தொலைக்காட்சிகளில் (அண்ணா அசாரே தொடர் பாக) நாம் காண்கின்றவை உண்மையில் ஒரு புரட்சி என்று கூறப்படுமானால், அண் மைக்காலத்தில் நடந்த நிகழ்ச் சிகளுள், அதிக அளவில் அவமானமானதும், புரிந்து கொள்ள முடியாததுமான முதன்மையான நிகழ்ச்சி இதுவேயாகும். அசாரேவின் மக்கள் லோக் பால் சட்டம் குறித்து உங்களுக்கு எத்தகைய கருத்து வேறுபாடு இருந்தாலும் பின்வருவனவற்றை ஆத ரிக்கும் நிலைக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறீர்கள். 1. வந்தே மாதரம், 2. பாரத் மாதாகீ ஜே, 3. இந்தியாவே அண்ணா, அண்ணாவே இந்தியா, 4. ஜெய்ஹிந்த்.

மக்கள் லோக்பால் சட்டத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இந்திய அரசமைப்பைத் தூக்கி எறிய வேண்டும் என்ற ஒரே நோக்கம் இருப்பதாக பல்வேறு காரணங்களைக் காட்டி, பல்வேறு வழிகளில் நீங்கள் விளக்கக்கூடும். ஒருபுறம் பெரும்பாலும் பழங்குடி மக்களைக் கொண்ட - வறியருள் வறியராக உள்ள, கீழ்த்தட்டு மக்கள் ஆயுதமேந்திப் போரிட்டு வருகின்ற னர். மறுபுறம், புதியதாக அச்சில் வார்க்கப்பட்ட துறவி (அசாரே)யின் தலைமையின்கீழ், நடைபெறும் குருதி சிந்தாத புரட்சியில், பங்கேற்போரில் பெரும்பாலோர் நகரங்களில் வாழ்கின்ற - வசதி படைத்த - மேல் தட்டினராகவே இருக்கின்றனர். (நடுவண் அரசு, தன்னைத்தானே மண்ணைக் கவ்வும் வகையில், இக்கிளர்ச்சி குறித்துச் செயல்படுகிறது).

நடுவண் அரசு, அடுத்தடுத்து, பல ஆயிரம் கோடிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட ஊழல்களில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. 2011 ஏப்பிரல் மாதம் அண்ணா அசாரே ‘சாகும் வரை உண்ணா நிலைப் போராட் டத்தை’ மேற்கொண்டார். மாபெரும் ஊழல்கள் மீது குவிந்திருந்த மக்களின் கவனத்தைத் திசை திருப்பு வதற்காக, நடுவண் அரசு, லோக்பால் சட்ட வரைவுக் குழுவில் பங்கேற்குமாறு அண்ணா குழுவினரை அழைத்தது. பேச்சுவார்த்தை நடத்தியது. பிறகு, அண்ணா குழுவினருடன் உடன்பாடு காணும் முயற்சியை அரசு கைவிட்டது. அரசு தான் உருவாக்கிய லோக்பால் சட்டவரைவை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தது. இந்தச் சட்டவரைவு உப்புக்கும் உதவாத தாகவே இருக்கிறது.

ஆகவே, அண்ணா அசாரே ஆகசுட்டு 16 முதல் மீண்டும் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத் தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். ஆனால் ஆகசுட்டு 16 அன்று காலை அண்ணா அசாரே உண் ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பே - அவர் எத்தகைய சட்டமீறல் செயலும் ஈடுபடாத நிலையில் - அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அசாரே குழுவினரின், மக்கள் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான போராட்டம், சனநாயக உரிமைக்கான போராட்டமாக உருவெடுத்தது. இந்த ‘இரண்டாவது சுதந்தரப் போராட்டம்’ தொடங்கிய சில மணி நேரத் திலேயே, அண்ணா அசாரேவை விடுதலை செய்வ தாக அரசு அறிவித்தது.

ஆனால் அசாரே சிறையிலிருந்து வெளிவர மறுத்துவிட்டார். மிகவும் மரியாதைக்குரிய விருந்தாளி போல் திகார் சிறையில் வீற்றிருந்தார். சிறையிலேயே உண்ணாநிலையை மேற்கொண்டார். பொது இடத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துவதற்கு அரசு இசைவளித்தால்தான், சிறையிலிருந்து வெளியே செல்வேன் என்ற நிபந்தனையை விதித்தார். முதல் மூன்று நாள்கள் அசாரேவுக்கு ஆரவாகத் திகார் சிறைக்கு முன் பெரும் கூட்டம் கூடியது. தொலைக் காட்சி ஊர்திகளும் குவிந்தன. பாதுகாப்பு மிக அதிகமாக உள்ளதாகக் கூறப்படும் திகார் சிறைக்குள் அசாரே குழுவினர் அடிக்கடி உள்ளே சென்று அசாரேவு டன் கலந்துரையாடினர். சிறையில் அசாரேவின் உரைகள் வீடியோ படமாக எடுக்கப்பட்டன. அவை எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாயின (வேறு யாருக்கேனும் இத்தகைய வசதி அளிக்கப் படுமா?).

இதற்கிடையில், தில்லி மாநகராட்சி ஊழியர்கள் 250 பேர், 15 டிரக்குகளுடனும் 6 மண் வாரி ஊர்தி களுடனும் இராம் லீலா திடலில் அண்ணா அசாரே, உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதற்காக இரவு பகலாக வேலை செய்தனர். பெரும் மக்கள் திரள் முழக்கமிட்டவாறு பார்த்திருக்க, உயரமான தூக்கிகள் மேல் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவிகள் மூலம் கொழுத்த சம்பளம் பெறும் இயக்குநர்கள் படம் பிடிக்க, அண்ணா அசாரேவின், மூன்றாவது கட்ட, சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றாகத் திரண்டிருக்கிறது’ என்று தொலைக்காட்சிகள் நம் செவிகளில் ஓதிக்கொண்டிருந்தன.

அசாரேவின் வழிமுறைகள் வேண்டுமானால் காந்திய வழிப்பட்டதாக இருக்கலாம். ஆனால், உறுதி யாக அவருடைய கோரிக்கைகள் காந்திய நெறி சார்ந்த வை அல்ல. அதிகாரம் கீழ்நிலை வரை பகிர்ந்தளிக் கப்பட வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. ஊழலுக்கு எதிரான வலிமையான சட்டம் என்று கூறப்படும் அசாரேவின் மக்கள் லோக்பால் சட்டம் முற்றதிகாரம் கொண்ட, கொடிய சட்டமாக இருக்கிறது. ஏனெனில் இச்சட்டப்படி, மிகுந்த கவனமுடன் பொறுக்கி எடுக்கப்படும் ஆட்களைக் கொண்ட ஒரு குழு, அரசின் மிகப்பெரிய நிருவாகத்தைக் கண்காணிக்குமாம். பிரதமர், நீதித்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், கீழ்நிலை அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் கண்கொத்திப் பாம்பு போல் பார்த்துக் கொண்டிருக்குமாம். புலனாய்வு செய்வது, கண்காணிப்பது, தண்டனை வழங்குவது ஆகிய அதிகாரங்கள் லோக்பால் குழுவிடம் இருக்கும். லோக்பால் குழுவிடம் தனியாகச் சிறைச்சாலைகள் இருக்காது. பொறுப்பாண்மையற்ற - ஊழல் மலிந்த அமைப்பைச் சீர்செய்வதற்காக மேலும் புதிய, தனியதிகாரம் கொண்டதாக இது செயல்படும். முன்பே அதிகாரம் வாய்ந்த சிறு கும்பல் நாட்டை ஆளுகிறது. மக்கள் லோக்பால் குழுவும் இரண்டாவது, அதிகாரம் வாய்ந்த கும்பலாகச் செயல்படப் போகிறது.

மக்கள் லோக்பால் சட்டம் எந்த அளவுக்கு ஊழலை ஒழிக்கும் என்பது, ஊழல் என்பது என்ன என்கிற நம்முடைய புரிதலைச் சார்ந்திருக்கிறது. ஊழல் என்பது சட்டம் தொடர்பானதா? நிதிமுறைகேடா? கையூட்டா? அல்லது மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத் தாழ்வு நிலவும் - அதிகாரங்கள் அனைத்தும் சிறுகும்ப லிடம் குவிக்கப்பட்டுள்ள நம் சமூகத்தில் நடக்கும் பணப் பரிமாற்றமா?

பல அடுக்கு வணிகப் பேரங்காடிகள் அமைந் துள்ள தெருவில், தலையில் கூடையில் சுமந்து அல்லது தள்ளுவண்டியில் விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டி ருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது தெருவில் கூவி விற்பவர் உள்ளூர் காவல்துறை ஆளிடமோ, அல்லது நகராட்சி ஊழியரிடமோ சிறு தொகையைக் கையூட்டாகக் கொடுத்துவிட்டு விற்கிறார். பேரங்காடிக்குச் சென்று அதிக விலையில் பொருளை வாங்க முடியாதவரிடம் இவ்வாறு விற்கிறார். இது மாபெரும் கொடிய செயலா? எதிர்காலத்தில் லோக்பால் அமைப்பின் சார்பில் கண்காணிப்புச் செய்யும் ஆளுக்கும் கூவி விற்பவர் இலஞ்சம் தருவார். சாதாரண மக்கள் இதுபோல் சந்திக்கும் சிக்கல்களுக்கான தீர்வு ஏற்றத் தாழ்வான அமைப்பை மாற்றுவதில் இருக்கிறதா? அல்லது மேலும் ஒரு புதிய அதிகார மய்யத்தை ஏற் படுத்துவதில் உள்ளதா? இதை மீறுவது தவிர மக்க ளுக்கு வேறு வழியில்லை.

அண்ணா அசாரேவின் ‘புரட்சிகரப்’ போராட்டத் துக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடுகின்ற கூட்டங்களில், தேசியக் கொடியை அசைத்தவாறு, வெறிபிடித்த தேசிய முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய போராட்ட நடைமுறை, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங் கள், கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வெற்றி ஊர்வ லங்கள், அணுஆயுதச் சோதனையின் வெற்றிக் களி யாட்டங்கள் ஆகியவற்றிலிருந்து ‘காபி’ அடித்தாகும். அசாரேவின் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆதரிக்காதவர்கள், ‘உண்மையான இந்தியர்’ அல்லர் என்று நமக்கு உணர்த்துவது போல் அவர்களுடைய முழக்கங்களும் செயல்களும் உள்ளன.

மணிப்பூரில், சந்தேகத்தின் பேரில் எவரையும் சுட்டுக்கொல்வதற்கு இராணுவத்துக்கு அளிக்கப்பட் டுள்ள சிறப்பு உரிமைச் சட்டத்தை நீக்கக் கோரி, இளம்பெண் இரோம் ஷர்மிளா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். (இப்போது அரசு, கட்டாயப்படுத்தி நீர்ம உணவை அவரது தொண்டைக்குள் செலுத்தி வருகிறது). தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் நிறுவப்படுவதை எதிர்த்து, ஆயிரக்கணக் கில் கிராம மக்கள் தொடர் உண்ணாநிலைப் போராட் டங்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவையெல்லாம் உண் மையான உண்ணாநிலைப் போராட்டம் அல்லவா? இரோம் ஷர்மிளாவை ஆதரிக்கும் மணிப்பூரிகள் உண்மையான மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூர், கலிங்கா நகர், நியம்கிரி, பஸ்தார், ஜெய்தபூர் முதலான இடங்களில் காவல்துறையின் ஆயுதங்களையும், சுரங்க மார்ஃபியா கும்பலின் தாக்குதலையும் எதிர் கொண்டு, நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்வோர் மக்கள் அல்லவா? போபாலில் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களும், நருமதை அணை கட்டுவதால் தம் வாழிடங்களிலிருந்து விரட்டி யடிக்கப்பட்டு, பராரிகளாக அலைந்து கொண்டிருப் போர் மக்கள் அல்லவா? நொய்டாவில், புனேயில், அரியானாவில் மற்றும் இந்தியா முழுவதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்காக அரசால் நிலங்கள் பறிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் உழ வர்கள் மக்கள் அல்லவா?

தாங்கள் உருவாக்கிய மக்கள் லோக்பால் சட்ட வரைவை நாடாளுமன்றத்தின் முன்வைத்து, நிறை வேற்றாதவரையில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவேன் என்று கூறுகின்ற 74 அகவையினரான அசாரேவைக் காண்பதற்குக் கூடும் கூட்டம் மட்டுமே மக்கள் என்பதுபோல் சித்தரிக்கப் படுகின்றனர். ஏசு கிறிஸ்து, மீன்களையும், ரொட்டித் துண்டுகளையும் தன் அற்புதத்தால் பல மடங்கு அதிகமாக்கி, பசித்தவர்களுக்கு அளித்தது போல், அண்ணா அசாரேவைக் காணவந்த பல ஆயிரக்கணக்கானவர் களை, பல இலட்சம் பேர்களாக நம்முடைய தொலைக் காட்சிகள் பெருக்கிக் காட்டுகின்றன. “ஒரு கோடி மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். எனவே இந்தியா என்பதே அண்ணா” என்று நமக்குக் கூறப்படுகிறது.

புதிய புனிதராகப் புறப்பட்டுள்ள-மக்கள் மனச்சான் றின் குரலாக ஒலிக்கின்ற அசாரே உண்மையில் எப்படிப்பட்டவர்? உடனடியாகத் தீர்க்க வேண்டியுள்ள மக்களின் பிரச்சனைகள் பற்றி அசாரே எதுவும் கூறிய தாகத் தெரியவில்லை. அவர் வாழுகின்ற மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையில் நடந்து கொண்டிருக்கும் உழவர்களின் தற்கொலை பற்றியோ, தொலைவில் நடைபெறும் ‘பசுமைவேட்டை’ குறித்தோ, அவர் தன் கருத்தைக் கூறியதில்லை. அதைப்போலவே, சிங்கூர், நந்திகிராம், லால்கர், குறித்தோ அல்லது போஸ் கோவுக்கு எதிராகப் பழங்குடியினர் நடத்தும் போராட் டம், உழவர்களின் போராட்டம், சிறப்புப் பொருளியல் மண்டலங்களால் விளையும் கேடுகள் ஆகியன குறித் தோ அசாரே வாய்திறக்கவில்லை. மத்திய இந்தியா வில் காடுகளில் இராணுவத்தை ஏவி மக்களை ஒடுக்கும் நடுவண் அரசின் திட்டம் குறித்து அசாரேவுக்கு எத்தகைய கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை.

மராத்தியர் அல்லாத பிற மாநிலத்தவர் மீது ராஜ் தாக்ரே உமிழும் நச்சுக் கருத்துகளை அசாரே ஆதரிக் கிறார். 2002ஆம் ஆண்டு திட்டமிட்டு முசுலிம்களைப் படுகொலை செய்த முதலமைச்சர் நரேந்திரமோடியின், ‘வளர்ச்சியின் முன் மாதிரியை’அசாரே வியந்து பாராட்டுகிறார். (அசாரேவின் பாராட் டுக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்ட பிறகு, அசாரே தன் கூற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். ஆயினும் அசாரே உள்ளத்தில் மோடி மீதான மதிப்பு நீடிக்கிறது).

அசாரேவுக்கு ஆதரவான பெருங் கூச்சலுக்கு இடையிலும், இந்த ஆரவாரத்தால் மயங்காத செய்தி யாளர்கள், நியாயமான முறையில், என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். முகுல் சர்மா என்ற செய்தியாளர், அசாரேவின் சொந்த ஊரான ரலேகான் சித்தியின் சமூக வாழ்நிலையை ஆராய்ந்து எழுதியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளாக ரலேகானில் கிராமப் பஞ்சாயத்துக்கோ அல்லது கூட்டுறவு சங்கத்திற்கோ தேர்தல் நடக்கவில்லை. ‘அரிஜன்கள்’ பற்றி அசாரே கொண்டுள்ள கருத்து என்ன என்பதை நாம் அறிவோம்.

“ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சக்கிலி, ஒரு பொற்கொல்லன், ஒரு குயவன் முதலானோர் இருக்க வேண்டும். அவரவர்க்குரிய தொழிலை அவரவர் செய்ய வேண்டும். அப்போதுதான் தற்சார்பு உள்ள கிராமமாக இருக்கும். இதுவே காந்தியின் நோக்க மாகும். அதைத்தான் ரலேகான் சித்தியில் பின்பற்று கிறோம்” என்று அசாரே கூறியிருக்கிறார்.

இதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக, ‘சமத்துவத்துக்கான இளை ஞர்கள்” என்ற பெயரில் மேல் சாதி மாணவர்கள் “தகுதி-திறமைக்கான” போராட்டம் நடத்திய போது அண்ணா குழுவினர் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். அப்போராட்டத்தை அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்து வழிநடத்தின. அப்போராட்டத்துக்கு கோகோ-கோலா, லெமேன் பிதர்ஸ், தற்போது அண்ணா குழுவில் முதன்மையானவர்களாக விளங்கும் அரவிந்த் கெஜிரி வால், மனிஷ்சிரோடியா நடத்தும் கபிர் நிறுவனம் முதலானவை நிதி உதவி வழங்கின. இந்தக் கபிர் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் ஃபோர்டு அறக்கட்டளையிடமிருந்து 4,00,000 டாலர் பெற்றுள்ளது.

ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரில் இவர்கள் நடத்தும் இயக் கத்திற்கு இந்தியாவில் உள்ள பெரும் தொழில் நிறு வனங்களும் அறக்கட்டளைகளும் நிதி உதவி செய்து வருகின்றன. இவ்வாறு நிதி வழங்குவோர் அலுமி னியத் தொழிற்சாலைகளை வைத்திருப்போராக, துறைமுகங்களைக் கட்டுவோராக, சிறப்புப் பொருளியல் மண்டலங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்களாக இருக்கின்றனர். மனை வணிகத் தொழில் (ரியல் எஸ்டேட்) செய்வோராக உள்ளனர். பல ஆயிரம் கோடிகளில் பெரிய நிதி நிறுவனங்கள் நடத்தும் அரசியல் வாதிகளுடன் இவர்கள் நெருங்கிய தொடர்பு கொண் டுள்ளனர். அவர்களில் சிலர் மீது ஊழலுக்காகவும் பிற குற்றங்களுக்காகவும் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் ஆர்வமேலீட்டால் ஏன் துள்ளிக் குதிக்கின்றனர்?

விக்கிலீக்ஸ், வெளி உலகிற்குத் தெரி யாத பல உண்மைகளை அம்பலப்படுத்திய காலக்கட் டத்தில்தான் இந்தியாவில் 2-ஜி அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட, பல ஊழல்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இந்த ஊழல்கள் மூலம் பெரிய முதலாளியக் குழு மங்கள், புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள், காங்கிரசுக் கட்சி, பாரதிய சனதா கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் தமக்கிடை யே கள்ளக் கூட்டுறவு கொண்டு, அரசின் கருவூலத் திற்கு வந்து சேரவேண்டிய பல ஆயிரம் கோடி உரு வாவைக் கொள்ளையிட்டனர். எப்போதும் இல்லாத தன்மையில், தரகு வேலை செய்த ஊடகவியலா ளர்கள் அம்பலப்பட்டு அவமானத்திற்குள்ளாயினர். இந்தியாவின் பெருமுதலாளியக் குழுமத்தின் தலை வர்கள் சிலர் உண்மையில் சிறைக்குள் தள்ளப் படுவார்கள் என்ற நிலை இருந்தது. அதனால்தான், இதுவே தக்கசமயம் என்று அண்ணா குழுவினர் ‘ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத்’ தொடங்கி னார்களோ?

வழக்கமாகத் தான் செய்ய வேண்டிய பொறுப்பு களிலிருந்து அரசு விலகிக் கொண்டிருக்கிறது (தாராள மயம், தனியார் மயம் காரணமாக). அதனால், குடிநீர் வழங்கல், மின்சாரம், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் பொறுப்பைப் பெருமுதலாளியக் குழுமங்களும், அரசு சாரா அமைப்புகளும் ஏற்றுள்ளன. பெரும் ஆற்றல் வாய்ந்த - எளிதில் மக்களிடம் சென்று சேரக் கூடிய தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் பெரு முதலாளியக் குழுமங்களுக்குச் சொந்தமாக இருக் கின்றன. மக்களின் மனப்போக்கைத் தீர்மானிப்பதில் இவை முதன்மையான பங்கு வகிக்கின்றன. ஆகவே, பெருமுதலாளியக் குழுமங்கள், செய்தி ஊடகங்கள், அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றை லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். ஆனால் அசாரே குழுவின் லோக்பால் சட்டவரைவில் இவர்கள் சேர்க்கப்படவில்லை. (இவர்களைச் சேர்க்கக்கூடாது என்றும் அசாரே குழுவினர் கூறுகின்றனர். மொ.பெ.)

ஊழல் செய்யும் அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் ஆகியோர்க்கு எதிராக மற்ற எவரையும்விட உரத்து முழங்குவதன் வாயிலாகவும், ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்துவதன் மூலமாகவும், கெட்டிக்காரத்தனமாக அவர்கள் ஊழல் குற்றச்சாட்டி லிருந்து தப்பிக்க முயல்கின்றனர். இதைவிடக் கேடானது என்னவெனில், இவர்களாகவே உருவாக்கிக் கொண்ட புனித மேடையில் நின்று கொண்டு, அரசு மட்டுமே குற்றவாளி என்று கூவுகின்றனர். மக்களுக்கான பணி களிலிருந்து அரசு மேலும் விலக வேண்டும் என்று கோருகின்றனர். இந்தியாவின் இயற்கை வளங்களும், பொதுக்கட்டமைப்புகளும் தனியாருக்குத் திறந்துவிடப் படும் வகையில் இரண்டாம் கட்டப் பொருளாதாரச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அரசை வலியுறுத்துகின்றனர். பெருமுதலாளியக் குழுமங் களின் ஊழல்களுக்கு சட்ட ஏற்பு அளித்து, அவற்றுக்கு ‘ஆதரவு திரட்டல் ஊதியம்’ (Lobbying fee) என்று பெயர் சூட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. (இதை எளிதில் தரகுக்கூலி என்று கூறலாம். மொ.பெ.)

83 கோடி மக்கள் ஒரு நாளைக்கு உருவா 20க்கும் குறைவாகவே செலவிடக் கூடிய நிலையில் இருக்கின் றனர். இவர்களை இந்த அளவுக்கு ஏழ்மை நிலைக் குத் தள்ளிய நாட்டில் உள்நாட்டுப் போர் மூளும் நிலையை உருவாக்கிய இந்நாட்டின் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதால், 83 கோடி ஏழை மக்களுக்கு உண்மையில் பயன் ஏதேனும் கிடைக் குமா?

இக்கொடிய துன்பநிலை ஏற்பட்டுள்ளதற்கு இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவ சனநாயகத்தின் தோல்வியே காரணமாகும். மக்களின் விருப்பார்ந்த விழைவுகளை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத குற்றவாளி களும், கோடீசுவரர்களும் சட்டமன்றங்களிலும் நாடாளு மன்றத்திலும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். சன நாயகத்தின் எந்தவொரு நிறுவனத்தையும் சாதாரணக் குடிமக்கள் அணுகி நியாயம் பெற முடியாத நிலை உள்ளது. தேசியக் கொடியை வேகமாக அசைத்துக் காட்டுவதன் மூலம் மக்களை முட்டாள்களாக்காதீர்கள்.

(22.8.2011 அன்று ‘தி இந்து’ நாளேட்டில் அருந்ததிராய் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழாக்கம் : க.முகிலன், நன்றி : தி இந்து)

Pin It