தமிழை முத்தமிழ் என்கிறோம். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் இடைத்தமிழாய் உள்ள இசைத்தமிழ் இனம், மொழி, நாடு கடந்து எல்லோரையும் ஈர்க்க வல்லதாகும். தமிழுக்கு மட்டும் இந்தச் சிறப்பில்லை. உலக மொழிகள் எல்லாவற்றுக்குமே இந்தப் பெருமை உண்டு. இசையின் நேர்த்தி உழைப்போடு கலந்து வெளிப்படும் போது உள்ளத்தின் மகிழ்ச்சி உச்சத்தை எட்டுகிறது.

இசைக்கு மொழியில்லாமல் இருக்கலாம். ஆனால் இசை தாய்மொழியோடு கலந்தால்தான் உயிர்ப்புப் பெறும். ஆதிக்க வாதிகளாகிய பார்ப்பனர்கள் மற்ற துறைகளைப் போலவே இசைத் துறையிலும் தமிழர்க்கு எதிராக நின்றனர். ‘கர்நாடக இசையில் உள்ள அளவிற்குத் தமிழிசையில் பாடல்கள் இல்லை. கர்நாடக இசை மும்மூர்த்திகள் சமற் கிருதத்திலும் தெலுங்கிலும் ஏராளமான கீர்த்தனைகளை எழுதிக் குவித் துள்ளனர். அவற்றின் முன்னால் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட எவையுமே எதிர்நிற்க முடியாது’ என்று அவர்கள் எக்காளமிட்டனர்.

இந்தப் பார்ப்பனப் பொய்யுரையை நம்பவும் அக்காலத் தில் தமிழ்ப்பாடகர்கள் இருந்தனர். அவர்களின் வருந்தத்தக்க நிலையை எண்ணிப் பாவேந்தர் பாரதிதாசன் வயிறெரிந்து பாடினார் :

செந்தமிழில் இசைப்பாடல் இல்லையென்று

       செப்புகின்றார் மான மின்றிப்

பைந்தமிழில் இசையின்றேல் பாழ்ங்கிணற்றில்

       வீழ்ந்துயிரை மாய்த்த லின்றி

எந்தமிழில் இசையில்லை எந்தாய்க்கே உடையில்லை

       என்ப துண்டோ?

உந்தமிழை அறிவீரோ? தமிழறிவும் உள்ளதுவோ

       உங்கட் கெல்லாம்?

- தமிழியக்கம் (1945)

‘தமிழ்நாட்டில் தமிழர்களிடையே தமிழில் பாட்டுப்பாட முடியாது என்று கூறும் அளவுக்குத் துணிவு கொண்டவர் களும் இத்தமிழ்நாட்டில் இருந்து வருகின்றனர். தமிழில் தமிழ்ப்பாட்டுப் பாட வேண்டும் என்று கேட்கும் தமிழர்களை எதிர்த்து நடக்கத் துணிவு கொண்டவர்களுக்கும் தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டுக்கள் பாடப்பட வேண்டும். தமிழில் இசை இருக்க வேண்டும் என்று கூறுபவர்களை நையாண்டி செய்து, அவ்வாறு கூறுவதும் கோருவதும் முட்டாள்தனம் என்று மேடைகள் மீதேறிப் பேசிடத் துணிவு கொண்ட கூட்டத்தினருக்கும் இத்தமிழ்நாடு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு எதிர்ப்பையும் மீறி, தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழில் பாடுவதற்குப் பெருஞ் செல்வர்களின்- இராஜாக்களின் முயற்சியும் ஆதரவும் கூட்டுறவும் வேண்டப்படுகின்றன. அந்தோ! தமிழர்கள் அடைந்துள்ள கேவல நிலைமைதான் என்னே!’ என்று 25.12.1943ஆம் ஆண்டிலேயே குடிஅரசு ஏடு மனங்கொதித்து எழுதியது.

மியூசிக் அகாதமியும் பார்ப்பனச் சூழ்ச்சியும்

ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் (திசம்பரில்) சென்னை மாநகரெங்கும் இசையரங்குகள் களைகட்டத் தொடங்கிவிடும். இராதாகிருட்டிணன் சாலையில் அமைந் துள்ள ‘மியூசிக் அகாதமி’ கட்டடம் பெரும்பாலும் இன்று பார்ப்பனர்களின் ஆளுகைக்கு உட்பட்டு உள்ளது. மியூசிக் அகாதமி தொடங்கப்பட்டதன் நோக்கம் பற்றிப் பலரும் அறிய வாய்ப்பில்லை.

1927ஆம் ஆண்டு திசம்பரில் சென்னையில் இந்திய தேசியக் காங்கிரசு மாநாடு நடந்து முடிந்தது. அந்த மாநாட்டுக்கெனத் திரட்டப்பட்ட தொகையில் செலவு போக ஒரு பகுதி மிஞ்சியது. அந்தத் தொகையில் நிறுவப்பட்டதுதான் மியூசிக் அகாதமி. 1928ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பின் நோக்கம், கர்நாடக இசையை மட்டுமன்றி செவ்வியல் நாட்டியக் கலை எனப்படும் பரதநாட்டியத்தையும் வளர்ப்பதாகும்.

கோவில்களிலும், பண்ணையார் வீடுகளிலும் தேவ தாசிகள் எனப்பட்ட பார்ப்பனர் அல்லாத பெண்களால் ஆடப்பட்டு வந்த சதிர் எனப்படும் பரதநாட்டிய ஆட்டம் தேவதாசி முறை ஒழிப்புக்குப்பின் பெரும்பாலும் பார்ப்பன உயர்சாதிப் பெண் களிடமே போய்ச் சேர்ந்தது. தஞ்சை பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாவது ஆண்டுப் பெருவிழாவிலும் பத்மாசுப்பிரமணியம் ஆட்டம்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞரையும் ஈர்த்தது.

சர். ஆர்.கே. சண்முகம் தமிழிசைப் பணி

சர். ஆர்.கே. சண்முகம் கோவையில் ஒரு கொடைப் பண்புள்ள வளமான குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞரா னவர். 1920இல் தமது 28ஆம் வயதிலேயே சென்னை சட்டமன்ற உறுப்பினர். 1923இல் மத்திய சட்டசபைத் தேர் தலில் சுயேச்சையாய் நின்று வென்றவர். 1934இல் கொச்சி சமஸ்தானத்தின் திவான். 1946இல் நேரு தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையின் நிதியமைச்சர். பெரியாரால் சிறந்த பொருளாதார நிபுணர் என்று பாராட்டப்பட்டவர்; அவரின் நன்மதிப்பைப் பெற்றவர்; வகுப்புவாரிக் கொள்கை யில் பெரும் பற்றுக் கொண்டவர். கொச்சி சமஸ்தானத்தில் அதனை நடைமுறைப்படுத்தியவர்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆர்.கே. சண்முகம் ஒருமுறை சென்னை மியூசிக் அகாதமியின் ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டார். அந்த நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஆண்டு விழாவைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்ட முதல் பார்ப்பனர் அல்லாத தலைவர் அவர் தான். அந்நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் கோபால கிருஷ்ணராவ் என்பவர் தமது வரவேற்புரையில் ‘திவான் சர். ஆர்.கே. சண்முகம் செட்டியார் பாரத மாதாவின் அருமந்த புதல்வர்களில் ஒருவர்’ என்று குறிப்பிட்டு வரவேற்றார்.

அங்குக் குழுமியிருந்த பார்ப்பனர்களுக்கு இப்புகழ் மொழிகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் ‘அவர் அப்படிப்பட்டவர் இல்லை. நீங்கள் கூறியதை திரும்பப் பெறுங்கள்’ என இடைவிடாமல் கூச்சலிட்டனர். ‘வெட்கம்’, ‘வெட்கம்’ என்று ஒலி எழுப்பி இழிவு செய்தனர்.

தமிழிசைக்கு ஆக்கம் சேர்க்க வேண்டும் என்கிற அசையாத மன உறுதியோடு வினையாற்றிய ஆர்.கே. சண்முகம் 1942இல் அண்ணாமலை அரசருடன் இணைந்து தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்தார். தமிழிசை வளர்ச்சிக்கும் தமிழாராய்ச்சிக்கும் தன்னேரிலாத தொண்டாற்றினார்.

சென்னையில் 4.1.1944 அன்று செயிண்ட் மேரீஸ் அரங்கில் கே.பி. சுந்தராம்பாள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆர்.கே. சண்முகம், “நமது இசைவிழாவில் கலந்துகொண்ட வித்வான் களுக்கெல்லாம் நாங்கள் தனிப்படையான நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த விழாவிற்கு ஏற்பாடு கள் செய்யத் தொடங்கிய போது கச்சேரிகளில் பாடுவதற்குப் பாடகர்கள் முன்வருவார்களோ? என்ற சந்தேகம் பலமாக ஏற்பட்டிருந்தது. நம்முடைய இயக்கத்திற்கு விரோதமான சில வித்வான்கள் நம்முடைய விழாவைத் தடுப்பதற்கு எவ்வள வோ முயற்சிகளைச் செய்தார்கள். ஆனால் நாங்கள் இதற் கெல்லாம் பயப்படவில்லை. எந்தவிதத்திலாவது கச்சேரிகளை நடத்தி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தோம். எந்தப் பாடகர்களும் வரமாட்டேன் என்று சொல்லி இருந் தாலும், கடைசி முடிவில் இராஜா சர். அண்ணாமலை செட்டி யாரவர்களும் நானும் மேடையிலேறிப் பாடிவிடுவதென்றும் கூடத் தீர்மானித்தோம். சென்ற 12 தினங்களாக ஆயிரக் கணக்கான தமிழ் மக்களுக்கு இந்த மேடையிலிருந்து தமிழ் இசை இன்பத்தை ஊட்டிய எல்லாப் பாடகர்களுக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக் கிறார்கள். தமிழில் கச்சேரிகள் செய்யப் போதுமான உருப் படிகள் இல்லை’ என்று சாதித்துக் கொண்டிருக்கும் எதிரி களுக்கு நம்முடைய இசைவிழாவே தகுந்த பதில் ஆகும்” (குடிஅரசு 22.1.1944) என்றெல்லாம் பேசித் தம் தாளாத தமிழிசை வேட்கையைப் பதிவு செய்தார்.

அண்ணாமலை அரசரின் தமிழிசைத் தொண்டு

மனுநீதிப்படி கல்வி மறுக்கப்பட்ட இந்நாட்டின் கோடிக் கணக்கான உழைக்கும் மக்கள் கல்விக்கண் பெறக் காரண மாய் இருந்த இயக்கம் சுயமரியாதை இயக்கம். இந்த இயக்கத் தின் கல்விப் பணிக்கு அண்ணாமலை அரசர் ஏற்படுத்திய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இயன்ற அளவில் துணை செய்தது.

தமிழிசை இயக்கத்தை வெற்றி பெறச் செய்ததில் அண்ணா மலை அரசரின் பங்கு அளப்பரியதாகும். 1929இலேயே அண்ணாமலை இசைக் கல்லூரி அமைக்கப்பட்டு இந்திய இசை பற்றித் தமிழில் எழுதப்படும் சிறந்த நூலுக்கு ரூ.750/- பரிசு அறிவிக்கப்பட்டது. எனினும் பார்ப்பனர்கள் தமிழிசை வளர்ச்சிக்குப் பற்பல தடைகளை ஏற்படுத்தினர்.

தமிழில் சிறந்த கீர்த்தனைகள் இயற்றுவோருக்குப் பரிசு வழங்கும் திட்டத்தை அண்ணாமலை அரசர் அறிவித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கீர்த்தனைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்தப் பரிசுத் திட்டத்தைப் பார்ப்பனர்கள் ஏளனம் செய்தனர். சென்னை மாகாணத்தின் அந்நாளைய அரசு தலைமை வழக்கறிஞராய்ப் பணியாற்றிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ’ஆர்டர் கொடுத்து இசையை உருவாக்க முடியாது’ என்று கிண்டல் அடித்தார். இந்து, சுதேசமித்திரன், ஆனந்த விகடன் போன்ற பார்ப்பன ஏடுகளும் அன்றைய மத்திய நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் தமிழிசை இயக்கத்தின் மீது நஞ்சைப் பொழிந்தனர்.

ஆனால் எதைக்கண்டும் இவர் அஞ்சவில்லை. 23.12.1943 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டைத் தொடங்கி வைத்து அண்ணாமலை அரசர் ஆற்றிய நீண்ட சொற்பொழிவின் சில பகுதிகளாவன :

“தமிழிசை புதிதல்ல; தமிழிசை இயக்கம் படையெடுப்பு மல்ல. அபசாரமும் ஆகாது. தமிழ் இந்நாட்டிற்குரிய மொழி. தமிழிசை இந்நாட்டிற்குரிய இசைச் செல்வம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழிசை செழித்து வந்தது. தமிழர் இசைச் செல்வமே இந்திய சங்கீதத்திற்குத் தாயூற்றாக இருந்ததென்று தக்க புலவர் ஆராய்ந்து சொல்லுகின்றனர். தமிழிசை வழிவழியாகப் பெருகி வந்தது. பிறமொழிப் பாடல்கள் மிகச் சமீபத்தில்தான் தோன்றின. பிறமொழிப் பாடல்களின் மீது மோகங்கொண்ட சிலர் தடைச் சுவர் எழுப்பினார்கள்.

தமிழிசை இயக்கம் தமிழின் மறுமலர்ச்சிக்குப் புதிய வேகத்தைத் தந்தது. இசை மலர்ச்சியே மறுமலர்ச்சி. இன்று தமிழரின் செவிகள் தமிழமுதம் பருகி மகிழ்கின்றன. மறைந்துபோன பழம் பாடல்கள் இந்த இயக்கத்தால் புத்துயிர் பெற்று முழங்குகின்றன. புதிய பாடல்கள் எழுந்து இன்பம் தருகின்றன. கவிவாணரும் இசைவாணரும் ஆர்வமுடன் முன்வந்து தமிழிசையை வளர்க்கிறார்கள். இசையரங்கிற்குக் கூட்டங் கூட்டமாகத் தமிழர்கள் வருகின்றார்கள். தமிழிசை வேறெதற்கும் இளைத்ததில்லை என்பதை இசைவாணர்கள் விளக்கிவிட்டார்கள். அரிய பெரிய ஆவேசக் கவிஞர்கள் தமிழ்ப்பாடல்கள் பாடி இருக்கிறார்கள். கண்ணிருப்பவர்கள் தமிழிசைக்குற்ற பொதுஜன ஆதரவைக் காணலாம். காதிருப்பவர் எத்திசையிலும் தமிழிசை கேட்டு இன்புறலாம். அதிவிரைவில் தமிழிசைக் கலை உச்ச நிலையில் ஓங்கி விளங்கப் போகிறது” - குடிஅரசு 8.1.1944.

சுயமரியாதை இயக்கத்தின் பங்கு

சுயமரியாதை இயக்கம் தமிழிசை மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள் மிகப் பலவாகும்.

சுயமரியாதை இயக்கத்துடன் கடும் மாறுபாடு கொண்ட வர்கள் ஆனாலும் அவர்கள் பார்ப்பனர் அல்லாத தமிழ்க் கலைஞர்களாயின் அவர்கள் வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கு இரண்டு எடுத்துக்காட்டு களைச் சொல்லலாம்.

கே.பி. சுந்தராம்பாள் ஜெமினி படநிறுவனத்தின் புகழ் பெற்ற படமாகிய ‘அவ்வையாரில்’ அவ்வையாராக நடித்தவர். பின்னாளில் வெளிவந்த ஏ.பி. நாகராசனின் ‘திருவிளை யாடல்’ படத்திலும் அவ்வையாராகத் தோன்றித் தன் வெண்கலக் குரல் இசையால் இன்றளவும் தமிழர் உள்ளங் களில் வீற்றிருப்பவர். இவர் தொடக்கக் காலத்தில் நாடக நடிகை. காங்கிரசுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். சத்திய மூர்த்தி அய்யரின் நண்பர். சத்தியமூர்த்திக்கும் தமிழிசைக் கும் உள்ள தொடர்பு அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்புதான். ஆனாலும் பார்ப்பனப் பாதந்தாங்கி யான நம் ம.பொ.சி., தமிழிசைக் கிளர்ச்சியில் சத்தியமூர்த்தி நிறைய பங்காற்றியிருப்பதாகக் கூறியுள்ளார்.

கே.பி. சுந்தராம்பாள் ம.பொ.சி.யைப் போன்றே பொதுக் கூட்ட மேடைகளிலும், நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளிலும் சுயமரியாதை இயக்கத்தைச் சகட்டு மேனிக்குத் தாக்கி வந்தார். இதனால் பார்ப்பனர் உள்ளூர மகிழ்ச்சி கொண்டாலும் பார்ப்பனரல்லாத கீழ்ச்சாதி இனத்தவரான கே.பி. சுந்தராம் பாள் இசையிலும், நடிப்பிலும் புகழ் ஈட்டி வருவதைப் பார்த்துப் பொறாமை கொண்டனர். ‘சுதேசமித்திரன்’, ‘ஆனந்த விகடன்’ போன்ற ஏடுகளில் இவர் ஆற்றலை மட்டந்தட்டி எழுதினர். குடிஅரசு ஏடு இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

‘பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் இப்போதே திடீரென்று ஒன்றுசேர்ந்து கொண்டு தோழர் சுந்தராம்பாள் ஞானத்தை யும் நடிப்பையும் இகழ்ந்தும் பரிகாசம் செய்தும் விஷமப் பிரச்சாரமாய் எழுதுவதும் பேசுவதும் ஒருபுறத்தில் நடக்கவும், தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும் சில காங்கிரஸ் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார் கட்சியை வைவதற்காகக் கூட்டம் கூட்டிக் கொள்வதற்காகவும் அம்மாளைப் பயன் படுத்திக் கொண்டு ஆளுக்கொரு தொண்டை ஏற்றுக்கொண்டு தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றனர்; சாதித்து வருகின்றனர்’ - குடிஅரசு 4.8.1935.

குடிஅரசு ஏட்டைப் போலவே டாக்டர் வரதராசுலுவின் ‘தமிழ்நாடு’ மற்றும் ‘ஊழியன்’, ‘நகரதூதன்’ ஆகிய ஏடுகளும் பார்ப்பன நச்சுப் பற்களிலிருந்து தமிழ்ப்பாடகி கே.பி. சுந்தராம்பாள் அவர்களைப் பாதுகாத்தன. இன்னொரு நிகழ்ச்சி,

28.4.1962இல் பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி யில் தமிழகத்தின் புகழ்ப்பெற்ற இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமி பங்கேற்றார். அவருடைய இசை நிகழ்ச்சியில் இடையில் புகுந்த கன்னட வெறியர்கள் தமிழ்ப்பாட்டுப் பாடுவதை எதிர்த்துக் குரல் எழுப்பினர். நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுத்தனர். காலித்தனம் செய்து கருப்புக் கொடியும் காட்டினார்.

இச்செய்தி 29.4.1962 அன்று, அதாவது நிகழ்ச்சி நடந்த மறுநாள் ‘தினத்தந்தி’ நாளேட்டில் வெளியாகியிருந்தது. அதைப்படித்து விட்டுப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உள்ளங் குமுறினார். எல்லா நாளேடுகளுக்கும் கண்டன அறிக்கை தந்தார். ‘மாலை முரசு’ ஏடு ‘கன்னடர் நடித்த படத்தைப் பார்க்காதே’ என்று பாவேந்தர் கூறுவது போல ஒரு கருத்துப் படம் போட்டு அவரின் கண்டன அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.

22.5.1962 அன்று மாலை 6 மணியளவில் தியாகராய நகரில் அமைந்துள்ள வாணி மகாலில் கன்னடர் எதிர்ப்புக் கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, பாரதிதாசன் அதில் முழங்கினார். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களில், ஒரு தீர்மானம் எம்.எஸ். சுப்புலட்சுமியை இழிவுபடுத்திய கன்னடர் செயல்களைத் தமிழக முதலமைச்சர் என்ற முறையில் காமராசர் தட்டிக் கேட்க வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

கூட்டம் நடைபெறுவதற்கு ஒரு கிழமைக்கு முன்பே பாவேந்தர் தன் குயில் ஏட்டில் இந்நிகழ்வைக் குறித்து நெஞ்சம் கொதிப்பேற ஒரு பாடலை எழுதினார்.

....கச்சேரி தொடங்கும் போது

நாயினம் நடுவில் குலைப்பது போலக்

கன்னடர் ஒருபால் கூடி என்னமாய்த்

தமிழ்மகள் இங்குத் தலைகாட்டினாள் என்று

கூச்ச லிட்டனர் ஆச்சா போச்சா

என்றனர்; தமிழை எதிர்த்தனர்; தமிழரை

எதிர்த்தனர், தம் உயர்வு கூறித் துடித்தனர்

உலகு புகழ் வாய்ப்பாட்டுத் தலைவிமேல்

வெறுப்புக் காட்டினர் கருப்புக் கொடியும்

காட்டினர் தங்கள் கீழ்மை காட்டினர்

நான்கு கோடி நற்றமிழ் வீரர்

உடன்பிறந்த ஒருகலைச் செல்வி

தலைகுனிந்து தாயகம் திரும்பினாள்

- குயில் 15.5.1962

பெரியாரும் தமிழிசையும்

எங்கெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுகிறதோ, உரிமைக்கு ஊறு நேருகிறதோ அங்கெல்லாம் பெரியாரின் பெருங்குரல் உரத்து ஒலிக்கும். 1938இல் தமிழகம் கண்ட முதல் இந்தி எதிர்ப்புப் போர் ஆதிக்கக் கோட்டைகளில் உடைப்பை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்டவர்கள் நிகழ்த்திய உரிமைப் போராகும். இதே தன்மையில்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழிசை இயக்கத்திற்குத் தன் பங்களிப்பை வழங்கியுள்ளது.

1938 இந்தி எதிர்ப்புப் போரில் பெரியார், மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், ஈழத்தடிகள் போன்ற எண்ணற்ற பெருமக்கள் தாம் பணியாற்றிய தளங்களில் எதிர்எதிர் முனைகளில் இருந்தாலும் ஆதிக்க இந்தியை எதிர்ப்பதில் ஒரே புள்ளியில் நின்றார்கள்.

1941 முதல் 1943 வரை தமிழகத்தில் வீச்சோடு முன் னெடுக்கப்பட்ட தமிழிசை இயக்கப் பணிகளிலும் அண்ணாமலை அரசர், ஆர்.கே. சண்முகம், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், திரு.வி.க. மயிலை சிவமுத்துக்குமாரசாமி, தேவநேயப் பாவணர், மு. வரதராசனார், மீனாம்பாள் சிவராஜ், எம்.கே. தியாகராய பாகவதர், கே.பி. சுந்தராம்பாள் உள்ளிட்ட ஏராளமான பேர் தமிழிசை இயக்கத்தை வீச்சோடு முன்னெடுத்துள்ளனர். சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, தேவக்கோட்டை, கும்ப கோணம் போன்ற இடங்களில் தமிழிசை இயக்க மாநாடு களும் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொற் பொழிவாற்ற வரவேண்டும் என்று பல நாட்களாக அப்பல் கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் பெரியாருக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனையேற்று 7.2.1944 மாலை 6.30 மணியளவில் அப்பல்கலைக்கழகத்தில் உள்ள சீனிவாச சாஸ்திரியார் மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த மாணவரிடையே ‘தமிழ் இசை’ என்ற பொருளில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு மிகச் சிறந்த ஒன்றாகும். அவ்வுரையில்,

“அறிஞர்களே, நமக்குப் பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக் கூடப் பயன்படாது என்றும் சொன்னால் இந்த இழிமொழி நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகிறேன். தமிழ்த் துரோகத்தால் வாழ வேண்டியவனும் வள்ளுவர் சொன்னதுபோல் ‘குலத்திலேயே அய்யப்பட வேண்டியவனுமான’ தமிழ் மகன்களுக்கு இது எப்படி இருந்தாலும் அவன்களது வாழ்வும் நம் எதிரிகளது புகழுமே அவர்களுக்கு அணியாகவும் அலங்காரமாகவும் முக்கிய இலட்சியமாகவும் இருக்கும்... இப்படிப்பட்டவர்களைத் தான் முடிவில் நன்றாய் வெறுக்க வேண்டும். அவர்களைத் தமிழ்ச் சமுதாயத்திலிருந்து ஒதுக்கித் தள்ள வேண்டும்” என மிகக் காட்டமாய்ப் பேசினார் (குடிஅரசு 19.2.1944). (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 5/1, பக்கம் 2666)

பிறிதோர் இடத்தில் தமிழ்நாட்டில் திரைப்படம், நாடகம், பாட்டு ஆகிய மூன்று துறையும் தமிழினத்துக்கு மிகமிகக் கேடாகிவிட்டதைச் சுட்டிக்காட்டிவிட்டு,

‘ஆகவே, மேற்கண்ட மூன்று துறைகளையும் பொது ஜனங்கள் தங்கள் தணிக்கைக்குக் கீழ் கொண்டு வந்து, அவைகளுக்கு ஒழுங்கான முறையில் நடக்கச் செய்ய முயற்சிக்க வேண்டியது மிகவும் அவசியமான காரியமாகும். இதற்கு ஸ்தாபனங்கள் இருந்தால்தான் முடியும். ஆதலால் மேலே காட்டியபடி அதாவது

1.     சினிமா, நாடகம் பார்க்கிறவர்கள் கழகம் (சங்கம்)

2. இசை நுகர்வோர் (பாட்டுக் கச்சேரி கேட்கிறவர்கள்) கழகம் (சங்கம்)

3.     பத்திரிக்கையாளர் படிப்போர் கழகம் (சங்கம்)

என்பவைகளை ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாத தாகும். (குடிஅரசு 4.12.1943)

“தமிழிசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்) தமிழில் பாட வேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம் நமக்குத் தமிழனிடம் ஏற்பட்ட உணர்ச்சியேயாகும். இது பெரிய மாறுதல் தான்” என்று கூறும் பெரியார் தமிழிசை இயக்கத்திற்காகப் பாடுபட்ட அண்ணாமலை அரசரையும் ஆர்.கே. சண்முகத்தையும் பாராட்டினார். அதே நேரத்தில்,

“கோடீசுவரரும் கோணாத கை கொடை வள்ளலும் மிக்க மதிவாணருமான இராஜா சர். அண்ணாமலை அவர்களும், பேரறிஞரும் மலையாடும் படியான வாயாடிகளும் கருத்தாளர்களும் மெச்சும் மதி அரசர் சர். சண்முகம் அவர்களும் நம் சமுதாயத்தில் 4ஆம் சாதி 5ஆம் சாதியாக மதிக்கப்படவும், அவ்வாறே பெரிதும் நடத்தப்படவும் காரணம் என்ன? ஏன் நடத்தப்பட வேண்டும்?” என்ற வினாவையும் உடன் எழுப்புகிறார்.

“பிறமொழியில் இருந்தவற்றைத் தமிழ் பஜனைப் பாட்டாகப் பாடியதால் ஊசிமுனை அளவேனும் பயன் ஏற்பட்டதா? நந்தனார் சரித்திரத்தைத் தமிழில் நடத்துவதால் தீண்டாமை ஒழியுமா? திருவிளையாடல் புராண சிவலீலையால் ஒழுக்க ஈனங்களும் அயோக்கியத்தனங்களும் வளருமா? குறையுமா?” என்றெல்லாம் அடுக்கும் பெரியார்,

“இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்? நிலைகுலைந்து, இழிவடைந்து தரித்திரர்களாய் மடையர் களாய், கீழ் மக்களாய், சுரண்டப்பட்டவர்களாய் வாடும் மக்களுக்கு என்ன பலனைத் தரும்? அவர்கள் குறையைப் போக்கிக் கொள்ள ஏதாவது உணர்ச்சி ஏற்படுமா? அல்லது முயற்சியைத் தடுக்குமா? சிந்தித்துப் பாருங்கள்” (குடிஅரசு 26.2.1944).

எனத் தெளிவாகச் சொல்கிறார்.

தமிழ்மொழியின் உரிமை, தமிழ்த்தேசிய விடுதலை, தமிழின மேம்பாடு குறித்தெல்லாம் பெரியார் பேசியிருக்கிறார். சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறார். ஆனால் எல்லாக் கூறுகளிலும் அடி நாதமாக ஒலிப்பவை உழைப்புச் சாதி மக்களை ஒருபடியேனும் முன்னேற்றவிட வேண்டும் என்கிற அவரின் ஓயாத அலைக்கழிப்பும் உள்ளக் குமுறலுமேயாகும். பெரியார் இதில் முழுமையாய் வெற்றியடையாதிருக்கலாம். வெற்றி பெறச் செய்ய வேண்டியது, ஒடுக்கப்பட்டோர் விடுதலையை அவாவும் நம் எல்லோருடைய கடமையும் ஆகும்.

குறிப்பு : இக்கட்டுரையின் தரவுகளுக்கு எஸ்.வி.ஆர். பதிப்பித்த ‘கலை எனப் படுவது இனக்கொலையென்றால்’ என்னும் நூலும் பயன்பட்டுள்ளது. நன்றி.

Pin It