அறிவியல் சாதனங்கள் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் நமது நாட்டில், அதை அறிவுச் சாதனமாக மாற்றும் சில முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் மூட நம்பிக்கைகளைப் பரப்புவதை மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்கும் திரை (சின்னத் திரை+பெரியதிரை)த் துறைகளிலும் பகுத்தறிவை வளர்க்கும் சில முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன.

சில படங்களில் நகைச்சுவை மூலமாகவும், சில படங்களில் சிறுசிறு வசனங்கள் மூலமாகவும். உதாரணமாக, ‘பராசக்தி’, ‘ரத்தக் கண்ணீர்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, போன்ற படங்கள் மிகுதியாகப் பகுத்தறிவுக் கருத்துகளைத் தாங்கி வந்தன. அந்த வரிசையில் ‘வெங்காயம்’ என்ற திரைப்படம் தயாராகி வருகின்றது. அந்தப் படத்தின் இயக்குனர் சங்ககிரி திரு ராஜ்குமார்.

தமிழகத் தொலைக்காட்சிகள் எல்லாம் ராஜராஜேஸ்வரி, அம்மன், நாகம்மா, நாகவல்லி, சுவாமி அய்யப்பன் என்று மூட நம்பிக்கைகளை முறை வைத்துப் பரப்பி வரும் வேளையில், பில்லி சூனியம் என்று ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்கள், சாமியாடிகள் என்ற போர்வையில் காமக்களியாட்டம் போடும் குற்றக் கேடர்கள், மக்கள் அச்சத்தையும், அறியாமையையும் தங்கள் மூலதனமாக்கிக் கொள்ளும் குடிகேடர்களின் உண்மை நிகழ்வுகளைத் தொடராக்கி, அதை மக்கள் தொலைக்காட்சி வாயிலாக வெங்காயம் என்ற தொடராக ஒளிபரப்பி பகுத்தறிவு ஒளி பாய்ச்சி வந்தார் அவர்.

தற்போது இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் மீண்டும் அதே (வெங்காயம்)பெயரில் திரைப்படம் ஒன்றினை எடுத்து வருகிறார். அவரை அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவரோடு உரையாட ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நமக்கு ஏற்பட்ட சில அய்யங்களுக்கு விடையும் கிடைத்தது.

அவரிடம் நாம் கேட்ட முதல் கேள்வியே, “வெங்காயம் தொடரின் மூலம் தான் நிறைய கருத்துக்களைச் சொல்லி விட்டீர்களே, பின்பு திரைப்படம் மூலம் எதைச் சொல்லப் போகிறீர்கள்” என்பதே. அதற்கு அவர், “நான் தொட்டுக்காட்டியதெல்லாம் புதர் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கை நிகழ்வுகளில் சிறு துண்டு மட்டுமே. இதைவிட அதி பயங்கர நிகழ்வுகளும், திரைப்படத்திற்காகவே நான் ஒதுக்கி வைத்திருந்த சம்பவங்களும் சேர்ந்ததுதான் வெங்காயம் திரைப்படம்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளரும் அவரேதான். இயக்குனர் ராஜ்குமார் இந்தப் படத்திற்கான திரைக்கதை, வசனங்களை முடித்துவிட்டுப் பல தயாரிப்பாளர்களை அணுகிப் பார்த்திருக்கிறார். எவரும் முன் வரவில்லை. தயாரிப்பாளர்கள் மொழியில் சொன்னால், ரிஸ்க் எடுக்க எவரும் தயாயராக இல்லை. இவரது அலைச்சலைப் பார்த்த, இவரது தந்தை திரு எஸ். எம். மாணிக்கம் “ஏன் இப்படி அலைகிறாய்? எங்காவது கடன் வாங்கியாவது, நாமே தயாரிக்கலாம்” என்று சொல்லி இருக்கிறார். எனவே இப்படத்தைத் தன் தந்தையார் பெயரிலேயே தயாரிக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பாளர் செ. மா. செந்தில் குமார், கதாநாயகன் அன்பு, இணை இயக்குனர்கள் தஞ்சை ரவி, சம்பத், வெங்கடேஷ், நிர்வாகிகள் சபா, பிரேம் சந்திரசேகரன் போன்ற தொழில் நுட்பக் கலைஞர்களும் பகுத்தறிவுச் சிந்தனை கொண்டவர்கள்தான் என்றும் சொன்னார்.

அது மட்டுமல்ல, இப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடிப்பதற்கு புரட்சித் தமிழர் சத்தியராஜ் அவர்களை அணுகிக் கேட்டிருக்கிறார். கதையைக் கேட்ட சத்தியராஜ் உடனே தேதி ஒதுக்கிக் கொடுத்துவிட்டார் என்பதை நன்றிப் பெருக்கோடு தெரிவித்தார்.

இப்படத்தில் சிறந்த பகுத்தறிவுவாதியும், மக்களால் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளருமான ஒருவர் முதல் முறையாக ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இயற்கை எழில் கொஞ்சும், காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பூலாம்பட்டி, சங்ககிரி மற்றும் ஏற்காடு பகுதிகளில் உருவாகி வரும் வெங்காயம் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பிற்கு மட்டும் ராஜஸ்தான் செல்ல இருக்கிறார்கள்.

திரைப்படம் என்ற மாபெரும் ஊடக சக்தியின் மூலம் அவ்வப்போது மதிக்கத்தக்க படைப்புகள் உருவாவது உண்மைதான் என்றபோதிலும், நம் தமிழகத் திரைப்படங்கள் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால், காதலையும், காமத்தையும் முதன்மைப்படுத்துவதிலும், கடவுளையும், மதத்தையும் பரப்புவதிலும் தனது பெரும்பாலான ஆற்றலைச் செலவழித்து வந்திருப்பது தெளிவாகப் புரியும்.

அதையும் மீறி எப்போதாவது நல்ல கருத்துகளைத் தாங்கி வந்த படங்கள் கவனிக்கப்படாமல் போனதும், அதைத் தயாரித்தவர்கள் கசப்பான அனுபவங்களைச் சந்தித்ததும் நாமறிந்த ஒன்றே. இதையயல்லாம் தாண்டி பகுத்தறிவைக் கதைக் கருவாகக் கொண்ட வெங்காயம் திரைப்படம் அனைத்துத் தரப்பு மக்களின் மனதையும் ஆக்கிரமிக்கும் படி அதன் திரைக்கதை மிகமிக கவனமாகச் செதுக்கப்பட்டிருப்பதாக இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார். அவரது முயற்சிகள் வெற்றியடைய கருஞ்சட்டைத் தமிழர் வாழ்த்துகிறது.

- அன்புத் தென்னரசன்

Pin It