இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களை நாடுகடத்தியும் ஐக்கிய நாடுகள் சபையினருக்கு நிரப்பந்தம் கொடுத்தும் அவர்களை வெளியேற்றியும் சாட்சியமற்ற ஒரு யுத்தத்தை நடத்த விரும்பியது. என்றாலும், கைத்தொலைபேசியினதும் தொலைமதித் தொழில்நுட்பத்தினதும் அசாதாரணமான சக்தியை அதனால் வெளியேற்ற முடியவில்லை. எமது பல்லாண்டு கால யுத்தகள ஊடக அனுபவத்தில் நான் என்றும் பார்த்திராத, வலியுடன் பதிவுசெய்யப்பட்ட, மணிக்கணக்கிலான மிகக் கொடூரமான காட்சிப் பதிவுகளை நாங்கள் அகழ்ந்தபடி நடந்தோம். இலங்கையைப் பொறுத்து மட்டுமல்ல, சர்வதேசியச் சட்டங்கள் மீறப்படப்போகும் எதிர்காலத்திலும் கூட, ஐக்கிய நாடுகள் சபை செயல்படத் தவறுமானால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த உக்கிரமான கேள்விகளை இலங்கையின் கொலைக்களங்கள் நமக்குள் எழுப்புகிறது.

இயக்குனர் ஹலும் மக்ரே

இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம்

நான் உள்நாட்டு யுத்தங்கள் தொடர்பில் முன்னரும் அறிக்கையிட்டு வந்திருக்கிறேன். எண்பதுகளில் மத்திய அமெரிக்காவில் இடம் பெற்ற யுத்தங்கள் பலவற்றை நான் அறிக்கையிட்டிருக்கிறேன். ஆனாலும் இது போன்ற படுகொலை ஆதாரங்களைக் கொண்ட சிவில் யுத்தத்தை நான் காணவில்லை. அதுவும் அரசாங்கப் படையினராலேயே அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்கள்.

தொகுப்பாளர் ஜான்ஸ்நோ

இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம்

I

eelam_women_335வரலாற்று ரீதியில் கில்லிங் பீல்ட்ஸ் (killing fileds) எனும் ஆங்கிலச் சொல் எழுப்பும் அர்த்தம் ஒரு குறிப்பிட்ட நாட்டுடனும் ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுடனும் சம்பந்தப்பட்டது. சம்பந்தப்பட்ட நாடு கம்போடியா. சம்பந்தப்பட்ட நிகழ்வு 1976 முதல் 1979 வரை கம்போடிய சர்வாதிகாரியான போல்பாட்டின் கீழ் இடம்பெற்ற படுகொலை நிகழ்வு. கம்போடிய நாடு பாரிய நெல் வயல்களின் பரந்து விரிந்த நிலம். அந்த நெல் வயல்களிலெங்கும் 1976-1979 காலகட்டங்களில் ஆயிரக்கணக்கான கொல்லப்பட்ட கம்போடிய மக்களின் மக்கிய உடல்கள் கிடந்தன. மழைச்சேற்றில் நனைந்தபடி நெற்கதிர்களுக்குப் பதில் மண்டையோடுகளும் எழும்புக்கூடுகளும் அந்த வயல்களில் சிதறிக் கிடந்தன.

20,000 வரையிலான இத்தகைய மரணவயல்களை போல்பாட் காலம் உருவாக்கியது. பூர்வீகக் கம்போடியர்களைத்; தவிரவுமான வியட்நாம் இனத்தவர், சீன இனத்தவர்,தாய் இனத்தவர், மலாய் இனத்தவர், சாம் இஸ்லாமிய இனத்தவர், கிறித்தவர், வைதீக புத்தவழிபாடு செய்வோர் என அனைத்துச் சிறுபான்மையினங்களையும் சேர்ந்த இருபது இலட்சம் வரையிலானவர்களும், கம்போடியக் கல்வியாளர்களும், அறிவுஜீவிகளும் போல்பாட் முன்வைத்த ‘பூஜ்ய வருடத்துக்குத் திரும்பும் கம்யூனிச மாதிரி’ச் சோதனைக்காகக் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் படுகொலைகளை பூஜ்ய வருடத்திலிருந்து துவங்குதல் (starting from zero year) எனும் கருத்தியலின் பெயரால் நிகழ்த்திய கொலைகாரன் போல்பாட், தனது இறுதிக் காலத்தில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டானா அல்லது கொள்ளை நோயில் மரணமுற்றானா என, எவ்வாறு மரணமுற்றான் என எவருக்கும் தெரியாத வகையிலேயே கம்போடியத் தாய்லாந்து எல்லைப்புறத்தில் செத்தொழிந்தான். வியட்நாமியப் படைகளால் அவன் பதவியிலிருந்து தூக்கிவீசப்பட்டு, அவன் மரணமுற்ற காலம் வரையிலும் அவனுக்குச் சீனாவும் அமெரிக்காவும் மனமொத்து ஆதரவளித்து வந்தன என்பது பிறிதொரு வரலாற்று முரண்நகை. இதுவே அன்றைய இவர்களது மனித உரிமை முகம்.

கம்போடியக் கொலைகள் நிகழ்ந்த அந்த நெல்வயல்களை கொலைவயல்கள் எனும் (killing fields) சொல்லால் அடையாளப்படுத்தினான் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்காக மொழிபெயர்ப்பாளராகச் செயலாற்றிய கம்போடியப் பத்திரிக்கையாளன் தித் பிரான். 1967-1969 வருடங்களிலான தித் பிரானது அனுபவங்களின் அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு ரோலன்ட் ஜோபே இயக்க பிரித்தானியத் திரைப்படத் தயாரிப்பாளர் டேவிட் பட்னம் தி கில்லிங்க் பீல்ட்ஸ் (the killing fields : 1984 : 140 minutes : united kingdom) எனும் திரைப்படத்தினை வெளியிட்டார். அது கம்போடியாவின் படுகொலை வயல்களைப் பற்றிய திரைப்படம். இதே டேவிட் பட்னம் மாவோவின் நீண்ட பயணம் குறித்தும் ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்க முயன்று அது கைகூடாமல் போனது என்பதும் ஒரு துணைச் செய்தி. இந்தத் திரைப்பட நினவுகளை எழுப்பும் விதமாகவும் கம்போடியப் படுகொலைகளின் நினைவுகளை எழுப்பும் விதமாகவும் இப்போது இலங்கையின் படுகொலைவயல்கள் ( sri lanka's killing fileds : 2011 : 50 minutes : channel four : united kingdom) குறித்த ஆவணப்படத்தினை பிரித்தானியாவின் சேனல் நான்கு தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

கம்போடியாவின் படுகொலை வயல்களை ஒத்தது இலங்கையின் படுகொலை வயல்கள் என்பதனைத்தான் இந்த ஆவணப்படத்தின் தலைப்புச் சொல்கிறது. தமிழில் நெல்வயல்கள் என்பதற்கும் நெற்களம் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வயல்களில் நெல் விளையும். களத்தில் நெற்கதிர்கள் அடிக்கப்பட்டு நெல்மணிகளாக ஆகிறது. தித் பார்ன் தனது சொற்றொடரால் சுட்டுவது, நெல் விளைகிற வயல்களில் அதற்கு மாற்றாக படுகொலை செய்யப்பட்டு உடல்கள் விளைந்தன என்பதனைத்தான். சேனல் நான்கு ஆவணப்படம் இதே அர்த்தத்தில்தான் இந்தச் சொல்லைப் பாவித்திருக்கிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலுமானவை நெல்வயல்களால் நிறைந்தவைதான். தமிழர்களின் வாழ்வோடு கலந்தது நெல்வயல்கள். அந்தத் தமிழர்தம் வயல்களில் நெற்கதிர்களுக்குப் பதில் படுகொலை செய்யப்பட்ட அவர்களது உடல்கள் விளைந்தன என்கிறது சேனல் நான்கு ஆவணப்படம்.

II

2009 மே 18 ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டினை ஒட்டி, பிரித்தானியாவின் பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் பரமேசுவரன் எனும் ஈழத் தமிழ் இளைஞரின் 2009 ஆம் ஆண்டு மே மாத்தில் லண்டன் பாராளுமன்ற முன்றிலில் நிகழ்ந்த உண்ணாவிரதம் குறித்த சர்ச்சைகளை மையப்படுத்தி ஒரு ஆவணப்படத்தினை (subramanyam parameswaran : 2011 : 50 minutes : bbc documentary சீ யு இன் கோர்ட் ( see you in court) எனும் தொடரின் பகுதியாக வெளியிட்டது. வளைகுடா நாடான கத்தாரில் இயங்கும் அல்ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக முதன்முதலாக வன்னிசென்று எடுக்கப்பட்ட ஆவணச்செய்திப்படத்தினை பீப்பிள் அன்டு பவர் (people and power) எனும் தொடரில் ( sri lanka : war crimes : 2011 : 25 minutes : alzazeera : qatar) வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சேனல் நான்கு தொலைக்காட்சி நிறுவனம் இலங்கைக் கொலைக்களம் எனும் ஆவணப்படத்தினை 2011 மே 03 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைச் சபையிலும், அதே ஜூன் 14 ஆம் திகதி நள்ளிரவில் தனது தொலைக்காட்சி அலைவரிசையிலும் திரையிட்டது. இந்த மூன்று ஆவணப்படங்களும் வெளியிடப்பட்ட காலம் என்பது ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்த அறிக்கை வெளியான சூழல் என்பதனையும் நாம் நினைவில் கொள்வோம்.

யுத்தம் உக்கிரமடைந்துகொண்டிருந்த ஏப்ரல் மாதத்தில், தனது தாயைப் பறிகொடுத்த ஈழத் தமிழரான பரமேஸ்வரன் போர்நிறுத்தம் கோரி பிரித்தானியப் பாராளுமன்றச் சதுக்கத்தில் 26 நாட்கள் உண்ணாநோன்பை மேற்கொண்டார். வெளியுறவுத்துறைச் செயலர் டேவிட் மிலிபான்ட் தமது அரசு அதற்கான முயற்சிகளைச் செய்யும் என உறுதியளித்ததனையடுத்து அவர் உண்ணாநோன்பைக் கைவிட்டார். அன்றைய போராட்டங்களில் கலந்து கொண்ட உணர்ச்சிகரமான தமிழர்களினிடையில் அவர் ஒரு உதாரண இளைஞராகப் போற்றப்பட்டார்.

உண்ணா நோன்பு முடிந்து ஆறு மாதங்களின் பின், முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து ஐந்து மாதங்களின் பின், இங்கிலாந்தின் வலதுசாரி மற்றும் நிறவாதப் பத்திரிக்கைகளான டெய்லி மெயில், ஸ்காட்லான்ட் யார்ட் காவல்துறையினர் சொன்னதாக ஒரு அவமானகரமான ஒரு செய்தியை தனது நடுப்பக்கத்தில் இரண்டு பக்கச் செய்தியாக வெளியிட்டது. அந்தப் போராட்டக் காலத்தில் ஸ்கட்லான்ட் யார்ட் பாதுகாப்புக்காகச் செய்த செலவு 7 மில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட காலத்தில் உண்ணாநோன்பிருந்த பரமேஸ்வரன் திருட்டுத்தனமாக மெக்டொனல்ட் சீஸ் பர்க்கர் சாப்பிட்டதாகவும், அதனை ஸ்காட்லான்ட் யார்ட் தமது ரகசியக் காமெராவில் பதிவு செய்திருப்பதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியை பிற்பாடு பிறிதொரு வலதுசாரி மற்றும் நிறவெறிப் பத்திரிக்கையான சன் தனது வலைத்தளத்தில் பதிவு செய்தது. தமது ஈழ இலட்சியத்தைக் கேவலப்படுத்திவிட்டதால் அதனது ஆதரவாளர்களிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வரத்துவங்கின. விடுதலைப் புலிகள் எதிர்ப்பு இணையதளங்கள் இந்தச் செய்தியிலுள்ள நம்பகத்தன்மை, ஆதாரங்கள் எது பற்றியும் கவலைப்படாமல், இப்பத்திரிக்கைகள் வெள்ளை இனவாத மற்றும் நிறவெறிப் பத்திரிக்கைகள் என்பதனையும் மறந்து, பரமேஸ்வரன் மீதான அவமானத்தை மேலும் அசிங்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். இலங்கையிலிருந்து அரச ஆதரவுச் சிங்களப் பத்திரிக்கைகளும் புகாரிட புலிஎதிர்ப்பு இணையத்தளங்களும் இவ்விடயத்தில் ஒரே குரலில் பேசினர்.

வழக்குத் தொடுக்கும் வசதியற்ற பரமேஸ்வரன், வென்றால் வரும் பணத்தில் பகிர்ந்து கொள்வது-தோற்றால் வழக்குரைஞருக்கு எதுவுமில்லை எனும் அடிப்படையில் கார்ட்டர் ரக் சட்ட நிறுவனத்தினோடு இணைந்து டெய்லி மெயில் மற்றும் சன் பத்திரிக்கைகளின் மீது வழக்குத் தொடர்ந்தார். ஸ்காட்லான்ட் யார்ட் தம்மிடம் அவ்வாறான ரகசிய வீடியோ பதிவுகள் எதுவும் இல்லை எனவும், தாம் அப்படியான செய்திகளை எவருக்கும் தெரிவிக்கவில்லை எனவும் அறிவித்தது. டெய்லி மெயிலும், சன் பத்திரிக்கையும் பரமேஸ்வரனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, வழக்குக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டன. அதனோடு பரமேஸ்வரனை அவமானப்படுத்தியதற்கான நஷ்ட ஈடாக இரண்டு பத்திரிக்கைகளும் 77,5000 பவுண்களை பரமேஸ்வரனுக்குக் கொடுத்தன. பரமேஸ்வரன் வழக்கு மன்றத்திலிருந்து வெளிவரும்போது புன்னகையுடன் வெளிவந்தார். விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் வெள்ளை இனவாத நிறவாதப் பத்திரிக்கைகளின் போக்கைத் தமது புலி எதிர்ப்பு அரசியலுக்காகப் பாவித்தது என்பது ஒரு அவமானகரமான நிகழ்வாக இருந்தது. 

Tamil_demonstrator_Subram

அல்ஜஜீராவின் ஆவணப்படமும் சேனல் நான்கின் ஆவணப்படமும் எடுத்துக் கொள்ளும் விடயங்களில் ஒத்த தன்மையைக் கொண்டிருக்கின்றன. இரண்டு ஆவணப்படங்களும் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் மனித உரிமை அறிக்கையில் சொல்லப்பட்ட இருதரப்புப் போர்க் குற்றங்கள் குறித்தும், இலங்கை அரசின் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பேசுகின்றன. தனது ஆவணப்படத்திற்கான ஆதாரங்கள் எனும் அளவில் சேனல் நான்கு தனிப்பட்ட தமிழ் மக்களால் எடுக்கப்பட்ட கைத்தொலைபேசி ஆதாரங்களையும், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கைப் படையினர் தமது போர் வெற்றிச் சின்னங்களாக எடுத்த கைபேசிப் பதிவு ஆதாரங்களையும், தமிழ்மக்களால் பொதுவாக எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும், அதிகாரபூர்வமான இலங்கை அரசினதும் ராணுவத்தினதும் வீடியோ ஆதாரங்களையும் பயன்படுத்தி இருக்கிறது. 

அல்ஜஜீரா தொலைக் காட்சி 2011ஆம் ஆண்டு மத்தியில் வன்னிமக்களிடம் எடுக்கப்பட்ட நேர்முக ஆதாரங்களையும், சேனல் நான்கு ஆவணப்படத்திலிருக்கும் கண்கட்டியபடி சுட்டுக்கொல்லப்படும் போராளிகள் குறித்த காட்சி ஆதாரங்களையும், இலங்கை அரசின் அதிகாரபூர்வ வீடியோ ஆதாரங்களையும் தமது ஆவணக் கட்டமைப்புக்காகப் பாவித்திருக்கிறார்கள். அல்ஜஜீரா ஆவணப்படத்துக்கும் சேனல் நான்கு ஆவணப்படத்திற்கும் ஆதாரங்கள் எனும் அளவில் ஒரு பாரிய வித்தியாசம் இருக்கிறது. அல்ஜஜீரா செய்தியாளர் 2011 ஆம் ஆண்டு மத்தியில் இலங்கை சென்று, வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடியிலான அனுபவ ஆதாரங்களைப் பதிவு செய்திருக்கிறார். கடைசிக் கட்டப் படுகொலைகள் நிகழ்ந்த, இதுவரை யாருமே சென்றிருக்காத முள்ளிவாய்க்கால் நீர்ப்பரப்புக்கு அருகாமையிலும் அவர் சென்று படம்பிடித்திருக்கிறார். அங்கு பாரிய மனிதப் புதைகுழிகள் இன்னும் இருக்கலாம் என்பதனையும் அவர் தெரிவிக்கிறார். 

இதுவன்றி யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்ச, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அடையாளமற்ற தமிழ்க் குடிமகன் ரமணன் போன்றோரது நேர்முகத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார். சேனல் நான்கு ஆவணப்படத்தின் சொல்நெறி ஒரு ஆய்வு அறிக்கையின் நோக்கில் இருக்கிறது. சேனல் நான்கு ஆவணப்படத்தில் காட்டப்படும் உக்கிரமான குரூரமான ஆதாரங்கள் எதுவும் அல்ஜஜீரா ஆவணப்படத்தில் இல்லை. சேனல் நான்கு ஆவணப்படம் என்பது தாம் தமது தொலைக் காட்சி அலைவரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை தொடர்பாகக் காண்பித்திருந்து வந்திருக்கும் கொலை மற்றும் சித்தரவதைக் காட்சிகள் அனைத்தும் மெய்யானவை என்பதனை ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கையும், தாம் நேர்கண்ட மனித உரிமையாளர்கள், இலங்கைக்கான ஐநா பிரதிநிதிகள், தமது ஆவணப்படக் காட்சிகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் போன்றவர்களது கூற்றுக்கள் நிரூபித்திருக்கிறது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. அல்ஜஜீரா ஆவணப்படம் செய்தி அறிக்கையாக இருக்க, சேனல் நான்கின் ஆவணப்படம் மெய்யான ஆதாரங்களைத் திட்டவட்டமாகப் புலப்படுத்திய ஆய்வறிக்கையாக இருக்கிறது. 

III 

அல்ஜஜீரா ஆவணப்படம் ஒரு சில காட்சிகளில் சில அரசியல் உண்மைகளை முன்வைக்கும் போக்கில், பொய்களைப் பேசும் சிங்களப் படை அதிகாரியுடனான உரையாடலையம், பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்சேவின் உரையாடலையும் இடைவெட்டி சில பிம்பங்களைக் காண்பிக்கின்றன. ஓரு படை அதிகாரி புதுக்குடியிருப்பில் மருத்துவ மனையில் படையினரின் ஷெல் தாக்குதல் நிகழ்ந்திருப்பதை தவிர்க்கவியலாமல் ஒப்புக் கொள்கிறார். பிற்பாடு படையினர் தாக்கியபோது நோயாளிகள் இருந்தார்களா என்பது தமக்குத் தெரியாது எனச் சொல்கிறபோது, புதுக்குடியிருப்பு படைத்தாக்குதலின் பின்பு எடுக்கப்பட்ட வீடியோ இடைவெட்டிக் காண்பிக்கப்படும்போது நோயாளிகள் மரணமுற்றிருப்பது காட்சிப்படுத்தப்படுகிறது. 

கோதபாய ராஜபக்சேவினுடனான நேர்காணலில் துறைத்தேர்ச்சியாளர்கள் கண்கட்டியபடி சுட்டுக்கொல்லப்படும் போராளிகள் குறித்த காட்சிகள் உண்மையானது எனச் சொல்லியிருக்கிறார்களே எனச் செய்தியாளர் கேட்கிறார், கோதபாய, எங்களிடமும் துறைத்தேர்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், அது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான பதிவு என நிரூபித்திருக்கிறார்கள் என்கிறபோது, தொழில்நுட்ப யுகத்தில் இதுவெல்லாம் சாதாரணம் என எகத்தாளமாகச் சொல்லிக்கொண்டு சுழல் நாற்காலியில் இருபுறமும் அசைகிறார். இடைவெட்டி கண்கட்டியபடி சுட்டுக்கொல்லப்படும் காட்சிப் பதிவு காண்பிக்கப்படுகிறது. 

பிறிதொரு காட்சியில் யுத்தப்பகுதியில் அகப்பட்ட பெண்கள் பேசுகிறார்கள். தமது கணவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாகவும், தமது மகனை இலங்கைப் படையினர் வைத்திருப்பதாகவும் ஒரு வறிய பெண் அரற்றுகிறார். பிறிதொரு பெண், ஒருபுறம் விடுதலைப் புலிகள் சுடுகிறார்கள் பிறிதொருபுறம் படையினர் சுடுகிறார்கள் என்கிறார். கடவுளே ஏன் எங்களுக்கு இந்த நிலைமை என அவர் அழுகிறார். தப்பிச் செல்ல முனையும் வெகுமக்கள் விடுதலைப் புலிகளால் சுடப்படும் காட்சிகள் இடைவெட்டிக் காண்பிக்கப்படுகிறது. 

மனித உரிமையாளர் பாக்கியசோதி சரவணமுத்துவையும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனையும் செய்தியாளர் சந்திக்கிறார். சிறிதரனையும் செய்தியாளரையும் படையினர் தொடர்வதால் செய்தியாளரால் அவரோடு எதுவும் உரையாட முடிவதில்லை. பிற்பாடு வீடியோ கான்ட்பரன்சில் சிறிதரன் மீது குண்டுவீசிக் கொல்ல நடந்த முயற்சியை அவர் செய்தியாளரோடு பகிர்ந்து கொள்கிறார். பாக்கியசோதி சரவணமுத்து விசாரணைகள் செய்யப்படாமல் நல்லிணக்கம் எப்படி சாத்தியப்படும் என்கிறார். கேள்விகளே கேட்கப்படமுடியாத சூழலில் ஒற்றுமை எவ்வாறு சாத்தியம் எனவும் அவர் கேட்கிறார். 

விடுதலைப் புலிப்போரளிகளின் மறுவாழ்வு முகாம்களுக்கும் செய்தியாளர் செல்கிறார். அங்கிருக்கும் சிங்களப்படையினர், முன்பு தாம் தமிழரை வெறுத்ததாகவும், பிற்பாடு அவர்களது துயரங்களைக் கேட்டு அவர்களைப் புரிந்துகொண்டதாவும் இப்போது வெறுப்பு இல்லை எனவும் சொல்கிறார்கள். வியாபாரிகளின் கூட்டமொன்றைப் படையினர் கூட்டுகின்றனர். ஓரு தமிழ் வியாபாரி தான் புதிதாகக் கட்டிய வீட்டை படையினர் எடுத்துக்கொண்டனர் என முறைப்பாடு செய்கிறார். இங்கு வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளைத்தான் பேச வேண்டும் வேறு ஏதும் பேசக் கூடாது என்கிறார் படையதிகாரி. ஆவணப்படத்தின் இறுதி நடந்தவை குறித்த கேள்விகளும் புரிதலும் இல்லாமல் எவ்வாறு ஒற்றுமை சாத்தியப்படும் எனும் சரவணமுத்துவின் கேள்வியுடன் முடிகிறது. 

IV 

சேனல் நான்கின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், யுத்தம் உக்கிரமாகத் துவங்கிய 2009 செப்டம்பர் காலப்பகுதி முதல் யுத்தம் முடிவுற்று 2009 மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்கு வருகை தரும் வரையிலுமான நிகழ்வுகளை எடுத்துக்கொள்கிறது. யுத்தத்தின் முன்பான ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், அவர்களது உயிருக்கு உத்திரவாதம் தர முடியாது எனவும் இலங்கை அரசு சொன்னதையடுத்து ஐக்கிய நாடுகள் பிரதிநிதி கோர்டன் வைஸ் வெளியேறுவது என முடிவெடுக்கிறார். மக்கள் அவர்களைப் போக வேண்டாம் என மன்றாடுகிறார்கள். அவர்கள் தம்மை விட்டுப் போனால் தாம் கொல்லப்படுவோம் என்கிறார்கள். கோர்டன் வைஸ் இந்நிகழ்வுகளைத் தனது காமெராவில் படம் பிடிக்கிறார். 

இலங்கைப் போர் நிலைமையின் முன்னுரையை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையினர் இலங்கையிலிருந்து வெளியேறுவதுடன் ஆவணப்படம் துவங்குகிறது. யுத்தத்தைத் சுயாதீனமான சாட்சியில்லாமல் நடத்த இலங்கை அரசு தம்மை வெளியேற்றியது என்கிறார் வைஸ். மக்களைத் தாம் கைவிட்டுவிட்டோம் என்கிறார் அவர். கிளிநொச்சி வீழ்ச்சி, முள்ளிவாய்க்கால் படுகொலை என மக்கள் நகர்வதோடு ஆவணப்படமும் நிகழச்சிகளைப் பதிவு செய்து கொண்டு நகர்கிறது. 

இங்கிலாந்திருந்து தமது உறவுகளைப் பார்க்கச் சென்ற உயரியல் தொழில்நுட்ப மருத்துவத்துறை ஊழியரான வாணி குமார் மற்றும் டாக்டர். சண்முகராஜா ஆகியோரது அனுபவங்கள் விவரிக்கப்படுகிறது. உணவு இல்லை. தண்ணீர் இல்லை. மருந்துகள் இல்லை. சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லை. கத்தியினால் ஆறுவயதுச் சிறுவனின் காயம்பட்ட கை கால் வெட்டியெடுக்கப்படுகிறது. அல்லவெனில் சிறுவன் மரணிப்பான். 

அவசரமாக மருத்துவமனையாக்கப்பட்ட ஆரம்ப பள்ளியின் மீது ராணுவம் திரும்பத் திரும்பத் தாக்குகிறது. கிளிநொச்சி முதல் முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனைகளின் மீதான தாக்குதல் தொடர்கிறது. இவ்வகையிலான 65 தாக்குதல்கள் பதியப்பட்டது என கோர்டன் வைஸ் குறிப்பிடுகிறார். பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தில் அடைபட்ட நான்கு இலட்சம் மக்கள் மீது படையினர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் ஒரு சதுர கிலோ மீட்டரில் இறுதியில் இருந்த மக்கள் ஒரு இலட்சத்து முப்பதாயிரம்; என்கிறது ஆவணப்படம். முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகளைக் குண்டுபொட்டுக் கொல்கிறது இலங்கைப் படை. எங்கும் சிதறிக்கிடக்கும் உடல்கள். இறந்தவர்களின் உறவினர்களது கதறல். மழைச்சேற்றில் இரத்தம் கரைந்து ஓடையெனப் பாய்கிறது. 

நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் பெண்களின் உடல்கள் வாகனத்தில் இழுத்துப் போடப்படுகின்றன. இழுத்துப் போடப்பட்ட ஒவ்வொரு பெண்ணையும் இலங்கைப்; படையினர் இழிவுபடுத்தி, குதூகலித்துச் சிரிக்கின்றனர். கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் கொல்லப்பட்டுக் காணப்படும் பெண்களின் உடல்களைப் பார்த்துப் படையினர் சிரிக்கும் காட்சிகளை ஏனைய படையினர் படம் பிடிக்கின்றனர். அவளின் மார்புகளை அறுக்க வேண்டும் போலிருக்கிறது என்கிறான் ஒருவன். இது கொழுத்த உடல் என்கிறான் ஒருவன். கொல்லப்படுவதற்கு முன்னர் அப்பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. செல்லிடத் தொலைபேசி மூலம் படம்பிடிக்கப்பட்ட மற்றுமோர் காட்சியில் ஒரு பெண் மண்டியிட்டு மன்றாடுவதும், அதேவேளை அவரை எப்படி கொல்ல வேண்டும் எனப் படையினர் பணிக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. அடுத்த காட்சியில் அவரது மூளை வெளியில் தள்ளப்பட்டுள்ளது காட்சியாகிறது. 

sri_lanka_executionsஇலங்கைப் படைத்தரப்பினர் தமது நடவடிக்கைகளை கைத் தொலைபேசி மூலம் படம்பிடித்து பதிவு செய்துள்ளனர். சிறிலங்கா படையினரால் கைத்தொலைபேசி மூலம் படம்பிடிக்கப்பட்ட காணொளிகளே மிக மோசமானவை. கைதிகளைக் கொடுமைப்படுத்துவதை அவர்கள் படம் பிடித்துள்ளனர். காணொளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஒளிப்படங்கள் உள்ளன. அவற்றில் குழிகளிலும், நீண்ட வரிசைகளிலும் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் காணப்படுகின்றன. பலர் கட்டப்பட்ட நிலையிலும், பலர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றனர். எறிகணை வீச்சிலோ அன்றி போர் நியமங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளிலோ கொல்லப்பட்ட உடலங்களாக அவை தெரியவில்லை. ஒரு சிறு குழு சிறுவர்களின் உடல்கள் குழியில் காணப்படுகின்றன. கைதிகள் உயிருடன் காணப்படுகின்றனர். சில கைதிகள் இம்சைப்படுத்தப்பட்டும், பின்னர் கொல்லப்பட்டும் காணப்படுகின்றனர். முதலில் ஒரு இளைஞன் மார்பில் கத்தியினால் கீறப்பட்டு இரத்தம் கொட்ட மன்றாடுகிறான். பிறிதொரு காட்சியில் அவனது மரணித்த உடல் குழிக்குள் கிடக்கிறது. 

ஷெல் விழுகின்ற போது வெறும் மூன்றடி பதுங்குகுழிகளே சிறிய பாதுகாப்பை வழங்குவனவாக இருக்கின்றன. பெரியவர்கள் சிறுவர்களின் மேல் படுத்து அவர்களைக் காப்பாற்ற முயல்கிறார்கள். தரை மட்டத்தற்குச் சிறிது கீழேயே தலையை வைத்துக் கொள்கிறார்கள். சிலர் சிறிய கேமெராவை வைத்து இச்சூழலிலும் படம் பிடிக்கிறார்கள். குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்குகுழிக்குள் இருந்த பெண் பதட்டத்துடன் அரற்றுகிறாள். தயவு செய்து பங்கருக்குள் வந்து விடுங்கள். வீடியோ எடுத்துக் கொண்டு நிற்காதீர்கள் என அவள் கத்துகிறாள். இந்த வீடியோவை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள், எல்லோரையுமே அவர்கள் கொன்றொழிக்கும் போது என்கிறாள் அப்பெண்.. 

சில வேளைகளில் சாதாரண வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் கேமெரா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் தொலைபேசிகளில் உள்ள கேமெராவினால் எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை ஆயுதப்படைகளின் போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விகாரமான பல காணொளிக்காட்சிகள் புகைப்படங்கள் என்பன அவற்றை மேற்கொண்டவர்களாலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்களது கைத்தொலைபேசியில் இவற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள். 

தனது மகன் தன்னெதிரில் மருத்துவ வசதியின்றி மரணமுறுவதை ஒரு தந்தை சொல்கிறார். தானும் தனது மகளும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள படையினரின் பாலியல் வேட்கைக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்ணீருடன் விவரிக்கிறார் தாய். இழுத்துச் செல்லப்பட்ட பெண்களது ஓலமும் பிற்பாடு துப்பாக்கி வெடிக்கும் சப்தங்களும் கேட்டதாக அவர் சொல்கிறார். மகிந்தவும் கோதபாயவும் குதூகலத்துடன் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். சரணடைய வந்த நடேசனதும் புலித்தேவனதும் இரத்தம் உறைந்த உடல்கள் காட்சிகளாகின்றன. உயிருடன் விசாரணை செய்யப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் பிறிதொரு காட்சியில் சீருடையில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். 

மிகவும் கோரமான காட்சிகள் பெண்போராளிகள் கொல்லப்படும் காட்சிகள். அவர்களைப் பெயர்சொல்லி அடையாளப்படுத்த சொற்கள் எம்மிடம் இருக்க முடியாது. நாய்களின் கோரைப் பற்களால் குருதி கொப்பளிக்கக் குரல் வளை அறுக்கப்படுதலை விடவும் வெங்கொடுமை வாய்ந்த, சிதைந்து சிதறிக்கிடக்கும் எமது சகோதரியரை அக்கோலத்தில் எவரும் எம்மில் ஒரு நொடியும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தண்டிக்கப்படாத குற்றங்கள் மறுபடியும் காயங்களாகித் திரும்பும் எனும் சொல்லால் இதனைக் குறிப்பிடுகிற மனித உரிமையாளரின் சொற்களே இங்கு எனக்கு ஞாபகம் வருகின்றன. இருண்ட வனாந்தரங்களில் இரத்தப் பசிகொண்டலையும் நாவுகள் தொங்கிய நரிகள் கண்முன் வந்துபோகின்றன. ஆவணப்படத்தின் படத்தின் கடைசிப் பதினைந்து நிமிடங்களை விவரிக்க - அது நிஜமெனத் தெரிந்த பின்னும் விவரிக்க - மறுத்து எனது வார்த்தைகள் மரணித்துப் போகட்டும் எனவே நான் விரும்புகிறேன். 

IV 

இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு முன்னால் பிபிசி ரேடியோ நான்கு உள்பட, பிரித்தானியாவின் புகழ்மிக்க பத்திரிக்கைகளான கார்டியன்,இன்டிபென்டன்ட் உள்பட இந்த ஆவணப்படம் இத்தனை குரூரங்களுடன் சித்திரவதைகளுடன் இப்படியே திரையிடப்படத்தான் வேண்டுமா எனும் விவாதங்கள் பலமாக எழுந்தன. பாசிஸ்ட்டுகளின் சித்திரவதைகளையும் படுகொலைகளையும் ஞாபகமூட்டுமாறு எடுக்கப்பட்ட இத்தாலியக் கலைஞன் பாவ்லோ பசோலினியினது ஸலோ படமும் இதே விதமான விவாதத்திற்கு உள்ளானது. மிக நீண்ட காலங்களின் பின்பே அது முழுமையாப் பிரித்தானியாவில் திரையிடப்பட்டது. பஸோலியின் படம் புனைவுப்படம். இலங்கையின் கொலைக்களம் நிஜவாழ்வினை உலுக்கும் ஆவணங்களின் தொகுப்பு. திரைப்படக் கலைஞனுக்கு இது ஆத்மவேதனை தரத்தக்க ஒரு தேர்வாகவே இருக்க முடியும். மனித குலத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் இதனது படைப்பாளிகள் இந்த ஆவணப்படத்தினை முழுமையாக உள்ளவாறே வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த முடிவுக்கு வந்து சேர்ந்ததற்கான தமது நியாயங்களையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள் : 

இத்திரைப்படம் ஒரு குழப்பத்தை உருவாக்கக்கூடும். ஏனெனில் இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக மையநீரோட்டத் தொலைக்காட்சிகளில் முன்னொரு போதும் ஒளிபரப்பாகாதவையாக இருக்கின்றன. ஆனால் நாங்கள் நம்புகிறோம் இது இதற்குப் புறம்பான வேறொரு காரணத்திற்காக நினைவு கூரப்படும். நாங்கள் நம்புகிறோம் தங்களுடைய சொந்த மக்களையே படுகொலை செய்தவர்களை இது நினைவூட்டும். அத்தோடு ஐநா, சர்வதேச சமூகம், உலகின் அதிகார சக்திகள் என்பவற்றிற்கு இவை முக்கியமானவை. அதுமட்டுமன்றி நவீன தொழில் நுட்பங்களின் சாத்தியப்பாடுகளையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது. அதாவது போர்க்குற்றங்களையோ அல்லது மனிதத்துவத்திற்கெதிரான நடவடிக்கைகளையோ இரகசியமாகச் செய்து விட்டுத் தப்பிவிட முடியாது. இப்போதிருந்தே பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் பாதிப்புக்குள்ளாக்கியவர்கள் தொடர்பிலும் விடயங்கள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். இது முதற் கட்டம். இரண்டாவது கட்டம் இத்தகைய அச்சம் தருகிற ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை என்பதுதான். இந்தக்காட்சிகள் இவ்வாறான காட்சிகளை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள்; ஏற்றுக் கொண்டுள்ள சாதாரண எல்லைகளை இன்னும் உந்தித்தள்ளும். 

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும், போருக்குப் பின்னரும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களைச் இலங்கை அரசாங்கம் புரிந்திருப்பதற்கான வலிமையான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. 40,000 வரையான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக நிபுணர்கள் குழு நம்புகின்றது. பாரிய அளவிலானதொரு போர்க்குற்ற விசாரணைக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கு ஊடகவியலாளர்களையோ, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையே சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை. கொடுமைகளை இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்துவதற்குரிய அனைத்துலக பொறிமுறை அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் எமது ஆவணப்படம் அமைந்திருக்கிறது. 

இது தான் இவை பற்றி உரக்கப் பேசுவதற்கான சந்தர்ப்பம். தலைக்கு மேலால் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் அச்சமூட்டும் வகையில் ஒலியெழுப்பிக் கொண்டு வருகையில் எந்தக் கருணையுமேயின்றி கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொண்டு கொண்டிருக்கையில் அச்சம் கொண்ட தமிழ் குடும்பங்கள் ஆழமற்ற பதுங்கு குழிகளில் நெருக்கியடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கிறார்கள். ஐநாவும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன. சர்வதேச ஊடகங்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. விமர்சனபூர்வமாக இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல் போயினர். அஞ்ஞாதவாசம் போயினர். உலகம் அங்கிருந்து தூர வைக்கப்பட்டது. 

தடுத்து வைக்கப்பட்டவர்களையும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டவர்களையும் பச்சை இரத்தம் தெறிக்க படுகொலை செய்யப்படுபவர்களையும் இதில் நீங்கள் காணலாம். அப்பாவிப் பொதுமக்கள் தற்காலிக வைத்தியசாலைகளின் தரைகளில் மரணிக்கும் அவலத்தையும் இதில் நீங்கள் காணலாம். இலங்கை அரசின் மருந்துப் பொருட்களுக்கான தடையினால் அவர்கள் இறக்கிறார்கள். இவ்வாறான வழிமுறையின் மூலம் தான் மக்களை இதில் சிரத்தையுடன் கவனம் கொள்ள வைக்க முடியுமா? இந்த படங்களைக் காட்டுவது சரியான வழிமுறை தான் என்று நாங்கள் நம்புகிறோம். 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐநாவின் நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தாலும் விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்களும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் விசாரணை நடாத்த ஒரு சர்வதேசப் பொறிமுறை ஒன்றை பான் கீ மூன் உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் இது வரை அது மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான அதிகாரம் தனக்கு இல்லையென அவர் சொல்கிறார். அது விவாதத்திற்குரியது. ஆனால் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மனித உரிமைக் கவுன்சிலுக்கும் இது தொடர்பில் அதிகாரமுள்ளது. ஐநா மீளவும் இதில் தோல்வியடையுமாயின் ஒவ்வொரு கொடுங்கோல் ஒடுக்குமுறை ஆட்சியாளருக்கும் தெளிவான ஒரு செய்தி கிடைக்கும் : உங்களுக்கு வேண்டுமானால் உங்களுடைய சொந்த மக்களையே நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாகப் படுகொலை செய்யலாம். அதற்கான தண்டனை உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதிலிருந்து நீங்கள் தப்பி விடுவீர்கள் என்பது தான் அந்தச் செய்தி. 

கண்கள் கட்டபட்டு சுட்டுக்கொல்லப்படும் ஆதாரங்களான காணொளிக்காட்சிகள் ஐநாவின் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மரணதண்டனைகள் தொடர்பான ஐநாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் ஆல் போர்க்குற்றங்கள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்கள் மற்றும் போரின் பின்னான படுகொலைகள் தொடர்பான காணொளிகள் போலியானவை என சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. காணொளி தடய நிபுணர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்களால் உறுதிப்படுத்தப்பட்டவற்றையும் சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வருகின்றது. 

விடுதலைப் புலிகளே மக்களைக் கொன்றதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. விடுதலைப் புலிகளும் மக்களைக் கொன்றுள்ளார்கள். ஆனால் 40,000 பொது மக்களை அவர்கள் கொல்லவில்லை. வேறு சக்தியே இத்தனை ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தது.  

படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டமையை இங்குள்ள அனைத்து ஆதாரங்களும் வெளிப்படுத்துகின்றன. இது குறித்து என்ன சிந்திப்பது என்பதை உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே பார்த்து மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். இவ்வகையான கொடுமைகளை இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்துவதற்குரிய அனைத்துலக பொறிமுறை அவசியம் என இந்த ஆதாரங்கள் உங்களைச் சிந்திக்க வைக்கும்…. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

*சேனல் நான்கு ஆவணப்படத்தின் தலைப்பு கொலைவயல்கள் என்பதனையே நினைவுறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கில்லிங் பீல்ட்ஸ் திரைப்பட வரலாற்றையும் கம்போடியப் படுகொலைகளையும் அறிந்தவர்களுக்கு கம்போடிய-ஈழப் படுகொலைகளுக்கு இடையிலான ஒப்பீட்டைப் புரிந்து கொள்ள முடியும். தமிழ் இணையம் மற்றும் எழுத்துச் சூழலில் திரும்பத் திரும்பவும் கொலைக்களம் எனும் சொல்லே பாவிக்கப்பட்டிருப்பதால், தொடர்பாடல் கருதி நானும் கொலைக்களம் எனும் சொல்லையே கட்டுரை நெடுகிலும் பாவித்திருக்கிறேன். கட்டுரையில் பாவிக்கப்படும் சேனல் நான்கு ஆவணப்படம் குறித்த பல்வேறு பின்னணிச் செய்தி விவரங்கள் ஆங்கில மூலங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன. குளோபல் தமிழ் நியூஸ் மற்றும் பொங்குதமிழ் இணையதளங்களில் வெளியான இந்தக் குறிப்புகளை மொழிபெயர்த்த முகம் தெரியாத மொழிபெயர்ப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்புக்கான எனது உழைப்பை மிச்சப்படுத்திய பெறுமதிமிக்க அந்த நண்பர்களின் உழைப்புக்கு - எனது மனமுவந்த, கனிவான நன்றி.

------------------------------------------------

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

with thanks to globaltamilnews.net