தமிழீழ மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாத சிறிலங்க அரசு நிகழ்த்தியுள்ள, நிகழ்த்தி வருகிற கொடுமைகள் மீது உலகின் கவனம் குவிந்துள்ள நேரம் இது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூவர் குழு அளித்துள்ள அறிக்கை இந்தக் கொடுமைகள் மீது ஒளி பாய்ச்சியுள்ளது. இலண்டனைச் சேர்ந்த அலைவரிசை 4 (Channel 4) வெளியிட்ட 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' ஆவணப்படம் இந்த உண்மைகளை மேலும் உறுதி செய்துள்ளது.

       ஐ.நா மூவர் குழு அறிக்கை சிங்கள இராசபட்சே அரசின் மீது ஐந்து கடுமையான குற்றங்களை நம்பும்படியான குற்றச்சாட்டுகள் என்று வகைப்படுத்தி வரிசைப்படுத்தியுள்ளது:

       (1) விரிவான அளவில் தொடர்ந்து நிகழ்த்திய குண்டு வீச்சுகளால் பெருந் தொகையான பொது மக்களைக் கொன்றது;

       (2) மருத்துவமனைகள் மீதும் மனிதநேய நிறுவனங்கள் மீதும் குண்டு வீசியது;

       (3) பாதிப்புற்ற மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட மனிதநேய உதவிகள் வழங்க மறுத்ததும் கிடைக்கவிடாமல் செய்ததும்;;

       (4) உள்நாட்டுப் புலம் பெயர்ந்தோரும் புலிப் படைப் போராளிகள் என்ற ஐயத்திற்குரியோரும் உட்பட, போரினால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்து போகாமல் எஞ்சி இருக்கக்கூடியவர்கள் ஆகியோருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்;

       (5) போர் நடைபெற்ற பகுதிக்குப் புறத்தே ஊடகத்துறையினருக்கும் அரசைக் குற்றாய்;வு செய்வோருக்கும் எதிரான மனித உரிமை மீறல்கள்.

       சிங்கள அரசு செய்துள்ள இந்த ஐந்து குற்றங்களையும் நம்பும்படியான குற்றச் சாட்டுகள் என்று ஏற்றுக் கொண்டுள்ள வல்லுநர் குழு இவற்றை ‘போர்க் குற்றங்கள்’ (war crimes) என்றும் ‘மானுட எதிர்க் குற்றங்கள்’ (crimes against humanity) என்றும் வகைப்படுத்தியுள்ளது. இந்தக் குற்றங்கள் எவ்வாறெல்லாம் அனைத்து நாட்டுச் சட்டங்களை மீறக்சூடியவை என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது.

       இவ்வகையில் ஐ.நா அறிக்கை என்பது சிங்களப் பேரினவாதத்தின் கழுத்தை நெறிக்கும் சுறுக்குக்.......... கயிறாகவும், தமிழர்களின் கையில் கிடைத்த போர்க் கருவியாகவும் அமைந்து விட்டதே மெய். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளின்.......... தொகுப்பாகச் சிங்கள அரசின் மீது இனக்கொலைக் குற்றம் சுமத்தாமல் விட்டது ஒரு குறைதான். இதற்கான........... காரணங்கள் இரண்டு.

       முதலாவதாக மேற்குறிப்பிட்டவாறு போர்க் குற்றங்களும் மானுட எதிர்க் குற்றங்களும் யாரால் யாருக்கு எதிராக இழைக்கப்பட்டன என்பதை வல்லுநர் குழு கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. கொடுமை புரிந்த சிறிலங்காவின் மொத்த ஆயுதப் படையினரும் இனத்தால் சிங்களர்கள் என்பதால் அது சிங்களப் படையே தவிர, இரு இனத்தவருக்கும் பொதுவான இலங்கைப் படை அன்று. சிறிலங்காவின் முப்படைகளில் எங்கோ ஓரிரு தமிழர்கள் ஏதோ காரணத்தால் இடம்பெற்றிருப்பதாகச் சிங்கள அரசு எடுத்துக் காட்டலாம். ஆனால் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைத் தீவின் மக்கள் தொகையில் தங்களுக்குள்ள தகவுப் பங்குக்கேற்பவோ அதற்கு நெருக்கமான அளவிலோ ஆயதப் படைகளில் இடம் பெற்றிருப்பதாக யாராலும் சொல்ல முடியாது. சிறிலங்கப் படை என்றாலே சிங்களப் படைதான்.

       அதேபோல், கொல்லப்பட்டவர்களும் கொடுங்காயமுற்றவர்களுமான பொதுமக்கள் அனைவரும் தமிழர்களே. முறைப்படி சரணடைந்து முறைகேடாகக் கொல்லப்பட்ட நடேசன் மனைவி ஒருவர்தான் சிங்களர் எனலாம். ஒரு தமிழ் வீரனை மணந்து தமிழ் இனத்தின் விடுதலைக்கான களத்தில் உயிர் கொடுத்தவர் என்ற முறையில் அவரையும் தமிழச்சியாகவே மதிக்கலாம். ஆக, கொலை புரிந்தது சிங்களப் படை,........... கொலையுண்டவர்கள் தமிழ் மக்கள். நடந்தது இனக் கொலையே என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

இனக் கொலை என்றால் என்ன?

       இட்லரின் செர்மனியில் யூதர்களுக்கு நாஜிக்கள் இழைத்த கொடுமைகள் தொடர்பான நியூரம்பர்க் வழக்கு விசாரணை முடிந்த பிறகு, இந்தக் கேள்விகளுக்கு விடை காண 1948 இறுதியில் ஜெனீவாவில் ஐ.நா சிறப்பு மாநாடு இயற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் 1951இல் உலகச் சட்டமாக ஏற்கப்பட்டு, 1994இல் செயலுக்கு வந்தது. இனக் கொலை என்பதற்கு அது வரையறை செய்துள்ள இலக்கணம் இதுதான்:

       ஒரு தேசிய இனத்தையோ, பண்பாட்டு இனத்தையோ, மரபு இனத்தையோ, மதக் குழுவையோ முழுமையாக அல்லது பகுதியாக அழிக்கும் நோக்குடன் செய்யப்படும் கீழ்வரும் அனைத்துச் செயல்பாடுகளும் இனக் கொலை ஆகும்.

மேற்சொன்ன

       அ) ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது,

       ஆ) ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் வகையிலோ உள்ள வகையிலோ கொடுந்தீங்கு செய்வது,

       இ) ஒரு குழுவை முழுமையாகவோ பகுதியாகவோ உடல் வகையில் அழிப்பதற்கு உரிய வாழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்குவது,

       ஈ) ஒரு குழுவினரிடையே குழந்தைப் பிறப்பதைத் தடுக்கத் திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொள்;வது,

       உ) ஒரு குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு குழுவினருடன் இணைத்துவிடுவது.

       இனக் கொலைக்கான இந்த இலக்கணக் கூறுகள் ஒவ்வொன்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள அரசின் நடவடிக்கைகளுக்குப் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. எப்படிப் பார்த்தாலும் இனக் கொலைக்கான முக்கிய இலக்கணக் கூறுகள் அனைத்தும் ஈழத் தமிழர்கள் தொடர்பாகச் செயல்பட்டிருப்பதையும் இன்றளவும் செயல்பட்டு வருவதையும் எளிதில் உணரலாம். இதற்கான தரவுகள் ஐ.நா மூவர் குழு அறிக்கையிலேயே ஏராளமாய் உள்ளன. அப்படி இருந்தும் அவர்கள் இந்தக் குற்றங்களைத் தொகுத்துப் பார்த்து இனக் கொலைக் குற்றம் என்று வரையறை செய்யாமல் விட்டது ஒரு குறைபாடுதான்.

       இதற்கொரு காரணம் மூவர் குழு போரின் இறுதிக் கட்டத்தை நுணுக்கமாக ஆய்வு செய்ததுபோல் போரின் முற்கட்டங்களையும், போருக்கான அரசியல் காரணிகளையும், அதன் வரலாற்றுப் பகைப்புலத்தையும் போதிய அளவு ஆய்வு செய்யத் தவறிவிட்டது என்பதாக இருக்கலாம்.

       இந்த ஒரு குறைபாட்டுக்காகவே ஐ.நா அறிக்கையைப் புறந்தள்ளவோ, அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துப் பார்க்கவோ தேவையில்லை. மூவர் குழுவில் இடம்பெற்ற மாருஸ்கி தாருசுமன் (இந்தோனேசியா), ஸ்டீவன் ரத்னா (அமெரிக்கா), யாஸ்மின் சூகா (தென் ஆப்பிரிக்கா) ஆகிய மூவரும் அப்பழுக்கற்ற மனித உரிமைப் பற்றாளர்கள், ஐயத்திற்கு இடமற்ற நேர்மையாளர்கள், தேர்ந்து தெளிந்த ஆய்வாளர்கள்.

       ஐ.நா மூவர் குழு மட்டுமல்ல, டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயமும் கூட போர்க் குற்றங்கள் என்றும் மானுட எதிர்க் குற்றங்கள் என்றும் தீர்ப்பளித்ததே தவிர இனக்கொலை என வரையறுக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் வெறும் சட்ட நுட்பங்களின்படி இந்தக் குற்றங்களைப் பார்க்காமல், வரலாற்றுப் பகைப்புலத்தில் வைத்துப் பார்க்கும் போதுதான் இனக் கொலை என்று தெளிவாகப் புலப்படும். 2008 - 09 காலத்தில் நிகழ்ந்த இறுதிப்போரும், அதன் உச்சகட்டமாக நிகழ்ந்த முள்ளி வாய்க்கால் முழுப்பேரழிவும் தற்செயலாகவோ திடுதிப்பென்றோ நிகழ்ந்துவிடவில்லை. அறுபதாண்டுக்கு மேற்பட்ட இனப் பாகுபாடு, இன ஒடுக்குமுறை, அரசப் பயங்கரவாதம், முப்பதாண்டுகால இன அழிப்புப் போர்… இவற்றுக்கெல்லாம் கொடுமுடியாக நிகழ்ந்த கொடுமைகளே இவை என்பதை மறக்கலாகாது.

       சிங்கள அரசு புரிந்தவை போர்க் குற்றங்களா? ஆம், போர்க் குற்றங்களே@ ஆனால் போர்க் குற்றங்கள்; மட்டுமல்ல. அவை மானுட எதிர்க் குற்றங்களா? ஆம், மானுட எதிர்க் குற்றங்களே@ ஆனால் மானுட எதிர்க் குற்றங்கள் மட்டுமல்ல. இந்தக் குற்றங்களைத் தொடர்ந்து கூட்டிப் பார்த்தால் இனக் கொலைக் குற்றம் என்ற முடிவு கிடைக்கும்.

       போர்க் குற்றங்களுக்காகவும் மானுட எதிர்க் குற்றங்களுக்காகவும் மட்டுமல்லாமல் இனக் கொலைக் குற்றங்களுக்காகவும் கூட சிறிலங்க அரசியல் தலைவர்கள் படைத் தலைவர்கள் மீது அனைத்து நாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையை நாமும் வலியுறுத்துகிறோம்.

       இதற்கென ஐ.நா பாதுகாப்பு மன்றம் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநரிடம் பொறுப்பு ஒப்படைக்க வேண்டுமெனக் கோருகிறோம். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சர்வதேசச் சட்டமீறல் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு ஒரு ஆணையத்தை அமைக்கும் படியும் வலியுறுத்துகிறோம்.

       ஐ.நா பொதுச் செயலாளர் மூவர் குழுவை அறிவித்தபோதே அதற்கெதிராக அருவருக்கத்தக்க முறையில் வம்பாடியது சிங்கள அரசு. ஐ.நா குழு அறிக்கையை ஏற்கவோ, அந்த அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்தவோ முடியாதென்று மறுத்து அடாவடித்தனம் செய்கிறது. அலைவரிசைக் காட்சிப்படுத்திய உண்மைகளைக் கூட ஒப்புக்கொள்ள மறுத்து உலகின் கண்களை மூடப் பார்க்கிறது.

       தமிழர்களிடம் காடையர்களாக நடந்து கொண்டவர்கள் இப்போது உலகத்திடமே அப்படி நடந்து கொள்வதைப் பார்க்கிறோம். இந்நிலையில் உலக நாடுகளும் ஐ.நா மன்றமும் செய்யப்போவது என்ன? நாம் கேட்கிறோம்: தமிழர்கள் தங்கள் மீது வேண்டுமென்றே குண்டுவீசிக் கொலைபாதகம் செய்த அரசின் கீழ்தான் தொடர்ந்து வாழ வேண்டும், அதுதான் அவர்களின் தலைவிதி என்று சொல்லப் போகிறீர்களா? இலட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களை விடவும் சிறிலங்காவின் இறையாண்மையே உயர்வானது, மதிப்புமிக்கது என்று தீர்ப்புரைக்கப் போகிறீர்களா? இத்தனைக்கும் பிறகு இப்போதாவது தமிழீழ மக்கள் தங்களுக்கான தனியரசை அமைத்துக் கொள்ளும் உரிமையை, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் தன்தீர்வு உரிமையை ஒப்புக்கொண்டு அதன் ஈடேற்றத்திற்கு, தனித் தமிழீழம் பிறப்பதற்குத் துணை செய்யுங்கள் என அறைகூவி அழைக்கிறோம். நாமும் அதற்காகப் போராடுவோம்.

       இறுதியாகவும் உறுதியாகவும் சொல்கிறோம், தமிழீழத்தில் நடைபெற்றது வெறும் போர்க் குற்றமன்று. அது அப்பட்டமான இனக் கொலையே! ஈழத் தமிழ் மக்களின் இன்னல்களுக்கு ஒரே தீர்வுதான் உண்டு - தனித் தமிழீழம்!