள்.
பார்ப்பனிய அதிகாரவர்க்கம் மக்களின் பேதமையை பயன்படுத்திக் கடவுளின் பெயரை சொல்லி மக்களை இழுக்கிறது. ஆனால் உண்மையில் பார்ப்பனியம் பார்ப்பனர்களின் நலனுக்கு மட்டும் கவனமாக ஒரு அமைப்பாகச் செயல்படுகிறது. பார்ப்பனியத்தை எதிர்க்கும் ஆற்றல் திராவிட பௌத்தத்திற்கு மட்டுமே உண்டு.
இராமனை பேசித்தான் வட இந்தியாவில் பார்ப்பனியம் இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்கிறது.
முருகனைப் பேசி தமிழகத்தில் முயல்கிறது. இது தான் இன்று பவுத்தத்தின் தேவையை கூடுதலாக உணர்த்துகிறது.
7) இக்லாஸ்: தமிழகத்தில் பௌத்தம் எப்படி இருந்தது? இப்போதைய நிலை எப்படி இருக்கிறது?
எழில்: தமிழகத்தில் சோழர் காலத்தில் பௌத்தம் தழைத்து இருந்தது. உதாரணமாக நாகப்பட்டினத்தில் இருந்த விகாரம், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோயில்களும் ஒரு காலத்தில் பௌத்த விகாரமாகவே இருந்துள்ளன. அவற்றைப் பிற்காலத்தில் பார்ப்பனர்கள் வேத பாடசாலைகளாகவும், இந்து கோயில்களாகவும் மாற்றிவிட்டர்கள்.
பௌத்த பள்ளிகள் அனைத்தும் இன்று வேத மரபு கோயில்களாக மாற்றப்பட்டுவிட்டன. எங்கெல்லாம் மலைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் பௌத்த சமண கோயில்கள் இருக்கும். உதாரணமாக அழகர்மலை, நாகமலை என்று நிறையவே சொல்லலாம். திருப்பதி கூட பண்டைய பவுத்த விகாரம் தான்.
பௌத்தம் தமிழகத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் பேரரசர் அசோகர். வரலாற்றுப் பூர்வமாக இதை வில்சன் ஸ்மித் தெளிவாக பதிவு செய்துள்ளார். எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு சைவ மற்றும் வைணவ சிந்தனை மரபு தமிழகத்தில் உருவாகின.
அதில் உருவாக்கப்பட்ட பாடல்களான தேவாரமும் திருவாசகமும் பௌத்தத்திற்கும் சமயத்திற்கும் எதிராகவே எழுதப்பட்டன. மன்னர்களை தன் வயப்படுத்தி, ராஜகுருவாக, மகா மந்திரியாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். அரசனின் சிந்தனையில் ஏறி அமர்ந்துகொண்டு பௌத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வைத்தார்கள்.
ஆன்மீகம் மற்றும் அரச அதிகார மட்டத்திலும் பௌத்த வெறுப்பு விதைக்கப்பட்டது. பௌத்தத்தை முற்றிலுமாக கழுவேற்றும் வேலையை கனகச்சிதமாக செய்து முடித்தார்கள். காலப்போக்கில் மக்களின் சிந்தனையில் எழுந்த மாற்றமும் அத்தோடு இந்திய அளவில் இஸ்லாமியர்களின் வருகையும் பௌத்தம் விழுந்ததற்கு ஒரு காரணம் என்பதை மறுக்கவியலாது.
பௌத்த வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கியமான காரணம் மகாயானம். புத்தரை அதுவரை பகுத்தறிவுவாதியாக பார்த்த மக்கள், பார்ப்பனிய மகாயானத்தின் மூலமாக புத்தரைக் கடவுளாக பார்க்க ஆரம்பித்தனர்.
மதத்திற்கு எதிரான போராட்டமாக தேரவாதம் இருந்த நிலையில், அதில் மகாயானம் ஊடுருவி புத்தரைத் திருமாலின் அவதாரமாக கூறியதால் புதிய பத்தத்தின் மூலமே பழைய பவுத்தம் சிதைக்கப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை பௌத்தம் மீண்டும் மறுமலர்ச்சியுடன் பரவ ஆரம்பித்துள்ளது. இன்றைய இளைஞர்களிடம் பௌத்தம் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. இது மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பெரியாரும், பௌத்தமும் தான் பார்ப்பனியத்தை, இந்துத்துவத்தை தமிழகத்தின் உள்ளே நுழைய விடாமல் ஒரு பெரும் தடுப்புச் சுவராக தடுத்துக் காத்து வருகிறது.
8) இக்லாஸ்: பெரியார் இறுதி வரை நாத்திகராகவே இருந்தார். அம்பேத்கர் மதம் மாறிவிட்டார். அம்பேத்கர் மதம் மாறியதை ஒரு குற்றமாகவே சிலர் பார்க்கிறார்கள். அதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன?
எழில்: ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு குறிப்பிட்ட மதத்தில் தான் பிறக்கிறார்கள். மதமாற்றம் என்பது ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாறுவது தான். இந்து என்கிற அடையாளத்துடன் பிறந்த அம்பேத்கர் பின்னர் பௌத்த மதத்திற்கு மாறுகிறார்.
இந்து மதம் மக்களுக்கு எதிராக இருப்பதாக கூறும் அம்பேத்கர், என்னுடைய பெரும்பான்மை மக்கள் விழிப்படையாமல் இருப்பதாலே அவர்களுக்காக நான் சமூகத்தில் பேசுகிறேன். இந்துமத பேராபத்தை முழுமையாக நான் உணர்ந்ததாலேயே நான் இந்து மதத்தைவிட்டு எளிய மக்கள் மதமான பௌத்தத்திற்கு மாறுகிறேன் என்கிறார்.
அம்பேத்கர் இந்துமத இரும்புக் கோட்டையிலிருந்து வெளியேறி பசுமையான ஒரு புல்வெளிப் பகுதிக்குச் சென்றார். பெரியார் மதம் மாறாமலே இந்துமத புரட்டை மக்களிடம் கொண்டு செல்கிறார். இருவரின் நோக்கம் ஒன்று, செயல்வழி வேறு அவ்வளவுதான்.
மக்களுக்குத் தம் துயரங்களைச் சொல்ல ஒரு கடவுள் தேவைப்படுகிறது. அதற்கு "ராமன் " இடம் போக வேண்டாம் என்று சொல்லும்போது, மக்களுக்கு ஒரு கடவுளைக் காட்ட வேண்டும். நன்மை சோர்வடைந்தாலும், தீமை எழுச்சி பெற்று விடக் கூடாது.
ஆகவே தான் ராமன் இருந்த இடத்தில் புத்தரை வைத்து " புத்த பகவான்" என்று கைகாட்டினார் அம்பேத்கர். அதுவும் அவரின் வாழ்நாளின் இறுதியை நெருங்கும் போது தான் இதைச் செய்தார். இதுவும் அப்போதைக்கு ஒரு சமரசம் தான் !
(நேர் காணல்: இக்லாஸ் உசேன்
படியாக்கம்: இளன் அறவாழி)
- எழில் இளங்கோவன்