தமிழக மாணவர்கள் கடும் எதிர்ப்பு
உருவ பொம்மை எரிப்பு

இந்திய அரசு கல்வித்துறையில் அவ்வப்போது சில அதிரடி மாற்றங்களைச் செய்வதுண்டு. அவற்றுள் பெரும்பாலானவை தேசிய இன உணர்வுகளுக்கு எதிராக அமைகின்றன என்பதே பழைய வரலாறு. இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது. மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் வெளியிட்டுள்ள புதிய கல்வித் திட்டம் நம்மைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆணைய மசோதா 2010 (National Commission of Higher education & Reserach)  என்னும் பெயரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து, சமூகநீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானதாக உள்ளது. மாணவ சமூகமும் இதனால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

1950 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த போது, அதிகாரங்கள் மூன்று வகையாகப் பட்டியலிடப்பட்டு இருந்தன. மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல், ஒருங்கிணைந்த பட்டியல் (Concurrent List) என்று அவை அமைந்திருந்தன. அவற்றுள் அதிகாரமற்ற அதிகாரங்களே மாநில அரசுப் பட்டியலில் காணப்பட்டன. குறிப்பிட்டுச் சொல்லத்தக்கனவாக, கல்வித் துறையும், காவல்துறையுமே இருந்தன. நெருக்கடி நிலைக் காலத்தில் கல்வித் துறையையும் ஒருங்கிணைந்த பட்டியலுக்குக் கொண்டு சென்றுவிட்டனர். அதனை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மீட்டு விட வேண்டும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரேயடியாக மத்திய அரசு பட்டியலுக்கே எடுத்துச் சென்று விடும் திட்டத்தை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

இதனைத் தாண்டி இன்னொரு அதிர்ச்சியூட்டும் செய்தியும் அவரிடம் இருந்த வெளிப்பட்டுள்ளது. பல்லாண்டு காலம் போராடி ஒழித்த நுழைவுத் தேர்வை, தொழில் கல்லூரிகளில் மீண்டும் கொண்டுவர இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கிராமப்புற மாணவர்களின் மீது விழுந்திருக்கும் பேரிடியாகும். மீண்டும் தனியார் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் பெருமளவில் தோன்றி வணிகமயமாவதற்கே இது உதவும். மேல்சாதியினர் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் சிலருக்கு மட்டுமே இத்திட்டம் உதவும். 

மேற்காணும் இரண்டு அறிவிப்புகளும், மறுபடியும் ஒரு குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வரும் சூழ்ச்சியோ என்று ஐயப்பட வைக்கின்றன.

இது பொறுப்பதில்லை என்று சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலர் கடந்த 23ஆம் தேதி பேரணி ஒன்றைச் சென்னையில் நடத்தினர். திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆகிய கட்சிகளும், அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து கொண்டதோடு பேரணியிலும் பங்கேற்றனர். சமூக நீதிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டுள்ள அமைச்சரின் உருவ பொம்மையை மாணவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.

சமூகநீதிக் கோட்பாடுகளுக்கு எதிரான சிந்தனைப் போக்கை மக்கள் ஒரு நாளும் ஏற்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசு தன் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- இளைய சுப்பு

Pin It