நமது நாடு ஒரு கூட்டாட்சி நாடு. அதாவது மத்தியில் ஓர் அரசும் மாநிலத்தில் ஓர் அரசும் என இரண்டு அதிகார அமைப்புகள் நாட்டை ஆள்வதால் நிர்வாகச் சிக்கல்கள் வரக்கூடும்.

அதனால், மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என்ற சிந்தனை ஏற்பட்டது. 

govt school girlsபல்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களை ஆராய்ந்து, அவற்றிலிருந்த சிறப்பம்சங்களை எடுத்து, அதில் நம் நாட்டிற்கு ஏற்றவாறு திருத்தங்களைச் செய்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு ஏழின் கீழ் மத்திய அரசு, மாநில அரசின் அதிகார எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

 இதன்படி மத்திய அரசின் கீழ் இருக்கும் துறைகளின் அதிகார முடிவுகளை மாநில அரசோ, மாநில அரசின் கீழ் இருக்கும் துறைகளின் அதிகார முடிவுகளை மத்திய அரசோ திருத்த முடியாது.

மூன்றாவதாக-

பொதுப்பட்டியலில் இருக்கும் துறைகளின் முடிவுகளை மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து எடுக்க சம உரிமை உள்ளது. எனினும் மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. மத்தியப் பட்டியலில் பாதுகாப்பு, அணுசக்தி, பணஅச்சடிப்பு என 97 துறைகள் உள்ளன.

அதேபோல் மாநிலப் பட்டியலில் வேளாண்மை, சிறைச்சாலைகள், கல்வி, விளையாட்டு என 66 துறைகள் இருந்தன.

ஆனால் 1976இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, நெருக்கடி நிலைக் காலத்தில் கல்வியும் விளையாட்டும் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

 கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் மாநில அரசுகளுக்கும் அதில் மாற்றங்கள் செய்ய சம உரிமை உண்டு. ஆனாலும் மத்திய அரசின் கை ஓங்கி இருப்பதால் மாநில அரசால் ஒன்றும் செய்ய இயலாத நிலையே உள்ளது.

அது தான் நீட் தேர்வு தொடங்கி கல்வி சார்ந்த பல்வேறு விவகாரங்களிலும் நடைபெற்று வருகிறது.

எனவே தான் பொதுப் பட்டியலையே ஒழித்துவிட வேண்டும் என்று அறைகூவலை விடுத்துள்ளனர் புதிய குரல் அமைப்பைச் சார்ந்த தோழர்கள்.

பன்முகத் தன்மை கொண்ட நாட்டில், கல்வித் தரத்தை உயர்த்துவது என்ற பெயரால் மருத்துவம் சார்ந்த உயர் கல்விப் படிப்புக்கு தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு (நீட்) நடத்துவதையும், பல்கலைக்கழக நிதியுதவிக் குழுவை (யுஜிசி) கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் அமைக்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

கல்வியைப் பரவலாக்கவும், சமச்சீராக அமைக்கவும், அனைவருக்கும் கட்டாயமாகக் கல்வி தந்திடவும், கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்றி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்களும், திமுக உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சியிகளும் கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் பயனாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.

மத்தியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையட்டும். மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படட்டும்.

Pin It