நமது சமதர்ம அபிப்ராயப்படி, காந்தியார், தாழ்த்தப்பட்டோர்பால், உண்ணாவிரதம் கொள்வதாகத் தீர்மானித்தது, ஆங்கிலத் துரைத்தனத்தாருக்குப் பெருத்த வெற்றி என்றே கூறல் வேண்டும். நமது பிரிட்டிஷ் அரசியல் தந்திரத்தின் வெற்றி. அதனால் ஸ்தாபிக்கப்பட்டதென்று அறிதல் வேண்டும். காந்தியார், தான் கொண்ட சுயராஜ்யப் போரை விட்டுவிட்டு, இந்த உபயோகமற்ற பிரச்சினையில் தற்கொலை செய்துகொள்வதாக உடன்பட்டது, பிரிட்டிஷாருடைய அரசியலுக்கு மாபெரும் வெற்றி எனக் கருதல் வேண்டும். இதை Triumph of British Diplomacy என்றே அறிஞர் கருதுவர். பிரிட்டிஷரின் அரசியல் தந்திரத்தில், நமது காந்தியார் எந்த மூலை அவர் எங்குமில்லை என்றே சொல்லாம்.

 இவர் இவ்வாறு தாழ்த்தப்பட்டோர்பால், பரிந்து நடிப்பதின் காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இவருடைய சென்ற ஜீவ சரித்திரத்தைச் சற்று நோக்கிப் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில், சூலுஸ் (Zules) என்ற ஆப்பிரிக்கர்களைக் கலகப்படுத்திவிட்டு, பிறகு ஆங்கிலேயார் அவர்களை நாசமாக்கியதைப் பார்த்து இருந்தவவ், சென்ற 19 ஆம் நூற்றாண்டு இறுதியில் போயர்களுடன் (Boers) கூடியிருந்து விட்டு அவர்கள் சண்டையில் அவர்கள் விரோதியருக்கு உதவியாய் இருந்தார். யூரோப்பியன் மகா சண்டையில் (The great European War) பிரிட்டிஷாருக்கு உதவ சேனையைத் தயாரித்து, அந்தச் சண்டை முடிந்த பிறகு, பிரிட்டிஷாருக்கே விரோதமாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். அதையாகிலும் செம்மையாக முடிவுக்குக் கொணர்ந்தாரா? இல்லை. 

யாரோ சிலர் கொல்லப்பட்டார்களென்று 50000 பேர் சிறையில் கிடக்கப் பர்டோலியில் அதனை நிறுத்திவிட்டார். இதுதானா இவர் செய்த காரியம் இரு பிரிட்டிஷாரைக் கொன்றவனைப் புகழ்ந்து பேசினார்! இத்துடன் இவர் முரண்  நிற்கவில்லை. நேற்று உபயோகமில்லாத உப்பு மறியலை ஆரம்பம் செய்து, அதனால் 60000ஆயிரம் பேரை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு டெல்லி உடன்படிக்கையில் அதனையும் அவர்களையும் கைவிட்டார்.... இது நிற்க. சென்ற ஆறு மாதமாகச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து விட்டு சுமார் 60, 70 ஆயிரம் பேரை ஜெயிலில் அடைக்கச் செய்து, இந்துக்களையும் பஞ்சமர்களையும் பிரிக்கின்றதாக, தனித் தொகுதியின் பேரில் தனது கோபா வேசத்தைக் காட்ட உண்ணா விரதம் பூண்டு, தான் சாகப் போவதாகப் பறைசாற்றிவிட்டார்!!! இது என்ன அகோரக் காட்சி என்று கேட்கின்றோம். இதனால் உலகம் ஒன்று தெரிந்து கொள்ளல் வேண்டும். அதாவது காந்தியார் எவ்வளவு உலகப் பிரசித்தம் பெற்றவராயினும், அவரை நம்பி எந்தக் காரியமும் செய்யலாகாதென்பதே. இதுரை நம்புவதைவிட, சேற்றில் நாட்டியக் கம்பத்தை நம்பிக் கரை ஏற எண்ணலாம்!

இவர் வாழ்நாள் முழுமையுமே முரண்பட்ட காரியங்களாகவே இருந்து வருகின்றன என்று யாதொரு ஆட்சேபணையும் இன்றிக் கூறலாம். இவர் புகழ், தென் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பியது. அங்கேயாகிலும் நின்று, தான் எடுத்த காரியத்தைச் சாதித்தாரா? 5, 6 வருஷம் அங்கே கலகத்தை மூட்டிவிட்டு, அங்கு வாழும் இந்தியக் குடிமக்களை நடு ஆற்றில் விட்டு, இந்திய நாட்டுக்கு வந்துவிட்டார்! இத்யாதி, Series of defeats தோல்வியை வரிசை வரிசையாக அடைந்தவரை ஏன் உலகம் இன்னும் நம்புகின்றதோ, அது நமக்கு விளங்கவில்லை? இவருடைய எதார்த்த மனப்பான்மையைத் தெரிந்து கொள்ளும் மனமுடையோர்,  ‘Sunday Advocate' என்ற வாரப் பத்திரிகையில், ‘Gandhi as I known him' (நான் தெரிந்து கொண்ட காந்தி) – என்ற கட்டுரைகளை வாசிக்கலாம்.

இவர் உண்ணாவிரதக் கிளர்ச்சி, வெறும் Clap Trap. அதாவது, வெறுங் கூச்சல் என்றே நமக்குத் தோன்றுகின்றது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனித்தொகுதி கொடுத்தால், என்னவென்று கேட்கின்றோம்? இந்தத் தனித்தொகுதியால் தாழ்த்தப்பட்டோருக்கு நியாய ஸ்தலங்களில் சில அங்கத்தினர்கள் அதிகமாக வந்தார்களென்று வைத்து கொள்வோம். இதனால், இவர்கள் சாதித்து விடப் போவதென்ன? தற்கால ஆங்கிலேயர் திட்டத்தில் யாருக்கு என்னதான் கிடைக்கப் போகின்றது என்று கேட்கின்றேன்? உங்களுக்கும் பே, பே; உங்கள் அப்பனுக்கும் பே,பே; உன் பாட்டனுக்கும் பே, பே; என்று சொல்லிக் கொண்டிருக்கும் திட்டத்தில், யாருக்கு என்ன அதிகச் சுதந்திரம் கிடைக்கப் போகின்றது? விஷயம் இவ்வாறிருக்க, ஏன் இந்த வீண் கூச்சல் என்று கேட்கின்றோம்? இதற்குக் கூச்சல் யாவும் பகல் வேஷமென்பதே எங்கள் துணிபு.

இந்துக்களை, ஜாதி இந்துக்களென்றும், ஜாதியில்லா இந்துக்களென்றும், இரு வகுப்பாக, இந்தத் தனித் தொகுதி பிரித்து விடுகிறதாம்! பஞ்சமர்கள், தனித்தொகுதியால் வேறு பட்டுவிடுவார்களாம்!! தனித் தொகுதியால் இந்துக்கள் பஞ்சமர்களை எதிரிகளாகப் பார்ப்பார்களாம்! இவ்விருவருடைய ஒற்றுமைக்குப் பகை வந்துவிடுமாம்!!! இந்தக் கதையைக் கேட்க, ஒரு பழமொழி நமது ஞாபகத்திற்கு வருகிறது. “ஆடு நனைகின்றதென்று ஓநாய் குந்தி அழுகின்றதாம்'' இந்துக்கள் கடந்த 5000 வருஷமாக, பள்ளனையும், பறையனையும், பஞ்சமனையும், தோட்டியையும், பங்பியையும், திய்யாவையும், சாணõரையும் மற்றும் பல தீண்டாதாரையும், தாழ்த்தப்பட்டோரையும் தங்கள் தோழர்களாகப் பாவித்து வந்ததைக் கெடுக்க இந்தத் தனித் தொகுதி நடுவில் வந்து விட்டதாம்! உலக ஒற்றுமைக்கும் அழிவுவந்து விட்டதாம்!! என்ன விந்தை!!!

கோடான கோடி தாழ்த்தப்பட்டோர் வீடு, வாசல், உணவு, ஆடை, கல்வி, சுகாதாரம், வைத்தியம், இறந்தால் வாய்க்கரிசிக்குக் கூட வழியில்லாமல் இருக்க, இரண்டொரு ஓட்டுகளால், என்ன வந்துவிடப் போகிறதோ ! அது நமக்கு விளங்கவில்லை. கடந்த 50 வருஷங்களாக இந்தியச் சட்டசபைகளில், பொதுத் தொகுதியால், இந்துக்கள் என்ன பஞ்சமர்கள்பால் சாதித்தார்கள்? எனவும் கேட்கின்றோம். இந்தக் காலமெல்லாம் 5 கோடி பஞ்சமர்களுக்கு இந்துக்கள் என்ன செய்துவிட்டீர்கள்? எத்தனை கிணறுகளைக் கட்டினீர்கள்? எத்தனை வீடு கட்டு வித்தீர்கள்? எத்தனை நிலம் கொடுத்தீர்கள்? எத்தனை ஆஸ்பத்திரிகள் கட்டுவித்தீர்கள்? எத்தனை சுகாதார ஸ்தாபனங்கள் உண்டாக்கினீர்கள்? எத்தனை இலவசப் படிப்புக்கு உதவி அளித்தீர்கள்? எத்தனை புத்தகச்சாலைகளை உண்டாக்கினீர்கள்? எத்தனை சுத்தத் தண்ணீர் வசதிகள் ஏற்பாடு செய்தீர்கள்? 

ஐந்து கோடித் தாழ்த்தப்பட்ட பேரின் தரித்திரத்தையும் மூட நம்பிக்கையையும், ஒழிக்க என்ன செய்தீர்கள்? என்ன செய்கின்றீர்கள்? என்ன செய்யப் போகின்றீர்கள் எனவும் கேட்கின்றோம்? ஏன் ஐயா இந்த உபயோகமற்ற தனித் தொகுதி பொதுத் தொகுதியைப் பற்றி இவ்வளவு கிளர்ச்சி? இவ்வளவு வீண் கூச்சல்? உலகம் கண்மூடிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். சான்றோர் உலகம் கண்விழித்துக் கொண்டுதான் இருந்து வருகிறது. ஒரு காலம் வரும் 5 கோடி தாழ்த்தப்பட்டோர்கள் கண்விழிக்க, உங்களுடைய பகல். வேஷம் அன்றுதான் வெளியாகும்.

5000 வருஷமாக ஒன்றும் பஞ்சமர்பால் சாதிக்காத நீங்கள் பொதுத்தொகுதி சைமன் திட்டத்தில் வந்த உடனா சாதித்துவிடப் போகின்றீர்கள்? “கடித்த பாக்கைக் கொடாத சித்தப்பன் வழியில் கொண்டுவிடப் பார்க்கின்றானாம்''!

இத்தனை வருஷம் பொதுத் தொகுதியால் கிடைக்காத லாபம் தனித் தொகுதியால் கிடைக்கட்டுமே! ஏன் இதைப் பரீட்சிக்கலாகாது? பஞ்சமர்கள் ஆங்கிலத் துரைத்தனத்தில் சாதிப்பதைப் பார்ப்போமே! ஏன் கூடாது?

Pin It