சிதம்பரம் நடராசர் கோயில் சோழ அரசர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். அங்கு பணியில் உள்ள தீட்சிதர்கள் வாரணாசியிலிருந்து வரவழைக்கப் பட்டவர்கள் என தென்ஆர்க்காடு மாவட்ட ஆவணப் பதிவேடு (South Arcot District Gazetteer) கூறுகிறது.
கோயில்களில் ஊழல்கள் பெருமளவில் நடைபெறுவதால் 1871-இல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டன.
சிதம்பரம் தீட்சிதர்கள் நடராசர் கோயில் தங்களுக்கே சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் 1885-இல் வழக்குத் தொடுத்தனர். சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்பதற்கு எந்தவிதமான சான்றுகளும் இல்லை என நீதிபதிகள் தி. முத்துசாமி அய்யர் மற்றும் நீதிபதி செப்பேர்டு அமர்வு தீர்ப்பளித்தது (AS Nos.108 and 159 of 1888 Dt.17.3.1890).
1950இல் சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராசா அவர்கள் சிதம்பரம் கோயிலுக்கு தனி அலுவலர் நியமனம் செய்ததை எதிர்த்து தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். 3.12.1951 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தீட்சிதர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.
தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 9.2.1954 அன்று இராசாசி தலைமையிலான அரசு வழக்கை திரும்பப் பெற்றதால் சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகப் பொறுப்பு தீட்சிதர்களிடம் சென்றுவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி 2001இல் செயலலிதா ஆட்சிக் காலத்தில் கோயில் நிர்வாகப் பொறுப்பு தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சிதர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் புகார் அளித்தனர். 1987இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டார். தீட்சிதர்கள் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். 1997-இல் தீட்சிதர்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
2006-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குத் தனி அலுவலரை நியமனம் செய்தது. இதை எதிர்த்து 2006-இல் தீட்சிதர்கள் மீண்டும் வழக்குத் தொடுத்தனர். 2009-இல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பானுமதி தனி அலுவலர் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து பா.ச.க.வின் சுப்பிரமணியன்சாமி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 6.1.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் தீட்சிதர்களே சிதம்பரம் நடராசர் கோவிலை நிர்வாகம் செய்து கொள்ளலாம். அரசு இதில் தலையிடக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழ்நாட்டு அரசின் இந்து அறநிலையத் துறை மேல்முறையீடு செய்தது. 8.1.2019 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு அதில் தலையிடக்கூடாது என்று தீர்ப்பளித்தது. இதனால் சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகம் தற்போது தீட்சிதர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக தீட்சிதர்கள் திருச்சிற்றம்பல மேடை தரிசனத்தை நிறுத்தி வைத்திருந்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்திய பிறகும் பொது மக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.
திருச்சிற்றம்பல மேடை ஏறி தரிசனம் செய்ய முயன்ற ஜெயசீலா என்ற பட்டியல் வகுப்பு பெண் பக்தையை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருபது தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு சிதம்பரம் காவல் நிலையத்தில் பதியப்பட்டது.
திருச்சிற்றம்பல மேடையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஜெமினி ராதா என்பவர் நீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப் படையில் தமிழ்நாட்டு அரசின் இந்து அறநிலையத் துறை 17.5.2023 அன்று திருச்சிற்றம்பல மேடையில் பொது மக்கள் அனைவரும் ஏறி தரிசனம் செய்யலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது.
தீட்சிதர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அங்கு தலைவிரித்தாடத் தொடங்கியது.
தீட்சிதர்களில் திருமணமானவர்களுக்கு அந்த கோயில் வருமானத்தில் தனி பங்கு உண்டு என்ற காரணத்தினால் குழந்தைத் திருமணங்களை நடத்தி வருகின்றனர். பெரிய பணக்காரர்கள் அங்கு திருமணம் செய்து கொள்ள வாய்ப்பளித்தனர். பக்தர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு (ஆனி மஞ்சனம்) திருவிழாவை யொட்டி சூன் 24 முதல் 27 வரை நான்கு நாள் களுக்குப் பொது மக்கள் யாரும் திருச்சிற்றம்பலம் எனப் படும் கனகசபை மேடையில் ஏறி தரிசனம் செய்யக் கூடாது என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர். பொது மக்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
சிதம்பரம் காளிக் கோயில் செயல் அலுவலர் இரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் சிதம்பரம் வட்டாட்சியர் செல்வக்குமார் ஆகியோர் 26.6.2023 அன்று நடராசர் கோயிலுக்குள் சென்று கனகசபை மேடை அருகே வைத்திருந்த அறிவிப்புப் பலகையை அகற்ற முயன்றனர். அப்போது தீட்சிதர்களுக்கும் இவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் சிதம்பரம் காளிக்கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் “தமிழ்நாடு அரசின் அரசாணை மீறி கனகசபை மீது ஏறக்கூடாது” என்று பதாகை வைக்கக் கூடாது. உடனடியாக அகற்றுங்கள் எனக் கூறினர். தீட்சிதர்கள் அறிவிப்பு பதாகையை அகற்ற மறுத்ததால் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டனர். காவல் துறை யினர் உதவியுடன் அறிவிப்பு பதாகையை அகற்றினர்.
பதாகையை அகற்றிய பின்னரும் தீட்சிதர்கள் பொது மக்கள் கனகசபை மேடையில் ஏறி வழிபட எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
27.6.2023 அன்று காங்கிரசு கட்சியினர் கனகசபை வாயிலில் அமர்ந்து கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். பெரியாரிய இயக்கத்தினரும் பொதுவுடைமை இயக்கத்தினரும் கனகசபையில் ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனப் பேராட்டங்களை நடத்தினர்.
பாரதிய சனதா கட்சியினர் அங்கு வந்து கனக சபையில் மக்கள் வழிபடுவதற்கு எதிராக முழக்க மிட்டனர். இதனால் கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையினர் அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில் மற்றொரு வழியாக காவல் துறையினருடன் கனகசபை மீது ஏறிச் சென்றனர். தீட்சிதர்கள் அவர்களைத் தடுத்து கீழே தள்ளி கனக சபையை பூட்டினர். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அரசு ஊழியர்களைச் செயல்படாமல் தடுத்தாக பதினொரு தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரபரப்பான இந்தச் சூழ்நிலையில் காவல் துறையினர் உதவியுடன் பொது மக்கள் கனகசபை மீது ஏறி அதிகாரிகள் துணையுடன் வழிபாடு செய்தனர்.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்களின் அட்டூழியங்களை எடுத்துக்கூறி சீராய்வு மனுச்செய்து, சிதம்பரம் நடராசர் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
- வாலாசா வல்லவன்