2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா இரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் வந்த கரசேவர்களின் இரண்டு பெட்டிகளில் திட்டமிட்டு தீவைத்தனர். இந்தச் சம்பவத்தில், 59 கரசேவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இதை செய்தது நரேந்திர மோடிதான் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயி தன்னிடம் சொன்னதாக வாஜ்பாயின் மருமகள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் ஊடகங்களுக்குவழங்கியநேர்காணலில், “இரயிலில் வந்த இந்து சாமியார்களை, கோத்ரா இரயில் நிலையத்தில் வைத்து இரயிலோடு சேர்த்துத் தீ வைத்துக் கொளுத்தியதற்குக் காரணம் நரேந்திர மோடிதான். அந்தப் பழியை ஏதுமறியாத இஸ்லாமியர்கள் மீது சுமத்தி,” ஐயய்யோ இந்து சாமியார்களை உயிரோடு கொளுத்திட்டானுங்கடா முஸ்லிம்கள்...!” என்று பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி கலவரத்தை உண்டாக்கி, முஸ்லிம்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு 2000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொலை செய்ததும் மோடியின் ஆட்கள்தான்!" என்று, முன்னாள் பிரதமர் வாஜ்பேயி தம்மிடம் சொன்னதாக, வாஜ்பேயியின் மருமகள் கூறுகிறார்.
அப்பாவி இந்து சாமியார்களும், ஏதுமறியா இஸ்லாமிய மக்களும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபியின் சுயநல அரசியலுக்காகக் கொல்லப்பட்டு 22 ஆண்டுகள் கடந்த நிலையில், உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன. மாந்த குலத்திற்கு எதிராக அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு தான் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம், அதைத் தொடர்ந்து சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் மீது ஏவப்பட்ட பெரிய அளவிலான கலவரம். இந்தக் கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏற்கனவே கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் பிபிசி சேனல், அன்றைய குஜராத் முதல்வரும் இன் றைய பிரதமருமான நரேந்திர மோடி குறித்து “இந்தியா: தி மோடி குவெஸ்டின்” என்ற ஆவணப் படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் இரு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம், முழுமையாக 2 மணிநேரம் ஓடக்கூடியவை. முதல் பகுதி படம் கடந்த மாதம் 17.01.2023 அன்று செவ்வாய் கிழமை வெளியானது. இது பா.ச.க. இந்துத்துவ கும்பலின் வெறியாட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.இந்த ஆவணப்படத்தை பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் எம்.பி. இம்ரான் ஹூசைன் எடுத்துள்ளார். 2022 கோத்ரா கலவரம் என்பது இன அழிப்பு என்று அவர் விமர்சித்துள்ளார்.
இந்த ஆவணப்படம் குறித்து ஒன்றிய அரசு கூறுகையில் இந்தியாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்திய அரசு விரும்பவில்லை. பாரபட்சமாக, உண்மைத்தன்மை இல்லாமல், கண்ணியத் தன்மையற்று, முற்றிலும் காலணி ஆதிக்க மனோநிலையுடன் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது எனக் கண்டிக்கிறது. இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சக்தின் செயலாளர் அபூர்வா சந்திரா, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021, அவசர கால அதிகாரத்தைப் பயன்படுத்தி, யூடியூப் மற்றும் ட்விட்டரில் மோடி குறித்த ஆவணப்பட இணைப்பு பெறத் (லிங்க்குகளை) தடை செய்து கடந்த வாரம் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளார். இது கடும் கண்டனத்துக்கு உரியது.
பெரியார் சொன்னதைப் போல “அயோகியர்களின் கடைசி புகலிடம் தேச பக்தி” என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது ஒன்றிய அரசு. ஆனால், இந்தத் தடைதான் இந்த ஆவணப்படம் இன்னும் வீரியத்துடன் மக்களைச் சென்றடைவதில் பெரும் பங்காற்றியது என்னும் அளவு இது பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது.
ஆவணப்படத்தின் சுருக்கம்!
இதில் 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு அப்போதைய மோடி அரசுதான் காரணம் எனக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் சாட்சிகளும், இரண்டாம் பாகத்தில் மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கும் காட்சிகள் வெளி வந்திருக்கின்றன. குறிப்பாக, அமைச்சரின் மர்மமான மரணம், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிறையில் அடைப்பு என அந்தக் கலவரத்தின் தொடர்ச்சியான சம்பவங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன.
கோத்ரா கலவரத்தில் சிறுபான்மையினர்களை பாதுகாக்க அப்போது இருந்த மோடி தலைமையிலான பா.ஜ.க அரசும், குஜராத் காவல் துறையும் தவறிவிட்டது என்று கோத்ரா கலவரம் குறித்து விசாரித்த பிரிட்டன் எம்.பி.க்கள் குழு இந்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளது. இந்தப் பதிவுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட அன்றைய முதல்வர் மோடி தொடங்கி அதிகாரிகள் வரை என அனைவரையும் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்து விட்டது.
ஆனால், அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர், 2,000 அப்பாவி இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டதற்குப் பொறுப்பாக மாட்டாரா? என்னும் கேள்விதான் இந்த ஆவணப்படத்தின் வாயிலாகவும் எழுப்பப்படும் முதன்மையான வினா? ஒருவர் தன்னையே நாடு போற்றும் பிரதமராக முன்னிறுத்தும் போது, எதனைப் பின்னணியாகக் கொண்டு இவர் அதிகார இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதிகாரத்துக்கு வர 'இந்து' என்னும் கருவியை ஆர்.எஸ்.எஸ்.ம், பா.ச.க.வும் எப்படி பயன்படுகிறது என்பதற்கு பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி சிக்கலை 1949 முதல் எழுப்பி வந்ததும் அதற்காக 1990-ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் அறிக்கை அமுல்படுத்த உத்தரவு பிறப்பித்த வி.பி.சிங் ஆட்சியை கவிழ்க்க அத்வானி நடத்திய ரத யாத்திரை பெரும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
இதற்கு ஆதரவாக விளங்கியது இந்திய தேசிய காங்கிரசு. ஆனால், கோத்ரா சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்தது. இப்படியாக தங்களை இந்து காவலராக பா.ச.க.வை கட்டமைத்த பிம்பம்தான்ஆட்சியில் அமர வைத்திருக்கிறது. மதம் வெளியே தெரிந்தாலும் அதன் உள்ளடக்கம் அரசியல்தான். இதில் நரேந்திர மோடி மட்டுமா குற்றவாளி? அதை தடுக்க தண்டிக்கத் தவறிய - “வேடிக்கை பார்த்த அப்போதையத் தலைமை அமைச்சர் வாஜ்பேயி, அப்போதையக் குடிஅரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் உள்ள அதிகார அமைப்புகள், நீதித்துறை உட்பட அனைத்தும் குற்றவாளிகள்தான். மேலும்அவிழ்த்து விடும் பொய் மூட்டைகளையெல்லாம் உண்மை என்று நம்பி மதவெறி தலைக்கேறி அன்றிலிருந்து இன்று வரை பிஜேபிக்கு வாக்களித்து பிஜேபி ஆட்சியை ஏற்படுத்தத் துணை போகும் அத்தனை பேரும் குற்றவாளிகள்தான். நரேந்திர மோடியின் பாசிச இந்துத்துவத்தை அம்பலப்படுத்துவோம்!
காவி பாசிசத்தையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து உழைக்கும் மக்களை அரசியல் மயப்படுத்துவோம்!!
- தி.துரை சித்தார்த்தன்