தீ வீச்சின் தெறல் நடையில் மறம்பயிற்றும்
       தீந்தமிழின் புகழ்ப் பரப்புக் கடலை வெல்லும்
பூவீச்சின் கமழ் மணத்தில் எதிர்பாராத
       முத்த வீச்சின் தமிழ்க்காதல் உயிர்த்தேன் துள்ளும்.
மாவீச்சின் கனிச்சாறாம் ‘இசையமிழ் தம்’
       வலிவீச்சின் தொழிலாளர் உணர்வுத்தோட்டம்
ஈவீச்சுப் பிணிக்கூட்டம் ஆரியத்தின்
       எதிர்வீச்சுக் கொலைவாள் எடுக்கத் தூண்டும்.

விழிநோக்கில் கூண்டுப்புலி திறந்தே பாயும்
       விளிவீச்சில் கருங்குயிலும் தமிழ்த்தீக்கூவும்
மொழிநோக்கில் தமிழியக்கம் துமுக்கிப் பாய்ச்சும்.
       முனைவீச்சில் தமிழச்சிவாள் மானம் காக்கும்.
பழிநோக்கில் ‘குறிஞ்சித்திட்டு’ ஆட்சியாளன்
       மடியவிட்டுத் தமிழ்க்கொள்கை ஆட்சி பூக்கும்.
கழிவீட்டில் வாழ் ஊமை ‘மண்ணாங்கட்டி’
       கனிச்செயலைக் காட்டும் ‘அமைதி’ (நூல்) புதுமைச்சுட்டி.

பெரியாரின் தோளிலேறி வையகம் பார்த்தான்
       பெருஞ்சூழ்ச்சிப் பார்ப்பனியம் சூழக் கண்டான்
வரிவேங்கைக் கடுஞ்சீற்றம் கொட்டித் தீர்த்தான்.
       பலிப்பீடம் ‘நரிகளுக்கே’ திருப்பி வைத்தான்
எரியாலே மதக்குப்பைச் சாம்பல் பெய்தான்.
       எரிவேள்விப் பொய்ப்புரட்டைப் புரட்டிப் போட்டான்.
கரியாரின் திராவிடர்ச் செந்தழல் வீறுரைத்தான்
       கனிச்சாற்றில் கந்தகத்தில் தமிழ் வரைந்தான்.

“வெட்டினாலும் என்கொள்கைவேர் அறாது
       வெருட்டினாலும் தமிழ்த்தொண்டு எனைவிடாது
நெட்டினாலும் சாதியின்தோள் ஏறமாட்டேன்.
       நெருக்கினாலும் சிறையினாலும் பிறழமாட்டேன்
முற்றினாலும் ஈளைநோயில் சாவை வென்றேன்.
       ‘முத்தமிழில் நான் பாவேந்தன்’ என்றுரைத்தேன்.
பற்றினாலே ‘கால் இலக்கம் பொற்கிழி’ பெற்றேன்.”
       பாவேந்தர் வாழ் க்கைவானின் சில விண்மீன்கள்.

தோள்சீலைப் போராட்டம் கேரளத்துப் போராட்டம்
       தொல்மக்கள் பெண்மானம் காக்கநின்ற போராட்டம்
வாள்ஏந்தி ஒருமறத்தித் தன்மார்பு அறுப்பாட்டம்
       வரலாற்றுக் கரும்பக்கம் எரித்தெறிந்த நெருப்பாட்டம்
கீழ்ச்சாதிக்குக் கோயில் புறத்தெருவில் நடமாட்டம்
       கிடைக்காத ‘வைக்கத்தில்’ பெரியாரின் மறவராட்டம்.
பாழ்ச்சாதி மனுநீதி முடைநாற்ற வெறியாட்டம்
       பாவேந்தர் எழுதுகோல்தான் ஆடியது எரிமலையாட்டம்.

- பேராசிரியர் இரா. சோதிவாணன்

Pin It