மணிப்பூரில் மெய்தேய், பழங்குடியினரான குக்கி மற்றும் நாகா என மூன்று சமூகங்களைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் வசிக்கின்றனர்.  குக்கி, நாகா உள்ளிட்ட பிற பழங்குடியின மக்கள் மலைப் பகுதிகளிலும், மெய்தேய் மக்கள் இம்பால் பள்ளத்தாக்கிலும்   வாழ்கின்றனர். மெய்தேய்

சமூகத்தின் பெரும்பாலான மக்கள் இந்து மதத்தையும், நாகா மற்றும் குக்கி சமூகத்தினரில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றி வருகின்றனர்.

மணிப்பூரின் மொத்தமுள்ள 60 எம்எல்ஏக்களில் 40 எம்எல்ஏக்கள் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 20 பேர் நாகா மற்றும் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை மணிப்பூரின் முதல்வராக இருந்துள்ள 12 பேரில் இருவர் மட்டுமே பழங்குடியினர். இவ்வாறு பெரும்பான்மை மக்கள் தொகை, அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெய்தேய் சமூகத்திற்குப் பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்பட்டதே இன்று அங்கு அமைதி குலைந்ததற்கான அடிப்படை.

மெய்தேய் மக்கள் பழங்குடி அந்தஸ்தைப் பெற்றால் தங்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துவிடும் என்றும், மலைகளில் உள்ள தங்கள் நிலங்களை மெய்தேய் மக்கள் வாங்கத் தொடங்குவார்கள் என்றும், தாங்கள் மேலும் ஓரங்கட்டப்படுவோம்  என்றும் எண்ணிய பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 03.05.2023 அன்று நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு மேலாகத் தொடரும் இந்தக் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசும், ஒன்றிய அரசும் படுதோல்வி அடைந்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 350க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள இந்தக் கலவரத்தில் 4000 குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டு 50,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 250 தேவாலயங்களும், 1000 கோவில்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது, ஜாதி மோதலாகத் தொடங்கிய இந்தக் கலவரம் தற்போது மத மோதலாக உருமாறி இருப்பதையே காட்டுகிறது.

கலவரம் தொடர்பாக பழங்குடியினர் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் 20.06.2023 அன்று வழக்கைத் தாக்கல் செய்து “பழங்குடியினரின் இறுதி நம்பிக்கை உச்சநீதிமன்றம் மட்டும் தான்” என்று வாதிட்ட போது இதை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. விடுமுறைக்கு பிறகு ஜூலை 3ஆம் தேதி இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இம்பாலில் உள்ள ஒன்றிய இணையமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சூழலில், சம்பிரதாயப் பயணமாக மணிப்பூர் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலவரத்தைக் கட்டுப்படுத்த எந்தப் பயனுள்ள நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. வெறுமனே 15 நாட்களில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டார். இரு தரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தும் பொறுப்பு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை மணிப்பூர் மக்கள் ஏற்கவில்லை.

மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கே தலைமையில் ஒன்றிய அரசு அமைத்த 51 பேர் கொண்ட அமைதிக் குழுவை குக்கி பழங்குடியினரின் உயரிய அமைப்பான குக்கி இம்பி,  மெய்தேய் சமூகத்தை வழிநடத்தும் மணிப்பூர் ஒருமைப்பாட்டிற்கான ஒருங்கிணைப்புக் குழு போன்ற அமைப்புகள்  நிராகரித்துள்ளன. “அரசால் அமைக்கப்பட்ட இந்த அமைதிக் குழுவில் சொந்த விருப்பத்தின் பேரில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் மணிப்பூர் மற்றும் இந்தப் பகுதியின் நிலவரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் கூட இல்லை. மாநிலத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் நபர்கள் குழுவில் இருந்திருக்க வேண்டும். எனவே இதிலிருந்து அரசின் நோக்கம் புரிகிறது” என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குக்கி பழங்குடியினரின் மாணவர் அமைப்பான குக்கி சத்ரா சங்கதனா, மணிப்பூரின் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தியது மட்டுமின்றி “மணிப்பூர் அரசு மீது, மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்” என்று கரம் ஷியாம்சிங், ராதே ஷியாம்சிங், நிஷிகாந்த் சிங் உள்ளிட்ட 8 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள்  கடிதம் எழுதிய பிறகும் மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி இது குறித்த கவலை சிறிதுமின்றி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று விட்டார். அங்கு அமெரிக்க அதிபருக்கு உபநிஷத நூலும், சந்தனப் பெட்டியும், அவரது மனைவிக்கு வைரக்கல்லும் பரிசளித்து வெள்ளை மாளிகை விருந்துண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழங்குடியினர் நிலங்களை அதானி உள்ளிட்ட பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்த்த மோடி அரசு மணிப்பூரில் பழங்குடியினர் நிலங்களை உயர்ஜாதியான மெய்தேய் மக்கள் ஆக்கிரமிக்க வசதியாக அவர்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து அளித்துள்ளது.

“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை”என்ற பெரும்புலவர் திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி அரசும், மணிப்பூரை ஆளும் முதல்வர் பீரேன் சிங் அரசும் விரைவில் தங்கள் அதிகாரத்தை இழக்கும் நிலை வரும்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It