அமெரிக்கக் குடி ஆட்சித் தலைவர் கென்னடி தம் நாட்டு வானவெளி வீரரை வரவேற்றார்! பாராட்டினார்! பெருமைப்பட்டார்!

ரஷ்யக் குடி ஆட்சித் தலைவர் குருஷ்சேவ் தம் நாட்டு விண்வெளி வீரர்களை வரவேற்றார்! முத்தம் கொடுத்தார்! புகழ்ந்தார்!

இந்த இரு நாடுகளும் இருபெரும் போட்டி சக்திகள்! ஒன்றை ஒன்று விழுங்கிவிடக்கூடிய அணுசக்தியும், விண்வெளி ராக்கெட் சக்தியும் பெற்றிருக்கும் நாடுகள். இந்த இரு நாடுகளையும் கண்டு இன்று உலகமே நடுங்கிக்கொண்டிருக்கிறது.

நம் பாரத நாடோ, பழம் பெரும் நாடு! எந்நாட்டிலும் இல்லாத மார்பு நூல், நெற்றிச் சித்திரம், உச்சிக் குடுமி, சாணிச்சாமி – இன்னோரன்ன இணையற்ற செல்வங்களைக் கொண்டுள்ள இன்ப நாடு!

அகில உலக அரசியல் துறையிலோ கூட்டுச் சேராக் கொள்கை கொண்ட நாடு! இந்த நாடும் பிற நாடுகளைப் போல் விஞ்ஞானத்தில் முன்னணியில் நிற்க வேண்டும் என்பது நேரு ஆசை. காமராசர் ஆசையும் கூட. இந்த ஆசையும் முயற்சியும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போதே படித்த மேதாவிகளின் பொம்மை விளையாட்டும் இன்னொருபுறம் நடந்து கொண்டேயிருக்கிறது.

அமெரிக்கத் தலைவரும் ருஷ்யத் தலைவரும் அவர்கள் சக்திக்கும் புத்திக்கும் ஏற்ற அளவு ஏதோ சங்கதிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நமது பிஞ்சுக் குடிஅரசின் அஞ்சாப் பெருந் தலைவர் அந்த இரு தலைவர்களுக்கும் இளைத்தவரல்ல! உடலில் இளைத்திருக்கலாம், ஆனால் வயதில் மூத்தவர்! அறிவிலே அதி மூத்தவர்!

இதோ ஒரு புரட்சிகரமான நிகழ்ச்சி!

“இம்மாதம் (1963 சூன்) 28 ஆம் தேதி ராஷ்டிரபதி டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று காலை 9 மணி முதல் 2 வரையில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்; பிறகு இறைவனைத் தரிசிப்பார்.''

அடி சக்கை! விண்வெளி வீரணாவது வெண்டைக்காயாவது. அதெல்லாம் நிலையற்றது! அற்பமானது! கோபுரமும் கும்பாபிஷேகமுமே நிரந்தரமானது.

அணைக்கட்டும் பாலமும் அழியக்கூடியவை! அதாவது இந்த உடலைப் போன்வை! கோபுரமும் கும்பாபிஷேகத் தரிசனமும் அழியாத காட்சிகள்! அதாவது உடலினுள்ளே (டாக்டர்களுக்குத் தெரியாமல் பதுங்கிக் கிடக்கின்ற) ஆன்மாவைப் போன்றவை!

இந்நாட்டுக்கு இன்று அவசரத் தேவை எது? குண்டு வீச்சு விமானமும், குளிர் தாங்கும் படையும் என்பார்கள், நாத்திகப் பிண்டங்கள்!

அல்லவே, அல்ல; அழுத்தமாக அறைவேன்! இடிந்த கோபுரங்களையும் விழுந்த மதில் சுவர்களையும் புதுப்பிக்க வேண்டும்! இவற்றைத் தண்ணீர் ஊற்றி; முழுக்காட்ட வேண்டும்! (ரிசர்வ் பாங்க் கட்டடத்தையும், வருமானவரிக் கட்டத்தையும், கல்லூரிக் கட்டடத்தையும் குளிப்பாட்டும் நாள் விரைந்து வந்து கொண்டிருக்கிறது! அந்நாளே நம் நாட்டின் பொன்னாள்!)

ஏன் தெரியுமா? எம் பெருமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கிருபை என்றும் இருந்தால் போதும். சீனாக்காரன் ஒரு லட்சம் படை வீரரை அணிவகுத்து நிறுத்தியிருக்கிறான். என்கிறார்களே! தூள்! தூள்! மதுரையம்பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள (இக்கோயில் பழுதாகிவிட்டதால் பார் அட்லா பக்தரின் கிருபையை நாடியது ஒருபுறமிருக்கட்டும்!) எம்பிரான் நினைத்தால் சீனர் யாவரும் சீனிப் பொடியாவது திண்ணம்!

இது தெரியாமலா கிரீசுக்குச் சாக்ரட்டீஸ் கிடைத்தது போலப் பாரத மாதாவுக்கு கிடைத்துள்ள மாபெரும் தத்துவஞானி இம்மாத இறுதியில் மதுரைக்கு எழுந்தருளப் போகிறார்!

மதுரை மணமக்களை (இவர்கள் ஆண்டுதோறும் பழந்தாலி நீக்கிப் புதுத்தாலி கட்டும் புரட்சிக்காரர்கள்!) தரிசிக்கும் நம் பாரதத் தலைவர் பின்வருமாறு வேண்டிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“64 திருவிளையாடல் புரிந்துள்ள அரும்பெருங் கடவுளே! கடம்பவனத்தை அன்று அழித்தது போல் இன்று சீனப்படையை அழியுங்கள்! சமணரைக் கழுவேற்றச் செய்தது போல், சீனருக்கு எலிபாஷாணத்தையாவது, மெடிகல் காலேஜ் கான்டீன் சாப்பாட்டையாவது கொடுத்துத் தீர்த்துக் கட்டுங்கள். அன்று வைகையை வரவழைத்தது போல் இன்று கங்கையையும், பிரம்மபுத்திரா நதியையும் சீனப்படை பக்கம் திருப்பி விடுங்கள். அன்று கடல் வற்ற வேல் விட்டது போல் இன்று இமயம் நடுங்க குண்டு வீசியருளுங்கள். அன்று தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பக்தனுக்கு மோட்சமளித்தது போல் இன்று நன்றியைக் கொன்று போர் வெளியைப் புணர்ந்துள்ள சீனப் படையைக் கைலாசத்துக்கு அனுப்பி வையுங்கள்! (கைலாச மலையுச்சிகூட சீனர் படையின் தலைக்கு மேலே தான் இருக்கிறது!)

– இப்படியெல்லாம் இறைஞ்சுவார் எங்கள் தலைவர், மேல்நாடு சென்று புகழ்க்கொடி நாட்டித் திரும்பும் உலக தத்துவஞானி, டாக்டர் ராதாகிருஷ்ணன்!

ஆகவே மதுரைப் புரட்சிக்குப் பிறகு

அச்சமில்லை அச்சமில்லை

                அச்சமென்ப தில்லையே!

சீனப்படையின் வீரரெல்லாம்

                சீறிவந்து தாக்கிடினும்

மதுரை ஈசன் கோயில்முன்பு

                மனிதவெள்ளம் கூட்டிடுவோம்!

– நாத்திகம் 16.6.1963

Pin It