கீற்றில் தேட...

நேர்காணல் : க.காமராசன் - ஜி.சரவணன்

periyargowtham 400பெரியார் நூல்கள் வரலாறு காணாத அளவில் விற்பனையாகிவரும் இன்றைய சூழலில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பெரியாரின் எழுத்துகளை முழுமையாக உள்ளது உள்ளபடி Ôநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்Õ என்ற தலைப்பில் தொகுத்து என்.சி.பி.எச். வெளியீடாக வெளிவர உள்ள நூலின் தொகுப்பாளர் தோழர் பசு.கவுதமன் அவர்களை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்து Ôநியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்Õ இதழுக்காக உரையாடினோம். அவரது விரிவான நேர்காணல் வருமாறு:

உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் உங்களைப் பற்றியும் கூறுங்கள்?

என் குடும்பத்துக்கு என்று பெரிய பின்னணி ஒன்றும் கிடையாது. அப்பா - பசுபதி; அம்மா - பத்மா. மூன்று மக்களில் நான் நடுவண். மூத்தவரும், இளையவரும் சகோதரிகள். அம்மா சுயமரியாதை இயக்கம் சார்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர். அப்பாவைப் பொறுத்தவரை அவர் மட்டுமே சுயமரியாதைக்காரர். குடிஅரசு பேப்பர் படித்தார் என்பதற்காகவே உதை வாங்கிக்கொண்டு ‘ராத்திரியோடு ராத்திரியாக’ வீட்டைவிட்டு வெளியேறி இராணுவத்தில் சேர்ந்து எல்லைப்பக்கம் போய்விட்டவர்.

அங்கிருந்து திரும்பியதும் பொன்மலை இரயில்வே பணிமனையில் சேர்ந்து 1950யில் “தாலி கட்டாமல்” சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். தந்தை பெரியாருடனும், அன்னை மணியம்மையாருடனும், அவர்களுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற ஆசிரியர் அவர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக வரலாற்றில் அவருக்கென்று ஓர் இடம் உண்டு. அப்படியான ஒரு சுயமரியாதை இயக்கக் குடும்பத்திலிருந்து வந்தவன் நான்.

பெரியார் இயக்கத்தோடும், பெரியார் சிந்தனைகளோடும் உங்களுக்கு எப்போது எவ்வாறு பரிச்சயம் ஏற்பட்டது?

பெரியார் இயக்கத்தோடும், அவரின் சிந்தனைகளோடும் நான் என்னை வலிந்து பரிச்சயப்படுத்திக் கொள்ளவில்லை. அது இயல்பாகவே என்னுள் இருந்தது என்பதுதான் உண்மை. காரணம் என் குடும்பச் சூழல் அப்படி. எங்களுடைய பிக்னிக் ஸ்பாட் மாநாட்டு திடல்கள்தானே. வீட்டில் ÔவிடுதலைÕயிலிருந்து எல்லா நாளிதழ்களும் இருக்கும். பெரியார் தொடங்கி விகடன் வரை எல்லோரும் புத்தகங்களாக இருந்தார்கள்.

அப்பாவோ அல்லது அம்மாவோ இதுதான் பெரியார், இதையெல்லாம் படி என்று எப்போதும் சொன்னதில்லை. அதுபோலவே அவற்றையெல்லாம் “நான் அப்பவே படிச்சேன்” என்று பொய் சொல்லவும் மாட்டேன். பாடப் புத்தகமில்லாத நூலாக நான் முதலில் படித்தது பைபிள்தான். ஒருவேளை நான் படித்த தஞ்சை தூய பேதுரு பள்ளி அதற்குக் காரணமாக இருக்கலாம். பைபிள் கதைகளில் தொடங்கிய என் வாசிப்பு சிறுகதைகள், தொடர்கதைகளாகி உயர்நிலைப் பள்ளிக்காலங்களில் புதினங்கள், கட்டுரைகள், கவிதைகள் என்று இலக்கியம், சமூகம் என்ற தளத்துக்குள் பயணப்பட்டது. எனக்கு வாய்த்த ஆசிரியர்கள், குறிப்பாக தி.பா என்னும் தி.பாலசுப்பிரமணியம், கி.மூர்த்தி என்னும் கிருட்டிணமூர்த்தி போன்றோர் என்னைச் செதுக்கினார்கள். இவர்களெல்லாம் வகுப்பறைக்குள் வகுப்புரிமையை, திராவிட இயக்கத்தை, பெரியாரைப் பேசியவர்கள்.

பெரியார் எனக்குள்தான் இருந்தார். ஆனால் அவர் இருந்ததை நான் கவனிக்கவில்லை. பத்தாம் வகுப்பைக் கடந்த பின்னால்தான் பெரியாரை நான் தொட்டேன். அது எங்கே போய் நின்றதென்றால் எஸ்.எஸ்.எல்.சி. இறுதித் தேர்வின்போது, நான் ரொம்பத் தீவிரமாய் “பெண் ஏன் அடிமையானாள்?” படித்துக் கொண்டிருந்தேன். அப்பா என்னிடம் அதிகம் பேசமாட்டார். ஆனால் அன்றைக்கு, “இதில்தான் நாளைக்குப் பரிட்சையா?” என்று கேட்டுவிட்டு, அம்மாவிடம் “இது இந்த வருசம் தேறாது” என்றார். அந்த ஆண்டு நான் தேறிவிட்டேன். இப்படித்தான் அய்யா பெரியாருக்கும் எனக்கும் பரிச்சயமேற்பட்டது.

உங்களின் இயக்கச் செயல்பாடுகளைப் பற்றியும் கூறுங்கள்.

அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ எங்களை - இன்ஜினியர், டாக்டர் போல - எதுவாகவோ ஆக்கிப் பார்க்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. உங்களுக்கு எது தேவையோ அதைச் செய்யுங்கள். அதை சரியாகச் செய்யுங்கள் என்று மட்டும் சொல்லுவார்கள். கல்லூரியில் புகுமுக வகுப்பு மட்டும் படித்தேன். ஆனால் தஞ்சை பொதுநூலகத்தில் அதிகபட்சம் நூல்களைப் படித்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். நேரடி அரசியலில் அவ்வளவாக ஆர்வமில்லாதவனாகவே இருந்தேன். கோவைக்குச் சென்று தொழில்நுட்பக் கல்வி பயின்ற காலங்களில் கூட செயற்பாட்டாளனாக இல்லாமல், திராவிடர் கழக நிகழ்வுகளில் கலந்து கொள்வேன். இயக்கம் குறித்தும் மற்ற எல்லா அரசியல் குறித்தும் படிக்கத் துவங்கினேன். அவசரநிலை பிரகடனத்திற்குப் பிறகுதான் எனக்கு அரசியலே பிடிபட்டது. அதுவரைக்கும் பார்வையாளனாக - படிப்பாளனாக இருந்த நான் செயற்பாட்டாளனாக மாறத் துவங்கினேன்.

குறிப்பாக ஆசிரியர் அவர்கள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பேற்ற பின்னால் திராவிடர் கழக மாணவ, இளைஞரணியின் நகர, மாவட்டப் பொறுப்புகளில் செயல்பட்டேன். எனக்கு, தஞ்சை ந.பசுபதியின் பையன் என்பது கூடுதல் தகுதியாக இருந்தது. அதன் காரணமாகவே இயக்கத்தின் முன்னோடி, மூத்தத் தோழர்களான நாகை என்.பி.காளியப்பன், சொரக்குடி வாசுதேவன், குடந்தை ஏ,எம். ஜோசப், பட்டுக்கோட்டை இளவரி, நீடாமங்கலம் ஆறுமுகம் சுப்பிரமணியன், நாகை பாட்சா, வரகூர் நடராசன், அம்மன்பேட்டை தம்பி, மன்னார்குடி ஆர்.பி.சாரங்கன், தஞ்சை கபிலர், சாமி.நாகராஜன், கா.மா.குப்புசாமி, கா.மா. கோவிந்தராஜன், (என்று பெயர் பட்டியல் நீண்டு கொண்டேபோகும்) போன்றவர்களுடன் பழகவும், உரையாடவும், அவர்களின் இயக்க அனுபவங்களைக் கேட்டு உணர்கின்ற வாய்ப்பும் எனது இயக்க செயற்பாடுகளினால் கிடைக்கப் பெற்ற பேறாகக் கருதுகின்றேன். என் நினைவுகளில் இருக்கும் அந்த உரையாடல்களையெல்லாம் பதிவு செய்தால் வேடிக்கையான, வியப்பான வரலாற்றுச் செய்திகளெல்லாம் கிடைக்கும்.

பெரியார் எழுத்துத் தொகுப்புகளில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி... குறிப்பாக, ‘ஈ.வெ.ராமசாமி என்கிற நான் தொகுப்பு பற்றிக் கூறுங்கள்?

1974களில் தோழர் ஆனைமுத்து அவர்களால் தொகுக்கப்பட்ட பெரியார் சிந்தனைகள் மூன்று தொகுதிகளையும் 84லிருந்து முழுமூச்சாக வாசிக்கத் துவங்கி, அதனுள் என்னை மூழ்கடித்துக் கொண்டேன். அந்தத் தொகுதியில் பெரியார் அவர்களின் பேச்சுக்களும், எழுத்துகளும் பதிவானவற்றையும், அவரால் பதிப்பிக்கப் பட்டவற்றையும் பட்டியலிட்டிருப்பார். அவற்றில் பெரும்பாலான நூல்கள் எனது தந்தையாராலும், எனது மாமனார் மண்ணச்சநல்லூர் ச.க. அரங்கராசன் அவர்களாலும் சேகரிக்கப்பட்டு அவை என்னிடம் உள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தோழர் ஆனைமுத்து அவர்கள் பட்டியலிட்டவைகளில் சில விடுபடல்களும், சில தவறுகளும் இருந்தன.

அவற்றை சரி செய்யவேணடும் என்ற எண்ணத்தில் 2005 என்ற கால எல்லையோடு பெரியாரவர்களின் பேச்சுகளையும், எழுத்துகளையும் பதிப்பித்தவர்கள் யார், யார் - எந்த ஆண்டு முதல் பதிப்பு என்று தேடித் தொகுக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் என் தொகுப்புப் பணி துவங்கியது. அது பின்னாளில் தோழர் ஆனைமுத்து அவர்களின் மூன்று தொகுதிகளையும் மறுபதிப்பு செய்யும் பணியில் - முதல் பதிப்பைத் திருத்தி மெய்ப்புப் பார்க்கும் வேலையில் தோழர் தஞ்சை இரத்தினகிரி வழியே, குப்பு.வீரமணி, பெ.மருதவாணன் ஆகியோருடன் நெருங்கி ஓராண்டு ஈடுபட வாய்த்தது. அதனைத் தொடர்ந்து தோழர் கொளத்தூர் மணி அவர்களோடு இணைந்து குடிஅரசு தொகுப்புப் பணியில் முழுவதுமாகப் பங்களிக்கக் கூடியவனானேன்.

இந்தப் பணிகளுக்கு முன்பிருந்தே நான் பெரியாரை முழுவதுமாக மறுவாசிப்பு செய்து கொண்டிருந்தபோது, தந்தை பெரியாரவர்களால் நான் யார் என்று தொடங்கப்படுகின்ற அல்லது அவர் தன்னை முன்னிறுத்தி வெளியிடுகின்ற பேச்சுக்கள், கட்டுரைகள், அறிக்கைகள் போன்ற பதிவுகளைப் படிக்கின்றபோது அதனுள் அவரின் சொல்லாடல்கள், உவமைகள், சொலவடைகள், உருவகங்கள் “எந்த எழுத்துக் கொம்பனாலும்” கற்பனையாகக் கூட நினைத்துப் பார்க்க முடியாத தனி ஆவர்த்தனமாக இருப்பதை உணர்ந்தேன்.

அவருடைய சில குடிஅரசு தலையங்கங்கள் ஏதோ ஒரு பாலஸ்தீனியக் கவிதையைப் படிப்பது போலிருக்கும். எனவேதான் மற்ற தொகுப்பிலிருந்து வேறுபட்டு, தந்தை பெரியாரவர்கள், தன்னைப் பற்றியும், தன்னை அடையாளப்படுத்தியும். தன்னை முன்னிறுத்தியும் பேசியவற்றை, எழுதியவற்றைப் பிரித்து அதன் கருத்து சிதையாமல், தொனி மாறாமல், அவற்றின் வீரியம் குறையாமல் தொகுத்ததுதான் “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்”. இதை ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பேச்சுக்களிலிருந்து, எழுத்துக்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பகுதி’ என்று சொல்லலாம்.

இப்போது வெளிவரும் “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?” தொகுப்பைப் பற்றி கூறுங்கள்...

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் என்று சொல்லி அதற்கு வியாக்கியானம் சொல்வார்களே தவிர அதைத் தாண்டிப் போகமாட்டார்கள். அவர் ஏன் சொன்னார்? எதற்காக சொன்னார்? எதனால் சொன்னார்? என்று யாரும் சொல்வதில்லை. குறைந்தபட்சம் தன்னளவில் கூட யோசிப்பது கிடையாது. ரொம்ப அழுத்திக் கேட்டால் அவர் இராமாயணத்தைக் கொளுத்தினார், சிலப்பதிகாரத்தையும் , நமது கலாச்சார, பண்பாடுகளையும் கேலிக்குள்ளாக்கினார். அவருக்கு இலக்கியமும் தெரியாது. கலையும் புரியாது என்று எல்லா இலக்கியங்களையும், பண்பாட்டையும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ள கர்த்தாக்கள் சொல்வார்கள்.

அவரது துணைவி, அன்னை நாகம்மையார் மறைந்தபோதும், அவரது தாயார் சின்னத்தாயம்மாள் மறைவுற்றபோதும், அவரது உற்ற தோழர் சர் ஏ.டி.பன்னீர்செல்வத்தின் மரணத்தின் போதும் அவர் எழுதிய இரங்கல் செய்திகள் மூன்றுமே தனித்தனியே முனைவர் பட்டம் பெறுவதற்கான இலக்கிய கூறுகள் அமைந்த இலக்கியங்கள் அவை.

தனக்கு எந்தப் பற்றுமே இல்லை என்றவர் - மொழிப்பற்று இல்லை என்றால் நாட்டுப் பற்று வராது என்கின்றார். “புலவர்களே, இலக்கிய கர்த்தாக்களே மனித சமூக வளர்ச்சிக்கான இலக்கியத்தை எழுதி என்னிடம் கொடுங்கள். ஆயிரம் பிரதி போட்டு உங்களுக்கும் கொடுத்து மற்றவற்றை நான் மக்களிடம் பரப்புகிறேன்” என்று வணக்கமாய் கேட்டவர். அரசுப்பணியில் இருந்த தமிழ் வித்துவான்களுக்கு, சமஸ்கிருதப் பண்டிதர்களுக்கு இணையான சம்பளம் பெற்றுத் தந்தவர். இதுவெல்லாம் எத்தனை தமிழ்ப் புலவர்களுக்கு, வித்துவான்களுக்கு, இலக்கியகர்த்தாக்களுக்குத் தெரியும். இது எதுவுமே தெரியாமல் ஒரு பத்து, பதினைந்து மேற்கோள்களை மட்டுமே பிடித்துக் கொண்டு தொங்குகின்றவர்களிடம் “நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” என்று கேட்கத்தானே தோன்றும். அதைத் தாண்டி இங்கே மொழி என்பதும், இலக்கியம் என்பதும் பெரும்பாலும் “பாடத்திட்டத்திற்குட்பட்டது”. ஆனால் பெரியாரின் மொழி என்பதும், இலக்கியம் என்பதும் மக்களுக்கானது, அதுவும் வளர்ச்சி நோக்கிய மனித சமூகத்திற்கானது. அதனுடைய பதிவுகள்தான் இந்தத் தொகுப்பு.

உங்களுடைய பெரியார் எழுத்துத் தொகுப்புகள் மற்ற தொகுப்புகளிலிருந்து எந்த விதத்தில் வேறுபடுகின்றன? குறிப்பாக, உள்ளது உள்ளபடியே பெரியார் எழுத்துகளைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணமும் கால அடிப்படையிலும் பொருண்மை வாரியாகவும், பெரியார் எழுத்துகளைத் தொகுக்க வேண்டும் என்ற எண்ணமும் எப்படி தோன்றியது?

பொதுவாக, பெரியாரின் தொகுப்புகள் என்பது அதனதன் தலைப்புகளில் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி’களாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன. என்னுடைய முந்தைய தொகுப்பு உட்பட. அப்படியான பதிவுகள் பெரியாரை அறிமுகப்படுத்திக் கொள்ளவும், அவருடைய நடவடிக்கைகளை அறிந்து கொள்ள மட்டுமே பயன்படுவதாகக் கருதுகின்றேன். பெரியாரைப் பல தலைப்புகளில், சில பக்கங்களிலும், மேற்கோள்களிலும் சுருக்குவதன் விளைவு, இரவிக்குமார் தொடங்கி இன்றைய தமிழ்தேசியர்களிலிருந்து ஜெயமோகன் வரைக்கும், “அந்த மேற்கோள்”களிலிருந்து சில வரிகளை உருவி எடுத்து “ஆய்ந்து - அவிந்து” பெரியாரைத் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மொத்தத்தில் தமிழர்களுக்கு எதிராக நிறுத்துகின்ற ஒப்பற்ற வேலையை ஓயாமல் செய்துகொண்டிருக்கின்றார்கள். அப்படியானால் பெரியார், பார்ப்பனர்களின் முன்னேற்றத்திற்காகவா பாடுபட்டார் என்ற பரிதாபத்திற்குரிய கேள்வி சமூகப் பிரக்ஞையுள்ள யாருக்குத்தான் வராது!

எனவேதான் பெரியாரை, அவரின் ஆழ, அகலத்தை, நீள, உயரத்தை உள்ளது உள்ளபடி - அவருடைய வாக்கியங்களில் இலக்கணப் பிழையா? அப்படியே இருக்கட்டும். பெரியாரை காலவரிசைப்படி - கருத்து முன்னுக்குப் பின் மாறுபடாதா? ஆமாம், இருக்கலாம்.

எந்த அடித்தல், திருத்தல் இல்லாமல் பெரியாரை - பெரியாராகப் படிக்க, பார்க்க வேண்டுமென்றால் உள்ளது உள்ளபடி, காலவரிசைப்படி தொகுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதுவே பெரியாருக்கு நாம் செய்யும் நல்லது என்றே நான் நம்புகிறேன்.

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் எழுத்துகளைத் தொகுத்து, ஐந்து தொகுதிகளாக, 4000 பக்கங்களில் நூலாக்கி, வெளியிடும் இத்தருணத்தில் தங்களின் மன உணர்வுகளைக் கூறுங்கள்...

மூலப்பிரதிகளைப் படித்து அவற்றிலிருந்து சற்றேறக்குறைய ஏ4 அளவிலான 9000 பக்கங்கள் வரை டி.டி.பி செய்யப்பட்டவற்றை மீண்டும் வாசித்து, அவற்றை காலவரிசைப்படி, அந்தந்தத் தலைப்புக்குள் ஒழுங்கமைத்து 6000 பக்கங்களாகக் குறைத்து, இறுதியாக சுமார் 4000 பக்கங்களாகத் தொகுப்பு வர உள்ளது. அய்ந்தாண்டு கால உழைப்பு இது. தொடர்ச்சியான இந்தப் பணியினால் என்னுடைய வலது கண்பார்வை பாதிக்கப்பட்டு, ஒரு ஆறு மாதகாலம் இடைவெளியேற்பட்டது. இப்போது நினைத்தாலும் பிரம்மிப்பாகத்தான் உள்ளது. ஆனால் பெரியாரை - பெரியாராக பதவுரை, பொழிப்புரை ஏதுமின்றி படிக்க வேண்டும் - படிப்பிக்க வேண்டும் என்ற என்னுடைய தேடலின் வெளிப்பாடு இது.

தரவுகளைப் பொறுத்தவரை என்னுடைய தந்தையார், தஞ்சை ந.பசுபதி மற்றும் எனது மாமனார் மண்ணச்சநல்லூர் ச.க.அரங்கராசன் ஆகியோரின் நூல் சேகரிப்பும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழமைக்குரிய கொளத்தூர் மணி அவர்களின் குடிஅரசு சேகரிப்பும் பெரிதும் துணை நின்றன. அதுபோலவே விடுதலை இதழ்களை ஒருசேரப் படித்து குறிப்புகள் எடுக்க அனுமதி கேட்டபோது, எனக்கு அனுமதி வழங்கிய விடுதலை ஆசிரியர், திராவிடர் கழகத் தலைவர் மரியாதைக்குரிய அய்யா கி.வீரமணி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய இந்த முயற்சியை - என்னுடைய பெரியாரியப் பணியினை அங்கீகரித்து தொகுப்பினை வெளியிடுகின்ற என்.சி.பி.எச் நிறுவனத்திற்கும் நன்றி சொல்ல விழைகின்றேன். எனது வலது கண்பார்வை மீட்டெடுக்கப்பட்டபோது என்ன மனநிலையில் இருந்தேனோ அதைப்போலவே இந்தத் தொகுப்பு வெளியாகும் தருணத்தையும் உணர்கின்றேன்.

இன்றைய சமூக அரசியல் சூழ்நிலையில் பெரியார் சிந்தனைகளுக்கான தேவைகளை எப்படி உணர்கிறீர்கள்?

இன்றைய சமூக அரசியல் சூழ்நிலையில், இந்துத்துவ சக்திகள் வளர்ந்துவிட்டன. எல்லாவற்றையும் சாதியும், மத அடிப்படைவாதமும் தீர்மானிக்கிறது. அதனால் பெரியார் மண்ணில் ஒரு ‘கிராக்’ ஏற்பட்டுவிட்டது என்று சொல்லுவது எவ்வளவு சரி? அல்லது உண்மை என்று எடுத்துக்கொண்டாலும் அது பெரியாருக்கு ஏற்பட்ட தோல்வியல்ல. சோவியத் ஒன்றியம் உடைந்துவிட்டது எனவே மார்க்சியம் தோற்றுவிட்டது என்று சொல்வது எவ்வளவு பெரிய அவலச் சிந்தனையோ அதுபோலத்தான் இதுவும்.

சாதி ஒழிந்து - மானமும், அறிவும் உள்ள சுயமரியாதை மிக்க சமதர்ம சமூகமாக இது மாறுகின்றவரை - அதற்குத் தடையான காரண, காரியங்கள் இருக்கின்ற வரை இங்கே பெரியாரின் தேவை அவசியமானது, தவிர்க்கமுடியாதது.

பெரியாரை ‘கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர், இடஒதுக்கீட்டு ஆதரவாளர் போன்ற சிமிழுக்குள் அடக்கக் கூடாது என்கிறீர்களே! பின் எப்படி பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டும்?

அவை மட்டுமல்லவே பெரியார். ஒட்டுமொத்த பெரியார் என்பது மனித நேயத்தின் உச்சம். அவரது சிந்தனைகளும், செயல்பாடுகளும் சுயமரியாதை - சாதி ஒழிப்பு என்ற மய்யப்புள்ளியிலிருந்து புறப்பட்டவைகள். அதற்கு மாறாக எவையெல்லாம் பொதுப்புத்தியில் படிய வைக்கப்பட்டிருந்ததோ அவற்றையெல்லாம் கட்டுடைத்தக் கலகக்காரர் அவர். கடவுள் மறுப்பு, வகுப்புரிமை, பார்ப்பன எதிர்ப்பு என்பதெல்லாம் அவற்றில் சில கூறுகள். பெரியாரை வியாக்கியானப்படுத்தியவர்கள், விமர்சித்தவர்கள் அதைத் தாண்டி அதிகபட்சம் அவரை அடையாளப்படுத்தவில்லை. பெரியாரை நிறுவனமயப்படுத்தியதில் காட்டிய அவசரத்தை அவரை தத்துவமயப் படுத்துவதில் நாம் காட்டவில்லை என்பதால் ஏற்பட்ட விளைவு இது. எனவேதான் பெரியாரை சாதி ஒழிப்பு - சுயமரியாதை என்ற மய்யப்புள்ளியிலிருந்துதான் தொடங்கவேண்டும், தொடரவேண்டும்.

பொதுவுடைமை இயக்கங்களுக்குள் பெரியார் குறித்த விமர்சனம் குறைந்து, பெரியார் எழுத்துக்கள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டு உள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பெரியார் முதன்முதலில் சமதர்ம அறிக்கையினை தமிழில் மொழிபெயர்த்து 1931-களின் இறுதியில் குடிஅரசில் வெளியிடு கின்றார். அதற்குப் பிறகுதான் சோவியத் பயணம் மேற்கொள் கிறார். அந்தச் சமதர்ம அறிக்கைக்கு, அவர் முன்னுரை எழுதுகின்ற போது, “மற்ற நாடுகளில் ஒரு விஷயம்தான் முக்கியமாய் கருதப் படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்), வேலையாள்(ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியா விலோ மேல் ஜாதியார் கீழ் ஜாதி யார் என்பது ஒன்று, அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன் ஏழை தத்துவத் திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவதுகொண்டு சமதர்ம உணர்ச்சி தலைதூக்க முடியவில்லை” என்று குறிப்பிடுவார். அந்தப் புரிதல் இவ்வளவு காலங்களுக்குப் பிறகு பெரியார் எழுத்துகள் குறித்த வாசிப்பு என்ற ஆர்வமாக வெளிப்படுவது மகிழ்ச்சிதானே.

பெரியார் குறித்து ஒரு சில தலித் ஆய்வாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் பற்றி... குறிப்பாக, பெரியார் இடைநிலைச் சாதிகள் சார்ந்து செயல்பட்டார், பெரியார் சிந்தனைகள் இடைநிலைச் சாதி சார்ந்த வரம்புக்குட்பட்டவை என்பது பற்றி உங்கள் கருத்து?

அம்பேத்கர் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தலித் ஆய்வாளர்களிடையே பெரியார் பற்றிய விமர்சனங்கள் துவங்குகின்றன. அதற்கு முன்னால், பெரியார் தலித் விரோதியாகக் காட்டப்படவில்லையா என்று சொன்னால், காட்டப்பட்டார். அதுவும் நீங்கள் சொல்கின்ற இடைநிலைச் சாதிக்காரர்களாலேயே அப்படி காட்டப்பட்டார். பெரியார் ஒட்டுமொத்த சாதி ஒழிப்புப் போராளியே தவிர, ஏதோ ஒரு நிலைக்கு சார்பானவர் அல்ல. “சூத்திரன் என்ற கலத்தில் நீங்கள் பதியப்பட்டிருப்பதில் உங்களுக்கு சிறிதாவது மானம் இருந்தால் பறையன் என்கின்ற பட்டம் போக வேண்டுமென்பதில் கடுகளவாவது வருத்தம் இருக்குமா?” என்றும், “பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுவீர்களே ஆனால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களே ஆவீர்கள்” என்றும் அவர் இடைநிலைச் சாதிகளிடம்தான் சொன்னார். தயவு செய்து இந்தத் தலித் ஆய்வாளர்கள் குறைந்தபட்சம் 1925லிருந்து 1938வரைக்குமான குடிஅரசு தொகுப்புகளை மட்டுமாவது படிக்க வேண்டும். அல்லது பெரியார் களஞ்சியம் தொகுதி 7-21, 25,26 தொகுதிகளையாவது கொஞ்சம் ஆழமாகப் படிப்பது நல்லது. தூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால் தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்புவது ரொம்ப கஷ்டம்.

பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புவதில் முன்பு இருந்ததைவிட பெரியாரிய இயக்கங்களின் முனைப்பில் தொய்வு ஏற்பட்டு உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், சமீபகாலங்களில் பெரியார் எழுதிய மற்றும் பெரியாரைப் பற்றிய நூல்கள் அதிகளவில் விற்பனையாவதை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

தொய்வு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்ற விமர்சனத்திற்குள் நான் போகவில்லை. ஆனால் ஒரு பெரிய அமைப்பு பல குழுக்களாகப் பிரிந்து முன்னைக்காட்டிலும் வீரியமாக இன்றைய சமூக அரசியல் சூழலுக்கேற்ப பல்வேறு வடிவங்களில் பெரியாரின் சிந்தனைகளை பரப்புரை செய்துகொண்டுதானுள்ளனர் என்பதுதான் உண்மை. ஒருவேளை பலராக வெவ்வேறு திசைகளில் இருப்பதால் தொய்வின் தோற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆசிரியர் வீரமணி அவர்கள் ஒருமுறை, “இது ஒரு நாற்றாங்கால். இந்த நாற்றாங்காலிலே நம்மை அறியாமல் ஒரு சுனாமியோ - ஒரு வெள்ளத்தினாலோ - ஒரு புயலினாலோ - ஒரு சூறாவளியினாலோ அந்தப் பயிர் அங்கே ஒருமுறை அழிந்துவிட்டது என்று சொன்னால் நிலம் பத்திரமாக இருக்கிறது. விதைகள் பக்குவப்பட்ட பண்ணைகள் இருக்கின்றன. எனவே அதோடு முடிந்துவிட்டது என்று யாரும் - எதிரிகள் உட்பட தயவுசெய்து கணக்குப் போட்டுவிடக்கூடாது” என்று சொன்னார். இதன் விளைவுதான் இன்றைக்குப் பெரியாரைப் பற்றிய நூல்களும், பெரியாரின் நூல்களும் அதிக அளவில் விற்பனையாவது. பெரியாரைத் தெரியாத - பார்த்தேயிராத இன்றைய இளைய தலைமுறை பெரியாரைத் தேடுகிறது, தேவையை உணர்கிறது என்றால் தொய்வு என்பது ஒரு தோற்றப் பிழைதான்.

பெரியாரை வாசிக்கத் தொடங்கும் இளம் வாசகர்களுக்கு உங்கள் அறிவுரை?

யாரும் இங்கே நடுநிலையாளர்கள் கிடையாது. எல்லோருமே ஏதோ ஒருவகையில் ஒரு அமைப்பையோ, ஒரு தத்துவத்தையோ சார்ந்துதானிருப்போம். அதுதான் யதார்த்த உண்மை. ஆனாலும் பெரியாரைப் படிக்கத் துவங்கும் முன் உங்களுக்குப் பெரியாரைப் பிடிக்கும் என்றாலுங்கூட அந்த முகத்தைக் கழற்றி வைத்துவிட்டு பெரியாரை பதவுரை, பொழிப்புரை, பொருளுரை, அகல உரை ஏதுமின்றி பெரியாராக மட்டுமே படியுங்கள். அதற்குப் பின்னால் பெரியாரைப் பற்றிய வியாக்கியானங்களையும், விமர்சனங்களையும் படியுங்கள் என்பது என் பணிவான வேண்டுகோள்.

பெரியார் எழுத்துகளைத் தொகுக்கும் பணியில் இப்போது என்ன செய்து வருகின்றீர்கள்?

பெரியார் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டிலும் இன்னும் அறியப்பட வேண்டியவராக இருக்கின்றார். பெரியார் சொல்லப்பட்டதை விடவும் இன்னும் கூடுதலான சுயசிந்தனை தொகுப்பாக இருக்கின்றார். பெரியார் இன்றும், என்றும் தேவை என்பதை இந்தச் சமூகம் உணர்கிறது, உணர்த்திக் கொண்டுள்ளது. எனவே பெரியாரை பெரியாராகப் படிக்க - படிப்பிக்க என் தேடல் இன்னும் தொடர்கிறது.

மூன்று தலைப்புகளில் என்னுடைய தேடல் தொடர்கின்றது. பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் உலக அளவில் கொண்டு செல்லப்பட வேண்டியவைகள். அவற்றை முழுமையாகத் தொகுக்க வேண்டும். இதைப் போலவே பெரியாருக்கும் கம்யூனிஸ்ட்களுக்குமான உரையாடல்களை ரொம்பவும் முக்கியமானதாகக் கருதுகிறேன். இந்த உரையாடல்களைத் தொகுத்து ஒழுங்கு செய்ய வேண்டும். அதைப் போன்றதே பெரியாரின் தொழிற்சங்க, தொழிலாளர்கள் பற்றிய பதிவுகளையும் தொகுக்க வேண்டும். என்னுடைய அடுத்த வேலைத் திட்டம் இவைகளாகத்தாம் இருக்கும்.