மராத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு அமைப்பின் (MANS) தலைவரும் சாதி ஒழிப்புப் போராளியும் அறிஞருமான மருத்துவர் நரேந்திர தபோல்கர் 20.08.2013 அன்று அவரது ஊரான புனேயில் நடைப்பயிற்சியின் போது காலை 7.20 மணிக்குத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 10.05.2024 அன்று புனே சிறப்பு அமர்வு நீதிமன்றம் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

இந்தக் கொலையைத் திட்டம் தீட்டி செயல்படுத்த மூளையாகச் செயல்பட்டவன் ‘இந்து ஜனஜாக்ருதி சமிதி’ (HJS) என்ற வலதுசாரி அமைப்பின் கிளை அமைப்பான ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பின் மேற்கு மண்டலத் தளபதியான வீரேந்திர சிங் தவாடே என்ற மருத்துவர். தபோல்கர் கொலையில் மட்டுமல்ல 20.02.2015 அன்று கோல்காபூரில் சுட்டுக் கொல்லப்பட்ட எழுத்தாளர், செயற்பாட்டாளர், பொதுவுடைமையாளர், பகுத்தறிவாளர் கோவிந்த் பன்சாரே கொலையிலும் மூளையாகச் செயல்பட்டவன் வீரேந்திர தவாடே ஆவான்.

narendra dabholkar 450தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே கொலைகளிலும் 20.08.2015 அன்று தார்வாடில் கன்னட மொழி அறிஞர் - பேராசிரியர் எம்.எம். கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டதிலும் 05.09.2017 அன்று பெங்களூருவில் பத்திரிகையாளரும் பகுத்தறிவுச் செயற்பாட்டாளரு மான கவுரிலங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதிலும் ஈடுபட்டவர்கள் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள். நால்வரின் கொலைகளும் திட்டமிட்டு ஒரே மாதிரியில் செயல்படுத்தப்பட்டவை ஆகும். இந்த நான்கு கொலைகளிலும் தொடர் இழையாகச் செயல்பட்ட வழக்குரைஞரான சஞ்சீவ் புனாலேகரும் இவருடைய உதவியாளரான விக்ரம் பாவேவும் ஆவர்.

தபோல்கர் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப் பட்டவர்களுள் சச்சின் அண்டூர் என்ற இளைஞருக்கும் சரத் கலாஸ்கர் என்ற இளைஞருக்கும் அவர்கள் தான் சுட்டவர்கள் என ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலே கூறிய முக்கிய குற்றவாளிகளான வீரேந்திர சிங் தவாடேவும் சஞ்சீவ் புனாலேகரும் விக்ரம் பாவேவும் குற்றமிழைத்தது, நீதிமன்றத்தில் போதிய சான்றுகளுடன் மெய்ப்பிக்கப்படவில்லை என வழக்கி லிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தபோல்கர் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆன பின் அளிக்கப்பட்டுள்ளத் தீர்ப்பு அரை-குறையானதே.

இந்த வழக்கில் நீதி கிடைக்க மற்ற குற்ற வாளிகளும் தண்டிக் கப்படும்வகையில்மேல் முறையீடு செய்யவுள்ளதாக இதுவரை இடை விடாது நீதிமன்றங்களை நாடிய தபோல்கரின் மகள் முக்தாவும் மகன் அமீதும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த அரை-குறைத் தீர்ப்பும் எளிதில் கிடைத்து விடவில்லை. பொது மக்கள் அழுத்தத்தாலும் தபோல்கரின் மகள் முக்தாவும் மகன் அமீதும் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட பின்னரே 09.05.2014இல் நடுவண் புலனாய்வு அமைப்பினர் குற்றப் புலனாய்வு செய்திட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நடுவண் புலனாய்வு அமைப்பு (CBI) புலனாய்வு மேற்கொண்டால் முழுமையாகவும் காலங்கடத்தப்படாமலும் உண்மைகள் கண்டறியப்படும் என நம்புவதும் ஒரு மூடநம்பிக்கையே என ஆகிவிட்டது.

நடுவண் புலனாய்வுக் குழு புலனாய்வில் அக்கறைக் காட்டவில்லை என மும்பை உயர்நீதி மன்றத்தில் முக்தா தபோல்கரும் அமீதும் முறையீடு செய்தனர். இதனால் 16.12.2016இல் உயர்நீதிமன்றம் புலனாய்வின் மோசமானப் போக்கிற்குக் கண்டனம் தெரிவித்தது. மீண்டும் ஒரு முறை மும்பை உயர்நீதி மன்றத்தில் முக்தாவும் அமீதும் முறையிட்டதனால், விசாரணை பற்றிய அறிக்கை அளித்திடுமாறு 09.04.2023 அன்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இடையில் கைது செய்யப்பட்ட சஞ்சீவ் புனாலேகரையும் விக்ரம் பாவேவையும் பிணையில் விடுவித்ததற்கு எதிராக முக்தாவும் அமீதும் உயர்நீதி மன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் முறையீடு செய்தது பயனற்றுப் போனது.

சாரமற்ற தீர்ப்பு : எதனால்?

தபோல்கர் கொலைக்கு மூளையாகச் செயல்பட்ட வீரேந்திர சிங் தவாடேவும் இந்தக் கொலையில் முக்கியமான சஞ்சீவ் புனாலேகரும் விக்ரம் பாவேவும் தண்டனையளிக்காமல் தப்ப விடப்பட்டுள்ளனர். நரேந்திர தபோல்கரைச் சுட்டதை நேரில் பார்த்தவர்கள் கூறியபடி, சுட்டவர்களான வினய்பவாரும் சாரங் அகோல்கரும் தலைமறைவாகி விட்டனர் என புலனாய்வில் தெரிய வந்தது என புலனாய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தலைமறைவானவர்களை நடுவண் புலனாய்வுக் குழுவினரால் பத்தாண்டுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பும்படியாகவா உள்ளது? இதற்கு மாறாக எம்.எம். கல்புர்கி கொலை வழக்கில் கர்நாடகக் காவல் துறையினரால் 18.08.2018இல் கைது செய்யப்பட்ட சச்சின் அண்டூருக்கும் சரத் கலாஸ்கருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குளறுபடியாகத் தோன்றவில்லையா?

நீதி கிடைப்பது எப்போது?

நரேந்திர தபோல்கரின் மகள் முக்தாவும் மகன் அமீதும் இத்தீர்ப்பில் நீதியில்லை என மேல் முறையீடு செய்தாலும் 10 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது எப்போது? நீதி கிடைப்பது எப்போது? என்கின்ற வினாக்கள் எழுகின்றன.

மூடநம்பிக்கைகள் ஒழிய வேண்டும், உயர்சாதியினர் ஆதிககம் அகற்றப்பட வேண்டும், இந்து சனாதன நடைமுறைகள் தகர்க்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக நூல்கள் எழுதியும், பருவ இதழ்களில் எழுதியும், மக்கள் கூட்டங்களில் பேசியும் வந்த செயற்பாட்டாளர்கள் நால்வரைக் கொன்றழித்துள்ள சனாதன் சன்ஸ்தா போன்ற அமைப்புகளுக்கு ஆட்சியில் இருப்பவர்களும் நிர்வாகத் துறைகளில் - காவல் துறையில் ­புலனாய்வு அமைப்புகளில் உள்ளவர்களும் ஆதரவாகச் செயல்படும் நிலை நிலவுகின்றது என்பது இந்த வழக்கின் விசாரணைப் போக்கின் மூலம் உறுதியாகின்றது. இந்நிலை மாற சனாதன பழைமைவாத நடைமுறைகளைக் காப்பாற்றிடும் அமைப்புகளின் கோட்பாடுகளை மக்களிடையே செல்வாக்கிழக்கச் செய்திட சமத்துவத்திற்காகப் போராடும் இயக்கங்கள் வலுவாகச் செயல்பட வேண்டியது இன்றைய இன்றியமையாதத் தேவையாகும்.

- கவின்