இந்தியச் சமூகக் கட்டமைப்பு என்பது அடிப்படையில் நால்வருண சமூகக் கட்டமைப்பே ஆகும். வருணக் கலப்பின் மூலமாகவே இந்தியாவில் பல சாதிகள் உருவாகி உள்ளன. மனு ஸ்மிருதியில் இதற்கான சான்றுகள் உள்ளன. நால்வருண சாதி அமைப்புக்கு அப்பால் வருணமற்றவர்களாகப் பட்டியல் சாதியினரும் மலைவாழ் பழங்குடிகளும் பல சாதிகளாக உள்ளனர்.

இந்தியாவில் 1871 முதல் 1931 வரை சாதிவாரியாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1941இல் இரண்டாம் உலகப்போர் காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சரிவர எடுக்கப்படவில்லை.

இந்தியா 1947இல் ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்று, 1950ஆம் ஆண்டு குடிஅரசாக அறிவிக்கப்பட்ட பின்பு, 1951இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பார்ப்பனர்களின் சூழ்ச்சி காரணமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்த்துவிட்டனர். இது அரசின் கொள்கை முடிவு என்று அறிவித்துவிட்டனர். பட்டியல் பழங்குடிகளுக்கு மட்டும் சாதி வாரியாகவும், மத அடிப்படையிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெறுவதற்கு டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டம் கூறு 16(4)இல் வழிவகை செய்தார். 1924 முதல் சென்னை மாகாணத்தில் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் வழங்கிய வகுப்புரிமை ஆணை செல்லாது என்று 1950இல் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் 1951இல் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கண்டித்து பெரியாரின் தலைமையில் திராவிடர் கழகமும் அறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகமும் ஓராண்டு காலம் போராடியதன் விளைவாக அரசமைப்புச் சட்டத்தில் முதன்முதலாக திருத்தம் செய்யப்பட்டது. கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் விதி 15(4) புதியதாகச் சேர்க்கப்பட்டது. அரசமைப்புச் சட்ட விதி 340இல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி ஒதுக்கீடு வழங்கிட ஆணையம் அமைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.census 700இந்திய அரசின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் காகா கலேல்கர் தலைமையில் 29.01.1953இல் அமைக்கப்பட்டது. அதனுடைய அறிக்கை 30.03.1955இல் அரசுக்கு அளிக்கப்பட்டது. அவ்வறிக்கையில் 1961இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் இன்னும் விரைவாக சாதி வாரி கணக்கெடுப்பை 1957லேயே தொடங்கி நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரையை நேரு அரசு 1961இல் நிராகரித்து விட்டது.

1961 ஆகத்து திங்களில் ஒன்றிய அரசு மாநில அரசுகளே பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையங்களை அமைத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலை, தயாரித்துக் கொள்ளலாம் என்று அறிக்கை அனுப்பியது.

அதன் அடிப்படையில் தான் தமிழநாட்டு அரசின் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் 1969இல் சட்டநாதன் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் அதிகாரப் பட்டியலில் வரிசை எண்.69 இல் இடம்பெற்றுள்ளது. எனவே மாநில அரசுகளின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் புள்ளி விவரங்களை சேகரிப்பதில் பல இடர்ப்பாடுகளை எதிர் கொண்டன. 1931ஆம் ஆண்டின் சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே ஆய்வு செய்தனர்.

தோழர் வே.ஆனைமுத்து அவர்களின் கடும் உழைப் பின் விளைவாக இந்திய அரசால் அமைக்கப்பட்ட மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக, பொருளாதார அளவு கோல்களைக் கண்டறிவதில் பெரும் சிக்கல்களை எதிர் கொண்டது. இதைப் பற்றி பி.பி.மண்டல் 15.6.1979 மற்றும் 18.10.1979 ஆகிய நாட்களில் அமைச்சர்கள் எச்.எம். பட்டேல் மற்றும் ஒய்.பி. சாவானுக்கு கடிதம் எழுதியுள்ளார். உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் அவர்களுக்கும் 31.3.1980 இல் கடிதம் எழுதி 1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தோழர் வே.ஆனைமுத்து அவர்களும் இதை வலியுறுத்தி பலமுறை சிந்தனையாளன் ஏட்டில் எழுதியுள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இப்போது சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன.

14.08.1993இல் அமைக்கப்பட்டு இயங்கிவரும் ஒன்றிய அரசின் தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சில பிரிவுகளாகப் பிரித்திட (Compartment) ஓய்வு பெற்ற நீதிபதி ரோகிணி தலைமையில் ஓர் ஆணையத்தை அமைத்தது. 2018இல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்த ஆணையம் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை.

2011இல் இருந்த காங்கிரசு கூட்டணி அரசு (UPA-2) மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கை எடுக்காமல் நகர்ப்புற, ஊராக வளர்ச்சித்துறைச் சார்பில் சாதிய, பொருளாதார அளவுகோல் கண்டறியப்பட்டது. ஆனால் அது சரியான புள்ளி விவரம் அல்ல.

ஒன்றிய அரசின் தலைமை அமைச்சராக இருக்கும் நரேந்திர மோடியின் சாதி (Moth Ghanchi) என்பது உயர்சாதி பிரிவில் தான் இருந்தது. 25.7.1999இல் பா.ச.க.வின் வாஜ்பாயி தலைமை அமைச்சராக இருந்தபோது இவருடைய சாதி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

தான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் என பெருமைப்பட்டுக் கொள்ளும் தலைமை அமைச்சர் நநேரந்திர மோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செய்தது என்ன?

இவர் பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த குசராத்து மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிடுவதற்கு இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து 29.8.2023 அன்று தான் குசராத்து அரசு ஆணை பிறப்பித்தது. அந்த அளவிற்கு அரசியலில் அங்கு மேல் சாதியினர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. தமிழ்நாடு இதையெல்லாம் எப்போதோ கடந்து விட்டது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள வகுப்பினர் :

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52.1%

பட்டியல் வகுப்பினர் 18.6%

பட்டியல் பழங்குடியினர் 8.6%

உயர் சாதியினர் 20.7%

பா.ச.க.வில் 303 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில்,

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 85 பேர் (28.5%)

பட்டியல் சாதியினர் 77 பேர் (25.4%)

உயர் சாதியினர் 141 பேர் (46.1%)

ஏறத்தாழ 80% உள்ள இதரப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பு மக்களுக்கு 54% இடங்களும், 20% உள்ள உயர்சாதியினருக்கு 46% இடங்களும் பெற்றுள்ளனர்.

பா.ச.க.வின் தற்போதைய ஒன்றிய அமைச்சரவையில் மொத்தம் 79 பேர் உள்ளனர். அவர்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26 பேர் (34%), பட்டியல் வகுப்பினர் & பழங்குடியினர் 20 பேர் (25%), உயர் சாதியினர் 33 பேர் (41%).

உயர் அலுவலர்களில் பார்ப்பனர் மற்றும் உயர் சாதியினர் ஆதிக்கம்

28.3.2023 அன்று கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் கேள்விக்கு அமைச்சர் ஜிஜேந்திர் எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்ள விவரம்: 2018 முதல் 2022 வரை 5 ஆண்டுகளில் நியமனம் செய்யப்பட்ட மொத்தம் 4365 பேர்களில் இ.ஆ.பா., இ.கா.பா. பணி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் வகுப்பு வாரியாக

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 695 பேர் (15.9%)

பட்டியல் வகுப்பினர் 334 பேர் (7.65%)

பட்டியல் பழங்குடியினர் 166 பேர் (3.8%)

உயர் சாதியினர் 3170 பேர் (72.6%)

நாடாளுமன்ற முதன்மைச் செயலாளர்கள் 90 பேரில் 3 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதை காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி வெளிப்படுத்தினார்.

நீதித் துறையிலும் உயர் சாதியினர் ஆதிக்கம்

ஒன்றிய அரசின் சட்டத் துறை 9.1.2023 அன்று நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அளித்த அறிக்கையில் 2018 முதல் 2022 வரை 5 ஆண்டுகாலத்தில் நியமிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 537 பேர். அதில்,

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  57 பேர்  (11%)

பட்டியல் வகுப்பினர் & பட்டியல் பழங்குடியினர்  22 பேர்  (4.1%)

மதச்சிறுபான்மையினர்  14 பேர்  (2.6%)

மற்றவர்கள்  20 பேர்  (4%)

உயர்சாதியினர்  424 பேர்  (79%)

ஒன்றிய அரசின் பார்ப்பனர் மற்றும் உயர் சாதியினரின் ஆதிக்கத்தை மறைப்பதற்காகவே சாதி வாரி கணக்கெடுப்பை எடுப்பதற்கு பா.ச.க. அரசு மறுத்து வருகிறது.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட 6.6.2022 அன்று ஆணையிட்டார். அதை எதிர்த்து உயர்சாதியினர் பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 1.8.2022 அது தள்ளுபடி செய்யப்பட்டது.

6.8.2023 அன்றுடன் பீகார் அரசு கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட்டது. அதை எதிர்த்தும் உயர்சாதியினர் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 18.8.2023 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பீகார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என்று தீர்ப்பளித்தார். பீகார் மாநில அரசின் கணக்கெடுப்பின்படி

பிற்படுத்தப்பட்டோர் & மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 63.14%

பட்டியல் வகுப்பினர் 19.65%

பட்டியல் பழங்குடியினர் 1.62%

முன்னேறிய சாதியினர் 15.52%

இதன் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை மாற்றியமைத்து 9.11.2023 அன்று பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்மாநில ஆளுநரும் ஒப்புதல் அளித்து விட்டார்.reservation in bihar

ஏழை உயர்சாதியினருக்கு 10% சேர்த்து மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 75% ஆகவும், பொதுப் போட்டிக்கு 25% எனவும் அறிவிப்புச் செய்யப்பட்டது. காங்கிரசு கட்சியின் ஆட்சி நீண்டகாலமாக சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருந்தது. அண்மைக் காலமாக அதன் போக்கு மாறியுள்ளது. இராகுல் காந்தி போகுமிடமெல்லாம் சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்திப் பேசி வருகிறார். இது வரவேற்கத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் அறிக்கையில் காங்கிரசு கட்சி ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்து உள்ளனர். இதனால் வேறு வழியின்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா “நாங்கள் சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் அல்ல” என்று சத்தீஸ்கரில் பேசியுள்ளார். தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சாதிவாரி கணக்கெடுப்பு இந்துக்களைப் பிளவுபடுத்தும் செயல் என்று இதற்கு முன்பு பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குருநாதர் கோல்வால்கர் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது; பொருளாதார அடிப்படையில் தான் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். எனவே பா.ச.க. சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிராகவே இருக்கும்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ (I.N.D.I.A.) கூட்டணி வெற்றி பெற்றால் சாதி வாரி கணக்கெடுப்பை இந்தியா முழுவதிலும் நடத்தி இடஒதுக்கீட்டை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

உச்சநீதிமன்றம் பீகார் மாநில அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்காத காரணத்தால் தமிழ்நாடு அரசும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முன்வர வேண்டும்.

இந்தியாவில் சாதிகள் ஏணியின் படிக்கட்டுகள் போல் மேல்-கீழ் என்கிற உயர்வு-தாழ்வு அடிப்படையில் கட்டமைக் கப்பட்டுள்ளன. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பின்னும் இச்சாதியக் கட்டமைப்பு குலையாமல் நீடிக்கிறது. இந்தியாவில் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் சாதியே முதன்மையான காரணியாக விளங்குகிறது.

அதனால்தான் மேலே குறிப்பிட்டுள்ளவாறு இந்திய அளவில் 20 விழுக்காட்டினராக உள்ள மேல் சாதியினரே ஆட்சியதிகாரத்தில், அரசின் நிர்வாக உயர் பதவிகளில், உயர்நீதித் துறையில், உயர் கல்வியில் ஆதிக்கம் செலுத்துவோராக உள்ளனர். நாட்டின் செல்வத்தில் 80 விழுக்காடு இவர்களிடமே இருக்கிறது. சாதி என்பது இன்றளவும் சமூகத்தில் ஒரு மூலதனமாகவே செயல்படுகிறது. தொழில்களிலும் வணிகத்திலும் இவர்களே பெருமுதலாளிகளாக உள்ளனர். வருண அமைப்பின் கோட்பாட்டின்படி சூத்திர சாதியினரும், பட்டியல் சாதியினரும் பழங்குடியினரும் பார்ப்பன-பணியா­சத்திரிய மேல் சாதியினரையே சார்ந்து வாழும் நிலை நீடிக்கிறது. அண்மையில் வெளிவந்த ஒரு ஆய்வின்படி பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் குடும்பங்களின் பிள்ளைகளில் 80 விழுக்காட்டினர் அன்றாடக் கூலிகளாக அல்லல்பட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே, இத்தகைய ஏற்றத் தாழ்வு களை திட்டவட்டமான முறையில் கண்டறியவும் எல்லா பிரிவினருக்கும் எல்லா நிலையிலும் உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசுகள் திட்டம் தீட்டிச் செயல்படுத்தவும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக் கெடுப்பு உடனடி இன்றியமையா தேவையாக உள்ளது.

- வாலாசா வல்லவன்

Pin It