உலக கார்ப்பரேட் முதலாளிகள் எப்படி ஆட்சியாளர்களை அபேஸ் பண்ணுறாங்கன்னு தெரியல...!

ஆனா, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஆட்சியாளர்கள் மக்களை எப்படி அபேஸ் பண்ணுகிறார்கள் என்பதை தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பார்த்து விட்டோம்.

wal mart 340இப்ப திருப்பூர் பனியன் கம்பெனி முதலாளிகளையும், ஆன்லெனில் ஆடை வாங்கும் மக்களையும் எப்படி நம்ம தேசிய இந்து முதலாளிகளும் - அரசும் 'அபேஸ்' மற்றும் 'குளோஸ்' பண்ணுறாங்கன்னு பார்ப்போம். அந்த உத்தமர்கள் எப்படி சொத்து சேர்த்து இந்தியப் பணக்காரர்களாக வளம் பெறுகிறார்கள் என்பது இதில் கொஞ்சம் தெரிய வரும்.

வங்கியில், சொந்த பந்த ஆளுககிட்ட கடனை வாங்கி பனியன் கம்பெனி வைத்து பொழைக்கலாம்னு தொழில் செய்தால், மத்திய அரசு போட்ட GST வரிக்குப் பிறகு ஏற்றுமதி வர்த்தகம் இறங்குமுகத்தில் உள்ளது.

உலக வர்த்தக ஒப்பந்தப்படி 10 லட்சம் முதல் போட்டு தொழில் செய்பவனும், 10 லட்சம் கோடி முதல் போட்டு தொழில் செய்பவனும் ஒன்னு தான்னு சொல்லி விட்டார்கள். ஆகையால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வரிச் சலுகை கிடையாது என்று நெற்றிப் பொட்டில் அடித்து விட்டார்கள்.

நாடு டிஜிட்டல் மயமாக வளரும்போது 2017-18 அன்னிய முதலீடு 4485 கோடி டாலர், 2018-19ல் 4437 கோடி டாலர், 2019-20ல் மேலும் குறைந்து 4000 கோடி டாலருக்கும் கீழே வர வாய்ப்புண்டு.

அதேபோல ஆடை ஏற்றுமதியும் 2016-17ல் 1738 கோடி டாலர், 2017-18ல் 1672 கோடி டாலர், 2019-19ல் 1637 கோடி டாலர் எனக் குறைந்து கொண்டே செல்கிறது.

15 கோடி மக்கள் இருக்கும் பங்களாதேஷ் 2.73 லட்சம் கோடிக்கு ஆடை ஏற்றுமதி செய்கிறது. 125 கோடி மக்களுக்கு மேல் உள்ள இந்திய 1.23 லட்சம் கோடி வர்த்தகம் செய்யவே முக்கித் திணறுகிறது.

ஒட்டுமொத்த மக்களும் வறுமையில் வாடும் போது குறிப்பிட்ட 10% நபர்களின் கையில் இந்தியாவின் சொத்து குவிந்து வருகிறது.

சரி உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடலாம் என நினைத்தால் பனியா, மார்வாடி சேட்டுகள் தான் சந்தையைக் கைப்பற்றி வைத்துள்ளார்கள்.

கடந்த 3 மாதத்திற்குள் மட்டும் சுமார் 550 கோடி மதிப்பிலான ஆடைகளைக் கொள்முதல் செய்து விட்டு பணம் கொடுக்காமல் மஞ்சள் கடிதாசி கொடுத்துள்ளார்கள் மும்பாய் மற்றும் கல்காத்தா பனியாக்கள்.

உள்நாட்டு ஆடை விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தினர். இதில் பிளிப்கார்ட் நிறுவனப் பங்கில் 70% மேல் வால்மார்ட் வாங்கியுள்ளது. நேரடியாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாமல், கொல்லைப்புறத்தின் வழியாக மாநிலங்களவை உறுப்பினர் பதவி வாங்கி அருண் ஜெட்லி, நிர்மலா மாமி போன்றோர்  அமைச்சர்களாக வந்து தாலியறுப்பது போல, இந்த வால்மார்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி உள்நாட்டுத் தொழிலை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

தேசபக்தியெல்லாம் பன்னாட்டு முதலாளிகிட்ட சூ தூசி துடைக்கத்தான்.

சில்லரை வர்த்தகத்திலும் பல்லாயிரம் கோடிகளை இறக்கி, தொழில் செய்து பக்கத்து வீட்டு முதலியார், செட்டியார், நாயுடு, அண்ணாச்சிக் கடைகளை போண்டியாக்கி வருகிறார்கள் அந்தக் கேடிகள்.

அந்தத் தொழிலையாவது நேர்மையுடன் செய்கிறார்களா என்றால், 200% அக்மார்க் கொள்ளைக்காரர்கள்...

(எர்னஸ்ட் & யங் என்ற கணக்கு தணிக்கைக் கம்பெனியைக் கொண்டு எந்த வழிகளில் வரி ஏய்க்கலாம் என்று யோசனை கேட்பவர்கள் தான் வால்மார்ட்)

விளம்பரத்தைத் தவிர வேறு எந்த உழைப்பும் (மூளை + உடல்) செலுத்தாத இந்த கடன்காரர்கள் தான், எங்களைப் போன்ற சிறு நிறுவனங்களின் மூலதனத்தை அவர்களின் மூலதனமாக பங்குச் சந்தையில் காட்டி பெரும் செல்வந்தர்கள் போல் கோடி கோடியாக கடன் பெற்று உல்லாசமாகவும், ஊதாரிகளாவும் வாழ்கிறார்கள்.

திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு Art work எனப்படும் ஒரு கற்பனையில் வரைந்த படத்தை மின்னஞ்சலில் அனுப்புகிறார்கள். இரவு பகல் பார்க்காமல் துணியாக மாற்றி அந்த Art work-கிற்கு உயிர் கொடுத்து சாம்பிள் பீஸ் தயாரித்து (குறைந்த பட்சம் 8000/- செலவு செய்து) அனுப்பி வைத்து, பின்னர் அவர்களிடமிருந்து ஆர்டர் வாங்கி ஆடைகளைத் தயாரித்துக் கொடுக்கும் நாங்கள், முதல் போட்டு 15% லாபத்திற்குத் தொழில் செய்கிறோம். ஆர்டர் எடுக்க போட்டி அதிகமாக இருந்தால் 10% வரை குறையலாம்.

கார்ப்பரேட் கம்னாட்டிகள் 90 நாட்கள் கடனுக்கு எங்களிடம் கொள்முதல் செய்வார்கள். எங்களின் அவசரத் தேவைக்கு பில் பணத்தை அவர்களின் பைனான்ஸ் கம்பெனியில் 10% தள்ளுபடியில் உடனே பெற்றுக் கொள்ளலாம் அல்லது பில் பணத்தில் 75% பணத்தை 2 வட்டிக்கு வாங்கிக் கொண்டு 90வது நாளில் கழித்துக் கொள்ளலாம்.

தலை சுற்றுகிறதா தோழர்களே..

உண்மையில் 160/- ரூபாய்க்கு எங்களிடம் வாங்கும் மேலாடையை ₹999/- க்கு (30 நாட்கள்) விற்பனையைத் துவங்கி கடைசியில் ₹499 க்கு (30 நாட்கள்) விற்றுத் தீர்த்து விட்டு தான் எங்களுக்குப் பணத்தைத் தருகிறார்கள்.

அதாவது தயாரிப்புக் கூலி ₹139/- லாபம் ₹21/- இதில் தான் கம்பெனி வாடகை முதல் அனைத்து செலவினங்களை பார்த்துக் கொண்டு, போட்ட முதலுக்கு லாபமும் எடுத்துக் கொள்ளனும்.

ஆனால் ஆன்லைனில் வாடிக்கையாளரான உங்களை மொட்டையடித்தே சொத்து சேர்க்கும் உங்க அபிமான விளம்பரதாரர்கள் 100% நடைமுறை செலவினமாக சேர்த்தால் ₹320ம், அதன் மேல் 50% லாபம் சேர்த்தால் கூட ₹480க்கு விற்கலாம். ஆனால் அவர்கள் விற்பனை செய்வது ₹999 தொடங்கி ₹499ல் விற்றுத் தீர்த்து விடுகிறார்கள். சராசரியாக ₹600-க்கு விற்றாலும் தயாரிப்புச் செலவை விட ₹440/- அதிகப்படுத்தி உங்களுக்கு அல்வா கொடுக்கிறார்கள்.

கீழே ஒரு Open Costing sheet உள்ளது. இது பொதுவாக ஆர்டர் எடுக்கும் போது தோராயமாக எடுக்கும் கணக்கு தான். ஆர்டர் எடுத்த பின்னர், செலவு இதைவிட அதிகமாகுமே தவிர குறைய வாய்ப்பில்லை. அந்த அதிகப்படி செலவினத்தைக் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

opening cost sheet

₹240 Polo Shirt ₹1099ல் ஆரம்பித்து ₹699ல் முடிப்பார்கள்,

₹420 Hoody Full Sleeve ₹1499-ல் ஆரம்பித்து ₹899ல் முடிப்பார்கள்,

₹360 Shorts 1199ல் ஆரம்பித்து ₹799ல் முடிப்பார்கள்,

பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆகையால் இத்துடன் முடிப்போம்.

இப்பச் சொல்லுங்க அதானி, அம்பானி, மிட்டல், டாடா, பிர்லா, வேதாந்தா, பஜாஜ், கோத்ரேஜ், பாம்பே டையிங், அர்விந் மில்ஸ் முதலாளிகளின் சொத்து, உழைத்து வியர்வை சிந்தி சம்பாதித்ததா...??

இந்த ஆன்லைன் அக்கப் போர் எங்களிடமிருந்து ஆரம்பிக்கவும் இல்லை, எங்களோடு முடியப் போவதும் இல்லை..

திருவாளர் மன்மோகன் ஆரம்பித்த இந்த அக்கப் போரை திருவாளர் மோடி தீவிரமாக்கி வருகிறார். வாடிக்கையாளரான நீங்கள் தான் முடித்து வைக்க வேண்டும்.

- தருமர், திருப்பூர்

Pin It