ஒவ்வொரு கோடையிலும் வெயில் தகிக்கிறது. மார்ச் மாதம் வரை குளிர் நீடித்தாலும், நேரெதிராகப் பகலில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. ஆடிக்காத்து ஜூன் மாதமே அடிக்கிறது. மழைக்காலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எல்லாக் காலநிலைகளும் இப்படி மாறிமாறி வருவதன் காரணம் என்ன? அவற்றின் போக்குகள் புரிந்து கொள்ள முடியாததாக இருப்பது ஏன்?...

Earth கடந்த நூற்றாண்டின் அதிக வெப்பநிலை நிலவிய ஆண்டுகளைக் கணக்கெடுத்தால், அதில் முன்னணியில் இருப்பவை 1990களுக்குப் பிறகு வந்த ஆண்டுகளே. ஒரு காலத்தில் இருகரை தொட்டு கரை புரண்டோடிய ஆறுகள், இன்று வெறும் மணல் பாதைகளாக வெறித்து நிற்கின்றன. விவசாயம் செய்வதற்கல்ல, குடிக்கக்கூடத் தண்ணீர் கிடைக்க மாட்டேன் என்கிறது. மற்றொரு பக்கம் கட்டுப்படுத்தப்பட முடியாத வெள்ளம் திடீரென்று தோன்றி மொத்தமாகக் கடலில் கலக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே காலநிலைகள் தடம்மாறிவிட்டன. ஏன் இப்படி? இதற்கெல்லாம் காரணம் என்ன? புவிவெப்பமடைதல் (Global Warming) அத்துடன் பின்னிப்பிணைந்துள்ள காலநிலை மாற்றம் (Climate Change)தான்.

புவி வெப்பமடைதல் என்பது நாடுகளின் எல்லைகளைக் கடந்த உலகளாவிய பிரச்சினை. மக்களின் நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகள் பூமியின் வாழ்வு ஆதார அமைப்புகளை கடுமையாகத் தொந்தரவு செய்கின்றன. இயற்கை செயல்பாடுகளின் ஆதார வேர்களான காலநிலை மற்றும் நீர்வளத்தில் அந்தத் தொந்தரவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் தற்போது எதிரொலித்து வருகின்றன.

காலநிலை மாற்றப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்ளவது? அதன் பாதிப்புகளை குறைக்க முயற்சிப்பது ஒரு வழி. இரண்டாவதாக ஏற்கெனவே நாம் செய்த தவறால் தவிர்க்கமுடியாமல் நிகழ உள்ள மாற்றங்களுக்கு, எப்படி தகவமைத்துக் கொள்ளலாம் என்று கண்டறிவது அடுத்த வழி. பேரழிவுகளை சமாளிக்கத் தயாராவதைவிட, முன்னெச்சரிக்கையாக அவற்றைத் தடுப்பதுதான் சிறந்தது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பொருத்த வரை நிலைத்த வளர்ச்சி நடவடிக்கைகளே நமக்குத் தேவை. அதற்கு முன் காலநிலை மாற்றம் ஏன் ஏற்படுகிறது என்று பார்க்கலாம்.

காலநிலை மாற்றம் நிகழ

வளிமண்டலத்தில் பசுமைஇல்ல வாயுக்கள் வெளியீடு அதிகரிப்பது, * காடுகள் அழிக்கப்படுவது போன்ற நிலப்பகுதியின் இயல்பல் ஏற்பட்ட மாற்றங்கள், * வளிமண்டலத்தில் தூசுப்படலம் பெருகுவது போன்றவையே முக்கிய காரணம். இவை ஏன் அதிகரித்தன?

தொழிற்புரட்சி காலம் வரை ‘இயற்கை தொழிற்சாலை’ இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட எல்லைமீறல்களைப் புவி சகித்துக் கொண்டு வந்தது. ஆனால் 1950களுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. 18ம் நுõற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய தொழிற்புரட்சி உருவாக்கிய விளைவுகளின் தாக்கம் 1950 வரை, கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு தலைகாட்டவில்லை.

அதற்குப் பிறகும் இயற்கை சார்ந்து மக்கள் கூட்டத்தின் செயல்பாடுகள் மாறாததால், பூமியின் இயல்பான இயக்கம் சீர்குலைய ஆரம்பித்தது. தொழிற்புரட்சி காலம் முதல் இயற்கை வளங்களைச் சுரண்டுவதன் ஒரு பகுதியாக காடழிப்பு நீடித்துக் கொண்டே போகிறது.

தொழிற்சாலை, வாகனங்களில் புதைபடிம எரிபொருள்களை எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்சைடு (கரிப்புகை), மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவைதான் பசுமைஇல்லம் வாயுக்கள் எனப்படுகின்றன. தூசுப்படலம் அதிகரிக்கவும் புதைபடிம எரிபொருள்களை எரிப்பதே முக்கிய காரணம். இதன் காரணமாக உயிர்வாழத் தேவையான ஆக்சிஜன் அளவு குறைந்து, அதிகரித்து விட்ட கார்பன் டைஆக்சைடு ஒரு படலம் போல பூமியைச் சூழ்ந்து நிற்கிறது.

கறுப்பு நிறத்தின் இயல்புக்கு ஏற்ப, இந்த கரிப்படலம் சூரிய வெப்பத்தைப் படித்து வைத்துக் கொள்கிறது. வெப்பநிலை கடுமையாக உயர்கிறது. மழை, குளிர், கோடை காலநிலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஒவ்வொரு முறையும் பாதிப்பு கூடிக் கொண்டே போகிறது. ஒரு நிலையில், கடல்மட்டம் உயர்ந்து தீவுகள், கடற்கரை பகுதிகள் அழியும் என்று எதிர்காலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த பாதிப்புகள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை, உலகில் உள்ள ஒவ்வொருவரும் இயற்கை சார்ந்த செயல்பாடுகளின் பக்கம் மாறும் வரை.

மற்ற உயிரினங்களுக்கு மாறாக மனித இனம் மட்டுமே இயற்கைச் செயல்பாடுகளை அப்படியே ஏற்காமல், தகவமைத்துக் கொள்ளாமல், இயற்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது. இதனால்தான் பிரச்சினைகள் பெருகுகின்றன. பூமியின் தாங்கும் சக்தியைத் தாண்டி மக்கள்தொகை பெருகுதல், மக்களின் தேவைகளுக்காக இயற்கை வளங்களை கட்டுமீறி அழித்தல்தான் காலநிலை மாற்றம் நிகழ்வதற்கான ஆதார வேர்.

அப்படியானால் மனிதர்கள் வாழ வேண்டாம் என்று வலியுறுத்துகிறீர்களா? என்று கேட்கலாம். மனிதர்கள் வாழ வேண்டும். நாம், நமது தலைமுறைகள் வாழ வேண்டும். அதற்கு நமது வாழ்க்கை நடைமுறைகள் மாற வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க மறுபயன்பாடு, மறுசுழற்சியை மேற்கொள்ள வேண்டும். இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மறுக்க வேண்டும் அல்லது அத்தியாவசிய நிலையில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இயற்கை வளங்களை குறைவாக செலவிடும் எளிய வாழ்க்கை முறைதான் நாமும், நம் சந்ததிகளும் வாழ்வதற்கு வழியமைக்கும்.

தற்போது சமாளிக்க முடியாத அளவு சுற்றுச்சூழல் சீர்கெட்டிருப்பதற்கு, தொழில்நுட்பம் சார்ந்த நவீன வசதிகள் கொண்ட வாழ்க்கை முறைகளே காரணம். சுற்றுச்சூழல் சீர்கேட்டிலும் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. உலகின் பணக்கார நாடுகளில் உள்ளவர்களும், பிற பகுதிகளில் உள்ள வசதி படைத்த மேட்டுக் குடியினரும்தான் சுற்றுச்சூழலை அதிகம் சிதைக்கின்றனர். வழக்கம்போல எளிய மக்கள் அதனால் பாதிக்கப்படுகின்றனர். ஏழை நாடுகளில் வாழும் எளிய மக்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துவதில் மிகமிகக் குறைவான பங்கையே வகிக்கிறார்கள்.

உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். புவி வெப்பமடைதலுக்கு காரணமாகவுள்ள வாயுக்களை இந்தியா 4 சதவீதம் மட்டுமே வெளியிடுகிறது. ஆனால் நம்மைவிட குறைவான மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா 25 சதவீதம் வரை (மொத்தத்தில் கால் பங்கு) புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை வெளியிடுகிறது.

காத்ரினா புயல் தாக்கிய பிறகும் அமெரிக்கா விழித்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் அடுத்தடுத்த ஆண்டுகளில் எல்லா மாநிலங்களும் கட்டுப்படுத்த முடியாத வெள்ளத்தைச் சந்தித்து வருகின்றன. மற்றொரு புறம் வறட்சியும் பாதிக்கிறது. சமீபத்தில் குஜராத், மகாராஷ்டிரா (மும்பை), மேற்கு வங்கம் (கொல்கத்தா), ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

தொழில்மயமான நாடுகளைவிட வளரும் நாடுகளில் காலநிலை மாற்றம், பல்லுயிரிய இழப்பு போன்றவை மனிதர்களிடையே அவதியையும் கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தும். உலகச் சுற்றுச்சூழல் மாற்றம் என்பது வளரும் நாடுகள் கையாள வேண்டிய தலையாய பிரச்சினை.

பங்குச் சந்தைப் புள்ளிகள், தனிநபர் வருமானம் போன்றவை அதிகரிப்பதால் நமது பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மீட்க முடியாத வகையில் பூமியின் சூழல்அமைப்பை நமது வாழ்க்கை முறைகளும், நுகர்வு நடைமுறைகளும் பாதித்து வருகின்றன. தவறை திருத்திக் கொள்ளாவிட்டால், நம்மை நாமே சுயமாக அழித்துக் கொள்கிறோம் என்று பொருள்.

சூழலை பாதிக்கும் நிலக்கரியை மின் தயாரிப்புக்காக அதிகம் சார்ந்திருக்கும் நம்நாட்டின் எரிசக்தித் தேவை, அதிகரித்துக் கொண்டே போகிறது. எதிர்காலத்தில் சூரியன், காற்று, நீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று நம்புவோம். அந்த வகையில்தான் நமது எரிசக்தி ஆதாரங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. அந்த மாற்றத்தின் அவசரத்தன்மையை முழுமையாக உணர வேண்டும். இவற்றில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.

நமது நகரங்கள் திறனற்ற போக்குவரத்து அமைப்புகளாலும் மோசமான தொழில்நுட்பத்தாலும் எரிசக்தியை விரயம் செய்கின்றன. நமது நகர்ப்புற வசதிகளில் பெரும்பாலானவை தனிநபர்களுக் கானதாகவும், மையப்படுத்தப்பட்ட அணுகு முறைகளாகவும் உள்ளன. கார் என்றாலும், மின்விளக்கு என்றாலும், குளிர்சாதனப் பெட்டி என்றாலும், நாம் தற்போது பயன்படுத்தும் கருவிகள் அறிவியல் ரீதியில் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலை, போக்குவரத்து மற்றும் விவசாயத்தை எப்படி மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என்பது நம் முன் உள்ள முக்கியமான கேள்வி. அப்படி மாற்றியமைத்தால் தான் அவை வெளியிடும் கார்பன் டைஆக்சைடு வாயுவின் அளவு குறையும். எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்களால் அதிக பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

நவீன தொழில்நுட்பங்களின் மீதுள்ள தாகத்தால், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு நிறுவப்பட்ட கொள்கைகள் இழக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அறிவியல் அடிப்படைகளைக் கொண்ட பாரம்பரிய அறிவு மிகுந்த மதிப்பு கொண்டது, அதை நாம் மீள்கண்டுபிடிப்பு செய்ய வேண்டும்.

உயிரி, இயற்பியல் வளங்களைக் கொண்டுள்ள நம் நாட்டின் பாரம்பரிய அறிவு, நமது சாதகமான அம்சங்களில் ஒன்று. பாரம்பரிய கட்டடக்கலை, தொழிற்சாலை, வேளாண்மை போன்றவை குறைந்த சக்தியை செலவிடுபவை, குறைந்த கழிவை உருவாக்குபவை. இந்த அறிவு நம் கைகளில் இருக்கும்போது, சூப்பர் மார்கெட்களில் விற்பதற்காக பெருமளவு சக்தியையும், வேதிப் பொருளையும் செலவிடும் உணவு தயாரிப்பு, வேளாண் நடைமுறைகள் தேவை இல்லை. ஒரு கலோரி சக்தி கொண்ட உணவை உற்பத்தி செய்ய, நவீன வேளாண் முறைகளின்படி 100 கலோரிகள் (சில நேரம் 500 கலோரிகள் வரை) மதிப்புள்ள சக்தி பயிரிடுதல், போக்குவரத்து, தரப்படுத்துதல், கட்டிக் கொடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது நிலைத்ததன்மை அற்றது.

பன்னாட்டு நிறுவன முதலாளிகள் ஒரு பெரிய தொழிற்சாலையை அமைத்து, கிராமப்பகுதிகளில் இருந்து மூலப்பொருள்களை அங்கு கொண்டு வந்து, ஒரே இடத்தில் உற்பத்தி செய்து, தயாரிப்பை நாடு முழுவதற்கும் போக்குவரத்து மூலம் அனுப்புவதை விரும்புகின்றனர்.

இப்படி கொண்டு வருவதற்கும், கொண்டு போவதற்கும் ஆன செலவுகளை அரசு அளிக்கும் பெருமளவு மானியம் மறைத்துவிடுகிறது. மானியத்தில் எரிசக்தி, நல்ல சாலைவசதி, உற்பத்தியாகும் கழிவை சுற்றுப்புறத்தில் கொட்டுதல் போன்ற பொருளாதார நன்மைகளுக்கு தொழிற்சாலைகள் எந்தச் செலவையும் செய்வதில்லை. குப்பைகள், கட்டிக்கொடுக்க பயன்படும் பொருட்கள், பயனற்ற பொருட்களை வீசுவதற்கு நுகர்வோரும் எந்தச் செலவும் செய்வதில்லை. நமது பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் தவறான சமிக்ஞைகள் உருவாவதற்கு, தண்ணீர், எரிசக்தி போன்ற இயற்கை வளங்கள் மிகக் குறைந்த விலையில் தொழிற்சாலைகளுக்கு தரப்படுவதுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் (கோககோலா, பெப்சி, சாயப்பட்டறை, தோல் ஆலைகள் போன்றவை நேரடி எடுத்துக்காட்டுகள்).

காலநிலை மாற்றம் போன்ற மாபெரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மனிதகுலத்துக்கு மிகப் பெரிய சவால்தான். காலநிலை மாற்றம் என்பது தற்போது மட்டும் நிலவி மறைந்து விடப்போகிற ஒரு பிரச்சினையல்ல. யோசனையற்று இயற்கையை அழிப்பதன் விளைவாக வாழ்வு ஆதார அமைப்புகள் சிதைவதன் முழுமையான அறிகுறி அது.

காலநிலை மாற்றம் நோயல்ல. வாழ்வு ஆதாரம் சிதைக்கப்பட்டதுதான் நோய். இதற்கு நாம் பெரும் விலையை திரும்பச் செலுத்த வேண்டி இருக்கிறது. அந்த நோயை தீர்ப்பதற்கான வழிமுறையை நாம் கண்டறிய வேண்டி இருக்கிறது. இந்த பிரச்சினைகளைக் களைய உகந்த அறிவியல் முறைகள் நமக்குத் தேவை.

நமது நதிகள் காணாமல் போய்விட்டன. அவையின்றி அனைவரது தண்ணீர்த் தேவையை நம்மால் பூர்த்தி செய்ய முடியவில்லை. நமது காடுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. காடுகள் இன்றி நமது நீர் ஆதாரங்கள் மறுஉற்பத்தி செய்து கொள்ள முடியாது. நமது மண்வளம் அதிவேகமாக மறைந்து கொண்டிருக்கிறது. இவையில்லாமல் போவதால் நமது வேளாண்மை பாதிக்கப்பட்டு, மகசூல் குறைகிறது.

இந்த இடங்களில்தான் நேர்மறை செயல்பாடுகள் தேவை. சுற்றுச்சூழல் நலத்தை மீட்டெடுக்க மக்களுக்கான அறிவியல் உதவும். குறிப்பட்ட காலத்தில் எதையும் மீட்டெடுக்க முடியும். ஆனால் அந்த மீட்பு நமது வாழ்நாளுக்குள் நடக்கப் போகிறதா என்பதே நம்முன் உள்ள கேள்வி. அதேநேரம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், தீவிர முயற்சிகளை நடைமுறைப் படுத்தாவிட்டால் மோசமான நிலையை அடையப் போகிறோம்.

காலநிலை மாற்றம் போன்ற மாற்றங்களால் எதிர்மறையாக பாதிக்கப்படக்கூடிய வளங்களை சார்ந்து தொழிற்சாலை நடைமுறைகள் அமையக் கூடாது. வேளாண்மையைப் பொருத்தவரை பயிர்கள், பயிர் சுழற்சி முறைகள் போன்றவை வறட்சி, வெள்ளம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை தாங்கும் சக்தியுடனும், போக்குவரத்து மற்றும் மின்உற்பத்தி துறைகள் மறுசுழற்சியை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைய வேண்டும்.

காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் அரசு முக்கியமான பங்கை ஆற்ற வேண்டியிருக்கிறது. எதையும் வலுக்காட்டாயமாகவோ, கட்டுப்பாடுகள் மூலமாகவோ சாதிக்க முடியாது. சிலர் மட்டும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப செயல்படுவார்கள், வழக்கம்போல ஏமாற்றுபவர்கள், லஞ்சம் கொடுப்பவர்கள் அனுசரணை பெறுவார்கள். அதனால் இந்தப் பிரச்சினைகளில் அரசின் கடுமையான தலையீடுகள் தீர்வை உருவாக்குவது கடினம்தான்.

ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கான உண்மையான விலையை, பொருள்களை விற்பனை செய்யும்போது நிர்ணயிக்க வேண்டும். இயற்கைக்கான விலை, எதிர்கால சந்ததிகளுக்கான விலை போன்றவற்றை உள்ளடக்கியதாக, பொருள்களின் விற்பனை விலை அமைய வேண்டும். அதை தெளிவாக வலியுறுத்தவும் வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க பொருளாதார, சமூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சமிக்ஞைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. சீர்கேட்டிற்கு அதிக வரிவிதிப்பு, புதிய முயற்சிகளுக்கு ஊக்கத்தொகை, உகந்த நடவடிக்கைகளுக்கு தள்ளுபடி, பொது விநியோக நடைமுறை போன்றவற்றை அரசு கையாள வேண்டும்

சமூக ஏற்றத்தாழ்வு, சுற்றுச்சூழல் மாசுபடுத்துதல், இயற்கைவளத்தை அழிப்பது போன்றவற்றுக்கான விலைகள் தற்போது புறக்கணிக்கப்படுகின்றன. இவற்றுக்கு கொடுக்கப்படும் விலைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும் போதே மாற்றம் நிகழும்.

இரண்டு திரைப்படங்கள்

காலநிலை மாற்றம் ஏற்படக் காரணமாக உள்ள புவி வெப்பமடைதல் பற்றி அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் இடம்பெற்ற 'The convenient of Truth' (ஒரு சங்கடப்படுத்தும் உண்மை) என்ற விவரணப் படம் மேற்கண்ட பிரச்சினை பற்றி தெளிவான ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அமெரிக்காவில் வெளியான இந்த விவரணப் படம் உலகளாவிய கவனத்தைப் பெற்றது.

"டே ஆப்டர் டுமாரோ' என்ற ஹாலிவுட் திரைப்படமும் கதை ரீதியில் இந்தப் பரச்சினை பற்றி பேசியுள்ளது.

ஓர் இயற்கை தீர்வு

காலநிலை மாற்றத்துக்கான தீர்வு ‘உயிரி போலச்செய்தலில்' இருக்கிறது என்று சூழலியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காலங்காலமாக கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட தொழில்நுணுக்கங்களை இயற்கையிடம் இருந்து கற்றுக் கொண்டு திரும்பச் செய்வதுதான், உயிரி போலச்செய்தல். இந்தத் தொழில்நுணுக்கங்களில் பல நமக்கு அத்தியாவசியமானவை.

மிகப்பெரிய, செலவுபடிக்கக் கூடிய, சக்தியை விரயமாக்கும் இயந்திர நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குப் பதிலாக, நகரங்களுக்கு அருகேயுள்ள நீர்நிலைகள், காடுகளைப் பாதுகாப்பது இயல்பான வழி.

குளிர்சாதனப் பெட்டிகளுக்குப் பதிலாக, வரிக்குதிரைகள் மற்றும் கரையான்களிடம் நாம் கற்றுக் கொள்ளலாம். பல லட்சம் ஆண்டுகளாக மீண்டும்மீண்டும் செய்துபார்த்து, தவறுகளை திருத்திக் கொண்டு வெப்பத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுணுக்கத்தை அவை கச்சிதமாக உருவாக்கி வைத்துள்ளன.

உயிரி போலச் செய்வதற்கான சிறந்த எடுத்துக்காட்டு கரையான்களின் ‘ஏ.சி.' எறும்புகளைவிட சிறிய கரையான்கள் சிறு மலைகளைப் போன்ற புற்றுகளைக் கட்டுகின்றன. இந்தப் புற்றுகளில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைப்பு அமைந்திருக்கிறது. வெளியே என்ன வெப்பநிலை நிலவினாலும் சரி, கரையான் புற்றுக்கு உள்ளே 24 டிகிரியை ஒட்டிய வெப்பநிலைதான் எப்பொழுதும் நிலவும். அவை எப்படி இந்த குளிர்ச்சியைப் பெறுகின்றன?

அவற்றிடம் குளிர்சாதனப் பெட்டிகளோ, மின்விசிறியோ, ஏன் கதிரியக்க வெப்பமூட்டிகள்கூட இல்லை. மண்ணில் உள்ள குளிர்ந்த தன்மையை தக்கவைத்துக் கொள்வதுடன், காற்று புகுந்து உள்ளே வர திறப்புகளை அவை அமைத்திருக்கின்றன. இந்த வடிவமைப்பு அடிப்படைகளைக் கொண்டு கட்டடங்களை நாம் குளிர்ச்சியானவையாக மாற்ற முடியும்.

ஜிம்பாபே தலைநகர் ஹராரே மற்றும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கட்டடவியல் நிபுணர்கள் கரையான் புற்று, வரிக்குதிரை நிற அமைப்பு முறைகளைக் கையாள்கின்றனர். இந்தக் குளிரூட்டும் விளைவுக்கு எந்தச் செலவும் செய்யப்படுவதில்லை. நமது கிராமங்களில் மூலப்பொருள்கள், சக்தியை குறைவாகப் பயன்படுத்தும் செம்மண் வீடுகள் கட்டப்படுகின்றன. இவற்றுக்கும் பெரிதாகச் செலவு ஆவதில்லை.

உலகை புதிய வகையில் நோக்குவது, உயிரி போலச்செய்தல், இயற்கையிடம் கற்றல் மூலமாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மாற்றியமைக்க முடியும். எதிர்காலத் தொழில்நுட்ப உலகில் சிறு உயிரிகள் பெரும் பங்கு செலுத்தப் போகின்றன. இன்று நாம் பயன்படுத்தும் கியர், சக்கரம், கப்ப, நெம்புகோல், உயர்வெப்பம், அதிக அழுத்தம், பெரும் டர்பைன்கள் போன்றவற்றுக்கு பதிலாக நுண்ணுயிரிகள், பாக்டீரியாகள், நீர்த்தாவரங்கள் (ஆல்கே), பூஞ்சைகள், தாவரங்கள், காட்டுயிர்கள் பயன்படப் போகின்றன.

முதுபெரும் காட்டுயிரியலாளர்

JC_Daniel நாட்டின் முதுபெரும் காட்டுயிரியலாளர் ஜே.சி. டேனியலுக்கு கடந்த மாதம் 80 வயது ஆனது.

சர்வதேச அளவில் ‘ஜே.சி.’ என்று அறியப்படும் ஜீவநாயகம் சிரில் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார். திருவனந்தபுரத்தில் வளர்ந்தார். இளம் வயதிலேயே இயற்கையுடன் அவருக்கு இணக்கமான ஓர் உறவு ஏற்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தார். டாக்டர் சலிம் அலியின் பணியால் உத்வேகம் பெற்ற டேனியல், 40 ஆண்டுகளாக பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பணியாற்றினார். 1950களில் காப்பாளராக பணியைத் தொடங்கிய அவர், 1991 ஆம் ஆண்டில் அந்த கழகத்தின் இயக்குநராக (கழகத்தின் முதல் இயக்குநர்) ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு, கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது கௌரவச் செயலாளராக இருக்கிறார்.

யானைகள் பற்றி ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். பறவைகள் வலசை போதல் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்.

நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், பாலு£ட்டிகள், அவற்றில் குறிப்பாக அழியும் ஆபத்தில் உள்ள ஆசிய யானை, காட்டு எருமை, புலி, வரையாடு, உப்புநீர் முதலை, கானமயில் போன்றவற்றையும், கோடியக்கரை, கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் உயர்ந்த பகுதிகள், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உள்ள தீபகற்ப காடுகளையும் ஆராய்ந்துள்ளார்.

உலக பாதுகாப்பு அமைப்பு (World Conservation Union), உலக ஊர்வன மாநாடு ஆகியவற்றிலும், குரங்கினம், ஆசிய யானை, முதலை, பாம்புகள் ஆகியவற்றுக்கான மதிப்புமிக்க நிபுணர்கள் குழுக்களிலும் இடம்பெற்றுள்ளார். இந்திய காட்டுயிர் நிறுவனத்தின் (Wildlife Institute of India) பயிற்சி, ஆராய்ச்சி, கல்வி குழுக்களில் இடம்வகித்துள்ளார்.

பீட்டர் ஸ்காட் பாதுகாப்பு விருது, சாஞ்சுவரி இதழ் வாழ்நாள் சாதனையாளர் விருது, ஆசிய யானைகள் பற்றி ஆராய்ந்ததற்காக கேரள வேளாண்மை பல்கலைக்கழக விருது, இந்திராகாந்தி பரியாவரன் புரஸ்கார் போன்றவற்றை பெற்றுள்ளார்.

இந்திய ஊர்வன (The Book of Indian Reptiles), ஒரு நு£ற்றாண்டு இயற்கை வரலாறு (A Century of Natural History ), வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்பு (Convervation in Developing Countries) ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக ஆய்வு இதழின் நிர்வாக ஆசிரியராக 37 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். இயற்கை ஆர்வலர்களுக்காக ஹார்ன்பில் என்ற இதழைத் தொடங்கினார். 2001ம் ஆண்டு இந்த இதழ் வெள்ளிவிழா கொண்டாடியது. தற்போது 31 ஆம் ஆண்டாக வெளிவந்து கொண்டுள்ளது.
Pin It