global warming 349ஃபிரெட் மாக்டோஃப் என்ற சூழலியலாளரும், ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் என்ற மார்க்சியpப் பொருளியலாளரும் இணைந்து “What every environmentalist needs to know about Capitalism” --- “ஒவ்வொரு சுற்றுச் சூழலியலாளரும் முதலாளித்துவத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?” என்ற நூலை 2011ஆம் ஆண்டில் வெளியிட்டனர்.

சூழலியல் அடிப்படையில் முதலாளித்துவம் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பல புதிய தகவல்களைக் கொண்டுள்ளது இந்த நூல். பொருளாதார வளர்ச்சி குறித்துpப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கண்ணோட்டம் மறு பரிசீலனைக்குரியது என்ற அடிப்படையில் சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அரசியல், பொருளாதார, மார்க்சிய ஆர்வலர்கள் என அனைவருக்குமே சரியான கொள்கை - நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்கான சிறந்த வழிகாட்டும் நூலாகத் திகழ்கிறது.

இந்த நூலின் ஆசிரியர்களில் ஒருவரான ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சூழலியல் குறித்து ஆய்வுகLள் மேற்கொண்டு முக்கியமான நூல்களை வெளியிட்டுள்ளார். “இயற்கை திரும்புகிறது”- “The Return of Nature” என்ற தலைப்பில் ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் எழுதிய நூலுக்கு 2020ஆம் ஆண்டின் சிறந்த மார்க்சிய நூலுக்கான டியூசெர் நினைவுப் பரிசு அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டது.

புவியால் தாங்கக் கூடியதைக் காட்டிலும் மனித சமூகம் அதீத சுமையையும் அழுத்தத்தையும் புவியின் மீது சுமத்தியதால் சுற்றுச்சூழலியல் நெருக்கடி பல்வேறு பிரச்சனைகளாக வெளிப்பட்டுள்ளது. முதலாளித்துவப் பொருளாதாரத்தால் ஏற்படும் சூழலியல் அழிவுகள் குறித்து மார்க்ஸ், எங்கெல்ஸ் தங்கள் படைப்புகளில் பல்வேறு இடங்களில் விவரித்துள்ளனர்.

ஒரு பிரச்சனைக்கான முதன்மைக் காரணத்தைத் தெரிந்து கொள்ளாமல் அப்பிரச்சனையை நாம் முழுமையாகச் சரி செய்ய முடியாது. மனித சமூகம் இயற்கையின் அங்கமாகத் தன்னை பார்த்தக் கொள்ளாமல், இயற்கை மீது வெற்றி கொள்வது போன்ற போட்டி போடும் மனநிலையையும், செயல்முறையையும் தான் இன்றைய பொருளாதார அமைப்பு வளர்த்துக் கொண்டுள்ளது.

இயற்கையின் மீதான மனித வெற்றிகள் குறுகிய கால அளவில் வெற்றியாகத் தோன்றினாலும், நீண்ட கால அளவில் அந்தச் சிறிய வெற்றியும் மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தவே வழிவகுக்கும். உடனடி ஆதாயங்களையே இலக்காகக் கொண்ட முதலாளித்துவத்தின் சந்தர்ப்பவாதச் செயல்பாடே, மனித சமூகத்தின் மிகப்பெரும் தோல்வியாகவும், இன்று நாம் சந்திக்கும் மிகப்பெரும் சூழலியல் நெருக்கடிகளுக்கான முதன்மைக் காரணமாகவும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளாமல் சூழலியல் பிரச்சனைகளுக்கு நாம் முழுமையான தீர்வு காண முடியாது.

முதலாளித்துவத்தைப் பற்றி நூலாசிரியர்கள் அளித்துள்ள முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:

சுற்றுச்சூழல் சீரழிவு என்பதொன்றும் புதிதல்ல, பதிவு செய்யப்பட்ட வரலாறு முழுவதிலும், சுற்றுச் சூழல் சீரழிவால் மெசொபடோமியா, மாயா போன்ற பல புராதன நாகரிகங்கள் அழிவுற்குள்ளாகியுள்ளன. காடுகள் அழிக்கப்படுதல், மண் அரிப்பு, பாசனநீர் உவர்ப்பாதல் போன்ற பல சிக்கல்கள் பழங்காலத்தில் இருந்துள்ளன.

பண்டைய கிரேக்கத்தில் சுற்றுச்சூழல் அழிவு குறித்து பிளேட்டோ “இது ஏதென்ஸ் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? . . அதன் எச்சமே உள்ளது... நோயால் அரிக்கப்பட்ட உடலின் எலும்புக்கூடு போலத்தான் மிஞ்சியுள்ளது. வளமான மென்மையான மண் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு எலும்பும் தோலுமாக நிலம் உள்ளது” என (கி.மு. 427–347) கிரிட்டியாஸில் எழுதியுள்ளார்.

அந்தப் பண்டைக் காலத்திலிருந்து இன்றைய நவீன காலம் எவ்விதத்தில் வேறுபட்டிருக்கிறது என்றால், இன்று புவியில் அதிக எண்ணிக்கையிலானோர் வாழ்ந்து வருகிறோம். அழிவேற்படுத்தும் அதிவேகத் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உள்ளன. எல்லை அறியாது செயல்படும் பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளோம்.

அன்று ஆங்காங்கே சிறிய அளவில் பிராந்திய அளவில் காணப்பட்ட சூழலியல் பிரச்சனைகள் இன்று உலகெங்குமே பரவலாகக் காணப்படும் மிகப்பெரும் சூழலியல் நெருக்கடிகளாக நம்மை எதிர்கொள்கின்றன. பண்டைய நாகரிகங்களில் சிறிய அளவில் சுற்றுச் சூழல்கள் அழிவிற்குட்பட்டன ஆனால் இன்று ஒட்டுமொத்த உயிர்க்கோளமே பாதிக்கப்பட்டு உயிரினங்களின் இருப்பே அச்சுறுத்தப்பட்டுள்ளது.

எனவே புவியின் சுற்றுச்சூழலின் தற்போதைய விரைவான சீரழிவு குறித்து முக்கியமான அறிவியல் காரணங்களின் அடிப்படையில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்று நாம் சந்திக்கும் சூழலியல் பிரச்சனைகளில் காலநிலை மாற்றமே நம்மை அச்சுறுத்தும் முக்கியமான உடனடிப் பிரச்சினையாகவும், மற்ற பிரச்சனைகளுடனும் தொடர்புள்ள மையப் பிரச்சனையாகவும் உள்ளது. காலநிலை மாற்றத்தால் நம் உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

புவியின் வெப்பநிலை அதிகரிக்கும் போது உணவு உற்பத்தி குறைவதாக ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால் வெப்பநிலை அதிகரிக்கும் போது இரவு நேரத்தில் தாவரங்களின் சுவாசித்தல் அளவு அதிகமாகிறது (enhanced respiration). அதனால் காலையில் ஒளிச்சேர்க்கையின் போது சேமித்த ஆற்றலில் அதிகளவு சுவாசத்திற்கே செலவழிக்கப்படுகிறது.

கடலில் அதிக அளவில் கார்பன் - டை - ஆக்சைடு சேரும் போது கடலமிலமாக்கத்தால் ஓடுள்ள விலங்குகளுக்கான கட்டுமான அமைப்பு, எலும்பு ஆக்கத்திற்குத் தேவையான ஆர்கனைட்டின் (கால்சியம் கார்பனேட்) செறிவு நிலை குறைந்திருக்கிறது. உரப் பயன்பாட்டின் அதிகரிப்பால் நைட்ரஜன், பாஸ்பரஸ் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் பாஸ்பரஸ் தாதுவிற்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நன்னீர் சுழற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் நகரமயமாதலால், நிலப் பயன்பாட்டிலும் நிறைய சிக்கல் ஏற்பட்டுள்ளது. வளி மண்டலம் அதிகளவில் மாசடைவதாலும் நாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

நெகிழிப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. கடலில் நெகிழிக் கழிவுகள் தீவுக் கூட்டங்களைப் போல் தேங்கி கடல் முழுதும் நிறைந்து காணப்படுகின்றன. கடலில் உள்ள நெகிழி சிதைந்து நுண் நெகிழிகள் ஆகிறது. அதை விலங்கினங்கள் எடுத்துக் கொள்ளும் போது கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
.
அமெரிக்காவில் மருத்துவர்கள், செவிலியர்களின் இரத்த மாதிரிகள், சிறுநீர் ஆகியவற்றைச் சோதித்த போது அவற்றில் பிஸ்ஃபீனால், சில வகை தாலேட், பெர்ஃபுளுரினேட்டட் சேர்மங்கள், பாலி புரோமினேட்டட் டை ஃபீனைல் ஈதர் போன்ற --- உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் --- பல்வேறு வேதிப் பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.

இந்த வேதிப் பொருட்கள் நரம்பியல் கோளாறுகளையும், கருவுறுதல் கோளாறுகளையும் ஏற்படுத்தக் கூடியவை. ஆர்கனோ பாஸ்பேட் என்ற பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டினால் ஆட்டிஸம் எனப்படும் கவனச் சிதறல் நோய் குழந்தைகளிடம் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சூழலியல் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளால், புவியின் உயிர்ச் சூழல் நஞ்சாக்கப்பட்டுள்ளது.

நவீன சுற்றுச்சூழல் இயக்கம் உருவாவதற்குத் தூண்டுகோலாக இருந்த கடல் உயிரியலாளர், “அமைதியான வசந்தம்” என்ற உன்னதப் படைப்பின் ஆசிரியர் ரேச்சல் கார்சன் அவர்கள் “வேகத்தையும், அளவையும், விரைவாக எளிதாகப் பெறும் இலாபத்தையுமே கடவுளாக வணங்கும் சமூகமே சுற்றுச்சூழல் சீரழிவுக்கான முக்கிய காரணமான வலியுறுத்துகிறார்.

விவிலியத்தின் முதல் கட்டளையை பின்வருமாறு மாற்றுவதன் மூலம் முதலாளித்துவத்தின் சாரத்தைப் பெற முடியும்: “மூலதனத் திரட்டலைத் தவிர உனக்கு வேறு கடவுள்கள் இல்லை.” சுற்றுச்சூழல் நிபுணர் ரிச்சர்ட் லெவின்ஸ் கூறுகிறார்:

“முதலாளித்துவத்தில் விவசாயம் என்பது இலாபத்திற்காகச் செய்யப்படுகிறதே தவிர உணவு உற்பத்தி செய்வதற்காக அல்ல. உணவு என்பது ஒரு துணைவிளைவாகவே உள்ளது... சுகாதார சேவை என்பது ஒரு சரக்கு, உடல்நலம் என்பது துணைவிளைவே. ”

முதலாளித்துவ அமைப்பில் நுகர்வு என்பது இரண்டாம்பட்சமானது, ஒரு துணைவிளைவைப் போன்றது. மருந்து நிறுவனங்களுக்கு ஒரு தடுப்பு மருந்து எவ்வாறு செயல்படும் என்பது இரண்டாம்பட்சம்தான். அதை விற்றுப் பெறும் இலாபமே முதன்மையானதாகவும், அவற்றின் உந்துசக்தியாகவும் உள்ளது. முதலாளித்துவத்தில் பயன்பாடு, நுகர்வு என்பது இரண்டாம்பட்ச முக்கியத்துவம் கொண்டதாகவும், இலாபமே முதன்மையான முக்கியத்துவம் கொண்டதாகவும் இருப்பது இந்த அமைப்பின் அடிப்படைக் கோளாறு.

முதலாளித்துவத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பே சந்தைகள் இருந்த போதிலும், சந்தையில் இலாபத்திற்கு விற்பனை செய்வதற்காகவே பொருட்களின் உற்பத்தியை ஒழுங்கமைக்கும் ஒரு பொருளாதாரம் முதலாளித்துவத்திற்கு மட்டுமே தனித்துவமானது.

செல்வத்திற்கு ஒரு வரம்பிடாமல் இருந்தோமென்றால் அதுவும் ஒரு பெரிய வறுமை என்று குறிப்பிடுகிறார் மார்க்சின் அபிமானத்துக்குரிய தத்துவஞானி எபிகூரஸ். நாம் எவ்வளவுதான் செல்வம் சேர்த்துக் கொண்டிருந்தாலும் அது நமக்குக் குறைவாகத்தான் தெரிகிறது என்றால் அதுவும் நம்மைப் பீடித்துள்ள வறுமையையே குறிக்கிறது. போதுமென்ற மனநிலை இல்லாது நிரந்தரமான பேராசை மனநிலையைப் பெறச் செய்வதே இந்த அமைப்பின் குணாதிசயமாக உள்ளது.

வரம்புக்குட்பட்ட சூழலில் வரம்பற்ற பொருளாதார வளர்ச்சி குறித்து சூழலியல் பொருளியலாளர் ஹெர்மான் டேலி சாத்தியமற்ற கோட்பாடு என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துகிறார். புவியில் உள்ள வளங்கள் எல்லையற்றவையாக இல்லை. அவை வரம்புக்குட் பட்டவையாகவே உள்ளன.

அந்த வரம்பிற்குட்பட்ட வளங்களை வைத்துக் கொண்டு வரம்பற்ற பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது சாத்தியமற்றதே என்று கூறுகிறார். மற்ற எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ச்சியாக வரம்பில்லாப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முயற்சித்தோமானால் அது சாத்திய மற்றதே.

நாளைய எதிர்காலத் தலைமுறைக்கும் வேண்டும் என்று விட்டு வைக்காமல் பெரும்பாலான இயற்கை வளங்கள், மூலப்பொருட்கள், காடுகள், சுரங்கங்கள், பெட்ரோலியப் பொருட்கள் என அனைத்தையுமே நாம் அதீதமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

இயற்கை வளங்களை நீடித்த அடிப்படையிலான பயன்பாட்டிற்கு உட்படுத்தாமல் உடனடித் தேவைகளுக்காகவே அதிகமாகப் பயன்படுத்துகிறோம். என்றென்றைக்குமே இவ்வாறு செய்ய முடியுமா என்றால் முடியாது.

இந்த அமைப்பை இப்படியே தொடர முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஹெர்மன் டேலியின் கோட்பாட்டையே இன்றுள்ள பொருளாதார அமைப்புக்கும் பொருத்திப் பார்க்க முடியும். முதலாளித்துவ அமைப்பைக் கேள்விக்குட்படுத்த முடியும்.

அமெரிக்க பாணியிலான அதீத நுகர்வு வாழ்க்கைமுறையையும், பொருளாதாரத்தையும் உலகெங்கும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் அதற்குப் புவியில் உள்ள மூலப்பொருட்கள் போத மாட்டா. வரம்பற்ற மூலதனத் திரட்டலையே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பை என்றென்றும் நிலைக்கச் செய்ய முடியும் என்பது நடைமுறை சாத்தியமற்றதே.

ஆகவே எல்லையற்ற மூலதனத் திரட்டலையும், பொருளாதார வளர்ச்சியையும் இலக்காகக் கொண்ட இப்போதுள்ள அமைப்பிலிருந்து விடுபட வேண்டும். இவ்வமைப்பிலிருந்து துண்டித்துக் கொள்வதன் மூலம்தான் புதிய சூழலியல் நாகரிகத்தை உருவாக்க முடியும். நம் புவியைக் காப்பாற்ற முடியும்.

சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டுப் பொருளாதாரமும் நோய்வாய்ப் பட்டிருக்குமானால் இரண்டுக்குமே காரணமான வைரஸை உற்பத்தி அமைப்பில் காண முடியும் என்கிறார் பேரி காமனர்.

இன்றுள்ளது போலவே என்றும் தொழில்வணிகத்தைத் தொடர்வோம் என்ற வழிமுறை உலகப் பேரழிவிற்கே வழிவகுக்கும். புவியின் மீதான மனிதர்களின் சூழலியல் சுவட்டைக் குறைக்க வேண்டும். அதற்குக் குறிப்பாக வளர்ந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சியை நிறுத்த வேண்டும்.

ஏனெனில் வளரும் நாடுகள் சராசரி வாழ்க்கைத் தரத்தை அடைய முயலும் போது வளர்ந்த நாடுகளும் வளர்ச்சியையும், செல்வத்தையும் மேலும் விரிவுபடுத்த முயலுமானால் புவியால் தாங்கக் கூடிய அளவைக் காட்டிலும் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிப்பதுடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலும் பற்றாக்குறை ஏற்படும்.

சமூகநீதியின் அடிப்படையில் செயல்பட வேண்டும். வளர்ந்த நாடுகளே காலநிலை மாற்றம் போன்ற கேடுகளுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளன என்பதால் பொருளாதார வளர்ச்சி அடைந்த வளர்ந்த நாடுகளின் வளர்ச்சியை நிறுத்த வேண்டும்.

அதே நேரத்தில் வளரும் நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்காது, அவை வளர்வதற்கான வாய்ப்புகளை அளிக்க வேண்டும். நாம் புதுப்பிக்க இயலா புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி,பெட்ரோலியப் பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வருகிறோம்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலும் வரம்புக்குட்பட்டதுதான். புவியின் வளங்கள் எல்லையற்வையாக இல்லை. வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழுந்து வேண்டும், 24 மணி நேரமும் வீட்டிலுள்ள அனைத்து மின்சார சாதனங்களும் உபயோகத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அத்தகைய தேவையைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைக் கொண்டு நிறைவு செய்ய முடியாது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களும் வரம்புக்குட்பட்டவையாகத்தான் இருக்கின்றன.

எனவே, சாத்தியமின்மைக் கோட்பாட்டின் படி, அமெரிக்க வாழ்க்கைத் தரத்தை அனைவரும் அடைய வேண்டும் என்றால் 2011ஆம் ஆண்டுக் கணக்கீட்டின் படி நமக்கு 6 புவிக் கோளங்கள் தேவைப்படும். புவியின் வளங்கள் வரம்புக்குட் பட்டவையாக இருப்பதால் அவற்றை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முறையாகப் பகிர்ந்து பயன்படுத்த வேண்டும்.

அதற்காக வறுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டாம். புவியின் பெரும்பாலான வளங்கள் அரசியல் பொருளாதார அதிகாரங்களைத் தனதாக்கிக் கொண்ட முதலாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாலேயே, ஒரு தரப்பு மக்களாலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நாம் அதை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

இந்த உலகின் 3 பில்லியன் மக்கள் கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் எதையுமே வெளியிடவில்லை. வளர்ந்த நாடுகளே பெருமளவில் மாசுக்களை வெளியிடுகின்றன என்கிறார் ஸ்டெஃபன் பெக்கலா என்ற அறிஞர்.

வளர்ச்சிக்கான வரம்புகள் (1972) என்ற நூலின் ஆசிரியர்கள் முன்னோக்கிப் பார்த்துப் பின்வரும் முடிவுகளை அறிவித்துள்ளனர்:

1. உலக மக்கள்தொகை, தொழில்மயமாக்கம், மாசுபாடு, உணவு உற்பத்தி, அதீதப் பயன்பாட்டால் வளங்களில் ஏற்படும் குறைவு ஆகியவற்றில் காணப்படும் தற்போதைய வளர்ச்சிப் போக்குகள் மாறாமல் தொடருமானால், அடுத்த நூறு ஆண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் இந்த புவியில் வளர்ச்சியானது அதன் வரம்புநிலையை அடையலாம். மக்கள்தொகை, தொழில்துறையின் திறன் இரண்டிலும் கட்டுப்பாடற்ற திடீர் சரிவுக்கான சாத்தியப்பாடு ஏற்படும்.

2. இந்த வளர்ச்சிப் போக்குகளை மாற்றவும், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகியவற்றில் எதிர்காலத்திலும் நிலைத்து நீடிக்குபடியான சமநிலையை ஏற்படுத்தவும் முடியும். ஒவ்வொருவரின் அடிப்படைப் பொருளாயதத் தேவைகளையும் நிறைவு செய்யும் விதமாகவும், ஒவ்வொரு தனியாளும் தன் ஆற்றலை வெளிக்கொணர சமவாய்ப்புகளை பெறும் விதமாகவும் உலகளாவிய சமநிலையை நிலைநாட்ட முடியும்.

3. உலக மக்கள் முதலாவதை விடுத்து, இந்த இரண்டாவது முடிவுக்குப் பாடுபட முடிவு செய்தால், விரைவில் அவர்கள் அதை அடையச் செயல்படுவார்களானால் அவர்களின் வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

தொழில்நுட்பமே சூழலியல் பிரச்சனை உட்பட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்தத் தொழில்நுட்பத்தை முன்வைக்கிறோம் என்பதும் பிரச்சனையாக உள்ளது. ஏனெனில் சில நேரங்களில் தொழில் நுட்பமே பிரச்சனையாகி விடுகிறது.

சூழலியல் சிக்கலை ஏற்படுத்தும் அணு உலைகளையே சூழலியல் பிரச்சனைக்கான தீர்வாக முன்வைக்க முடியாது. முதலாளித்துவத்தில் எந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அதிக இலாபம் ஈட்ட முடிகிறதோ அந்தத் தொழில்நுட்பத்திற்கே அதிக முதலீடுகள் செய்யப்பட்டு ஊக்கமளிக்கப்படுமே தவிர அது எல்லோருக்கும் பயன்படக் கூடிய தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சுற்றுச் சூழலுக்கு அழிவேற்படுத்தும் புதைபடிவ எரிபொருள் சார்பு, நச்சுத் தன்மை உள்ள செயற்கை வேதிப்பொருட்கள் (பகுதியளவு பெட்ரோலிய வேதிப்பொருட்களிருந்து பெறப்பட்டவை), பேரணைகள், அணு ஆற்றல் ஆகிய தொழில்நுட்பங்களையே ஊக்குவித்த வரலாறு முதலாளித்துவத்திற்கு உள்ளது.

தொழில்நுட்பங்களின் துணையில்லாமலே மனித உழைப்பை மலிவாகச் செயல்படுத்த முடியும் என்றால் அங்கே தொழில்நுட்ப வளர்ச்சி ஊக்கமளிக்கப் படுவதில்லை. எடுத்துக்காட்டாக இந்தியச் சூழலில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதற்கான சிறந்த தொழில்நுட்பம் இருந்த போதும் மனிதர்களே பயன்படுத்தப் படுகிறார்கள், கூடுதல் தொழில்நுட்பச் செலவுகளைத் தவிர்க்கும் விதமாக சாதிக் கட்டமைப்பின் அடிப்படையில் மலிவான மனித உழைப்பைப் பயன்படுத்துவதையே முதலாளித்துவம் விரும்பும்.

திறமிகு ஆற்றல் பயன்பாடு காலநிலை மாற்றத்திற்கான தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் தொழில் நுட்ப மேம்பாடுகளும், திறமிகு ஆற்றல் பயன்பாடும் முதலாளித்துவ அமைப்பை மேலும் விரிவுபடுத்தப் பயன்படுத்தப் படுகிறதே ஒழிய அதனால் ஆற்றல் பயன்பாடு குறையவில்லை. இதுவே ஜெவோன்ஸ் முரண்பாடு எனப்படுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பொருளாதார நிபுணர் வில்லியம் ஸ்டான்லி ஜெவன்ஸ் தன் புத்தகத்தில் இப்பிரச்சினையைக் கேள்விக்குட்படுத்தினார். அது ஜெவன்ஸ் முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது. அவர் நிலக்கரி பற்றிய கேள்வி என்று தானெழுதிய நூலில் இப்பிரச்சினையை முதலில் எழுப்பினார்

ஒவ்வொரு புதிய நீராவி இயந்திரமும் முன்பு இருந்ததை விட நிலக்கரிப் பயன்பாட்டில் திறமிக்கதாக இருந்தது, இருப்பினும், ஒவ்வொரு மேம்பட்ட திறமிகு இயந்திரத்தின் அறிமுகமும் உற்பத்தி விரிவாக்கம் காரணமாக மேலும் அதிக அளவு நிலக்கரி நுகர்விற்கே வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

எப்படிப்பட்ட பொருளாதார அமைப்பால் திறமிகு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளாமல் தொழில்நுட்பத்தை மட்டுமே தீர்வாக முன்னிறுத்த முடியாது. சமூக உறவுகளில் மாற்றம் ஏற்படுத்தாமல் தொழில்நுட்பத்தால் மட்டும் முதலாளித்துவத்தின் சூழலியல் முரண்பாடுகளைத் தீர்க்க முடியாது என்பதற்கு ஜெவன்ஸ் முரண்பாடே முதன்மைக் காரணமாக சுற்றுச் சூழலியலாளர்களால் அறிந்தேற்கப்பட்டுள்ளது.

திறமிகு முறையில் ஆற்றலை அதிக அளவில் வரம்பற்றுப் பயன்படுத்தினாLLlலும் அதன் மூலமும் சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரிக்கும். திறமிகு ஆற்றல் பயன்பாட்டின் மூலம் மொத்த ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். ஆற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பொருளாதார அமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே சென்றால் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்க முடியாது .

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தினால் சூழலியல் பிரச்சனைகளைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் மக்கள் தொகைப் பிரச்சனையைத் தனியாகப் பரிசீலிக்க முடியாது. இந்த முதலாளித்துவ அமைப்பின் துணை விளைவாகவும் மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளது. ஆகையால் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு இந்த முதலாளித்துவ அமைப்பே முக்கியக் காரணமாக உள்ளது.

எப்படி என்றால், பெரும் எண்ணிக்கையில் வேலையில்லாத சேமப் பட்டாளத்தின் இருப்பே முதலாளித்துவம் இலாபகரமாக நீடித்திருப்பதற்கான உந்துசக்தியாக உள்ளது. வேலைவாய்ப்பு குறைவாக இருந்து வேலைக்கான வேண்டல் அதிகமாக இருக்கும் போதுதான் கூலியைக் கணிசமாகக் குறைக்க முடியும். சேமப் பட்டாளம் அதிகமாக இருக்கும் போதுதான் கூலிக்கான கூட்டுபேர ஆற்றல் குறையும்.

அதிக மக்கள்தொகையால்தான் இலாபத்தை நோக்கிய இந்த அமைப்பு இயங்க முடியும். வேலையின்மையைப் பெருகச் செய்வது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பண்பாக உள்ளது என்பதால் பொருளாதார அமைப்பிலிருந்து தனியாக மக்கள் தொகைப் பிரச்சனையை பார்க்க முடியாது.

அதிக மக்கள்தொகை ஒரு பிரச்சனை அன்று என்பதல்ல இதன் பொருள்.மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அதனால் மட்டுமே சூழலியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலுமா என்றால் இயலாது. மக்கள்தொகைப் பிரச்சனையைச் சரிசெய்தால், இந்த முதலாளித்துவ அமைப்பினால் ஏற்படும் பிரச்சனைகளைச் சரிசெய்ய முடியுமா என்பதே தர்க்க பொருத்தமற்ற ஒரு தவறான கேள்வி.

ஜப்பானில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2005இல் சுழியமாகக் குறைந்து அதன் பின் தேக்கமடைந்துள்ளது. எனினும் ஜப்பானின் முதலாளித்துவ வளர்ச்சியைத் தொடர வெளிநாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மக்கள்தொகையைக் குறைப்பதன் மூலம் சூழலியல் பிரச்சனைகளை சரிசெய்ய முடியும் என்ற கருத்தே இன்றைய பொருளாதார அமைப்பில் தர்க்கப் பொருத்தமற்றது.

முதலாளித்துவத்திற்கு இலாபமே இயக்குசக்தியாக உள்ளது. வரம்பற்ற மூலதனத் திரட்டலை நோக்கி முதலாளித்துவம் ஓடிக் கொண்டிருக்கிறது. மூலதனத் திரட்டல் குறையும் போது தான் மந்தநிலை ஏற்படும். அந்த மந்தநிலையால் உழைக்கும் மக்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக, மந்தநிலையின் போது சுற்றுச்சூழலின் தரம் மேம்படுகிறது. புகையின் அளவும், பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வும் குறைகிறது. நீர்நிலையின் கழிவுகள் குறைகின்றன, போக்குவரத்தின் அளவும் குறைகிறது, சுரங்க வளங்களின் பயன்பாடும் குறைகிறது.

ஆனால் மந்தநிலையின் போது சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்புகளை அகற்றுவதன் மூலம் பொருளாதாரம் புதுப்பிக்கப்படும், ஏனெனில் கடினமான பொருளாதாரக் காலங்களில் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைக்கான செலவு தேவையற்ற ஆடம்பரமாகக் கருதப்படும். இது சுற்றுச்சூழலுக்கு அழிவேற்படுத்தும். ஏனெனில் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு சூழல் பாதுகாப்புகள் தளர்த்தப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், விரிவாக்கப்பட்ட பொருளாதாரம் இப்போது அதிக ஆற்றலையும் வளங்களையும் நுகரக் கூடியது.

பொருளாதார மந்தநிலையால் உழைக்கும் மக்களே இழப்பிற்குள்ளாகி அதிகமாகppப் பாதிக்கப்படுகிறார்கள். பொருளாதார வளர்ச்சி இல்லாத அல்லது குறைந்த காலங்களில் அதிகாரவர்க்கம் கூலிகளையும், செலவுகளையும் குறைத்து பிறரதுdhu இழப்பின் மூலம் தnaங்களது செல்வத்தை அதிகரித்துக் கொள்கிறது.

இயற்கை வளங்களை அழித்து சுரங்கப் பாதை, சுரங்க வேலைகள், பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சூழலியல் அடிப்படையில் அதற்கு எதிர்ப்புக் குரல் ஓங்கும் போது முதலாளித்துவ ஆதாரவாளர்கள் கூறுவது என்னவென்றால், சுற்றுச்சூழல் என்ற பெயரில் எதற்குப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறீர்கள்? வேலைவாய்ப்பை ஏன் பறிக்கிறீர்கள்? என்பது போன்ற ஒரு தவறான கருத்தாக்கத்தை முன்வைப்பார்கள்.

தொழிலாளர்களும் இதனால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்றே நோக்க முடியும். ஒரு மலையின் வளத்தை அழிக்க வேண்டுமென்பது ஒரு தொழிலாளியின் விருப்பம் அல்ல, அவர் விருப்பத்திற்கு மாறாக ஒரு வேலையை மேற்கொள்ளும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். சுற்றுசூழலை அழிக்கக் கூடிய இக்கட்டான நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.

ஒவ்வொரு பொருளாதார மந்தநிலையின் போதும் சுற்றுச்சூழல் ஓரளவிற்குத் தெளிவடைந்தால் கூட அதில் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களாகத்தான் உள்ளார்கள். முதலாளித்துவத்தில் அவர்களைப் பலி கொடுத்தே சுற்றுச்சூழல் மேம்பாடு அடையப்படுகிறது.

இந்த முதலாளித்துவ அமைப்பு தொடர்ந்து இயங்க வேண்டும் எனில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பு வளர வளரத் தொழில்நுட்பம் மேம்படுவதால் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும். வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறையாமல் தக்க வைக்க வேண்டும் என்றால் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகமாக்க வேண்டும். பொதுவாக முதலாளித்துவ அமைப்பின் மூலம் முழு வேலைவாய்ப்பு நிலையை உருவாக்க இயலாது.

ஏனென்றால் முதலாளித்துவத்தில் சேமப் பட்டாளத்தின் இருப்பே கூலியைக் குறைத்து, இலாபத்தைக் கூடுதலாக்கும் பொறிமுறையாகச் செயல்படுகிறது. முதலாளித்துவத்தில் போர்ப் பொருளாதாரத்தின் மூலமே அதிக வேலைவாய்ப்புகளைக் கொடுக்க முடியும். இரண்டாம் உலகப் போர் ஏற்படும் போது அமெரிக்காவில் போர் வேலைகள், அழிவு வேலைகள் மூலம் வேலையின்மை மிகவும் குறைந்து போனது.

முதலாளித்துவத்தில் வேலையின்மை இல்லாத நிலையை ஆக்கப்பூர்வமான வழியில் ஏற்படுத்த முடியாது. போர்ப் பொருளாதாரத்தின் மூலம் வேலையின்மையைக் குறைக்க முடியும் என்ற போதும் போர்முறையிலுமே தொழில் நுட்பம் மேம்பட்டுள்ளதால் அதன் மூலம் பெறப்படும் வேலைவாய்ப்புகளின் அளவும் குறையும் வாய்ப்பே உள்ளது.

முதலாளித்துவம் என்பது வேலையில்லாத தொழிலாளர்களின் இருப்பைத் தொடர்ந்து உருவாக்கும் ஓர் அமைப்பாகும். இந்த அமைப்பில் முழு வேலைவாய்ப்பு என்பது அரிதாக மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களில் மட்டுமே ஏற்படும். ஆனால் அது சுற்றுச்சூழலின் சமநிலைக்கு மிகவும் ஆபத்தானது.

அமெரிக்காவில் கடந்த அறுபதாண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலையின்மைக்கும் இடையிலான உறவை ஆய்வு செய்யும் போது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டுப் பொருளாக்க (GDP) மதிப்பு ஆண்டுதோறும் 5.0 விழுக்காட்டிற்கும் அதிகமாக வளர்ந்த பதிnன்மூன்று ஆண்டுகளில் மட்டுமே வேலையின்மை அதிகரிக்கவில்லை. 5 விழுக்காட்டிற்கும் குறைவாகப் பொருளாதார வளர்ச்சி இருந்த மற்ற ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக மக்கள்தொகை அதிகரிக்கும் வீதத்தைக் காட்டிலும் பொருளாதார வளர்ச்சி கணிசமாக அதிகரித்தால்தான் முதலாளித்துவ அமைப்பில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகம் குறையாமல் தக்கவைக்க முடியும். இல்லையெனில் வேலையின்மை அதிகரிக்கும் என்பது முதலாளித்துவ அமைப்பின் பிரச்சனையாக உள்ளது.

முதலாளித்துவ அமைப்பில் குறைந்த வளர்ச்சி அல்லது வளர்ச்சியின்மை என்பது இலாபத்தைப் பெருக்க முயலும் முதலாளிகளுக்கு இலாபப் பிரச்சனையாக அமையலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்கு அது பேரழிவை ஏற்படுத்தும். அதனால் இந்த அமைப்புக்குள்ளே வளர்ச்சியற்ற நிலையை அடைய முடியுமா என்றால் தொழிலாளர்களை பலியிட்டுத்தான் அப்படியோர் அமைப்பைக் கொண்டுவர முடியும்.

முதலாளர்கள் தங்கள் உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலம் போட்டியில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். சரக்குகளின் விலையைக் குறைப்பதன் மூலம் சந்தையில் கூடுதலான பங்குகளை கைப்பற்றிப் போட்டியாளர்களை வெளியேற்றுகிறார்கள்.

ஏகபோக முதலாளித்துவ அமைப்பில், ஒரு குறிப்பிட்ட துறையின் உற்பத்தி, சந்தை அனைத்திலுமே குறைந்த எண்ணிக்கையிலான முதலாளர்கள் / நிறுவனங்கள் மட்டுமே அதிக ஆளுகை கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையை ஜியோ, ஏர்டெல், விக்(VIG) ஆகிய நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன.

ஏகபோக முதலாளித்துவ அமைப்பில் விலைக் குறைப்பு என்பது கடைசி வாய்ப்பாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. எதற்குத் தேவையில்லாமல் இலாபத்தைக் குறைக்க வேண்டும் என்று முதலாளிகள் தங்களுக்குள் பேசி விலைக்கு ஒரு குறைந்தபட்ச வரம்பை நிர்ணயித்து, அதற்குக் கீழே குறைக்க வேண்டாம் என ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இது சக போட்டியாளரை மதிக்கும் நடத்தை (corespective behavior) என அழைக்கப்படுகிறது. விலை குறைப்பதற்குப் பதிலாக விளம்பரங்களின் மூலம் விற்பனையை அதிகப்படுத்தவே பெருமளவில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

எந்தச் சமூகப் பயன்பாடும் இல்லாத விளம்பரங்களுக்கு அதிகச் செலவு செய்யப்படுகிறது. பொருட்களின் விற்பனை விலையில் 10-11 விழுக்காடு வரை விளம்பரத்திற்காகவே செலவு செய்யப்படுகிறது. 2005இல் 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர், மொத்த உள்நாட்டுப் பொருளாக்கத்தில் 9 விழுக்காடு சந்தைப்படுத்தலுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. 2004-5ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆரம்ப, இடைநிலைக் கல்விக்காக வெறும் 53,600 கோடி டாலர் மட்டுமே செலவிடப்பட்டது. அமெரிக்க சில்லறைத் தொழில்துறை அதன் வருவாயில் 12 விழுக்காட்டை விளம்பரங்களுக்காகச் செலவிட்டுள்ளது.

விற்பனையை அதிகப்படுத்த ஏகபோக முதலாளிகளிக்கிடையே நடைபெறும் போட்டி கடந்த 50 ஆண்டுகளில் நுகர்வுக் கலாசாரத்தை அதிகரித்துள்ளது. மக்கள் மனிதர்களாகப் பார்க்கப்படாமல் நுகர்வோராகவே பார்க்கப்படுகிறார்கள்.

ஊதாரித்தனமான வாழ்வுமுறையும், கடன் பெற்று நுகர்வு செய்யும் கலாச்சாரமும் இன்று பரவலாகக் காணப்படுகிறது, அதுவே உயர்ந்த வாழ்க்கைத் தரத்துக்கு வழி என்றும் நம்பவைக்கப்படுகிறது. நமது பழக்கவழக்கங்களில் பெறும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாம் என்ன உண்கிறோம், அருந்துகிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை பெருநிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. இணையத்திலான நம் தேடலின் அடிப்படையில் நம்மைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொருவரையும் இலக்கு வைத்துத் தம் நுகர்வோராக்கும் தொடர் முயற்சி செய்யப்படுகிறது. எந்த சமூக விழுமியமும் இல்லாத ஒட்டுண்ணி அமைப்பாக விளம்பரத் துறை உள்ளது

பன்னாட்டுப் பெரு நிறுவனங்கள் பிற நாடுகளில், பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் நிலங்களை அபகரித்துள்ளன. அங்கே தங்கள் நாடுகளுக்கான உயிரி எரிபொருள், உணவு உற்பத்திக்குப் பயன்படுத்துகிறார்கள்.

பொதுவாக முதலாளித்துவ நிறுவனங்கள் குறுகிய கால உடனடி நலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் செயல்படுகின்றன. ஆனால் நீடித்த நலன்களை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட காலப் பயன்பாடு கருதிச் செயல்படுவதே சமூகத்திற்கு நலம் பயக்கும். முதலாளித்துவத்தின் நலன்கள், சமூக நலன்களுக்கு முரண்பட்டிருக்கின்றன என்பதால் சமூக நலன்கள் அடிப்படையில் அதனால் செயல்பட முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற நிறுவனம் அதிக எண்ணெய்க் கசிவினால் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலர், ஜான் பிரௌன் ”பெட்ரோலியத்திற்கு அப்பால்””””’’” (beyond petroleum) என்ற கருத்தை முன்வைத்தார்.

பெட்ரோலியத்தை மட்டுமல்லாது சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டும், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பொருள். 2004இல் மில்டன் ஃபிரைட்மேன் என்ற முதலாளித்துவ அறிஞரிடம் ”தலைமை நிர்வாக அதிகாரி ஜான் பிரவுன் தனது சூழலியல் அக்கறைக்காக பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் பொருளாதார நலன்களைத் தியாகம் செய்யும் அளவிற்கு போகலாமா? ””” என்று கேட்கப்பட்டது.
ஃபிரைட்மேன் இவ்வாறு பதிலளித்தார்:

"இல்லை. . . . அவர் தன் சொந்த பணத்தைக் கொண்டு அவ்வாறு செய்யலாம். சுற்றுச்சூழல் நலன்களுக்காக நிறுவனத்தை சரியாகத் திறம்பட இயக்கவில்லையென்றால் அவர் நெறியற்றவர் என்றே நான் நினைக்கிறேன். அவர் எவ்வளவு உயர்ந்த பதவியை வகித்தாலும் கூட அவர் பங்குதாரர்களின் ஊழியரே, அவர்களுக்காகச் செயல்படும் தார்மிகப் பொறுப்புடையவர். அதிக இலாபம் ஈட்டுவதும் பங்குதாரர்களின் பங்குகளை அதிகபட்சம் உயரச் செய்வதுமே ஒரு தலைமை நிர்வாக அதிகாரியின் பொறுப்பு.”

முதலாளித்துவம் ஒவ்வொருவரும் தன்னலத்தின் (பேராசை) அடிப்படையில் செயல்படுவதே பொது நலனையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆடம் ஸ்மித் கூறுகிறார்: “கசாப்புக்காரன், மதுபானம் தயாரிப்பவர் அல்லது ரொட்டி சுடுபவரின் தயவில் நாம் நம் இரவு உணவை எதிர்பார்ப்பது இல்லை, அவர்கள் தன்னலத்துடன் இருப்பதால்தான் பெறுகிறோம்.”

முதலாளித்துவ அமைப்பைத் தன்னலமும் பேராசையுமே இயக்குகிறது மனிதத் தேவைகள் வெறும் துணைவிளைவாகவே நிறைவு செய்யப்படுகின்றன. பொருளாதார நிபுணர் டங்கன் ஃபோலே, ஆடம் ஸ்மித்தின் கருத்தாக்கத்தையும் அதனால் சுற்றுச்சூழலிலும், சமூகத்திலும் ஏற்பட்ட பகுத்தறிவின்மையையும் "ஆடமின் தவறான வாதம்" என்று குறிப்பிட்டுள்ளார். "

தனிநபரின் பேராசையும், தனிநபரின் ஆதாயமுமே முக்கியமானது என்ற அனுமானத்தில் நாம் தொடர்ந்து செயல்பட்டால், [சுற்றுச்சூழலும்] பொதுச்சொத்தும் அழிக்கப்படும். வருங்கால சந்ததியினர் உயிர்வாழ வேண்டுமெனில் மற்ற மனித விழுமியங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்””’’” என்று நோம் சாம்ஸ்கி கூறியுள்ளார்.

"பேராசை, thannaதன்னலம், போட்டித் திறன், பிறரைச் சுரண்டுதல், நுகர்வியம் ஆகிய பண்புகள் பள்ளிகளிலும் ஊடகங்களிலும் பணியிடங்களிலும் தொடர்ந்து மக்களிடம் போதிக்கப்படுகிறது.

உண்மையின் தலைகீழ் திருப்பம்:

அயன்மைப்பாட்டை ஏற்படுத்துவதே முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பண்புகளில் ஒன்றாக உள்ளது. முதலாளித்துவம் தலைகீழாகத் திருப்பபட்ட உலகமாகிறது. அங்கே இயற்கை, மனித சமூகத்தின் மதிப்புகளும், படைப்பாற்றலும் மதிக்கப்படுவதில்லை. இயற்கையை விட இன்றுள்ள முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே முக்கியமானதாகவும், பாதுகாக்கப்பட வேண்டியதாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

சுற்றுச்சூழல் அமைப்புகளில் புவி வெப்பமாதலைத் தடுப்பதற்கான உத்திகளில் புவிக் கோளத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தாமல், எந்த அமைப்பால் இப்புவிக்கோளம் அச்சுறுத்தப்படுகிறதோ, அந்த முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாப்பதிலேயே அதிக அக்கறை செலுத்தும் போக்கே காணப்படுகிறது.

ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் "புவி வெப்பமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான அவசர நடவடிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றும் போது “எல்லா இடங்களிலும் வளர்ச்சிக்குக் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் காலநிலை மாற்றத்தின் உலகளாவிய சவாலை நாம் முனைப்புடன் எதிர்கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

இதில் முதலாளித்துவ வளர்ச்சி காலநிலை மாற்றத்தைத் தூண்டுவதன் மூலம் புவியின் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாய் இருப்பதாகக் கருதப்படவில்லை. மாறாக கால நிலை மாற்றமே முதலாளித்துவ வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாய் இருப்பதாகக் கருதப்படுகிறது.

முதலாளித்துவத்தை பசுமையாக்க முடியுமா.?. முதலாளித்துவத்தை சீர்திருத்துவதன் மூலம் சூழலியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும், பசும் முதலாளித்துவத்தின் மூலம் தீர்வு பெற முடியும் என்ற கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது.

அதில் ஒரு பெரும் சிக்கல் உள்ளது. இலாபம் பெருக்குவதையும், முடிவில்லாமல் மூலதனத் திரட்டலை வரம்பற்ற முறையில் விரிவுபடுத்துவதையும் வேட்கையாகக் கொண்ட அமைப்பை, உலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் விலை வைத்து சரக்காக்கும் இதயமற்ற அமைப்பை ஒரு போதும் பசுமையாக்க முடியாது.

.முதலாளித்துவம் புறத் தாக்கம் அனைத்தையும் வெளியே வைத்துள்ளது. அவை அனைத்தையுமே முதலாளித்துவத்திற்குள் உள்ளிணைத்தோம் என்றால் முதலாளித்துவம் முதலாளித்துவமாகத் தொடர முடியாது என்கிறார் டேவிட் ஹார்வி.

சூழலியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண என்ன செய்ய வேண்டும்?

கார்பன் வரியை அறிமுகப்படுத்த வேண்டும். கார்பன் - டை - ஆக்சைடு உமிழ்வைக் குறைக்காத அனல் மின் நிலையங்கள் இயங்குவதைத் தடை செய்ய வேண்டும்.

புதிதாக செயல்படுத்தப்படும் எண்ணெய் துரப்பன திட்டங்களைத் தடை செய்ய வேண்டும்.

வளர்ந்த நாடுகள் அவர்களுடைய சூழலியல் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் செயல்படுத்துமாறு நிர்ப்பந்திக்க வேண்டும்.குறிப்பாக அமெரிக்காவைக் கூடுதல் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டும். ஏற்கெனவே அழிவுக்குட்பட்ட இயற்கை வளங்களை மேலும் அபகரிக்காமல் பாதுகாத்திட வேண்டும்.

ஆற்றல் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு நிறுத்தி விடாமல் ஆற்றல் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். எல்லாவிதமான பொதுப் போக்குவரத்து முறையையும் அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை நிறுத்தி அணு ஆற்றல், உயிரி எரிபொருளைப் பயன்படுத்தாமல் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.

சுற்றுசூழல் நெறிமுறைகளை வலுப்படுத்த வேண்டும். சூழலுக்குகந்த வேளாண் உணவு உற்பத்தி முறையை ஏற்படுத்த வேண்டும். தொழில்மய பண்ணை வளர்ப்புமுறையை நிறுத்த வேண்டும்.

நகரமயமாக்கத்தை முறைப்படுத்தி,நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையில் காணப்படும் தீவிர முரண்பாடுகளைக் களைய வேண்டும். நிலச்சீர்திருத்தத்தின் மூலம் அனைவருக்கும் சமமான நிலப்பயன்பாடு கிடைக்குமாறு செய்யவேண்டும்.

நன்னீரை தனியார்மயப்படுத்துவதற்கு முடிவுகட்ட வேண்டும்.அனைவருக்கும் நன்னீர் கிடைக்கப்பெறச் செய்வதை அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

மீன்பிடித்துறையை ஒழுங்குக்குட்டுப்படுத்த வேண்டும். அழிந்து வரும் தாவர இனங்களை பாதுகாக்க வேண்டும். பன்மைத்துவத்தை பாதுகாக்க வேண்டும். அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கவேண்டும்.

பொதுச்சுகாதார சேவையை நடைமுறைபடுத்த வேண்டும்.அனைவருக்கும் சரியான ஊதியத்துடன் வேலைவாய்ப்புகளை கிடைக்கப்பெறச் செய்யவேண்டும். அனைவருக்கும் போதிய அளவு தரமான உணவு கிடைக்குமாறு செய்யவேண்டும்.
இயற்கை வளங்களின் பயன்பாடுகளை அனைவருக்கும் கிடைக்கப்பெற செய்யவேண்டும்.

சூழலியல் நெருக்கடிகளால் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

ராணுவ செலவுகளை குறைக்க வேண்டும். ஏகாதிபத்திய போர்ச் செலவுகளை நிறுத்த வேண்டும். அயல் நாட்டில் உள்ள ராணுவத் தளங்களை அப்புறப்படுத்தவேண்டும். இதற்கு ஒதுக்கப்பட்டத் தொகையை சமூகத்தேவைகளுக்காகவும், சூழலைப் பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும்.

சூழல் மேம்பாட்டுக்கான போராட்ட செயல்பாடுகளில் பங்கேற்பதுடன், எவ்வாறு இந்தப்p பொருளாதார அமைப்பே சூழலியல் நெருக்கடிகள் ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சமூக மாற்றத்திற்காகச் செயல்படும் அனைவருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கார்ல் மார்க்ஸ் மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை, வளர்சிதைமாற்ற உறவுகள் என்றே குறிப்பிட்டார். அதாவது இயற்கையின் பிரிக்க முடியாத அங்கமே மனிதர்கள் என்ற பொருளிலே மார்க்ஸ் இப்படிச் சொன்னார். முதலாளித்துவ அமைப்பிலுள்ள மக்கள் அயன்மைப்பாட்டிற்கு உட்படுகிறார்கள்.

முக்கியமாக இயற்கையிடமிருந்து அயன்மைபட்டுள்ளார்கள் என்பதையும் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். பெருந் தொகையான மக்கள் தொழில் மயமாக்கப்பட்ட ஒரு நகரத்தில் இருக்கும் நிலை ஏற்படும் போது அவர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரிமாற்ற உறவுகளில், வளர்சிதைமாற்ற முறிவு (metabolic rift) ஏற்படுகிறது.

நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் மக்களுக்கான உணவு கிராமங்களிலிருந்து பெறப்படுகிறது. ஆனால் இயற்கையிடமிருந்து பெறப்பட்டவை மீண்டும் இயற்கையை அடையாதவாறு வளர்சிதை மாற்ற முறிவு ஏற்படுகிறது என்கிறார்.

பொருளாதாரத்திற்கும் சூழலியலுக்கும் இடையில் காணப்படும் "வளர்சிதை மாற்ற முறிவை”” சரிசெய்ய இயற்கையோடு இயைந்த முறையில் புதிய வாழ்க்கைமுறை, உற்பத்தி முறை, உணவு பயிர் செய்யும் முறை, போக்குவரத்து என அனைத்தையுமே மாற்றத்திற்குட்படுத்த வேண்டும்.

ஒரு சுற்றுச்சூழல் புரட்சி என்பது சாத்தியம் மட்டுமல்ல அது மிகவும் அவசியம். இயற்கையையும், மக்களையும் சுரண்டும் இந்த அமைப்பிலிருந்து விடுதலை பெறுவதே சூழலியல் புரட்சியாகும்.

 

Pin It