உலக அளவில் பொருளாதாரத்தில் சிறப்பாகச் செயலாற்றும் 20 நாடுகள் இணைந்து ஜி20 என்ற பெயரில் கூட்டமைப்பு உருவாக்கிப் பணியாற்றி வருகின்றன. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஒவ்வொர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான மாநாடு “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தலைப்பில் இந்தியாவின் தலைமையில் 09.09.2023 மற்றும் 10.09.2023 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் இணைந்ததன் மூலம் ஜி20 அமைப்பு இனி ஜி21 அமைப்பாக மாறுகிறது.

இந்தியப் பிரதமர் மோடி ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒடிசாவின் கோனார்க் சக்கரத்தின் முன்பு நின்று மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களை வரவேற்றார். அதில் “இந்தியா” என்று பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜி20 மாநாட்டில் நாட்டின் தலைவர்கள் முன்பு இருந்த பெயர்ப் பலகையில், பிரதமர் மோடியின் முன் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையிலும், மாநாட்டை முன்னிட்டு 09.09.2023 அன்று குடியரசுத் தலைவர் அளித்த சிறப்பு இரவு விருந்து அழைப்பிதழிலும் ’பாரத்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.g20 delhiஉலகத் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில், மாநாடு நடத்தும் நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்றும் ‘பாரத்’ என்றும் இரு வேறு விதமாகக் குறிப்பிட்டிருந்தது மிகத் தவறான முன்னுதாரணம். இது கூடவா தெரியவில்லை பிரதமர் மோடிக்கு? இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் மூலம் பெரிய மாற்றம் நிகழப் போகிறது என்று பா.ஜ.கவினர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னது இந்தப் ‘பெயர் மாற்றம்’ தான் போல் இருக்கிறது. இது குறித்து தி.மு.க இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி அவர்கள் “10 வருடத்திற்கு முன்பு மோடி இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்று சொன்னதை இப்போது செய்து காட்டியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள்” என்று தலைவர் கலைஞர் பாணியில் கிண்டலாகத் தெரிவித்துள்ள கருத்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாரத் மண்டபத்தின் நுழைவு வாயில் பகுதியில் ரூ.10 கோடி செலவில் 28 அடி உயர சோழர் கால நடராஜர் சிலை பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தால் மதச்சார்பற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு இதைத் தவிர்த்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக இந்தியாவின் இலட்சினையான சாஞ்சி ஸ்தூபியுடன் கூடிய அசோக சக்கரத்தை அமைத்திருக்கலாம். அதை விடுத்து உலக நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் மத அடையாளத்தை அமைத்தது கண்டனத்திற்கு உரியது.

கடந்தாண்டு இந்தோனேசியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஐ.நா. தீர்மானத்தை மேற்கோள் காட்டி ரஷியாவை வெளிப்படையாக விமர்சித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இந்தாண்டு உச்சி மாநாட்டில் “உக்ரைனில் மீண்டும் அமைதி திரும்பப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். பிராந்தியங்களைக் கையகப் படுத்துவதற்காக அச்சுறுத்தி, அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்று ரஷியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் கண்டனம் ‘போல’ தெரிவிக்கப்பட்டிருப்பது, 56” என மார் தட்டும் பிரதமரின் மாவீரம் போலும்.

உலகத் தலைவர்களின் வருகையை ஒட்டி டெல்லியின் குடிசைப் பகுதிகள் போன்ற பல்வேறு இடங்கள் பச்சை காடாத் துணியால் மறைக்கப்பட்டிருந்தது ஓர் அவலம். சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற போது இப்படி எதையும் திரை போட்டு மறைக்க வேண்டிய அவலம் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை என்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!

“இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” என்ற திரைப்படத்தில் அரசர் ஒரு மல்யுத்த வீரரின் உடலுடன் தனது தலையைப் பொருத்தி தன்னை பலசாலியாகக் காட்டும் வகையில் ஓவியரிடம் ஒரு ஓவியத்தை வரையச் சொல்வார். அந்தத் திரைப்படக் காட்சியைப் போன்று பிரதமர் மோடியை உலகின் வலுவான தலைவராகக் காட்டவே இந்த ஜி20 உச்சி மாநாட்டைப் பயன்படுத்த நினைத்தார்கள். ஆயினும் பா.ஜ.கவினர் எதிர்பார்க்கும் பலன் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்படப் போவதில்லை. நாட்டு மக்கள் உண்மையை உணர்ந்திருக்கிறார்கள். இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It