(விகடன் மேடையில் பழ.நெடுமாறன் பதில்கள்)

ராஜபக்சேவை எந்தக் காலத்திலாவது தண்டித்துவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?  – ராஜராஜன், காட்டுமன்னார்குடி

நிச்சயமாக!

இரண்டாம் உலகப் போரில் 50 லட்சத்துக்கும் அதிகமான யூத மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தது ஹிட்லர் கும்பல். போரின் முடிவில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதும், மற்ற குற்றவாளிகளுக்குச் சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததும் வரலாறு.

செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார்.

அண்மையில் சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

ஒரு நாட்டின் அதிபராக இருப்பது, மக்களைக் கொல்வதற் கான உரிமம் அல்ல. அப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளும்போது, நாகரிகச் சமுதாயம் ஏதேனும் ஒரு வகையில் நிச்சயம் தண்டிக்கும். ஆகவே, சர்வதேச சமூகம் ராஜபக்சேவையும் போர்க் குற்றவாளியாக அறிவித்து, தண்டனை வழங்கும் காலம் நிச்சயம் வரும். அதற்கு ரொம்பக் காலமும் ஆகாது!

இலங்கையில் முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் இப்போதைய நிலை என்ன?

நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. முகாம்களில் இருந்து வெளியேறிப் போகச் சொல்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், வெளியில் சென்று அந்த மக்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில், அவர்களின் நிலங்களில் எல்லாம் சிங்களர்கள் குடியேறிவிட்டார்கள். முகாம்களிலும் இருக்க முடியவில்லை, குழந்தைகள், வயதான பெரியவர்கள் உட்பட எல்லோரும் நல்ல உணவோ, தங்கும் இடமோ கிடைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படித் தமிழர்கள் பட்டினியாலும் நிர்க்கதியாலும் சாகவேண்டும் என்றுதான் ராஜபக்சே அரசு எதிர்பார்க்கிறது!

Pin It