மர்மமான முறையில்
கடவுள்
செத்துக் கிடப்பதாகத்
தகவல்.
நாத்திகர்கள் நடத்திய
வன்முறையாக இருக்குமோ?
விசாரித்த போது
இல்லாத கடவுளை எப்படி
நாங்கள் கொன்றிருக்க முடியும்?
என்று மறுத்துவிட்டனர்
நாத்திகர்கள்.
அர்ச்சகர்களாகத் தங்களையும்
அமர்த்த வேண்டும் என்று
போராட்டம் நடத்திய கலகக்காரர்கள்
வேலையாக இருக்கலாம்!
காவல் துறையின்
இரகசியக் கண்களில் சந்தேகம்.
தங்களிடமிருந்து கடவுள்
கை நழுவிப் போய்விடக் கூடாது
என்பதற்காகப்
புரோகிதர்களே இந்தப் பாதகத்தைப்
புரிந்திருக்க வேண்டும்!
கலகக்காரர்கள்
விரல்கள் வேறுதிசை காட்டின.
ஆபரணங்கள் உண்டியலை,
ஏன் தன்னையே
கொள்ளை யடிக்க வந்தவர்களிடம்
எதிர்ப்பு காட்டியிருக்கலாம்!
கைகலப்பில்
கடவுள் காலி செய்யப்பட்டிருக்கலாம்!
மோப்பத் துறை
துப்புக்கு அலைந்தது.
பகையான
கடவுள்களின் சதியா?
பத்திரைக்கைக் கபாலங்களில்
கசிந்தன யூகங்கள்.
மாற்றுக் கடவுள்களின்
அக்கிரமம் ஒழிக!
மாற்றுக் கடவுள்களின்
அராஜகம் ஒழிக!
மாற்றுக் கடவுள்களின்
அட்டூழியங்கள் ஒழிக!
மதங்கள்
கத்தி கடப்பாறைகளோடு
தெருக்களில் இறங்கின!
மக்கள் பிணங்கள்
தெருக்களிலும்
கடவுள் பிணம்
ஆலயத்திலும்
அழுகி நாறின!
கண்களில்
எவருக்கும் படாதபடி
கடவுள்
எழுதிவைத்திருந்த குறிப்பு -
என்னையே எப்போதும்
நம்பியிருக்கும் மக்களை
என்னால்
காப்பாற்ற முடியவில்லையே!
என்னும் சுய சோகத்தில்
தற்கொலை செய்து கொண்டேன்.
என் சாவுக்கு
எவரும் காரணம் இல்லை.
- ஈரோடு தமிழன்பன்