பெரியார் ஈ.வெ.ரா. காண விரும்பியது ஓர் அரசு- எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்? அப்படிப்பட்ட அரசை எப்படிக் காண்பது?

பெரியார் ஈ.வெ.ரா., திருச்சியில், 30-09-1945 இல் அறிவித்தபடி, அவர் காணவிரும்பியது வெள்ளையன் ஆட்சியிலிருந்து விடுபட்ட - வட நாட்டான் சுரண்டலி லிருந்து விடுபட்ட ஒரு தனிச் சுதந்தர திராவிட நாடு!

அதற்கு முன்பு, 28-10-1942இல், அருப்புக் கோட்டையில் அவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இந்த நாடு நல்ல நிலைமையில் பொருளாதாரம், கல்வி, நாகரிகம் முதலியன ஏற்பட வேண்டுமானால், திராவிட நாடு பிரிந்தே தீர வேண்டும். அப்படி நாட்டைப் பிரிக்க வேண்டுமானால், காங்கிரஸ், அச்சு நாடு(கள்) ஆகிய எதிரிகளின் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும். தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமானால், இந்தச் சண்டையில் வெள்ளைக் காரனுக்கு எல்லா உதவியும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விதச் சண்டை நின்ற பின்பு, நம்முடைய நாட்டைக் கொடுக்க வேண்டும் என்று நாம் வெள்ளைக்காரனைக் கேட்க வேண்டும். அவன் நாட்டைப் பிரித்துக் கொடுக்க மறுப்பானாகில் அவனிடமிருந்து நாட்டைப் பெறுவதற்கு இலட்சக் கணக்கான வாலிபர்களைப் பலி கொடுக்க நேர்ந்தாலும் நேரிடும். நாம் எந்தவிதமான யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.”

பெரியார் குறிப்பிட்டுள்ளது இரண்டாவது உலகப் போர். அது 1945 ஆகஸ்டு 14ல் முடிவுற்றது. அப்படி உரையாற்றிய அவர், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, 30-03-1942இல், பிரிட்டிஷ் அமைச்சர வைத் தூதுக்குழுவின் தலைவர் சர். ஸ்டாஃபோர்டு கிரிப்சை அவரும் மற்றும் மூவரும் சந்தித்தனர். அவர்கள் தமிழ் நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவர் என்பதாலும் - பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாமலிருக்கச் சென்னை மாகாணத்தைப் பிரித்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் வைக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் கோரியதாலும், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கிற வகுப்பின் பேரில் அரசியல் உரிமை வழங்கப்பட முடியாது என்று, 1945இல், கிரிப்ஸ் குழு மறுத்ததாலும், உடனடியாகத் தனிச் சுதந்தரத் திராவிட நாடு வேண்டும் என்று 30-09-1945 இல் கோரினார் ஈ.வெ.ரா.

இவ்வளவு இக்கட்டான நிலை ஏற்பட்ட பிறகும், சென்னை மாகாணத்தின் மற்ற திராவிட மொழிகளைப் பேசும் பகுதிகளில் திராவிடர் இயக்கம் கால் பதிக்க வில்லை. தமிழ் நாட்டில் உயிரைப் பணையம் வைக்கும் போருக்கு ஏற்ற மறவர் கூட்டமாகத் தமிழர்கள் உருவாக்கப்பட வில்லை.

திராவிடர் இயக்கத்தில், 1942க்குப் பிறகு எண் ணற்ற படித்த இளைஞர்களும் திறமை வாய்ந்த பரப்புரையாளர்களும் எழுத்தாளர்களும் இருந்த போதிலும், ஓர் அரசு அமைப்புக்கு முன்னர் நடை பெற வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ற போரிடும் படை எதையும் உருவாக்கவில்லை.

இந்நிலையில் கருத்தியல் அளவில் பெரியாரை மூர்க்கமாக எதிர்த்த காங்கிரஸ் தேசிய வாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தக்க மறு மொழி தருவதிலும், தன் நிலையை விளக்குவதிலுமே பெரியார் முனைப்புக் காட்ட வேண்டி நேரிட்டது. அது இன்றியமையாத தாகவும் இருந்தது.

வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக 1946 சூனிலேயே அறிவித்தான். வெள்ளை யனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட காங்கிரசுக்கட்சி, 1946 திசம்பர் 9 தொடங்கி, சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கியது. அதற்குத் தக்க முகம் கொடுத்து 1946 தொடங்கி எதிர்த்திட்ட பெரியார், 21-07-1947 இல், மக்களுக்குத் தெளிவானதொரு வேண்டு கோளை விடுத்தார். அது யாது?

“இந்துஸ்தான் அரசமைப்புச் சபையில் வகுக்கப் பட்டுவரும் அரசியல் முறை, சென்னை மாகாணத் தைப் பழங்காலப் பஞ்சாயத்து ஆக்கவே தயாராகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக நம் மீது ஆட்சி புரிந்து ஆதிக்கப்படுத்தி வந்த சுயநலக் கும்பலைக் கொழுக்க வைக்க, திராவிடஸ்தான், இந்திய யூனியனில் இணைந் திருப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மிக்க கேவலான முறையில், திராவிடஸ்தான், அக்கும்ப லுக்கு உழைத்துக் கொட்ட வேண்டும். திராவிடஸ்தான் சுதந்தரம் பெறாத வரையில் அதிகாரம் என்பது வெறுங்கற்பனையே” என்று தெளிவுபடக் கூறினார்.

அத்துடன், நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை ஏளனம் செய்த கம்யூனிஸ்டுக் கட்சியினருக்கு, 1947 சூலையில் பெரியார் தக்க விடை பகர்ந்தார்.

“திராவிடர் கழகம் கேட்கும் சுதந்தரம் கம்யூனிஸ்ட்டுக் கட்சி கேட்கும் சுதந்தரத்தை விட மேலானது”.

“கம்யூனிஸ்ட்டுக் கட்சி - முதல் வைத்துப் பேரம் செய்யும் முதலாளித்துவம் ஒழிந்த சுதந்தரம் கேட்கிறது. திராவிடர் இயக்கமானது அம்முதலாளிகளுடன், அம் முதலாளிகளை உற்பத்தி செய்வதற்கு மூல காரண மாயுள்ள - அதுவும் முதல் வைத்துக் கூட பேரம் செய்ய யோக்கியதை இல்லாத கல் முதலாளிகளையும் - பிறவி முதலாளிகளாயிருந்து யாதொரு முதலு மின்றி, சோம்பேறித் தனத்தையும், ஏமாற்றுதலையும் ஈடாகவைத்து, மக்களை மாக்களாக்கி வரும் பார்ப்பனி யத்தையும் சேர்த்து ஒழித்துச் சுதந்தரம் கேட்கிறது”. என விளக்கமளித்தார்.

மேலும், “இன்றைய கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கோ, கொள்கைக்கோ நாங்கள் விரோதிகளாக இருந்த தில்லை; விரோதிகளாகப் பாவித்ததுமில்லை” என்று தோழமை உணர்வுடன் கூறினார்.

சுதந்தர திராவிட நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சி இருக்கும் என்பது பற்றித் தெளிவான ஒரு விளக்கத்தை, 06-01-1948இல் செயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) சொற்பொழிவில் அளித்தார்.

“... என் உயிருள்ள அளவும் சமூகத்தில் சூத்திரர் களாகவும், பொருளாதாரத்தில் ஏழைகளாகவும், அரசி யலில் அடிமைகளாகவும் வாழ்ந்து வரும் பண்டைச் சிறப்பு வாய்ந்த திராவிட மக்களை மனிதர்களாக ஆக்கும் பணியில் ஈடுபட்டிருக்கத் துணிந்து நிற்கிறேன்.

“நாடு தன்னாட்சி பெற்றால், திராவிட நாட்டில் சூத்திரன், பிராமணன் என்கிற வேறுபாடு இருக்காது”

“திராவிட நாட்டில் ஓரிரண்டு ஆண்டிற்குள் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்”.

“திராவிட நாட்டிற்குள் அந்நியர் ஒருவர் கூட அநுமதிச் சீட்டின்றி உள்ளே வர அநுமதிக்கப்பட மாட்டாகள்”

“திராவிட நாட்டில் அந்நியர்களோ அல்லது தனிப்பட்ட முதலாளிகளோ பிறரைச் சுரண்டி வாழ வசதி இருக்காது.”

“எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட நாட்டு ஆட்சி வரி இல்லாமலே ஆட்சி புரிந்து வரும். போக்குவரத்து இலாகாவையும், தந்தி தபால் இலாகாவையும் அரசாங்கமே ஏற்று நடத்தி வருவது போல, மற்ற எல்லா வியாபாரங்களையும் திராவிட நாட்டு அரசாங்கமே ஏற்று நடத்தும்”

“திராவிட நாட்டில் எந்த விவசாயிக்கும் அய்ந்து ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை புஞ்சை இருக்காது. அவனுடைய விளைபொருளை அவனுடைய கொள்முதலை அறிந்து ஓரளவு இலாபத்தைக் கூட்டிக்கொடுத்து, அரசாங்கமே வாங்கிக் கொள்ளும். அவனுக்கு நிலவரி இருக் காது. அவ்விளைபொருள்களைத் திருப்பி மக்களுக்கு விற்கும் போது ஓரளவுக்கு இலாபம் வைத்து, அரசாங்கமே தனது சொந்தப் பண்ட சாலைகள் மூலம் விற்பனை செய்யும்”என மாதிரி சமதர்ம ஆட்சித் திட்டம் ஒன்றையே முன்வைத்தார்.

20-01-1948இல் ஆம்பூரில் பேசிய பெரியார், “லேவா தேவி முறை (தனியார் வட்டிக்குக் கடன் தரும் முறை) சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட வேண்டும். அரசாங்கமே லேவாதேவி செய்து வருமானால் கடன் வாங்குவதால் உள்ள வேதனை கள் பொது மக்களுக்கு இருக்காது.”

“வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை வழங் கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

மதம், சமயம், இனம் பற்றிய குழப்பங்களுக்கும், ஏற்கெனவேயே 25-07-1947இல் பறங்கிப்பேட்டை சொற்பொழிவில், பின் வருமாறு தெளிவுரை தந்தார்.

“திராவிட ஸ்தானில் முஸ்லீம்களின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. இனி இக்கேள்விக்கே இட மில்லை. திராவிடர் ஆட்சியில் முஸ்லீம் என்றோ, கிறித்துவர் என்றோ ஆதித்திராவிடர் என்றோ பிரிவி னைகள் ஒரு நாளும் இருக்க முடியாது. எல்லோரும் ஒரே இனமாக - திராவிடர்களாக வாழ்வோம். சைவன், வைணவன், பௌத்தன் என்ற பிரிவுகள் போல, இஸ்லாமியத் தத்துவத்தைப் போற்றும் முறையில் அவர்களுக்கும் உரிமை தரப்படுமே அன்றிப், பிரிவினைக்கு இடமே இருக்க முடியாது. அதேபோன்று, ‘ஆதித்திராவிடர்’ என்ற இழிவுப்பட்டத்தையும் ஒழித்துத் திராவிடனாக வாழ, சட்டப்படிச் செய்வோம்” எனத் தெளிவுபடுத்தினார்.

தந்தை பெரியாரால் மேலே சொல்லப்பட்ட வை தான், அவர் காணவிரும்பிய ஓர் அரசின் இலக்கணம்; “அரசு” என்பது பற்றிய அவர்தம் விளக்கம்.

அது “தனிச் சுதந்தர அரசா”? “தன்னாட்சி அல்லது தன்னுரிமை அரசா”? என்பதை இன்றைய உலகச் சூழல் இந்தியச் சூழல் மற்றும் தமிழராகிய நாம் பெற்றுள்ள வலிமை - இந்திய ஏகாதிபத்திய அரசு பெற்றுள்ள வலிமை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் - மானிட சமத்துவ உரிமைக்கும் எதிரான கேடு கெட்ட கூறுகள் - இவற்றை உடைத்து நொறுக்கத் தமிழகத் தமிழர்கள் - குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க தமிழர்கள் ஒன்று கூடிச் சிந்திக்க ஆயத்தமாவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய வடிவிலான சமதர்ம - தன்னாட்சி அரசைத் தமிழகத்திலும் மற்ற அடிமைப்பட்ட மொழி வழி மாநிலங்களிலும் அமைக்கப்பட வழி காண்போம் வாருங்கள்! வாருங்கள்! இது முதலாவது பணி.

- வே. ஆனைமுத்து

Pin It