நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (16) - சத்யகி ராய்
ஹாப்சன் ஏகபோக அமைப்புகள் எவ்வாறு உள்நாட்டு முதலீடுகளைக் குறைத்து, வெளிநாட்டிற்கு மூலதன ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹில்ஃபெர்டிங் கூட்டுப் பங்குதாரர் நிறுவனத்தின் தோற்றம் குறித்து விவரித்துள்ளார். வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் ஒன்றுசேர்ந்து நிதி மூலதனம் உருவாவதையும், அவற்றின் நலன்கள் கூட்டுச் சேர்வதையும் குறிப்பிட்டுள்ளார்.
பரனும், ஸ்வீஸியும் ஏகபோக முதலாளித்துவம் எவ்வாறு பொருளாதாரத் தேக்கம் ஏற்படச் செய்கிறது என்பதையும், முதலாளித்துவத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கும், செய்ய வேண்டிய முதலீடுகளுக்குமான இடைவெளி வேண்டல் பற்றாக்குறை ஏற்படச் செய்வதையும் குறிப்பிடுகிறார்.
வேண்டல் பற்றாக்குறையால் புதிய முதலீடு செய்வதற்கு தேவையான தூண்டல் இல்லாத நிலைமை ஏற்படுகிறது. முதலாளித்துவம் மற்றப் பகுதிகளுக்குப் பரவுவதற்கான தூண்டல் இல்லாத போது, பரவ இயலா நிலையால் தேவையற்ற வீண் உற்பத்தி ஏற்படுகிறது.
அமெரிக்கா தன் எதேச்சதிகாரத்தாலும் ராணுவத் தொழிலகக் கூட்டமைப்பாலும் நடப்பு நிலைமையைப் பாதுகாத்துக் கொள்கிறது.
வளங்கள், தொழில்நுட்பம், சந்தைகள், மீது ஏகபோக ஆற்றல்கள் ஆளுகை பெறுகின்றன. போட்டி இல்லாமலே அதிக லாபங்களை பெறுவதால்
புத்தாக்கத்தின் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கான தூண்டு விசை இல்லாது போகிறது. இதனால் தொழில்நுட்ப முன்னேற்றம் தடைபடுகிறது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேண்டல் பற்றாக்குறை அதிகம் உள்ள நிலை ஏற்படும் போது அரசின் தலையீடுகள் தேவைப்படுகின்றன. நுகர்வியம் ஊக்குவிக்கப்படுகிறது.
ஏகாதிபத்தியம் குறித்து லெனின்:
முதலாளித்துவம் போட்டி நிலையிலிருந்து ஏகபோக நிலையை அடைகிறது. ஏகபோக ஆற்றல்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது. போட்டி சந்தைகளுக்காக மட்டுமல்ல, ஏகபோகங்கள் வளரப் புதிய வெளி தேவைப்படுகிறது. தங்கள் புவியியல் எல்லைகளைத் தாண்டிப் புதிய எல்லைகள் ஏகபோக ஆற்றல்களுக்குத் தேவைப்படுகின்றன.
உலகைப் பங்கீடு செய்யவும், தங்களது ஆளுகைக்குட்படுத்தவும், பிரித்து மறுபங்கீடு செய்வதற்கான வல்லாதிக்கப் போர்கள் ஏற்படுகின்றன. ஆனால் காட்ஸ்கி அதீத ஏகாதிபத்தியம் என்ற தனது கோட்பாட்டில் பெரிய ஏகபோகங்களுக்கிடையே மோதல்கள் தற்பொழுது இல்லை எனவும், போட்டியிடும் ஆற்றல்கள் கார்டெலைப் போல் தங்களுக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்தலாம், அதன் மூலம் அமைதியான முதலாளித்துவம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஏகாதிபத்தியப் போட்டியாளர்களுக்கிடையிலான ஆற்றல் சமநிலையில் அமைதி என்பது தற்காலிகமான ஒன்றே. முரண்பாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்குவதே ஏகாதிபத்தியத்தின் உள்ளார்ந்த பண்பாக உள்ளது. அமைதியான முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
இரண்டாவது அகிலம் எனப்படும் ‘கம்யூனிஸ்ட் இன்டர்னேசனல்’, முதல் உலகப் போர்க் காலக்கட்டத்தில் பொருளாதாரவாதத்தில் மூழ்கியிருந்த போது லெனின் புரட்சிகர அரசியலை முன்வைத்தார்.
சமூகம் என்பது உயிரற்ற பொருட்களை மட்டும் கொண்டிருக்கவில்லை, சிந்திக்கும் மனிதர்களையும் கொண்டுள்ளது. இயற்கை அறிவியலின் விதிகள் சமூக அறிவியலுக்குப் பொருந்த மாட்டா.
மூளைக்கும் பொருளுக்கும் இடையிலான தொடர் உறவை இயக்கவியல் விளக்குகிறது. இரண்டு வகையான சிந்தனை முறைகள் உள்ளன. அனுபவவாதத்தில் உண்மை உள்ளது. உண்மை உங்களைச் சாராமல் உங்களுக்கு வெளியே உள்ளது. புறவயத்தை எதிரொளிக்கும் செயல்பாடாக மனிதமூளை உள்ளது. ஆனால் மனித மூளை ஒரு புகைப்படக் கருவி அல்ல.
ஒன்று: முன்-நிர்ணயிக்கப்பட்ட கோட்பாடுகளே ஒன்றன் பின் ஒன்றாக பல அடுக்குகளாக மெய்யாகின்றன, அறிவுத் திரட்டல் நிகழ்வால் பகுத்தறியப்படுகிறது எனும் ஹெகலிய வாதம்.
மற்றொன்று: ஒவ்வொரு உண்மையும் பகுதியளவானதே என்பதையும். உண்மை முன்னரே தீர்மானிக்கப்படுவதில்லை என்பதையும் முன்வைக்கும் மார்க்சிய முறை. மார்க்சியக் கோட்பாடு நடைமுறையில் நிரூபிக்கப்பட வேண்டும். கோட்பாட்டில் உள்ள படி உண்மையில் இல்லையென்றால், கோட்பாட்டிலே பிரச்சினை உள்ளதையே குறிக்கும். அது மார்க்ஸினால் ஏற்பட்ட பிரச்சனையல்ல.
முதலாளித்துவம் சரியான முறையில் சவாலிடப் படாத வரை முடிவிலாக் காலம் வரை தொடரும். சரியான வர்க்கச் சவாலை முன்வைக்க வேண்டும்.
முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சியில் லெனின் எந்தளவுக்கு புத்தாக்கம் மிக்கவராக இருந்தார் என்பது குறித்து கிராம்சி வர்ணிக்கிறார். மூலதனத்துக்கு எதிரான புரட்சியில் லெனின் அரசியலுக்கே முதன்மை பங்கு அளித்தார் முனைப்பற்ற அறிவியல்வாதத்தை எதிர்த்தார்.
ஏகாதிபத்தியம் குறித்த லெனினின் வரையறை ஏகபோகங்களின் தோற்றத்தையும், மூலதன ஏற்றுமதி, நிதி மேலாதிக்கம். உலகப் பங்கீடு நிறைவேற்றம் பெறுதல் ஆகியவற்றின் அடிப்படையையுமே குறிப்பிடுகிறது.
லெனின் குறிப்பிடும் இறக்கும் தறுவாயிலுள்ள முதலாளித்துவம் பால் பரன் குறிப்பிடும் தேக்கத்திலிருந்து வேறுபட்டது.
புதிதாக உற்பத்தி செய்ய வேண்டிய அவசியமில்லாமல் நிதி மீதான சொத்துரிமைகளே லாபத்தைத் தருகின்றன. எந்த வேலையும் செய்யாமல் கூப்பன்களைச் சேர்ப்பதன் மூலம் செல்வம் சேர்ப்பவர்களின் அதீத வளர்ச்சி நிலையை குறிக்கிறது.
பொருளாதா வளர்ச்சி சமமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. உலகைப் பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என இரு துருவங்களாகப் பிரித்துள்ளது. இரு துருவங்களின் உழைக்கும் மக்களை ஒன்றிணைத்தும் உள்ளது.
அப்பொழுது இரண்டாம் அகிலத்தில் வளரும் நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தை பற்றி எந்த உரையாடலும் இடம் பெறவில்லை. லெனினே காலனியாதிக்கத்தை எதிர்க்கும் போராட்டம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் போராட்டமே என்பதை வலியுறுத்தினார்.
ஆளும் வர்க்கம் காலனிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட கூடுதல் லாபங்களிலிருந்து வளர்ந்த நாடுகளிலுள்ள மேல்தட்டு உழைக்கும் வர்க்கத்திற்கு சலுகைகள் அளித்து எழுச்சியை அணைத்தது.
முதலாளித்துவத்தை அதன் பலவீனமான கண்ணியில் தாக்கிப் புரட்சியை ஏற்படுத்துவது லெனினின் முன்னெடுப்பு. உலகளாவிய முதலாளித்துவம் என்பது ஒருங்கமைந்த அமைப்பாக உள்ளது. அதன் பலவீனமான பகுதியில் தாக்குவதன் மூலமே புரட்சியை உண்மையாக்க முடியும். ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணி ருஷ்யாவில் இருந்தது. லெனின் புரட்சியில் மட்டும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. காலனிய நாடுகளின் விடுதலைப் போராட்டத்தையும் வரவேற்றார்.
உலகப் போரின் போது ஏகாதிபத்தியம் குறித்த மூன்று நிலைப்பாடுகளை லெனின் விவரிக்கிறார்.
ஒன்று: உலகப் போரைத் தந்தை நாட்டைக் காப்பதற்கான போராட்டமாக ஆதரிக்கும் சமூக - தேசியவாதம், காவுட்ஸ்கி இப்பிரிவைச் சார்ந்தவர்.
இரண்டு: புரட்சிகரச் செயல்பாட்டை முன்னிறுத்தத் தவறும் சீர்திருத்தவாத சமூக-ஜனநாயகவாதம்,
மூன்று: இடதுசாரிப் புரட்சியவாதம்: உலகப் போரை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான உள்நாட்டுப் புரட்சியாக முன்னெடுத்தல். காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதை முன்னிறுத்துதல். தொழிலாளர் - விவசாயி கூட்டணியை வலுப்படுத்துதல்.
காலனிய நாடுகளின் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு மாற்றுவழியை ஏற்படுத்துதல். ஒடுக்கும், ஒடுக்கப்பட்ட நாடுகளின் உழைக்கும் மக்களின் ஒற்றுமை பெறுதல். தொழிலாளர் - விவசாயிக் கூட்டணி என்பதும் லெனினின் மிக முக்கியமான முன்னெடுப்பு.
ஏகாதிபத்தியச் சக்திகளுக்கு இடையிலான மோதல்களிலிருந்து தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான பொது இலக்கை ஏற்படுத்துவதும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து உலகப் புரட்சியை அடைவதும் புரட்சிகரச் செயல்பாட்டின் நோக்கமாக. இருந்தது. விடுதலையின் பலபடித்தான நிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உலகப் புரட்சியை ஏற்படுத்துவது இலக்காகக் கொள்ளப்பட்டது.
உழைப்பாளரால் சுரண்டலை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதுவே அவருக்கு வர்க்க நிலைப்பாட்டை அளிப்பதில்லை. தன்னிச்சையாகவே வர்க்க உணர்வு நிலை ஏற்படாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அர்ரிகி ஏகாதிபத்தியம், உலக மேலாதிக்கம் பற்றிய தன் கோட்பாட்டில் மூலதனத் திரட்டலின் அமைப்புசார் சுழற்சிகள் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். உலகளாவிய முதலாளித்துவ அமைப்பில் அரசியல் பொருளாதார மேலாதிக்கம், புவியியல்-கால அடிப்படையிலும், மூலதனத் திரட்டலின் நான்கு அமைப்புசார் சுழற்சிகளை அடையாளம் காண்கிறார்.
முதல் சுழற்சி பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியை மையமாகக் கொண்டது, அதன் பின்னர் பதினேழாம் நூற்றாண்டில் நெதர்லாந்தையும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டனையும், 20ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டும், அதைத் தொடர்ந்து சீனாவை மையமாகக் கொண்டும் மூலதனத் திரட்டல் ஏற்படும் என்று குறிப்பிடுகிறார்.
உடைமை பறித்தலின் மூலமே மூலதனம் திரட்டப்படுகிறது. இயற்கை வளங்களிலிருந்து ஓய்வூதியம் வரை அனைத்திலுமே உடைமை பறிப்பும், அபகரித்தலும் சுரண்டலும் நடைபெறுகின்றன.
உடைமை பறிப்பினால் மட்டுமே மூலதனம் திரட்டப்படுவதில்லை. உற்பத்தியை விரிவாக்கம் செய்வதன் மூலமும் மூலதனம் திரட்டப்படுகிறது. உடைமை பறிப்புக்குக் குறைந்த கவனமே அளிக்கப்பட்டுள்ளதாக ஹார்வி குறிப்பிடுகிறார்.
விவசாயி அபகரிக்கப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. தொழிலாளி ஒவ்வொரு நாளும் உற்பத்திச் சாதனங்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறார் அது கண்ணுக்கு தெரியாததாக உள்ளது. அபகரிப்பு என்பது சுரண்டல் நிகழ்முறையில் உள்ளார்ந்த ஒன்றாக இருக்கிறது.
மைக்கேல் ஹர்ட், அந்தோனியோ நெக்ரி ஆகியோர் பேரரசியத்தில் ஏகாதிபத்தியம் தேச எல்லைகளோ முரண்பாடுகளோ அற்ற ஒற்றை உலகப் பேரரசாக மாறியுள்ளதென்று குறிப்பிடுகிறார்கள். ஐரோப்பிய இறையாண்மையை நீட்சிப்படுத்தியுள்ளார்கள்.
எங்கும் பரவிய, ஃபௌகடிய அதிகாரத்தாலும், பேரரசாலும், ஏகாதிபத்தியம் பதிலீடு செய்யப்பட்டுள்ளது. மூலதனத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளும், அது ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுகளும் இவர்களது கோட்பாட்டில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
முதலாளித்துவம் தேசியத்திற்கான வாதங்களை நோக்கியோ, தேசநலன்களின் அடிப்படையிலோ பயணிக்காது. மூலதனத்திற்கென்று தேசியப் பாதை கிடையாது. அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களை டிரம்பால் கட்டுப்படுத்த முடியாது.
சுரண்டலுக்கான நெறிகள் அதற்கான அதிகார உறவுகளை உட்கொண்டுள்ளது. ஒற்றைமயப் பேரரசுக்குச் சவாலாக பன்மைத்துவம் உள்ளது. இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்கள், சர்வதேச நிதி மூலதனத்துடன் ஒத்திருப்பதில்லை.
ராபின்சன் தேசம் கடந்த முதலாளி வர்க்கம் தோன்றியிருப்பதையும், உலகளாவிய தன்மை முன்னிடம் பெற்றிருப்பதையும், அரசியல், பொருளாதார ஆற்றல் பிரிவுபட்டிருப்பதையும், அமெரிக்க அரசின் முடிவில்லாத போர் குறித்தும், அதிகாரப் படிநிலைகள் குறித்தும் விளக்குகிறார். அமெரிக்கா ஓர் உலக அரசு போல் ஆதிக்கம் செலுத்துகிறது.
முதலாளித்துவ வர்க்கத்தில் பல அடுக்குகள் உள்ளன. எந்த முதலாளி வர்க்கம் தேசத்தின் அரசாட்சியைக் கைப்பற்றுகிறது என்பதே முக்கியமானது. தேச அரசு ஏகாதிபத்தியக் கருவியாகச் செயல்படுகிறது. ஆனால் அது மட்டுமே அல்ல.
லெனினிய அனுமானப் பார்வையிலிருந்து இன்றைய உலகம் வேறுபட்டுள்ளது. வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறையவில்லை, சர்வதேச மூலதனத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.
இந்தியாவின் உள்நாட்டு மூலதனமும் உலக மூலதனத்தின் நலனாகச் செயல்படுகிறது. நம்மிடத்திலே உலகளாவிய முதலாளித்துவம் உள்ளது. உலக முதலாளித்துவத்தின் கருவிகளாக உள்ள உள்நாட்டு முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டும்.
தனிநபர்கள் சமூக நிகழ்வைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். இதை நிகழ்வாகப் புரிந்து கொள்ள வேண்டும். லுகாக்ஸ் பொய்யான உணர்வுநிலை பற்றி விவரிக்கிறார். பிழை அடையாள நிகழ்வால் உருவாக்கப்படும் புறவயத் தன்மையை அடையாளம் கண்டு உண்மை அறியும் மார்க்சிய முறையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார்.
சரக்கு என்பது தோற்றத்தில் மூலதனத்தின் அடிப்படை அலகாக தெரிகிறது. ஆனால் உண்மை என்பது வெளித் தோற்றத்தை விட மேம்பட்டதாகவும் சிக்கலாகவும் உள்ளது.
முதலாளித்துவத்தின் வெளித் தோற்றத்திலிருந்து உண்மையான முதலாளித்துவம் முற்றிலும் வேறுபட்டுள்ளது. நிதிமயமாக்கத்தைக் கேள்விக்குட்படுத்தாமல், இயல்பாகவும், இயற்கையாகவும் பார்ப்பதும் பிழை அடையாளமே.
(தொடரும்)
- சமந்தா