எந்தக் கட்சியில் இருந்தாலும்.. என்ன நோக்கமிருந்தாலும்... ஆளுநரே வேண்டாம் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவருக்கும் இன்றைய முதன்மை முழக்கமாக இருக்க வேண்டும்.. தமிழ்நாட்டிற்குள்ளான நம் குடுமிப் பிடி சண்டைகளைப் பிறகு வைத்துக் கொள்ளலாம்... அனைவருக்குமான பொது எதிரியான பாசிச இந்தியப் பார்ப்பனிய வெறியர்களுக்கு எதிராக நிற்போம்.. ஆளுநர் என்கிற இந்திய ஒட்டுண்ணி அடிவருடியை விரட்டியடிக்க ஒன்று சேர்வோம்... திருவள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை இழிவுபடுத்தும் ஆரியப் பார்ப்பனிய வாய்க்கொழுப்பை விரட்டியடித்து விடை கூறுவோம்.. மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை.

ஆளுநரின் சட்டப்படியான வேலையை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 தெளிவாக விளக்குகிறது; சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு 1. ஒப்புதல் அளிப்பது. 2. ஒப்புதலை நிறுத்தி வைப்பது. 3. மறுபரிசீலனைக்காக மசோதாவை சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது. 4. குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.

அப்படியானால் மேல் சொல்லப்பட்ட நான்கில் ஏதாவது ஒன்றை ஆளுநர்கள் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் என்பதேயாகும். ஆனால் ஆளுநர்கள் அவ்வாறு செயல்படுத்தாமல், மாறாக, சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், முடிவெடுப்பதில் காலதாமதம் செய்வது, மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் அளிக்கும் அறிவுரைகளின்படி செயல்படாமல் இருப்பது, மாநில அரசையும், அரசின் கொள்கைகளையும் விமர்சிப்பது, இன விரோத ஒன்றிய அரசின் திட்டங்கள் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருந்தாலும் வெளிப்படையாக அதை ஆதரிப்பது, இந்திய ஒன்றிய அரசின் கொள்கைகளை முழுநேரமாகப் பரப்புகின்ற கொள்கைப்பரப்பு செயலர்களாகவே செயல்படுவது போன்றவை தற்போது மாநிலங்களில் ஆளுநர்களின் சட்டவிரோதமான அடாவடித்தனமாக நடைமுறையாகி விட்டது.

1956-இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அந்த மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது அந்தந்த மொழி பேசக்கூடிய தேசிய இனங்களுக்கான முழு இறையாண்மை பெற்ற தேசங்களாக, தேசிய இனங்களாக பிரிக்கப்படவில்லை. மாறாக இந்தியாவின் நிர்வாக வசதிக்காக மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்ட மாநிலங்களை கண்காணிக்கவும், ஒன்றிய அரசுக்கு கட்டுப்படுத்தி வைக்கவும் இந்திய ஆட்சியாளர்கள் ஆளுநர் எனும் கங்காணியை இன்றளவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தியச் சிறைக்கூடத்திற்குள் சிக்கித் தவிக்கும் தேசிய இன மக்கள் இந்திய ஒன்றிய அரசின் கங்காணிகளை (ஆளுநர்களை) கடுமையாக எதிர்த்து வரும் சூழ்நிலையில் அந்தந்த மாநில அரசுகள்ஆளுநர் எதிர்ப்பை சம்பிரதாய எதிர்ப்புகளோடு நிறுத்திக் கொண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஆளுநர்களோடு கைகோர்த்துக் கொள்ளும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கங்காணி (ஆளுநர்) முறையை கடுமையாக எதிர்த்து தான் வந்திருக்கிறது."ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்குக் கவர்னரும் தேவையில்லை" என அறிஞர் அண்ணா தொடக்கத்திலேயே விமர்சனம் செய்துள்ளார்.

ஒன்றிய அரசின் ஒற்றர்களே ஆளுநர்கள்:

அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி குறித்துக் கடுமையான தருக்கங்கள் (விவாதங்கள்) நடந்தன. அந்த விவாதங்களைப் படித்தால் ஒன்றிய அரசின் மாநிலங்களைக் கண்காணிக்க கூடிய ஒற்றர்களாக செயல்படுவதற்கே ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அரசியல் சட்ட உருவாக்கத்திற்கான வரைவுக் குழு 'ஆளுநர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், என்று தனது வரைவில் குறிப்பிட்டு இருந்தது. இதுகுறித்த விவாதத்தில் இந்த நடைமுறை இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிவிடும் என்று கூறி இந்த முடிவு புறந்தள்ளப்பட்டது. கவர்னர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் ஒன்றை தயாரித்து சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்பது இரண்டாவது ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது.

இந்த முறையினால் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர் தான் ஆளுநராக வர முடியும், பிறகு மாநில அரசும் ஆளுநரும் கைகோர்த்து செயல்படுவார்கள் என்பதால் இந்த ஆலோசனையும் புறந்தள்ளப்பட்டது. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்கான வலிமையான சட்டப்பிரிவுகளை உருவாக்கி விட வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைவர்களின் உளவியலாக இருந்தது. அந்த உணர்வுகளே அரசியல் சட்ட உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருந்தது. மாநில அரசுகளுக்கு நெருக்கமான ஒருவர் ஆளுநராக வரக்கூடாது என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக இருந்தார்கள். ஆளுநர் அந்த மாநிலத்துக்கு தொடர்பு இல்லாதவர்களாக வேறு மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட வேண்டும் என்று நேரு வலியுறுத்தினார்.

 1949 மே 31 அன்று அரசியல் நிர்ணய சபையில் நேரு பேசியது;"ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக இருந்தால் மாகாணப் பிரிவினை உணர்ச்சிகளையும், குறுகிய மாகாண உணர்வுகளையும் ஊக்கப்படுத்திவிடும் என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவரான பி எஸ் தேஷ்முக் பின்வரும் கேள்வி எழுப்பினார், "முதல்வரும் ஆளுநரும் எல்லா பிரச்சனைகளிலும் ஒன்றுபட்டு நின்று, ஒன்றிய அரசை எதிர்ப்பதிலும் அவர்கள் ஒன்றுபட்டு நின்றால் பிறகு என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் ஆணைகளையும், கட்டளைகளையும் மாநில அரசு செயல்படுத்த மறுத்தால் என்ன செய்வது?. மத்திய அரசு, மாநில அரசு மீது படையெடுத்து செல்லுமா? என்ற கேள்விகளுக்கு இறுதியாக ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவதாக இருப்பார்" என்ற முடிவெடுக்கப்பட்டது. இதற்கான திருத்தத்தை இறுதியாக கொண்டு வந்தவர் பிரஜேஸ்வர் பிரசாத். மத்திய அரசின் அதிகாரம் அனைத்து மாகாணங்களிலும் நிலைநாட்டப்பட்டாக வேண்டும். இது அவசியமானது. என்பது தீர்மானத்திற்கு அவர் கூறிய காரணம்.

இதே அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஆளுநர் பதவி குறித்த விவாதத்தில், டாக்டர் அம்பேத்கர் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், அமைச்சர்கள் குழு வழங்கிய ஆலோசனையின்படி மட்டுமே தான் ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்றும் தெளிவாக கூறியிருக்கிறார்.

இந்தியா ஓர் தேசமா....?

தற்போது இந்திய ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இந்துத்துவ பாசிச மோடி அரசு, அரசியலமைப்புச் சாசனத்தில், எந்தவிதமான சட்ட வடிவங்களையும் பின்பற்றாமல் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனும் முடிவில் தெளிவாக இருக்கிறார்கள். அதில் சனநாயகம் (Democracy), மதச்சார்பின்மை (Secularism), இந்திய ஒன்றியம் (Union of India) என்கிற வார்த்தைகள் இந்துத்துவ பயங்கரவாத மோடி, அமித்ஷா கும்பல்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கசப்பு வார்த்தைகளாக உள்ளது. பாரதம் என்றும் பாரத தேசம் என்றும் அனைவரும் அழைக்க வேண்டும்; இந்திய ஒன்றிய அரசு என்று அழைக்கக்கூடாது என்று மக்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலைக்கு இன்று வந்துள்ளார்கள். இந்தியாவை ஒரு தேசம் என்று சொல்லுகின்ற இந்திய ஆட்சியாளர்களுக்கு, பல தேசங்களின் ஒருங்கிணைப்பே இந்திய ஒன்றியம். மாறாக இந்தியா ஒரு தேசம் அல்ல என்பதை அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.

பெரும்பாலும் ஆளுநர்களாக ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர்கள் 52% பேர் அந்த கட்சியின் அரசியல்வாதிகளாகவும், 26% பேர் அந்த கட்சிக்கு ஆதரவான ஓய்வு பெற்ற அதிகாரிகளாகவும் இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் ராணுவ அதிகாரிகளாக இருந்தவர்கள், நீதிபதிகளாக செயல்பட்டவர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் துறைகளிலும் உள்ள ஆதரவாளர்களை ஆளுநராக ஒன்றிய ஆளும் அரசு நியமித்து அவர்கள் மூலம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவர்களுக்கு கடிவாளம் இடுகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்ததும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஆளுநர் ஜே.பி ராஜ் கோல்வா மூலம் அங்கிருந்து காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பான்மை இல்லை என்று சொல்லி ஆட்சியை கலைத்தனர்.

அதில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு, ஆளுநர் முடிவை நீக்கிவிட்டு "ஒரு ஆளுநர் தனது சொந்த விருப்பத்திற்காக சட்டமன்றத்தை கூட்டுவது ஆளுநரின் வேலை அல்ல சட்டமன்ற செயல்பாடுகளில் குறுக்கிடுவதாகும்" என்று கூறியது.

அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டு மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜகவின் கைக்கூலிகளாக ஆளுநர்கள் செயல்பட்டு பெரும்பான்மையாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தும் பாஜக தலைமையிலான ஆட்சியை நிறுவ ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்.

 கடந்த 2017 ஆம் ஆண்டு பீஹாரிலும் இதுதான் நடந்தது. ஆளுநர் கேசரிநாத் திரிபாதி ஒரு முழு நேர அரசியல்வாதி போலவே அங்கு செயல்பட்டு ஆட்சி கலைப்புக்குக் காரணமானார்.

உத்தரகாண்ட் மாநிலத்திலும் அம்மாநில ஆளுநர் கே கே பவுல் அங்கு நடந்த ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்தார்.

அதேபோல் பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் "அமைச்சர்கள் குழு ஒரு முடிவு எடுத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும். ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இந்திய ஒன்றிய அரசு தனது கொள்கைக்கு இணங்காத எதிர்க்கட்சிகள் மாநிலங்களில் ஆட்சி நடத்தும் போது, அம்மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு ஆளுநர்கள் மூலமாக அந்தந்த மாநிலங்களில் பிரச்சனைகளை உருவாக்க முடியும். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, டெல்லி, மேற்குவங்கம், மகாராஷ்டிரா, மேகாலயா, பஞ்சாப், உத்தரகாண்ட் போன்ற இன்னும் பெரும்பான்மையான மாநிலங்களில் ஆளுநர்களை தரகர்களாக, ஒற்றர்களாக , கைப்பாவைகளாக இந்திய ஒன்றிய அரசு வைத்துக் கொண்டு பெரும் தொல்லைகளை கொடுத்து வருகின்றனர்.

ஆர் என் ரவி தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று சொல்லி தடைசெய்ததும், தமிழ்நாடு என்ற வார்த்தையை விட தமிழகம் என்ற வார்த்தையே பொருத்தமாக இருப்பதாக குறிப்பிட்டதும், தமிழக சட்டசபையில் ஆற்றிய உரையில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியதும், சென்னை ராஜ்பவனில் இந்துத்துவ கோட்பாட்டாளர் தீன்தயால் உபாத்யாயா சிந்தனை சிதறல்கள், தீன்தயால் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய தலைப்பிலான நூல்கள் வெளியிட்டு விழாவில் பேசிய R.N.ரவி "சனாதன தர்மம் என்பது விரிவானது. கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றில் `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தர்மம் என்பதை நாம் மதம் என புரிந்துவிட்டோம். அவ்வாறு புரிந்து கொண்டதால் மாபெரும் தவறு செய்து விட்டோம் என்று சொன்னது, நமது இந்தியக் கொள்கைகள் மேற்கத்திய சிந்தனையை தொடர்ந்ததாக இருந்தது. டார்வின் கோட்பாடும் மார்க்சின் சித்தாந்தம், இறையியல், ரூசோ கோட்பாடு என்பது எல்லாம் இந்தியாவின் தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தின. இந்தியாவை காரல் மார்க்ஸ் சிந்தனை சிதைத்துப் போட்டது. ஆனால் அந்த சிந்தனை இப்போது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மார்க்ஸின் சித்தாந்தமானது இல்லாதவர்கள் மேலே உயர வேண்டும் என்கிறது. இது இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்குமான மோதலை உருவாக்குகிறது. இது சமூகத்தில் பிளவுகளுக்கு காரணமாகவும், நிரந்தரமான மோதலையும் உருவாக்கக் கூடியது." என்றும், அது மட்டுமல்லாமல் இந்தியா என்கிற கட்டமைப்பு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் இதயமே ராமர் தான் என்கிற மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்துக்களை, ஆர்எஸ்எஸ் இன் கருத்துக்களை வெளிப்படையாக பேசி வருகிறார் ஆர்.என்.ரவி. "அகப்பை பிடிப்பவன் தன்னவனானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?" எனும் பழமொழிக்கு ஏற்ப ஒன்றிய பாஜக அரசின் ஆட்சி இல்லாத மாநிலங்களில் கங்காணிகள் ஆளுநர்களை வைத்துக்கொண்டு மாநில உரிமைகளை நசுக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்து வருகிறது.

உதகமண்டலத்தில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஆளுநர் தலைமையில் கடந்த வாரம் கூட்டப்பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரையே வேந்தராக மாற்றும் தமிழக அரசின் சட்ட மசோதா ஆளுநரின் கையெழுத்தாகாமல் இன்னும் நிலுவையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு அரசு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைத்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து அதன் முக்கியத்துவம் குறித்துத் துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசியதோடு இல்லாமல் தொடர்ந்து மாநில அரசின் கொள்கைக்கு எதிராக கங்காணி ஆர்.என்.ரவி பேசி வருவது, "அங்காடிக்காரியை சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம், கருவேப்பிலை என்பாளாம்" என்பதைப் போல உள்ளது.

வடலூரில் வள்ளலாரின் 200 வது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட ஆர்.என்.ரவி "வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் உச்ச நட்சத்திரம்" என்று ஆரிய விசத்தை கக்கி உள்ளார்.வள்ளலார்க்கும் சனாதனக் கோட்பாட்டுக்கும் எந்தவித ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. ஆனால் இந்துத்துவாவின் சனாதன கோட்பாட்டை எப்படியாவது தமிழ்நாட்டில் வேரூன்றி விட வேண்டும் என்றும், வள்ளலாரின் சன்மார்க்க நெறியை சனாதன கோட்பாட்டிற்குள் புகுத்தி விட வேண்டும் என்றும் துடித்துக் கொண்டிருக்கிறது மதவெறி மோடி அரசு. அதை தமிழ்நாட்டிற்குள்ஆட்சி அதிகாரத்தின் வழி செய்ய முடியாததால் இந்தியத்தின் கங்காணி ஆளுநர் மூலமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என பாடிய வள்ளலாருக்கும் சனாதனத்துக்கும் என்ன தொடர்பு? சனாதனக் கோட்பாடும், வள்ளுவக் கோட்பாடும் நேர்எதிரானது. சனாதனக் கோட்பாடும் வள்ளலார் வழியும் நேர் எதிரானது. இவ்வாறு சனாதன கோட்பாட்டிற்கு நேர் எதிரான கோட்பாடுகளை இந்துத்துவ பாசிச கோட்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுவுகிற வேலையை செய்து கொண்டிருக்கிறார் ஆர்.எஸ்.எஸ்சின் தமிழ்நாட்டு தபால்காரர் ஆர்.என்.ரவி.

ஆர்.என். ரவி போன்ற ஆர்எஸ்எஸ் கருத்தாளர்கள் தான் இந்திய ஒன்றியத்தில் இருக்கிற பல்வேறு தேசிய இனங்களில் இந்திய ஒன்றிய அரசின் கங்காணிகளாக (ஆளுநர்களாக) நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆளுநர்களின் வேலையே திட்டமிட்ட மாநில உரிமைகளைப் பறிப்பதும், இந்திய ஒன்றிய அரசுக்கு சேவகம் செய்வதும் என்பதுதான்.

எனவே, நமது முதன்மை இலக்கு இந்திய சிறைக்கூடத்தில் சிறைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட தேசிய இனங்கள் தங்களுக்கான இறையாண்மைக்காக, அரசியல்ரீதியில் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராட வேண்டிய தேவை இருந்தாலும், அதற்கிடையில் "அதிர அடித்தால், உதிரவிளையும்" என்பதுபோல மாநிலங்களுக்கு ஆளுநர்களே தேவையில்லை என்கிற முழக்கத்தை நாம் உரக்க முன்வைத்து, இந்தியத் துணை கண்டத்தின் பல்வேறு தேசிய இனங்களும், இந்தியத்திற்கு எதிராக, ஆளுநர்முறைக்கு எதிராக அதிர அடித்துக குரல் கொடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தமிழ்நாடு விடுதலை பேசும் இயக்கங்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டிய காலம் இது.

- பாவெல்

Pin It